Sunday, July 21, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்புதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

புதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

-

செய்தி -26

பாரிவேந்தர்-பச்சமுத்து
பச்சமுத்து – படம் நன்றி கலகக்குரல்

ரிரு மாதங்களாகவே தலைப்பில் உள்ள கம்பெனிகளின் முதலாளியும் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வார, வாரமிருமுறை, மாத இதழ்களில் விளம்பரங்களாக படையெடுத்தன. சேலம், திருப்பூர், நெல்லை, திருச்சி என்று பல்வேறு மாவட்ட தலைகள் கொடுத்த விளம்பரங்கள் அனைத்தும் ஒரே டிசைனில் இருந்ததைப் பார்த்தால் எல்லாம் தலையே செய்த செட்டப் என்று புரிந்து கொள்ள ரொம்ப அறிவு தேவையில்லை.

இன்று ஆகஸ்ட்டு 24 அவரது பிறந்த நாளை ஒட்டி எல்லா தினசரிகளிலும் வண்ண விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி கைக்காசு போட்டு தன்னையே வாழ்த்திக் கொள்ளும் தலைவருக்கு வினவு தனது சொந்த செலவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறது. வாழ்த்துக்குரிய கவியாடல் செய்யும் கவித்திறன் நமக்கில்லை என்பதால் இன்று அனைத்து மாவட்ட ஐ.ஜே.கே நிர்வாகிகள் அளித்திருக்கும் விளம்பர வாசகங்களின் உதவியுடன் வினவு வாழ்த்தை வடித்திருக்கிறோம்.

குறிப்பு: தடித்த நீல நிற வரிகள் அவர்களுடையவை; மெல்லிய வரிகள் நம்முடையவை!

______________________________

* ஆகஸ்ட் 24 டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்த நாள்! இளைஞர் எழுச்சி நாள்!

எஸ்.ஆர்.எம் குரூப்பில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்தான் அமுதசுரபி போல அய்யாவுக்கு பணத்தை அள்ளித் தருபவர்கள். அதனால்தான் இன்றைய தினத்தை இளைஞர் எழுச்சியாக கொண்டாடுகிறோம்.

* இந்திய அளவில் குடும்ப ஆட்சியை அகற்றுதல்.

அரசியலில் இருக்கும் மற்ற குடும்பங்களை அகற்றினால்தான் புதிய தலைமுறை பத்திரிகை, டி.வி, எஸ்.ஆர்.எம் குழும கல்லூரிகளில் இருக்கும் எங்களது குடும்பம் அரியணை ஏறும். கல்லூரியிலும் குடும்பம். கோட்டையிலும் குடும்பம்! தொலைக்காட்சியிலும் குடும்பம். அரசியல் கட்சியிலும் குடும்பம்!

* சோம்பேறியாக்கி, சுயமரியாதையை இழக்கும் இலவசம் தவிர்த்தல்!

அதனால்தான் எங்கள் கல்லூரி கட்டணத்தை சில பல இலட்சங்களில் வைத்திருக்கிறோம். துட்டை லீகலாக வாங்குவதால் எங்களது சுயமரியாதை கெடாது. துட்டை கொடுத்தவன் கொடுத்துட்டமே என்று படிக்க வேண்டியிருப்பதால் சோம்பேறித்தனம் கிடையாது. ஒரு கல் மூன்று மாங்காய்!

* உடலைக் கெடுத்து, உயிரைக் குடிக்கும் மதுவை ஒழித்தல்

மல்லையா, மிடாஸ் போன்று நாங்களும் ஆரம்பத்தில் மது ஆலைகள் தொடங்க நினைத்து ஜஸ்ட் மிஸ்ஸாகி கல்வி ஆலைகள் பக்கம் திரும்பி விட்டோம். எதிர்காலத்தில் சரக்கு ஆலை துவங்கும் போது இந்த இலட்சியத்தை திரும்பப் பெறுவோம். இது உறுதி!

* லஞ்சம் – ஊழல் அற்ற நேர்மை அரசியலை நிலைநாட்டல்.

கேப்டன், அண்ணா ஹசாரே, சரத்குமார், கார்த்திக்ன்னு டெல்லிக் காக்காய் முதல் உசிலம்பட்டி குரங்கு வரை  இதை சொல்லும் போது நாங்க மட்டும் சொல்லலேன்னா எப்படி? இது டெம்ப்ளேட் ரூல் பாஸ்!

* இரண்டு முறைக்கு மேல் எவரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை தவிர்த்தல்.

நல்லாப் பாருங்க, தவிர்க்கணும்ணுதான் சொல்லிருக்கோம். சட்டமெல்லாம் கிடையாது. எங்கள் டி.வி, பத்திரிகை, கல்லூரிகளுக்கெல்லாம் எங்க (பாரிவேந்தரது) குடும்பத்தினர்தான் ஆயுட்கால நிர்வாகிகள்ன்னு நாங்களாவே வைக்கல. இதெல்லாம் மாணவர்களும், டிவி பார்க்கிற தமிழக மக்களும் இட்ட அன்புக் கட்டளை. இது வேற, அது வேற!

* தடையில்லா மின்சாரம், தனியார் துறை மூலமும் கிடைக்க வழி செய்தல் ( குஜராத், மும்பை போல).

தமிழ்நாட்டு அரசாங்கம் தனியாரிடம் யூனிட் ஒன்றுக்கு 18 ரூபாய் கொடுத்து வாங்குகிறது. இதனால் தமிழக மின்சார வாரியம் திவாலாகினாலும், பல முதலாளிகள் பில்லியனராகியிருக்கிறார்கள். நாங்க ஆட்சிக்கு வந்தா யூனிட் ஒன்றுக்கு நூறு ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஏன்னா விக்கிறதும் நாங்க தானே! அதனால் உலக பணக்காரர்களின் முதலிடம் எங்களுக்கு உறுதி.

* விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு படித்த இளைஞரை முதல்வர் ஆக்குதல்.

தமிழகத்திலேயே கட்சி போஸ்டருக்கு மண்வெட்டி தூக்கி, ஏரோட்டி, களை பறித்து விவசாயி போஸ் கொடுத்த ஒரே ஆளு நாந்தாங்கிறதை நினைவுபடுத்தினீங்கன்னா இந்த இலட்சியத்திற்கு அர்த்தம் புரியும். என் புள்ளைங்க, இல்லேன்னா பேரங்க, இல்லேன்னா கொள்ளுன்னு யாராவது இந்த முழக்கத்தை நிறைவேற்றுவது உறுதி. இதற்காகவே தமிழ்நாடு முழுக்க பல விவசாய நிலங்களை வாங்கி வைத்துள்ளோம்.

இக்கொள்கைள் நிறைவேற்ற அயராது பாடுபடும் டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்!

– வினவு

பின் குறிப்பு: ஊரறிய முதலாளியா ஆன பிறகு அவனவன் கட்சி கிட்சின்னு நன்கொடை கேட்டு தாளிச்ச தாளிப்பை நிறுத்துவதற்காகவே ஐயா இந்தக் கட்சியை ஆரம்பித்தார். ஆனாலும் கட்சியின் வளர்ச்சியை பார்த்த பிறகுதான் நெஜமாகவே ஆட்சியை பிடித்துத்தான் பார்ப்போமே என்று தோன்றியது. ஆகவே இது காமடி விளம்பரமல்ல சீரியஸ் விளம்பரம்ணு சொல்ல வைக்கிற நிலைமைக்கு வாசகர்கள் வினவை ஆக்கிவிடக்கூடாது. ஆக்கிட்டீங்கன்னா அழுதுருவோம்!

இதையும் படிக்கலாம்:

___________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. இந்த புதிய தலைமுறை காரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை,
  இவர்கள் தான் நடுநிலையான செய்தியை தருவார்களாம்,
  அதாவது தி.மு.க. கட்சி சார்பகவை இல்லை அ.தி.மு.க சார்பாகவோ செய்தி இல்லாமல் இருபதற்கு பெயர் தான் நாடு நிலைமையாம்.

 2. இவர் தான் எஸ்.ஆர்.எம் காலேஜ் ஓனரா….அடப்பாவி…எனது உறவினரின் மகள் பேமெண்ட் சீட்டில் மெடிக்கல் காலேஜ் சீட் வாங்கினாள்…சீட் விலை எவ்வளவு தெரியுமா….வெறும் 80,00,000 தான்…

 3. உண்டியலை குலுக்கி, ஊரார் காசை வசூல் பண்ணி, மாவோ, ஸ்டாலினுக்கு பிறந்த நாளுக்கு போஸ்டர் ஒட்டுறதை விடவா

  • உண்டியல் குலுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு உழைக்கும் மக்கள் யாரோ ஊரார் அல்ல.
   கல்வியை வியாபரமாக்கி ஊரார் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்து சுவரொட்டி ஒட்டிக்கொள்பவர் உங்களுடைய முதலாளி பச்சை முத்து தான் அய்யா.

   • ஊரார் பணத்தை கொள்ளையடித்தாரா?எப்படி நீங்கள் சாட்சிதானே…///கல்வியை வியாபரமாக்கி ஊரார் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்து////
    இதே வார்த்தையைக் கூறி போலீஸ்ல புகார் செய்யனும் நீங்கள்.வழக்கு பதிவாகுமா?
    கல்வி வியாபாரம் பண்ண அரசாங்கம் தடைச் சட்டம் ஏதாவது கொண்டு வரட்டும்.அதன் பிறகு யாராவது கல்வி யாபாரம் பண்ணினால் கொள்ளைக்காரர்கள் என்போம்,
    அரசாங்கத்தை சாட வேண்டிய விசயத்தில் கையாலாகாமல் தனி மனிதரை வசை பாடுகிறாய்.

  • பிரியாணி பொட்டலம் ஓசியில்
   கிடைச்சதுக்கே என்னாமா கூவுர! கவலபடாத வருசாவருசம் ஒரு பிரியாணி பொட்டலம், சாராய பாக்கேட் உண்டு, நீங்க ஓசி பஸ்சிலே மாநாட்டுக்கு வந்து, ‘ஐயா வாழ்க’னு கோசம்போட்டா மட்டும் போதும் .
   இன்னும் அந்தாளுக்கு போஸ்டர் அடிக்கும் அளவுக்கு துட்டு இருந்துச்சுனா, உனக்கு வட்டசெயலாளர் போஸ்டிங் கெடைக்கும்,
   (”வட்ட செயலாளர் பச்சமுத்து ப்ரியன்” அட போஸ்டரில் அடிக்க தகுதியான பெயர்தான்).

   ஆனா ஒன்னு வினவு காரர்கள் போஸ்டர் அடிச்சதல நன்ம இருக்க, மாவோ, ஸ்டாலின பேரெல்லா கூட உனக்கு தெரியவச்சுருகே.

   பின்குறிப்பு:
   *IJK கட்சியில் யாரு வேனாலும் தொண்டனா இருக்கலாம் ஆனா பதவியெல்லா ஒடையார் சாதிகாரனுக்கு மட்டுந்தா.
   *இன்னாத்தான் நாங்க புதிய தலமுற கொண்டுவந்தாலும் சாதிய உட மாட்டோம் புரியுதா?
   *ரவுத்தரம் பழகுனு நிகழ்ச்சி நடத்துரதுக்கு பதிலா ‘தருதரம் பழகுனு’ சொன்னா கரெக்டா இருக்கும், ஏன அந்தாளு எல்லாதையும் காலேஜ் கட்டி புடுங்கிருமே…..

   • ஐயா சாமீ மேல இருக்கறதெல்லா
    படிசுட்டு எமேல கோவ படாதிங்க,
    அதெல்லாம் என்னோட பிரண்டுங்க சொன்ன மேட்டரு.
    எனக்கு எதுக்கு வம்பு அவிங்க பேரை சொல்லிபுடுரேன்…
    1.காரி வேந்தன்
    2.ஆய் வேந்தன்
    3.ஓரி வேந்தன்
    4.அதிகன் வேந்தன்
    5.நள்ளி வேந்தன்
    6.பேகன் வேந்தன்

 4. 23.8.12 செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் பயணம் செய்த போது பார்த்த காட்சி. வழிநெடுகிலும் கண்ணைப்பறிக்கும் லைவ் சைஸ் பிளக்ஸ்பேனர்கள். ஏதோ,கட்சி தலைவர்களின் வருகையாக இருக்கும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால், பிறந்தநாள் வாழ்த்துப்பேனர்கள் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர். புல் மேக்கப்பில், பல கெட்டப்பில் பிளக்ஸ்ஸில் மின்னிக்கொண்டிருந்தார் ‘கல்வி வள்ளல்’.

  “கல்வி வள்ளல்”, பட்டத்தை விட்டுவிட்டீர்களே?

  இந்த மாதிரி சுயவிளம்பப் பித்தர்களின் கல்விக் கூடங்களில் பொரித்து அனுப்பப்படும் மாணவக்குஞ்சுகள் சமூகத்தில் என்ன சாதிக்கும்?

  அப்போதே கண்ட காட்சி, SRM மெடிகல் காலேஜ் மாணவிகள் இருவர் இரயிலில் இருவர் இருக்கையில் அமர்ந்து, ஆங்கிலத்தில் உரையாடியபடி வந்தனர். நடுவில் தனது பையை வைத்து இருக்கையை அடைத்துக் கொண்டனர். வயதான மூதாட்டி ஒருவர் இடம் கேட்டார். இருவரும் முடியாது என்றனர். பக்கத்தில் இருந்த பெண் அவர்களிடம் பேசியும் பலன் இல்லாமல் அவர், பாட்டியை கட்டாயமாக உட்கார வைத்தார். பாட்டியும் இடித்தப்படி உட்கார்ந்தார்.

  அந்த பெண்கள் மேனர்ஸ் தெரியாதா? சீட்டுல மூணுப் பேர் உட்காரனம்னு ரூல்ஸ் இருக்கா? என ஆங்கிலத்தில் பொறுமினர். பதிலுக்கு அந்த பெண், மேனர்ஸ், ரூல்ஸ் எதுவும் வேணாம், மனிதாபிமானம் இருந்தா போதும் என்றார். அதில் ஒரு பெண் விருட்டென எழுந்து கிழவியின் பக்கத்தில் உட்காரமல், புத்தகபையை உட்கார்ந்த இடத்தில் வைத்துவிட்டு யாருக்கும் இடம் தாராமல், தெனவாட்டாக நின்றுக்கொண்டார். அந்த ‘படித்தப்’ பெண்ணை பார்த்து அனைவரையும் முகம் சுழித்தனர்.

 5. பழைய சாராய வியாபாரி, ரவுடி பச்சமுத்து இப்போ பாரி வேந்தராக அவதாரம் எடுத்து பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதாக சொல்லி இருக்கிறான்… இந்த பழைய சாராய கேடி பச்சமுத்துவுக்கும் பாரிக்கும் என்னடா சம்மந்தம் என கேட்டால் பதில் இல்ல… இந்த கேடிக்கு பார்க்கவ குல உடையார் சாதியினரின் வெறியும் பக்கபலமாக இருக்கிறது… கடந்த 2008-09 இல பழைய எம்ஜிஆர் ரசிகர் மன்ற ஆள் கோவை தம்பியை பிடித்து சாதி சங்கத்தை வளர்த்து விட்டு 2010இல் கட்சி தொடங்கிய கேடி பச்சமுத்து, கட்சி போராட்டம் எல்லாம் நடத்தாது போன்ற கொள்கைகளை அவிழ்த்து விட்டான்… இப்போது பச்சமுத்துக்கு மூலதனம், கல்வி கசாப்பு கடைகள் மூலம் கொள்ளையடித்த பணமும், உடையார் சாதி வெறியும்தான்… அவன் பின்னால் செல்லும் உடையார் சாதி வெறியர்களுக்கு… பச்சமுத்து அவனது கல்லூரியில் இலவசமாக இட கொடுக்க போவதில்லை… அங்கு பணம் இருப்பவர்களுக்கே இடம்… மற்றபடி பின்னால் வந்த சாதிகாரர்கள் அடியாள் அடிமைகளே… ஆனால் சாதி வெறியில் பச்சமுத்து பின்னால் செல்லும் சாதி வெறி அடிமைகளுக்கு உண்மை புரிய வேண்டுமே?

  • தமிழகத்தில் ரவுடித் தனம்,அராஜகம் செய்யாத பண்பான மானம் வாய்ந்த உடையார் குல மக்களை,ரவுடிகள்,சாதி வெறியர்கள் என்பது அவதூறு.கவனமாக பேசு.

 6. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் இன்றுதான் பிறந்த நாளாம்.அதற்கும் சேர்த்து வாழ்த்து சொல்லியிருக்கலாம்.

 7. பஞ்சவன் பாரி வேந்தன் = பாரிவேந்தர் பச்சமுத்து
  கொசாக்சி பசப்புகழ் = ?

 8. செய்தி எதிரொலி என புதிய தலைமுறை பெருமை அடிப்பது சரியா..? அசிங்கமா?

  கல்வி கிடைக்காத இரண்டு மாணவிகளுக்கு எங்கள் செய்தி எதிரொலியினால் இன்னார் கல்லூரியில் இடம், மோசமான சுகாதார நிலையத்துக்கு எங்கள் செய்தி எதிரொலியினால் விடிவு என புதிய தலைமுறை தற்போது அரட்டை அரங்கம் பாணியில் பெருமை கொள்வது பார்க்க சகிக்கவில்லை.

  கல்வி, மருத்துவம் எனப்து இன்று அப்பல்லோ, எஸ் ஆர் எம் பச்சமுத்து போன்ற முதலாளிகளின் லாபத்துக்காக மட்டுமே என அரசு அவற்றை உத்தரவாதப்படுத்தும் பொறுப்பில் இருந்து விலகி வருவது இன்று வெள்ளிடைமலையாக தெரியும் போது, பச்சமுத்து டிவியிலேயே பல ஊடகவியலாளர்கள் இத்தகைய தனியார்மயம் குறித்து கிழிக்கும்போது

  இப்படி நாங்கள் செய்தி போட்டோம் என அவலநிலைக்கு காரணமானவர்களே அவலநிலையினை தீர்ப்பது போல சொல்வது எத்தகைய கேவலம்?

  puthiyathalaimurai.tv/puthiyathalaimurai-news-effect-a-primary-health-centre-gets-help-from-district-headquarters

 9. மக்கள் ஒரு ரூபாய் இட்லிக்காக காத்திருக்கும் போது கலைஞர் பிறந்தநாள் ஆடம்பரமாக, வக்கிரமாக கொண்டாடப்படும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவது போல தலீவர்கள் எப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என மக்களிடம் பேட்டி எடுத்து புதிய தலைமுறை இன்று ஒளிபரப்பியது.

  அதில் ஒரு சிலர் கழுவி கழுவி ஊற்றினர் என்பது ஒருபுறம் இருந்தாலும் இப்படி நிகழ்ச்சி ஒளிப்பரப்பும் பச்சமுத்து தனது பிறந்தாளுக்கு போட்ட மேக்கப், விளம்பரம், ப்ளக்ஸ் எல்லாத்தை விட அவுத்து விட்ட பொய்களுக்கு அளவே இல்லை.

  அதற்கு இந்த பதிவே சாட்சி.

  கலைஞர் வக்கிரத்துக்கு அம்மா உணவகமும், இன்று இரவு கலைஞர் தொலைக்காட்சியில் YMCA பொதுக்கூட்ட நேரலையே சாட்சி.

 10. உங்களுக்கெல்லாம் இந்த அளவிற்கு பொறாமை வர என்ன தேவையுண்டு?.பச்சமுத்து தனது சொந்த உழைப்பில் தானே முன்னுக்கு வந்துள்ளார்.வீடேறி கொள்ளை அடிக்கவில்லையே.கருணாநிதி அரசியல் பண்ணலாம்.பெரியார் அரசியல் பண்ணலாம்,ஆனால் தமிழன் பண்ணக் கூடாது அப்படித் தானே..உங்களை மாதிரியான பொச்சாந்து கொண்ட மனிதர்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் அவர் மீது.அடுத்தவன் வயித்துக்குள் தனது சோற்றைத் தேடும் கூட்டம் மட்டுமே இப்படி தனி நபர் வசைபாடும். பாரிவேந்தர் மீது பொறாமை கொண்டோரெல்லாம் அவர் மாதிரி உழைத்து முன்னிற்கு வர முடியுமா?கல்விக் கூடங்கள் நீங்களும் ஆரம்பித்து மாணவர்களை உங்களைத் தேடி வரவைத்து லட்சக்கணக்கில் பணம் வாங்க முடியுமா?அதற்கான தரம் தகுதி உண்டா?தகுதி இருப்பவன் செய்யுங்கள் பார்ப்போம்.அதை செய்யவே துப்பில்லாத நீங்கள் வாய்ச்சொல் இங்கு வீரத்தை காட்டுகிறீர்கள்.முடிந்தால் கட்சியும் ஆரம்பியுங்கள்.ஆனால் நீங்கள் எல்லாம் ஆபத்தானவர்கள்.அடுத்தவனின் வளர்ச்சி கண்டு வெந்தே சாகும் மனநோயாளர்கள்.

 11. ஆனால் இன்னொன்றையும் கூறவிரும்புகிறேன்,இந்த புதிய தலைமுறை டி.வி யில் பச்சமுத்து உங்கள் போன்ற நடுநிலை வேடம் போடும் ஆபத்தானவர்களையே வேலைக்கு வைத்துள்ளதாக தெரிகிறது.
  நிர்வாகியாக உங்களுக்கு பிடிக்காத இனத்தைச் சேர்ந்தவர்,ஆனால் நன்றாக நடுநிலை வேஷம் போடத் தெரிந்தவராம்.இவர்களை நீக்கி விட்டு நல்லவர்களை வேலைக்கு வைக்கச் சொல்லுங்கள்.நீங்கள் எதிர்பார்க்கும் படி செய்திகள் கிடைக்கும்.
  டி.வி விசயத்தில் பச்சமுத்து அவர்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது உண்மை தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க