தோழர்-சீனிவாசன்-இறுதி-ஊர்வலம்செவ்வணக்கம், வீரவணக்கம் என எழும்பிய தோழர்களின் முழக்கங்கள், அவற்றைக் கீறிக்கொண்டு ஒலித்த கதறல்கள், கண்ணீர், மவுனம், விசும்பல்களிடையே தோழர் சீனிவாசனின் உடல் மே 6 அன்று காலை 11 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் மின் மயானத்தின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேல் தளர்வின்றித் தொடர்ந்த அவரது புரட்சிகர வாழ்க்கைப் பயணம் நேற்று முடிவுக்கு வந்தது.

மே 5 அன்று காலையில் சேத்துப்பட்டில் அவரது வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மாலை முதல் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தனது இரவு நேரங்களை பகுதி மக்கள், இளைஞர்களுடன் அவர் செலவிட்ட இடம் அது. பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், விவாதங்களினூடாகப் பல இளைஞர்களை அவர் அமைப்புக்கு ஈர்த்த இடம் அது. சனிக்கிழமை மாலையே திடலுக்கு வந்து குழுமத்தொடங்கிய பல தோழர்கள், அன்றைய இரவை தோழர் சீனிவாசனுடன் அங்கேயே கழித்தனர்.

அமைப்பின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் தோளில் தொங்கும் ஒரு கருப்பு நிற பையுடன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து நடக்கும் சீனிவாசன் இனி இல்லை.

போராட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என்று எதுவானாலும் முதலில் நடப்படும் பந்தல்கால் போல வந்து நிற்கும் சீனிவாசன் இனி இல்லை.

நிதிக் கணக்குகள், விற்பனைத் தொகைகள், நிலுவைத் தொகைகள் ஆகியவற்றுக்காக தோழர்களைக் கடிந்து கொள்ளும் “பொருளாளர் சீனிவாசன்” இனி இல்லை.

“ம.க.இ.க சீனிவாசன்” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு, அமைப்பையே தனது இனிசியலாகவும், முகவரியாகவும் ஏற்றுக் கொண்ட தோழர் சீனிவாசன் இனி இல்லை.

அம்பேத்கர் திடலில் மக்களையும், தோழர்களையும் பார்த்தபடி தோழர் சீனிவாசனின் உடல் வைக்கப்பட்டிருந்தது. இடப்புறம் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்கள். வரிசையாக வந்து கொண்டிருந்த தோழர்களும் மக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, உடலுக்கு முன்னால் மண் தரையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். கத்திரி வெயில், துயரத்தின் வெம்மையைக் கூட்டத்தொடங்கியிருந்தது. அனைவருக்கும் தண்ணீர் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள் தொண்டர்கள்.

ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக திடல் நிரம்பியிருந்தது. திடலுக்கு வெளியே வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்க, திடலில் இடம் கிடைக்காத மக்கள் சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு தராமல் நின்றார்கள். அவர்களில் பலருக்கு தோழர் சீனிவாசனைத் தெரியும். ரவுடிகளும் சமூக விரோதிகளும் கொட்டமடித்து வந்த அந்தப் பகுதியில் அவர்களை எதிர்த்து நின்று அவர் போராடியதும் தெரியும். திடலின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படங்கள் அனைவரிடமும் நினைவலைகளை எழுப்பிக் கொண்டிருந்தன.

காலை 8 மணிக்கு “நினைவஞ்சலி கூட்டம் தொடங்குகிறது” என்று அறிவித்த மகஇக வின் சென்னை மாவட்டச் செயலர் தோழர் வெங்கடேசன், தோழர் சீனிவாசனின் பங்களிப்பை சுருக்கமாக விளக்கி அஞ்சலிக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர், தோழர் முகுந்தன், முதலில் பேசினார். ’தோழர் சீனிவாசனை எப்போது கைப்பேசியில் அழைத்தாலும், முதலில் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்றுதான் விசாரிக்க வேண்டும். அவரது கறுப்பு நிற பையில் எப்பொழுதும் ஒரு லுங்கி, ஒரு வேட்டி சட்டை இருக்கும். மாதத்தில் 20 நாட்களாவது சுற்றுப்பயணத்திலேயே இருப்பார். வயதோ, உடல்நல குறைபாடோ எந்த வகையிலும் அவரது சுறுசுறுப்பை மட்டுப்படுத்தவில்லை. அமைப்பின் போராட்டம் எங்கே நடந்தாலும், முதல் நபராக சிறிதும் யோசிக்காமல், கிளம்பி விடுவார்…’ என்று நிறுத்தியவர், “அதுபோலவே இன்று நம்மை விட்டும் முதல் ஆளாக பிரிந்து விட்டார்”: என தழுதழுத்தார்.

அடுத்த படியாக உரையாற்ற வந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரான தோழர் சரவணனுடைய பேச்சில் தந்தையை இழந்த ஒரு மகனின் துக்கம் வெளிப்பட்டது. ‘தோழரால் வளர்க்கப்பட்ட இளைஞர்களில் நானும் ஒருவன். புதிதாக அமைப்பில் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சமீபத்தில் அவரை பார்க்கச் சென்றிருந்தேன். நோயின் வலியை மறைத்துக் கொண்டே சிரித்தபடி எங்களுடன் பேசினார். “வெங்காயத்தை உரிக்கும்போது எப்படி அருகில் இருப்பவர்களின் கண்களில் கண்ணீர் வருமோ, அதுபோல உங்களைத் தொட்டாலே ஆளும் வர்க்கம் கண்ணீர் விடச் செய்ய வேண்டும்.” இதுதான் என்னுடைய டிப்ஸ் என்று என்னுடன் வந்த இளைஞரிடம் வேடிக்கையாக கூறினார்.

பெண்கள் விடுதலை முன்னணித் தோழர் உஷா, 2009 ஈழப்போரில் இலங்கை அரசுக்கு துணை நின்ற இந்திய அரசை எதிர்த்து, சென்னை இராணுவ அலுவலகத்தின் முன் நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் அவர் ஆற்றிய பாத்திரத்தினை குறிப்பிட்டு, தோழருடன் எப்போது பேசினாலும், நம்மை உற்சாகம் பற்றிக் கொள்ளும் என்றார்.

“முன்பெல்லம் நாங்கள் அதிகாரிகளை சந்தித்து பேசும் போது கூழைக் கும்பிடு போடுவோம். தோழர் சீனிவாசன் அதிகாரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதன்படி நாங்கள் நடந்தோம், அடிபணியாத போராட்டத்தின் வாயிலாகவே, எங்கள் கோரிக்கைகளில் பலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்” என்றார். நேரு பார்க் மக்கள் மன்றத்தின் அமைப்பாளர்.

’எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர் போலவே தோழர் சீனிவாசன் நடந்து கொள்வார்…’ என்று தன் உரையை ஆரம்பித்தார் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு. உலக சமூக மன்ற மாநாட்டை அம்பலப்படுத்தும் பொருட்டு, 2004 இல் மும்பை சென்றிருந்த போது, ஏதோ அந்தப் பகுதியில் பழகியவர் போல சர்வசாதாரணமாக நடமாடினார்.  கேட்டதற்கு ’உழைக்கும் மக்கள் இருக்கும்போது எந்த ஊரிலும் நாம் அந்நியரில்லை…’ என்று விளக்கமும் சொன்னார். சிதம்பரம் கோயில் பிரச்னை தொடர்பாக பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது. ‘உழைக்கும் மக்கள் சார்பில், அவர்களது பிரச்னைகளை பேசக் கூடிய நேர்மையும் துணிச்சலும் நமக்குத் தான் இருக்கிறது. நாம்தான் பெரிய தலைவர்கள். மேடையில் இருப்பது யாராக இருந்தால் என்ன, பேசுங்கள்” என்று தைரியமூட்டினார்.

புதிய தோழர்களை உற்சாகப்படுத்தி வளர்த்து விடுவது அவருடைய சிறப்பு என்றார் ராஜு.

சேத்துப்பட்டு பகுதியில் கள்ளச்சாராய வியாபாரிகள், ரவுடிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது தோழர் சீனிவாசன் வெளிப்படுத்திய துணிவினை நினைவு கூர்ந்தார் ம.க.இ.க சென்னைக் கிளைத் தோழர் வாசு. ” அது மிகவும் கொந்தளிப்பாக இருந்த சூழ்நிலை. இந்தப்பக்கம் ம.க.இ.க அந்தப்பக்கம் ரவுடிகள் என்று இரண்டு முகாம்கள். எப்போதும் தாக்குதல் நடக்கலாம் என்ற சூழ்நிலை. இரவு முழுவதும் பகுதி இளைஞர்களும் நாங்களும் இந்த திடலுக்கு அருகில் படுத்துக் கிடப்போம். நள்ளிரவில் ஒரு பையை மாட்டிக் கொண்டு அச்சமே இல்லாமல் தன்னந்தனியாக வீட்டுக்கு நடந்துபோவார். அவரது துணிவு பல இளைஞர்களை ஈர்த்திருக்கிறது” என்று நினைவு கூர்ந்தார்

நினைவுகளை 35 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றார் தேனி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர் மோகன்.

“அப்போது காடம்பாறை நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. தோழர் சீனிவாசன் மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர், அரசாங்க காரில் தன் குடும்பத்தினரை ஏற்றிக் கொண்டு உல்லாசப் பயணம் போன போது, தன்னந்தனியாக நின்று அந்த காரை தோழர் வழிமறித்தார். அரசாங்க காரில் இன்பச் சுற்றுலாவா, என்று சீனிவாசன் கேட்டதற்கு, ’அதைக் கேட்க நீ யார்?’ என்று எகிறினார் அந்த அதிகாரி. தோழர் பின்வாங்கவில்லை. கூட்டம் சேர்ந்து விட்டது. வேறு வழியின்றி, ’மின்வாரிய வேலைகளை பார்வையிட செல்கிறேன்’ என்று சமாளித்தார் அந்த அதிகாரி. அதைக் கேட்டு சிரித்த தோழர், “ஞாயிற்றுக்கிழமை கூட வேலை செய்யும் உங்கள் கடமை உணர்ச்சி வியக்க வைக்கிறது. ஆனால், உங்கள் குடும்பத்தினரையும் அழைத்து செல்கிறீர்கள். காருக்குரிய பணத்தை அலுவலகத்துக்கு கட்டி விட்டீர்களா? ரசீது எங்கே?’ என்று கேட்டார். ஏதேதோ சாக்குப் போக்குகளை அந்த அதிகாரி சொல்லியும் தோழர் விடவில்லை. இறுதியில் கூடியிருந்த மக்கள் முன்னால் உரிய பணத்தை அந்த அதிகாரி கட்டிய பிறகுதான் காரை நகர்த்த அனுமதித்தார்.

அதிகாரியின் ஆதரவு பெற்ற திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ரவுடிகள் அன்று இரவே தோழரின் வீட்டுக்கு அருவாள், கம்புடன் வந்து மிரட்டினார்கள். அத்தனை பேர் முன்பும் தனி ஆளாக அடி பணியாமல் தோழர் நின்றார். இந்த சம்பவத்தை அன்று வேடிக்கை பார்த்த இளைஞர்களில் பத்து பேர் தோழருடன் இணைந்து களப் பணியாற்ற முடிவு செய்தார்கள். அந்த 10 இளைஞர்களில் நானும் ஒருவன்.

என்னைப் போல் பலரை அவர் அமைப்புப் பணிகளுக்கு ஈர்த்திருக்கிறார்.

சென்ற ஆண்டு இறுதியில் முல்லைப் பெரியாறு பிரச்னை கொழுந்து விட்டு எரிந்த போது, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டறிந்தார். ‘மக்கள் நம் பக்கம் இருப்பதால், போராட்டம் வெற்றியை நோக்கி நகர்கிறது’ என்றேன். ‘நான் போட்ட விதை வீண் போகவில்லை” என்று சிரித்துக் கொண்டார். ஆம், தோழரே… நீங்கள் போட்ட விதைதான் நாங்கள். விதைகள் உறங்குவதில்லை. நீங்கள் விட்டுச் சென்ற பணியை முடிப்போம்…’ என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசி முடித்தார் தோழர் மோகன்.

இறுதியாக ம.க.இ.க மாநில செயலாளர், தோழர் மருதையன் பேசினார்.

“கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் 6 மாதங்கள்தான் உயிர் வாழ்வார்கள் என்றார்கள் பல மருத்துவர்கள். ஆனால், தோழர், கிட்டத்தட்ட 15 மாதங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நிகழும் என்பது அவருக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். திடீரென உடல் நிலை மோசமடையும். பின்னர் கொஞ்சம் சீரடையும். தோல்விதான் முடிவு என்று நிச்சயிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், அவ்வப்போது கிடைக்கும தற்காலிக வெற்றிகளில் நாங்கள் மகிழ்ச்சி கொண்டோம். இந்த ஒன்றரை ஆண்டு காலத் துயரத்தில் கண்ணீர் வற்றி, துயரம் கனக்க நின்று கொண்டிருக்கிறோம். அவருடைய வாழ்நாளை நீட்டிக்க முடிந்ததற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவருக்கு சிகிச்சையளித்த சித்த மருத்துவர் சிவராமனின் அக்கறையும் கவனிப்பும். இரண்டாவது, தோழர் சீனிவாசன் காட்டிய துணிவும் போராட்ட குணமும்.

என்னை விட அவர் வயதில் மூத்தவர். ஆனால், எப்போதும் ஒரு இளைஞனுக்கு உரிய உற்சாகத்துடன் இருப்பார். சொல்லப்போனால் பல சந்தர்ப்பங்களில் ஒரு பதின் பருவத்து இளைஞனைப் போல நடந்து கொள்வார். இதற்காகப் பலமுறை நானே அவரை விமரிசித்திருக்கிறேன். கண்டித்திருக்கிறேன்.

இங்கு பேசும் அனைவரும் இன்று தோழரை புகழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதை கேட்கத்தான் அவர் இல்லை. ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கையில் இது நடப்பதுதான். பொதுவாழ்க்கைக்கு பொன்விழா, மணி விழா கொண்டாடுவதையோ, புகழுரைகளைக் கேட்டு புளகாங்கிதம் கொள்வதையோ ஒரு கம்யூனிஸ்டு விரும்புவதில்லை. ஒரு கம்யூனிஸ்டு வாழ்நாள் முழுக்க விமர்சனங்களை எதிர் கொள்கிறான். தனது குறைகளை பரிசீலனை செய்து, தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். ஒரு முன்மாதிரி மனிதனைப் படைப்பதற்கும் சமூகத்தைப் படைப்பதற்கும் தன்னால் இயன்றதனைத்தையும் செய்கிறான்.

யாரும் குறைகளே இல்லாதவர்கள் இல்லை. தன் மீதான விமரிசனங்களுக்கு காது கொடுக்கவும் தமது குறைகளைச் சரி செய்து கொள்ளவும் ஒரு தோழர் தயாராக இருக்கிறாரா என்பதுதான் விசயம். தோழரிடமும் குறைகள் இருந்தன. ஆனால் தனது தவறுகள் குறித்து ஒரு இளம் தோழர் விமரிசிப்பதையும் கூட அவர் கேட்டுக் கொண்டார். அதனை ஒரு கவுரவப் பிரச்சினையாக அவர் கருதியதில்லை. முகம் திருப்பிக் கொண்டதுமில்லை.

கணையப் புற்றுநோய்க்கு நிவாரணமில்லை என்று எல்லோரும் கூறிவிட்ட போதும், “வெற்றி பெறுவதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பிருந்தாலும் நீங்கள் அறுவை சிகிச்சையை முயன்று பார்த்திருக்க வேண்டும். அதுதானே அறிவியல் பார்வை” என்று சொன்னார் ஒரு மருத்துவர். அறிவியல் பார்வை குறித்த அந்த மருத்துவரின் கூற்று வேறொரு கோணத்தில் இவ்விசயத்தைப் பார்ப்பதற்கு நம்மைத் துண்டுகிறது. சிறியதொரு இழப்பை சந்திக்க வேண்டுமென்றாலும், அதற்கு முன் புரட்சி வெற்றி பெறுவதற்கு 101 சதவீதம் வாய்ப்பிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவே பலர் விரும்புகிறார்கள். “அநாவசியமாக” இழப்புகளை சந்திக்க பலர் தயாராக இல்லை. நம்மில் பலர் பலவிதமான தவறுகளிலிருந்தும் விடுபட முடியாமல் இருப்பதற்கு காரணம் இந்த மனோபாவம்தான்.

ஆனால், யாரிடமும் எந்த விதமான உத்திரவாதமும் கேட்காமல் 1991, 92 வாக்கில் தான் வேலை பார்த்து வந்த மின்வாரிய பணியை ராஜினாமா செய்து விட்டார் சீனிவாசன். இது குறித்து யாருக்கும் அவர் சொல்லவுமில்லை. 1991 – 96 காலகட்டம் தமிழக அரசியலில் முக்கியமானது. ஜெயலலிதாவின் சர்வாதிகாரம் தலைவிரித்தாடிய காலம் அது. அப்போது ‘புதிய கலாச்சாரம்’ இதழின் முகவரி, வில்லிவாக்கத்தில் வசித்து வந்த தோழரின் வீடு. அது மிகச்சிறிய வீடு. அதில்தான் அப்போது தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். எப்போதும் யாராவது வந்த வண்ணமிருப்பார்கள். இதழில் வெளியான கட்டுரைகளுக்காக மிரட்டல் வரும். வீட்டு வாசலில் அறிவிக்கப்படாத புறக்காவல்நிலையம் போல உளவுத்துறை நின்று கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலைகளால் தனது “குடும்ப வாழ்க்கை” பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் கூறியதோயில்லை.

அந்தக் காலகட்டத்தில் பல போராட்டங்களில் அவர் கைதாகி சிறையில் இருந்திருக்கிறார். தமிழ் தீண்டாமைக்கு எதிராக திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் ஆற்றிய பாத்திரம் குறிப்பிடத்தக்கது. கருநாடக இசையுலகின் பிரபல வித்துவான்களும், ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் அதிகாரிகளும், பார்ப்பன “மேன்”மக்களும் குழுமியிருந்த அந்த அவையில், போலீசு பாதுகாப்பு வலயத்தையெல்லாம் மீறி வி.வி.ஐ.பி வட்டத்திற்குள் சீனிவாசன் நுழைந்து விட்டார். தியாகய்யர் விழாக்குழுவின் தலைவரான ஜி.கே.மூப்பனாரின் பின்னால் அமர்ந்திருந்து, திடீரென்று எழுந்து தமிழ்த் தீண்டாமைக்கு எதிராக அவர் முழக்கம் எழுப்பியதையும், அதைக் கண்டு அதிஉயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆத்திரத்தில் நடுங்கியதையும் மறக்க முடியாது.

அவர் சிறை சென்றது மட்டுமல்ல, வழக்கறிஞராக பணிபுரியும் தனது மகள், சுப்பிரமணிய சுவாமியை எதிர்த்து நீதிமன்றத்துக்குள்ளேயே போராடியதற்காகவும், தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்கும்பொருட்டு போராடி சிறை சென்றதற்காகவும் ஒரு தந்தை என்ற முறையில் அவர் மிகவும் பெருமை கொண்டார். தோழர் என்ற முறையில் மகிழ்ச்சி அடைந்தார்.

அவரது பிரிவு நம்மிடம் ஏற்படுத்தும் துயரத்தை, புரட்சிகர உணர்வாகவும் செயலாற்றலாகவும் மாற்றுவோம்”

என்று கூறி, தோழரது இறுதி ஊர்வல நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களுக்கும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றி கூறி உரையை நிறைவு செய்தார் தோழர் மருதையன்.

காலை 9.30 மணிக்கு தோழருடைய இறுதிப் பயணம் புறப்பட்டது. “தோழர் சீனிவாசனுக்கு வீர வணக்கம், தோழர் சீனிவாசனுக்கு விடை கொடுப்போம்”

என்ற முழக்கங்களுடன் தொடங்கியது ஊர்வலம். செங்கொடி முன்செல்ல தோழரின் உடலைத் தாங்கிய வாகனம் மெல்ல நகரத்தொடங்கியது. ஒலியெழுப்பாத சிவப்புப் பேரலையாய் நகர்ந்து சென்ற மவுன ஊர்வலத்தின் அமைதி, இருமருங்கும் நின்றிருந்த மக்கள் மீதும் பரவியது.

“ம.க.இ.க தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி” என்று எழுதிய பதாகையில், ஒலி பெருக்கியின் முன் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார் தோழர் சீனிவாசன். அவரது தோற்றமும் குரலும் கடந்த காலத்தில் உறைந்துவிட்டன.

நினைவுகளில் ஆழ்ந்தபடி நடந்து சென்று கொண்டிருந்த தோழர்களைத் தட்டியெழுப்பி, நிகழ்காலத்தை நினைவூட்டியபடி முன்னால் சென்று கொண்டிருந்தது கலைக்குழு தோழர்களின் பறையொலி.

வாகனத்தின் முன்னே, காற்றில் படபடத்தபடியே நகர்ந்து சென்று கொண்டிருந்தது செங்கொடி. தோழர் சீனிவாசன் கீழே உறங்கிக் கொண்டிருந்தார். அவர் பின்னால் ஆயிரக்கணக்கான தோழர்கள் அணி வகுத்து சென்று கொண்டிருந்தார்கள்.

________________________________________________

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்

12 மறுமொழிகள்

  1. நான் 81 ல் இருந்து 1986 வரை தமிழகத்தில் இருந்தவரை தோழர் சீனிவாசனை பலமுறை சந்தித்திருக்கிறேன்.ஈழப் போராட்டம் தொடர்பாக நான் பல மணி நேரம் அவருடன் பேசியிருக்கிறேன்.விசு என்ற தோழர்தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தினார்
    தோழரின் மறைவுக்கு எனது ஆழந்த அனுதாபங்கள்
    போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பது உண்மையானால் தோழரின் மறைவால் துவண்டுபோய் நிற்காமல் அவரின் அனுபவங்களை எங்களுக்கான படிப்பினைகளாக எடுத்துக்கொண்டு எங்களது பணியை இன்னும் உத்வேகத்துடன் ஆற்றுவது தான் நாங்கள் அவருக்கு செய்யும் உண்மையான வீர வணக்கமாக இருக்கும்

    தோழமையுடன் சிவா சின்னப்பொடி(திவாகரன்)
    http://sivasinnapodi.wordpress.com

  2. ஒரு மிக நீண்ட களத்தை நம்மிடையே விட்டு சென்று விட்டார் தோழர் சீனிவாசன்….
    இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது ….. நாம் செல்வோம் ….. வெல்வோம் ……

  3. தோழர் சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம்

    நீங்கள் எங்களை விட்டு பிரியவில்லை!
    புரட்சிகாக நீங்கள் வித்த விதைகள் நாங்கள்!
    உங்களின் மறுவுருவாய் களத்தில் நிற்போம்!
    ஏகாதிபத்தியத்திற்கு சவக்குழி பறிக்க களம் இறங்குகிறோம்!
    நீங்கள் காட்டிய பாதையில்!
    விடை தருகிறோம், தோழரே உங்கள் நினைவை நெஞ்சில் ஏந்தி!!!!

  4. சீனிவாசன் தோழரே…
    சென்று வாருங்கள்.

    நீங்கள்
    விட்டுச் செல்லவில்லை;
    விதைத்துச் செல்கிறீர்கள்.

    திடலில் கிடத்திய
    உங்கள்
    உடலின் முன்னால்
    நாத் தழுதழுக்க
    நினைவுகளைப் பகிர்ந்தபோது
    வீரஞ்செறிந்த எம் தோழர்கள்
    அன்று
    கண்ணீரும் சிந்தினார்கள்.
    அது ஒரு கையறு நிலை.

    உமது இறுதி ஊர்வலத்தில்
    வானுயர்ந்த பதாகைகள்
    சிடுசிடுத்த செங்கொடிகள்.
    ஒரு செந்தழலின்
    வளைந்த வடிவில்
    தோழர் வரிசை
    சிவப்பில் ஒளிர்ந்தது.

    முதலில் சென்ற
    மழலைகள்…
    இளந்தளிர்கள்…
    சுட்டெறிக்கும் சூரியனுடன்
    கைகோர்த்து
    தத்தித் தளிர் நடை பயின்றார்கள்.
    எதற்காக நடக்கிறோம் என்று
    அவர்களுக்குத்
    தெரிந்ததோ என்னவோ…
    ஆனால் இங்கே
    ஏதோ நடந்துகொண்டேயிருக்கிறது
    என்பது மட்டும்
    அவர்களுக்குத் தெரியும்.

    மழலையரைத் தொடர்ந்த
    மகளிர்.
    இழப்பின் வலியில்
    இறுகிய முகங்கள்.
    பின் தொடர்ந்த
    தோழர்கள்…
    ஊர்வல வரிசை
    எங்கேதான் முடிந்ததென்று
    யாருக்குமே தெரியவில்லை.

    மௌனத்தில் தலை குனிந்து
    மிக நீண்டதொரு பெருமூச்சிட்டு
    சிந்தித்து,
    தமக்குத் தாமே தலையாட்டி
    பின்
    திடுமென நிமிர்ந்த தலைகள்.
    இழப்பில் பூணும் உறுதி போலும்.

    கண்ணீர்த் துளிகளும்
    வியர்வைச் சிந்தல்களும்
    உங்கள் ஊர்வலப் பாதையில்
    பூக்களாய்த் தூவப்பட்டன.
    அந்த ஊர்வலமே
    வியர்வையால் வாசமடித்தது.
    வர்க்கம் அப்படி!

    நீங்கள்
    மரணித்துவிட்டதாய்
    தேம்பும் தோழர்கள்
    தங்களையறியாமல் சொல்கிறார்கள்.
    நீங்கள்
    எங்கெல்லாம் வாழ்கிறீர்கள்
    என்று
    யாவருக்கும் தெரியும்.

    உங்கள் வீச்சரிவாளை
    நாங்கள் எடுத்துக்கொண்டுவிட்டோம்.
    இனி அறுவடைதான் பாக்கி!

  5. தமிழக புரட்சிகர இயக்க வரலாற்றில் ஆழமான பதிவை ஏற்படுத்தியவர் தோழர் சீனிவாசன் என்றால் அது மிகையல்ல. அவரது வரலாற்றை அறிந்தவர்கள், அவரோடு பணியாற்றிவர்கள் மட்டுமன்றி அவரது இறுதி அஞ்சலியில் பங்கேற்றவர்கள் என சமூக விடுதலையை நேசிக்கும் அனைவரையுமே உலுக்கிவிட்டது தோழரின் மரணம். மரணத்தில்கூட அவர் புரட்சித் தீயை மூட்டிவிட்டுத்தான் சென்றுள்ளார். ஒரு சீனிவாசன் மறைந்தாலும் ஓராயிரம் சீனிவாசன்கள் உருவாவார்கள் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி.

  6. நான் தோழரின் இறுதி நிகழ்விற்கு சக தோழர்களுடன் சென்றிருந்தேன். சேத்துபபட்டு ரயில் நிலையத்தில் இறங்கியதும் அழுக்கு லுங்கியுடன் இருந்த ஒரு சைக்கிள் ரிக்க்ஷாக் காரரிடம் அம்பேத்கார் திடல் எங்குள்ளது? என்று கேட்டபோது உடனே நம்ம தோழர் எறப்புக்கு வந்திருக்கிறியா? என் பின்னாடியே வா என்றவாறே திடல்வரை அழைத்துச் சென்றுவிட்டார். அப்படி போகும்வழியில் நடைபாதையையே தங்களது வாழ்விடமாக கொண்டு வசிக்கும் வறிய ஏழைப் பெண்களில் ஒருவர் அவர்களிடையே செஞ்சட்டையுடன் சென்ற எங்களைப் பார்த்து “அவுங்கெல்லாம் உயிர் கொடுக்கிறவங்க ” என்று பேசியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
    தியாகத் தோழர் சீனிவாசனே, போய்வாருங்கள்! உங்கள் அடியொற்றியே உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்.

  7. 1987ம் ஆண்டில் புதிய ஜனநாயகம் இதழ் எனது சகோதரர் மூலம் எனக்கு அறிமுகமாகியது. அப்போது அதன் விலை உரூவா ஒன்று மட்டுமே! தொடர்ந்து படிக்கத் தொடங்கியதில் இயக்கத்தின் கொள்கைகளோடு ஒன்றிப்பு ஏற்பட்டதினிமித்தமாக, இயக்கத் தோழர்களை நேரில் சந்திக்கும் ஆவல் ஏற்பட்டதினால், அனேகமாக 1992 அளவில் மதிப்பிற்குரிய தோழர் சீனிவாசன் அவர்களை அவரது வில்லிவாக்கம் வீட்டின் முகவரியை தேடிப்பிடித்து, நேரில் சந்தித்துப் பேசினேன். பாபர் மசூதி இடிக்கப்பட்ட கொந்தளிப்பான நேரத்தில் நான் வெளியிட்ட ‘இராமர் மசூதியும் பாபர் கோயிலும்‘ என்ற துண்டறிக்கைய தோழரிடம் கொடுத்தேன்! படித்துவிட்டு.., நீங்கள் நம்ம இயக்கத்துல முழுநேர ஊழியரா சேர்ந்துடுங்களேன் என்றார் சிரித்துக்கொண்டே…! நண்பர் மதிமாறன் மூலமாக தந்தை பெரியாரின் கொள்கைக்குள் வந்த நாட்களானதால். நட்புடன் கூடி சிரித்துவிட்டு மௌனமானேன்! அய்ந்து அல்லது பத்து மணித்துளிகள்தான் இயக்கத்தைக் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன், என்னைப் பற்றியும் கேட்டு அறிந்துகொண்டார். அதுதான் அவருடன் எனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பும் கடைசி சந்திப்பும்! என்றாலும் வெகுநாட்கள் பழகியது போலவே அன்போடும் உரிமையோடும் என்னிடம் அவர் பேசியது மிகவும் பிடித்துவிட்டது எனக்கு! அதன்பிறகு வளைகுடா நாடுகளுக்கு பிழைப்பு தேடிப் போனபிறகும் கடிதம் மூலமாக தொடர்பு கொண்டும் நன்கொடை அனுப்பியும் பதிலாக அவர் எனக்கு அசுரகானம் உட்பட சில ஒலிப்பேழைகளை என் வெளிநாட்டு முகவரிக்கு அனுப்பியும் வைத்தார். அவருடைய பொறுப்புணர்ச்சியும், கடமையுணர்வும் அவர் மேல் எனக்கு கூடுதலான நன்மதிப்பை ஏற்படுத்தியது! காலப்போக்கில் ஏற்பட்ட வாழ்வியல் தொல்லைகளால் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற என் ஆவல் கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டது! புதிய ஜனநாயகம் இதழை மட்டுமே தொடர்ந்து இன்றுவரை படித்து வருகிறேன்! அவரைப்பற்றிய செய்தி எதாவது வந்தால்கூட ஆவலோடு படிப்பேன். ஆனால் இன்று.. இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. இயக்கத்தோழர்கள்.. அவர் கைகாட்டிய பணிகளையும் அவரின் உற்சாகமான செயல்பாடுகளையும் தொடர்ந்து கடைபிடிப்பதே அவரை நினைவுகூர்ந்து அவருக்குச் செலுத்தும் உண்மையான சிவப்பஞ்சலியாகும். அன்பான நண்பர், தோழர் சீனிவாசன் அவர்களுக்கு தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் சார்பாக சிவப்பஞ்சலியையும் வீர வணக்கத்தையும் கனத்துப்போன இதயத்தோடு பகிர்ந்து கொள்கிறேன். காசிமேடுமன்னாரு.

  8. Vinavu Sahotharargalin Dhukkathil pankerkirom! Engalin aalntha varuthangalum, akkaraigalum! Ungalin poratta kalam Dharmathai anusariththu munneri sellattum! Thozhar. Srinivasan avargalin Aanma Irayadiyin Nilalil Ilaiparattum!

  9. தோழர் சீனிவாசன் அவர்களுடைய இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக ம.க.இ.க வின் தோழர்களும், அதன் தோழமை அமைப்பைச் சேர்ந்த தலைமையில் உள்ள தோழர்கள் தோழரைப் பற்றி இரங்கல் உரை ஆற்றினார்கள். இறுதியில் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் 15 நிமிடம் இரங்கல் உரை ஆற்றினார்.
    அதன் முழு உரையும் கீழே உள்ள சுட்டியில் தரப்பட்டுள்ளது.

    http://socratesjr2007.blogspot.in/2012/05/blog-post_17.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க