privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மே நாளன்று களப்பணியில் தியாகியானார் தோழர் செல்வராசு!

மே நாளன்று களப்பணியில் தியாகியானார் தோழர் செல்வராசு!

-

தனது இறுதி மூச்சுவரை தனியார்மயத்திற்கு எதிராக போராடி மே நாளில் தியாகியான தோழர். செல்வராசுக்கு வீரவணக்கம்!

அயராது உழைத்த தோழர், மீளாத உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்!

தோழர்.செல்வராசு நம்மை வீட்டு பிரிந்துவிட்டார்! தமக்கு பணமும், பதவியும் கிடைக்கவில்லை என்பதற்காகவே வேறு சங்கத்தையும் கட்சியையும் தேடியலையும் பிழைப்புவாதிகள் மலிந்துவிட்ட இந்த காலத்தில் புரட்சிகர அரசியலுக்காகவும், தொழிலாளர் வர்க்க விடுதலைக்காகவும் பணிபுரிய சரியான அமைப்பைத் தேடியடைந்து, அயராது பாடுபட்ட தோழர்.செல்வாராசு மரணமடைந்து விட்டார்! தியாகியாகிவிட்டார்!

எண்ணற்ற நக்சல்பாரி தோழர்களை ஈன்றெடுத்த வட ஆற்காடு – திருப்பத்தூரில் பிறந்த தோழர்.செல்வராசு, நக்சல்பாரி அரசியல் தழைத்தோங்கிய தருமபுரியில் தனது அரசியல் பணியை துடிப்புடன் மேற்கொண்டார். மேநாளில் புரட்சிகர அரசியலைப் பரப்பிக்கொண்டேஅவர் மனம்போல தியாகியானார்! வர்க்கப் போராட்ட தியாகச் சுடர்களில் ஒருவராக ஒளிவீசிக் கொண்டிருக்கிறார். கருவாகி உருவான தோழர்.செல்வராசு!

54 வயதான தோழர்.செல்வராசு சி.ஐ.டி.யூ.சங்கத்தில் நீண்டநாட்களாக இருந்தவர். ஆனால், தொழிலாளர்களுக்காக அயராது குரல்கொடுத்தவர். அநீதிக்கெதிராக போர்க்குணத்தோடு போராடியவர். அந்தக் காரணத்திற்காகவே சி.ஐ.டி.யூ.விலிருந்து முரண்பட்டு வெளியேறியவர். தொழிலாளர்களுக்காக நேர்மையாகப் போராடுபவர்கள், சி.ஐ.டி.யூ.வில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்பதால், பாட்டாளி வர்க்க உணர்வு கொண்டவர்கள் வெளியேறிவந்தது போல செல்வராசும் அப்படியே வெளியேறினார்.

ஒருசமயம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தரமற்ற செருப்பை (தோல் செருப்பு என்று சொல்லி கொடுத்தாலும், அட்டையால் தயாரிக்கப்பட்ட செருப்பு) வழங்கியது. இதற்கு எதிராக எந்த சங்கமும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில், தோழர்.செல்வராசு, செருப்பை உடைத்து அதில் உள்ள அட்டை வெளியே தெரியும் படி அறிவிப்பு பலகையில் தொங்கவிட்டுவிட்டார். தரமற்ற செருப்பை தொழிலாளர்களுக்கு வழங்கிய நிர்வாகம், இதனைக் கண்டு ஆத்திரமடைந்தது. கூடவே, சி.ஐ.டி.யூ. சங்க நிர்வாகிகளும் கோபப்பட்டு தோழரிடம் தகராறு செய்தனர்.

அட்டை வைக்கப்பட்ட செருப்பைவிட இவர்கள் தரமற்றவர்களாக இருக்கிறார்களே என்று கருதிய தோழர் செல்வராசு அவர்களிடம் சண்டையிட்டார். வர்க்க விடுதலையை சாதிக்கவோ, தொழிலாளர்களுக்குத் தலைமை தாங்கவோ சி.ஐ.டி.யூ. இலாயக்கற்றது என்பதை தனது சொந்த அனுபவத்தின் வாயிலாக புரிந்து வைத்திருந்ததால், அந்த சம்பவத்திற்குப் பிறகு சி.ஐ.டி.யூவை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அரசியல் பணிகளைச் செய்ய சரியான அமைப்பு, கட்சி எது என இரண்டு மூன்று ஆண்டுகள் தனது தேடுதலைத் தொடங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி., எப்.ஐ.டி.யூ போன்ற அமைப்புகளில் செயல்பட்டு அவர்களும் பிழைப்புவாதிகள் என்பதைக் கண்டு அதிருப்தியுற்று வெளியேறுகிறார்.

இதனிடையே, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்களின் இயக்கப் பிரச்சாரம், புதிய ஜனநாயகம் பத்திரிக்கை விற்பனைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டவர் புதிய ஜனநாயகம் படிக்கத் தொடங்கினார். இதன் கருத்துக்கள் நேர்மையாகவும், பாட்டாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதாகவும் இருப்பதை உணர்ந்தவர் தோழர்களை தொடர்பு கொண்டு அரசியல் விவாதங்கள் நடத்தினார். “தொழிலாளர்களுக்கு எப்படி விடுதலைப் பெற்றுத்தரப் போகிறீர்கள்?” என்ற கேள்விகளை எழுப்பி, பதிலையும் பெற்றார். அவருக்குள் புதிய நம்பிக்கை பிறந்தது. தனது 51வது வயதில் புதிய ஜனநாயகம் அவருக்கு அறிமுகமானது!

புரட்சிகர அரசியலில் ஏற்பட்ட ஈடுபாட்டால், அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் பு.ஜ.தொ.மு. சங்கம் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்படத் தொடங்கினார். நிர்வாகத்தின் மிரட்டலும், நக்சலைட் பீதியும் உடனே அவரை மிரட்டியது. தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு மிரட்டல்களை கண்டவர், தான் பு.ஜ.தொ.மு.வில் இணைந்த பின் வருகின்ற மிரட்டலின் உண்மையான வர்க்க உணர்வு என்ன என்பதைப் புரிந்து கொண்டார்.ஆம், உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் நக்சல்பாரிகள் என்பதை உணர்ந்தார்!

ஆக, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர அரசியலைக் கொண்டு செல்ல தன்னை முதல் விதையாக ஊன்றிக்கொண்டார். தான் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம் எந்தத் தயக்கமோ, யோசனையோ சிறிதுமின்றி “பு.ஜ.தொ.மு.வில் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளுங்கள்!” என்று பிரச்சாரம் செய்தார். 18 வயது இளைஞரைப் போன்ற துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட்டார் தோழர்.செல்வராசு.

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள்  நிர்வாகத்தின் அடக்குமுறைகளால் பலரும் வேலையிழப்பு, தற்காலிகப் பணி நீக்கம் போன்ற துயரங்களை எதிர் கொண்டுவந்தனர். இவர்களுக்காக நிர்வாகத்திடம் தொடர்ந்து தனியாளாகச் சண்டையிட்டுள்ளார். தங்களது பிரச்சினை முடியும் வரை செல்வராசுவையும் பு.ஜ.தொ.மு.வையும் சுற்றிவரும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தங்களது பிரச்சனை தீர்ந்தவுடன் அவரை சிறிதும் கண்டுகொள்ளமாட்டார்கள். இது தொடர்நிகழ்வு! ஆனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக இறங்குவது, அவர்களுக்காக நிர்வாகத்திடன் சண்டையிட்டு உரிமையைப் பெற்றுதருவதையும் என்றுமே நிறுத்திக் கொண்டதில்லை.

நாம் அந்தத் தொழிலாளர்களுக்கு உதவினோம், ஆனால், அவர்கள் தமது அரசியலை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதியதில்லை. அதேவேளையில், இதற்காக என்றைக்குமே சலித்துக் கொண்டதுமில்லை. அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் என்றால், அரசு ஊழியர்கள் என்று மக்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், மக்களுக்கு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் அவலநிலையை விளக்கி, தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஐக்கியத்தை உருவாக்க, பு.ஜ.தொ.மு. கொண்டுவந்த சிறு வெளியீடு என்பது அவரின் அளப்பறிய பங்களிப்பால் உருவாக்கப்பட்டது. பல ஆயிரம் படிகள் அது மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. இன்றும் கொண்டு செல்லப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களும் சரி, சில அதிகாரிகளும் சரி தோழரிடம் பலரும் ஆலோசனைகள் கேட்பார்கள். அரசுப் போக்குவரத்துத் துறையில் எல்லா பிரச்சினைகள், சம்பவங்களையும் எப்போதும் புள்ளி விவரத்துடன் நினைவில் வைத்துக் கொண்டு பேசும் தோழர், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள், தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க நடத்தியப் போராட்டங்கள் என எல்லாவற்றிலும் தலையிட்டுள்ளார். போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்கத்துக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை போராடியுள்ளார். அரசுப் பேருந்து, மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்று அயராது பாடுபட்டார்.

நாட்டில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் நிகழ்வையும் அரசியல் கண்ணோட்டத்துடன் புரிந்து கொள்ளவும், அதனை அந்த வகையில் விளக்கவும் விரைவாக தனது வர்க்கப் பார்வையை வளர்த்துக் கொண்டார். நீண்டநாள் புரட்சிகர அரசியலில் இருந்த  முதிர்ச்சியுடன் வர்க்க அரசியலை பரப்பினார். தோழர்.செல்வராசுவின் புரட்சிகர பிரச்சாரத்தால் போக்குவரத்துத் துறையில் பல மாவட்டங்களில், பல பணிமனைகளில் அவரைத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலையை ஏற்பட்டது. அவரது பிரச்சாரத்தின் வேகம், நாளையே புரட்சி நடந்துவிடும் என்ற உணர்வை தோழர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

தருமபுரி என்றாலே நக்சலைட்டுகள் நடமாடும் பகுதி!- இது மக்களிடம் பீதியூட்ட நக்சலைட்டுகளை பூதம் போல காட்ட அரசு பரப்பி வரும் பிரச்சாரம். இதற்கான பு.ஜ.தொ.மு., வி.வி.மு., சுவரொட்டிகளைக் கண்டாலே போலீசு நாய்கள், கழுதைகளாக மாறி சுவரொட்டிகளை மேய்ந்துவிடும். தருமபுரியில் சுவரொட்டி ஒட்டுவதையே பெரும் தேசவிரோத செயலாக சித்தரிக்கப்பட்ட சூழலில், பு.ஜ.தொ.மு.வின் சுவரொட்டிகளை பகலில் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் ஒட்டி வைத்தார். நக்சல்பாரிகள் விதியை வென்றவர்கள் என்பதை எல்லோருக்கும் உணர்த்தினார். இதனால் வந்த பல்வேறு மிரட்டல்களையும் துடைத்தெரிந்தார்.

புதிய ஜனநாயகம் வாங்கத் தொடங்கியது முதல் பு.ஜ.தொ.மு.வின் வெளியீடுகள் வாங்கும் வரை ஒரு பிரசுரத்திற்குக் கூட நிதி நிலுவை வைக்காமல் முன்பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்பவர். அதே போல பிரசுரத்தையும், புத்தகத்தையும் தேக்கம் வைக்காதவர். காரணம் புரட்சிகர அரசியலைத் தாங்கி நிற்கும் இந்த பொருட்கள் மக்களுக்குச் சொந்தமானவை என்பதை அவர் எப்பொழுதும் மறவாதிருந்தார். அதே போல தோழர்கள் கடின உழைப்பில் மக்களுக்கு உணர்வூட்டுவதற்காக தயாரித்தவை என்பதாலும் இதனை அவர் தேக்கம் வைத்ததில்லை, நிதி நிலுவை வைத்ததில்லை.

பு.ஜ.தொ.மு.வின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார் தோழர்.செல்வராசு. அதன் பின் தோழர்களுடன் கம்யூனிச நூல்களை விவாதிக்கத் தொடங்கினார். 54 வயதான தோழர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘சிவப்பு சங்கங்களில்’ இருந்திருந்தாலும் இன்றுதான் கம்யூனிசம் என்றால் என்ன என்பதையும், மார்க்ஸ் எழுதிய கூலி, விலை, லாபம் என்ற நூலைப் படித்தப் பின்னர்தான், தொழிலாளர்  வர்க்கத்திற்கு இந்த நூல் எவ்வளவு அவசியமானது, முதலாளித்துவ பிரம்மைகளை எல்லாம் தகர்க்கிறது என்பதையும் உணர்ந்ததாகத் தெரிவித்தார். இளம் வயதிலேயே படிப்பதையும் புதிய  விசயங்களைக் கற்பதையும் சலிப்புடனும் விட்டேத்தித் தனத்துடனும் அணுகும் இன்றைய இளைய சமுதாயம் இருக்கும் நிலையில் தோழர்.செல்வராசு  மார்க்சியத்தின் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்!

பாட்டாளி வர்க்கப் போரளி!

தோழர்.செல்வராசின் போராட்டம் முதலாளித்துவம், தனியார்மயத்திற்கு எதிராக மட்டும் போராடுவதுடன் நின்றுவிடவில்லை.“இன்றைய சமூகத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாக வீழ்த்த வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவு மறைவின்றி பறைச்சாற்றுகிறார்கள்” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறுகிறது. பார்ப்பன சனாதன பண்பாடு நீண்ட காலம் நிலவிய இந்தியாவில், இதுதான் சமூகத்தின் இன்றைய நிலைமைகளில் ஆதிக்கம் புரிகிறது என்பதையும் இவை உள்ளிட்ட இந்த சமூக நிலைமைகளையும் வீழ்த்த வேண்டும் என்பதையும் தோழர் ணர்ந்திருந்தார்.

இந்து புரோகித மரபில் வந்த குடும்பத்தில் பிறந்த தோழர்.செல்வராசு இதுவரை இதற்கான எந்த அடையாளத்தையும் தன்னிடம் வெளிப்படுத்தியதில்லை. தோழரிடம் பழகியவர்கள் பலருக்கும் இவர் உயர்சாதி, ஐதீகங்களை கடைப்பிடிக்கும் மரபில் வந்தவர் என்று தெரியாது. பார்ப்பன இந்துமதவெறி பயங்கரவாதத்திற்கு எதிரான பு.ஜ.தொ.மு. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய  போராட்டங்களில் வீச்சாக செயல்பட்டார்.

சமூகத்தை மாற்ற வேண்டும் என்று நாம் கருதும் போது முதலில் நாம் மாறியாக வேண்டும் என்பதை சொந்த அனுபவத்தில் வாழ்ந்துகாட்டினார் தோழர்.செல்வராசு! குடும்பத்தையும் அரசியல் படுத்த
தொடர்ந்து முயற்சித்து வந்தார். கோவை, மேட்டூர், தருமபுரி என எங்கு பு.ஜ.தொ.மு. மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பொதுக்கூட்டம் நடைப்பெற்றாலும் அங்கிருக்கும் தனது உறவினர்களுடன் வந்து பங்கேற்றார்.

தோழர்-செல்வராசு-1

மேநாளில் தியாகியானார்!

மே 1 – தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க, மறுகாலனியாக்கத்தை மாய்க்க புதிய ஜனநாயகப் புரட்சியே தீர்வு! என்று முழக்கத்தின் பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு. ஆகியவற்றின் சார்பாக ஒசூரில் பேரணி – ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது ஒருவார காலமாக பிரச்சாரங்கள் நடந்துமுடிந்து தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இருந்து தோழர்கள் எல்லோரும் ஒசூரை நோக்கி திரண்டு கொண்டிருந்த நேரம்! தோழர்.செல்வராசுவும் தனது துணைவியாருடன் தருமபுரியில் இருந்து புறப்பட்டார்.

காலை 10 மணிக்கெல்லாம் கிருஷ்ணகிரியை வந்தடைந்துவிட்ட நிலையில், கிடைத்த நேரத்தை ஓய்வெடுக்க விரும்பாமல் பிரச்சாரம் செய்யலாம் என்று கருதிய தோழர்.செல்வராசு, தனது துணைவியாரை பேருந்து நிலையத்தில் அமரச் சொல்லிவிட்டு  கிருஷ்ணகிரியில் பேருந்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அப்போது படியிலிருந்து கால்தவறி கீழே விழுந்து தலையின் பின்பகுதி தரையில் மோத, மேநாள் பிரசுரங்கள் சிதற, உண்டியல் உருண்டோட கீழே விழுந்த தோழர், வீரமரணமடைந்தார்! மேநாள் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நன்றியுரை ஆற்ற வேண்டிய தோழர்.செல்வராசு, சமூக மாற்றத்திற்காக போராட துணைநின்ற நம் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டார்!

அவருக்கு எமது சிவப்பஞ்சலியை செலுத்துவதோடு அவர் விட்ட பணியை முடிப்போமென உறுதியும் ஏற்கிறோம்.

தோழர் செல்வராசுக்கு வீர வணக்கம்!

________________________________________________________

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்

  1. தோழரின் வாழ்க்கைப் பயணம், உண்மையான கம்யூனிஸ்ட்டுக்கு நெஞ்சுரம் தேவை என்பதன் எடுத்துக்காட்டு. மே நாளில் தியாகியான தோழர் செல்வராசுக்கு வீரவணக்கம், வீரவணக்கம்!

  2. தனியார்மயத்திற்கு எதிராக போராடி மே நாளில் தியாகியான தோழர். செல்வராசுக்கு வீரவணக்கம்!

  3. தோழர். செல்வராசுக்கு வீரவணக்கம்!

    தொடர்ந்து உழைப்போம் உம்மைப்போலவே.

  4. செல்வரசுவின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!

  5. சமூக மாற்றத்திற்காக ஓயாது உழைத்த தோழா, இத்துணை விரைவில்யேன்மறைந்தாய்!. வீரவணக்கம் தோழா!.

  6. தோழரிடம் எப்போதும் நோட்டீசு, போஸ்ட்டர், புதிய ஜனநாயகம்-புதிய கலாச்சாரம் இதழ்கள், பாக்கெட் பசை இவைகளோடுதான் இருப்பார். இவைகள் இல்லாமல் இவரை தனியாகப் பார்க்கவே முடியாது. தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், மேட்டூர்,ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் கடந்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தவறாமல் அவரை முன்வரிசையில் பார்க்கமுடியும். நா தழுதழுக்கிறது. அவர் உழைப்பில் இனி நானும் பங்கேற்கிறேன். தோழருக்கு என சிவப்பஞ்சலி!

  7. தனியார்மயத்தை வேரறுக்க கடுமையாய் உழைத்த என் அருமை தோழருக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்……….. நீங்கள் விட்ட பணியை நாங்கள் தொடருவோம் தோழரே………உங்களுக்கு எங்கள் வீரவணக்கம் ………… புரட்சி ஓங்குக……..நக்சல்பரிகளே தேசபக்தர்கள்…… இதனை உலகிற்கு பறைசாற்றுவோம்…..போலிகளை தூக்கிஎறிவோம்…..

  8. தோழர் செல்வராசுவின் வாழ்க்கை இளம் தோழர்களுக்கு ஒரு முன்னுதாரணம்,
    தோழருக்கு வீர வணக்கம்!

  9. தோழரின் மரணம் ஈடு செய்ய முடியாதது. செய்தி கிடைக்காமையால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. புதியவர்களுக்கு இயக்கப் பணிகளுக்கான பல அனுபவங்களை விட்டுச் சென்றுள்ளார். எனது சிவப்பஞ்சலி!

  10. இவரை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இக்கட்டுரையை படிக்கும்போது அவரின் உழைப்பு, போராட்ட உணர்வு, மற்றவர் மேல் உள்ள அன்பு புரிகிறது. அவரின் போராட்ட உணர்வு நெஞ்சை நெகிழவைக்கிறது.

    தோழருக்கு வீர வணக்கம்

  11. தோழர் செல்வராசுக்கு வீரவணக்கம்,

    அரசு போக்குவரத்து கழகங்களில் பணி புரியும் பலர் தங்கள் வழி தட பேருந்தை தக்கவைத்து கொள்ளவும், தங்கள் பணி நேரத்தை தக்கவைத்து கொள்ளவும் பல இழிவான செயல்களின் தங்களின் மானத்தையும் அடகு வைக்க தயங்குவதில்லை, கட்சி தலைவர்களுக்கு பிறந்த நாள் என்றால் ஒவ்வொரு தொழிலாளியிடம் இருந்து தலா 1000/- 2000/- என்று வசூல் செய்கிறார்கள் தொழிற்சங்க நிர்வாகிகள், இதில் ரூபாய்க்கு தகுந்த மரியாதையும் பதவியும் கிடைக்கும்.
    இதையெல்லாம் கண்முன்பாகவே நான் பார்க்க முடிகிறது, பார்க்கிறேன் நானும் ஒரு அரசு பேருந்து நடத்துனரின் மகன் தான், என் தந்தை இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் இதை நான் தட்டி கேட்டால் ஏன் வேலை எனக்கு முக்கியம் பணம் தரலனா காத்திருபபோர் பட்டியலில் வைத்து பேருந்து தரமாட்டார்கள் நேரத்துக்கு சரியான பேருந்து தராமல் யாரேனும் விடுப்பு எடுத்தால் தான் எனக்கு வண்டி கிடைக்கும் வீட்டுக்கு சரியான நேரத்துக்கு வரமுடியாது என்று தனது பக்கமுள்ள கஷ்ட்டத்தை நியாய படுத்துகிறார்.
    ஆனால் தோழர் செல்வராசு அவர்கள் இவற்றையெல்லாம் மீறி தனது சொந்த வாழ்க்கையில் ஒரு உண்மையான கம்யுனிஸ்ட்டாகவும் நேர்மையான தொழிலாளியாகவும் வாழ்ந்துள்ளார், இவரை போன்றவர்கள் எனது தந்தைக்கு ஒரு எடுத்துகாட்டு இதை என் தந்தையிடம் கூறி அவரை நம் அரசியலை ஏற்று கொள்ள வைக்க போராடுவேன்.
    தோழர் செல்வராசுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!

  12. I am proud of my dad…He is the real face of communism and socialism…well done dad…
    I will take care of your works in communism,dad…A GREAT RED SALUTE for you…

  13. போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைக்காகவும்,நியாயத்திற்க்கும் பாடுப்பட்ட நேர்மையான உழைப்பாளி திரு.செல்வராஜ் அவர்களின் மகன் என்பதில் நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். தொடர்ந்து உழைப்போம் நேர்மையை கடைபிடிப்போம் உம்மைப்போலவே. RED SALUTE….

    • தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றி தொடரப்போவதாக அறிவித்துள்ள தோழர் ஜனார்த்தனனுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்! தோழர் செல்வராசு இறக்கவில்லை. விதைக்கப்பட்டுள்ளார். கண்ணீரைத் துடைத்து களம் புகுந்து அவர் கண்ட கனவை நனவாக்குவோம்!

  14. தோழர் செல்வராசு அவர்களின் படத்திறப்பு வரும் ஞாயிற்றுக் கிழமை 20.05.2012. காலை 9.00 மணிக்கு தர்மபுரி பஸ் டெப்போ எதிரில் நடைபெற உள்ளது.

  15. தவிர்க்கவியலாத காரணத்தால் படத்திறப்பு அடுத்தவாரம் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply to உண்மைத்தோழன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க