privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமா'தல'யின் குடும்பத்தில் தயாராகிறது ஒரு ஒலிம்பிக் தங்கம்!

‘தல’யின் குடும்பத்தில் தயாராகிறது ஒரு ஒலிம்பிக் தங்கம்!

-

செய்தி-46

பேட்மிட்டன் வீராங்கனை ஷாலினி
பேட்மிட்டன் வீராங்கனை ஷாலினி – படம் நன்றி www.thehindu.com

ர்கரை நொறுக்கியும் கோக்கை உறிஞ்சியும், ” 120கோடி மக்கள் தொகையில் ஒரு தங்கப் பதக்கம் கூட இல்லையா, என்ன எழவு நாடிது” என்று சலித்துக் கொள்ளும் அவநம்பிக்கை அம்பிகள் எல்லாம் இடத்தைக் காலி செய்யுங்கள்! உங்களைப் போன்ற நடுத்தர வர்க்க கருத்து கந்தசாமிகளின் புலம்பலை வேரறுத்து பாசிட்டிவ் வெள்ளத்தை பாய்ச்சும் எங்கள் ‘தல’யின் சமீபத்திய சாதனையைப் பாருங்கள்!

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் மனைவியான ஷாலினி திருமணத்திற்கு முன் எந்த விளையாட்டையும் ஆடியதில்லை. ஏன் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. மணமுடிந்த பிறகு விளையாட்டாய் பேட்மிட்டன் – இறகுப்பந்து – விளையாட ஆரம்பித்தார் ஷாலினி. ஆரம்பத்தில் ஹாபியாக இருந்தது பின்னர் டெரரான பயிற்சியாக மாறியது. இரு வருட பயிற்சிக்குப் பிறகு ஒரு பொன்னாளில் தல கேட்டார்: ” நீ ஏன் டோர்னமென்ட்ல ஆடக்கூடாது?”. ஐயையோ நானா என்று பயந்து மிரண்ட ஷாலினிக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் காஸ்ட்லியான செலவில் வாங்கிக் கொடுத்தார்.

முதலில் வீட்டிலேயே ஷட்டில் கோர்ட் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். எதுக்கு இவ்வளவு செலவுன்னு ஷாலினி தயங்கிய போதும், வெளியே போனால் அலைச்சல், டைம் வேஸ்ட், கொசு கடிக்கும், சுகாதார பிரச்சினைகள், டிராபிக் ஜாம் என்று ஏகப்பட்ட நெருக்கடிகள் இருப்பதை உணர்த்திப் புரிய வைத்தார் தல. இப்படி இந்தியாவிலேயே அதிநவீன வசதியுடன் ஷட்டில் கோர்ட் தலயின் வீட்டில்தான் உள்ளது என்பதிலிருந்தே அவரது விளையாட்டு ரசனை உணர்வை புரிந்து கொள்ள முடியும். ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வாங்கிய சாய்னா நெஹ்வால் கூட வெட்டியாக வெளியே இருக்கும் மைதானங்களுக்குத்தான் சென்று விளையாடி வருகிறார். தலயப் போன்ற கிரியேட்டிவாக யோசிக்கக் கூடிய, அர்ப்பணிப்புடன் எல்லா வசதிகளையும் செய்து தருகிற ஆட்கள் அவருக்கு இல்லை என்பதுதான் விசயம்.

கோர்ட்டு கட்டிக் கொடுத்தது மட்டுமல்ல, மாறன் என்ற ஒரு நல்ல பயிற்சியாளரையும் நல்ல விலை கொடுத்து தேடிக் கொடுத்திருக்கிறார், தல. இது போக மாநில அளவிலான வீரர்களும் ஷாலினியுடன் விளையாடும் வாய்ப்பையும் அவர் வாங்கிக் கொடுத்தார். இப்படி விளையாட்டிற்க்காக வீட்டிற்குள்ளேயே கோர்ட், பயிற்சியாளர், விளையாட வீரர்கள், பந்து பொறுக்க பையன்கள் என்று ஏற்பாடு செய்வதற்கு யார் சார் இருக்கிறார்கள்?

2006-ல் சிவகாசியில் நடந்த டோர்னமெண்ட்ல ஷாலினி ஆடி அரையிறுதி வரை வந்தார். அந்த வருடமே மாநில அளவு பந்தயங்கள் ஆறில் விளையாடியவர் இடையில் கொஞ்சம் போரடித்ததால் மூன்று வருடங்கள் பிரேக் விட்டார். இப்போது மீண்டும் இரண்டு வருடங்களாக விளையாடி வருகிறார். இடையில் ஏற்பட்ட பிரேக்கெல்லாம் பிறவி வீரர்களின் சாதனைகளுக்கிடையில் எப்போதாவது ஏற்படும் சலிப்புகள் என்பதை அறிவீர்களா?

சமீபத்தில் திருச்சியில் நடந்த போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் ஆடி இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார் ஷாலினி எனும் தங்கத் தாரகை. இரட்டையர்களில் ஒருவர் சொதப்ப ஒருவர் நன்றாக ஆடினாலே தமிழ் மாநில அளவில் வெல்ல முடியும் என்பதால் “இது சாதாரண விஷயமில்லை” என்று நண்பர்களும், மற்ற பிளேயர்ஸ்களும் பாராட்டித் தள்ளுகிறார்கள். அப்படி ஷாலினி கூட நன்றாக ஆடிய வீரர்களும் தலயின் துணைவிக்கு கிடைத்திருக்கும் வெற்றிக்கு நாமும் ஒரு அணில் போல பயன்பட்டிருக்கிறோம் என்று பெருமிதத்திலும், உற்சாகத்திலும் பல நாட்கள் தூங்க வில்லையாம்.

மும்பை ஷூட்டிங்கில் இந்த வெற்றிச் செய்தியை கேள்விப்பட்ட தல, ” எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு”ன்னு வாழ்த்துரைத்திருக்கிறார். தன் மேல் தல வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், ப்ரியத்திற்கும் பெரிய வெற்றியை பரிசா தரணும்னு ஆசைப்படுவதாக ஷாலினியும் சபதமெடுத்திருக்கிறார். விளையாட்டையே வாழ்வாக, காதலாக, காஸ்ட்லியான தரத்தில் நேசிக்கக் கூடிய இத்தகைய தம்பதிகள் அமெரிக்காவில் கூடக் கிடையது.

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தலயும் ஷாலினியுடன் விளையாடுவார். அதில் பல முறை ஷாலினிதான் ஜெயித்திருக்கிறார் என்றாலும் தல விட்டுக் கொடுத்ததுதான் அந்த வெற்றி என்று தெரிந்ததும் ஷாலினி ஆனந்தக் கண்ணீர் விடுவார். ஏற்கனவே பைக் ரேஸ், ஃபார்முலா கார் ரேஸ் போன்ற விளையாட்டுக்களில் கோடிக்கணக்கில் செலவழித்து சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் தல தமிழக அளவில் வெற்றிபெறும் ஒரு பேட்மிட்டன் வீராங்கனையையே தோற்கடித்திருக்கிறார் என்றால் அவருள் எத்தனை பெரிய திறமைசாலி ஒளிந்திருக்கிறான்?

இந்த பெருமைமிகு தம்பதியினரின் தெய்வத் திருமகளான அனோஷ்கா கூட அடிக்கடி, ” நான் ஷட்டில் சாம்பியனாகணும் மம்மி” ன்னு மழலைத் தமிழில் கூறுகிறாளாம். அவள் வளர்ந்ததும் சர்வதேச தரத்தில், அமெரிக்க டாலர் செலவில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தர தல இப்போதே திட்டமிட்டிருக்கிறார் என்பது நமது காதில் தேனாய் இனிக்கும் செய்தி.

ரெண்டு புரோட்டாவிற்கும், ஒரு ஆம்லேட்டிற்கும் கூட காசை எண்ணிப் பார்த்து செலவழிக்கத் தயங்கும் பரதேசிகள் நாட்டில் விளையாட்டிற்காக எத்தனை கோடியும் செலவழித்து குடும்பத்தில் வீராங்கனைகளை உருவாக்கியே தீருவேன் என்று நமது தல யாருக்கும் தெரியாமல் பணிவாக செய்யும் இந்த முயற்சியின் அருமை எத்தனை ஜென்மங்களுக்குத் தெரியும்?

இணையத் தமிழர்களுக்கு தலயின் மட்டன் பிரியாணி மனிதாபிமானத்தை எடுத்து சொல்லி புரியவைத்த அண்ணன் பத்ரி இதற்காகவும் எதாவது செய்யனும் பாஸ்!

மக்களே விரக்தியையும், தோல்வியையும் தூக்கி எறியுங்கள்! ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்கப் போகும் இந்த கலை மற்றும் விளையாட்டுக் குடும்பத்தை காசில்லை என்றாலும் வாழ்த்துங்கள்! திறமையோடு விளையாடித்தான் தங்கப் பதக்கம் வாங்க வேண்டுமென்பதில்லை, செலவழித்தும் வாங்க முடியுமென்று நிரூபிக்கப் போகிறார் எங்கள் தல!

நேற்றைய குங்குமத்தில் (ஆகஸ்டு 27)  வெளியான திருமதி ஷாலினியின் பேட்டியினால் உந்தப்பட்டு எழுதப்பட்டது

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: