Sunday, August 14, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் "கோல்கேட்": நிலக்கரித் திருட்டில் பா.ஜ.கவின் பங்கு!

“கோல்கேட்”: நிலக்கரித் திருட்டில் பா.ஜ.கவின் பங்கு!

-

செய்தி-50

நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான கணக்குத் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து பாராளுமன்றம் முடங்கிப் போய்க் கிடக்கிறது. பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு நேர்ந்த இந்த அவலம் இந்தியாவையே மாபெரும் நெருக்கடியில் தள்ளி விட்டுவிடும் என்று ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் அச்சத்தோடு அலறுகின்றன – அல்லது அப்படி நடிக்கின்றன.

காங்கிரஸ் மற்றும் போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொருத்த வரையில் ‘எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்’ என்கிற நிலைப்பாட்டில் உள்ளன. பாரதிய ஜனதாவோ ‘தீர்த்துட்டுப் பேசிக்கலாம்’ என்று வெளிப்படையாக அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி ‘பாரதிய ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்’ என்று மக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரசின் மனீஷ் திவாரி, ‘காங்கிரசு தொண்டர்கள் தெருவிலிறங்கி பாரதிய ஜனதாவை அம்பலப்படுத்துவார்கள்’ என்று அறிவித்துள்ளார். விலைவாசி உயர்வின் காரணமாக தமிழ்நாட்டில் ‘தொண்டர்கள்’ லோடுக்கு விலை பத்தாயிரத்துக்கு மேல் கூடியுள்ளதால் ஞானதேசிகன் கலக்கத்தில் இருக்கிறாராம். அது கிடக்கட்டும்.

பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதாவோ கிடைத்திருக்கும் வாய்ப்பை அத்தனை சீக்கிரத்தில் நழுவவிடத் தயாராக இல்லை. நிலக்கரித் திருட்டை விடுங்கள், கருநாடகத்தில் பாரதிய ஜனதா அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏக்களாவும் இருந்த ரெட்டி சகோதரர்கள் கூட காங்கிரசுக்கு கப்பம் கட்டியுள்ளதாக சைக்கிள் கேப்பில் பிட்டைப் போட்டு ரெட்டிகளோடு தமக்குள்ள கள்ளக் கூட்டணியை மறைக்க முயற்சித்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ். என்னா வில்லத்தனம்?

நிலக்கரி ஒதுக்கீட்டைப் பொருத்தவரையில் ஜார்கண்ட், ம.பி, சத்தீஸ்கர், ஒரிஸா போன்ற பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களும் நிலக்கரியை பொது ஏலம் விடும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கம் சிபிஎம் ஆட்சியின் கீழ் இருந்த போது நிலக்கரி ஒதுக்கீட்டில் ஏல முறை பின்பற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி சி.பி.எம்மின் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் கடிதம் எழுதியுள்ளார். இம்மாநில முதல்வர்களும் அமைச்சர்களும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்யக் கோரி பரிந்துரை செய்துள்ளனர் – இவற்றில் பலதும் நிலக்கரி வெட்டுவதில் எந்த அனுபவமும் இல்லாத உப்புமா கம்பெனிகள்.

நிலக்கரி ஊழலை எதிர்த்து பாரதிய ஜனதா பாராளுமன்றத்தில் சண்டமாருதம் செய்து வரும் நிலையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ம.பி சஸானில் உள்ள ரிலையன்ஸ் அனல் மின் நிலையத்திலிருந்து சித்ராங்கியில் அமைந்துள்ள அதே குழுமத்தைச் சேர்ந்த வேறு நிறுவனத்துக்கு நிலக்கரியை மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சி ஊடகங்களில் கசியவிட்டுள்ளது.

சஸானில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து தயாராகும் மின்சாரத்தை ரூ 1.19 விலையில் அரசுக்கு விற்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தின் பேரில் ரிலையன்சுக்கு இலவசமாகவே நிலக்கரி வயல்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இலவசமாக ஒதுக்கப்பட்ட வயல்களில் இருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை சித்ராங்கியில் அமைந்துள்ள நிறுவனத்துக்குக் கடத்துவதன் மூலம் மட்டுமே சுமார் 29,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கை சொல்கிறது.

நடந்த களவில் சகலருக்கும் பங்கிருக்கிறது என்பதே வெளியாகும் ஒவ்வொரு தகவலும் எடுத்தியம்பும் எதார்த்தமான உண்மைகள். இதை மறைக்கத்தான் சர்வ கட்சிகளும் பாராளுமன்றத்தில் நடக்கும் கூச்சல் பஜனையில் ஊக்கத்தோடு பங்கேற்கிறார்கள். பாராளமன்றத்தின் புனிதம் ஜனநாயகத்தின் மாண்பு என்பதையெல்லாம் அவர்களே கழிவறைக் காகிதங்களாகத் தான் பயன்படுத்துகிறார்கள் எனும் போது நாம் ஏன் அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டும்?

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க