Saturday, April 1, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வறுமைக் கோட்டை அழிக்க, கார்ப்பரேட் கொள்ளையை ஒழி! பி.சாய்நாத்

வறுமைக் கோட்டை அழிக்க, கார்ப்பரேட் கொள்ளையை ஒழி! பி.சாய்நாத்

-

கார்பரேட்-கொள்ளை

பி.பி.எல்.ஐ சரி செய்ய சி.பி.எல்.ஐ ஒழித்துக் கட்டுங்கள் – பி சாய்நாத்

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களை புரிந்து கொள்ள நாம் பெருநிறுவன கொள்ளைக் கோட்டை செலுத்தும் புள்ளி விபரங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்

ஒரு டெண்டூல்கர் பெரிய ஸ்கோர்களை எடுக்கிறார். இன்னொருவர் சராசரிகளை அடித்து துவைக்கிறார். திட்டக் குழுவிற்கு சச்சினை விட சுரேஷ் மீதுதான் அபிமானம் என்பது தெளிவு. பேராசிரியர் சுரேஷ் டெண்டூல்கரின் வழிமுறையை பயன்படுத்தி, வறுமையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அது அறிவித்துள்ளது. ஆமாம், இன்னும் ஒரு முறை, ஊரக பகுதிகளில் வறுமை வியத்தகு அளவுகளில் வீழ்ச்சி.

“வறுமையில் வரலாறு காணாத வீழ்ச்சி” என்று அலறுகிறது ஒரு தலைப்புச் செய்தி. இதே தலைப்புச் செய்தியை கடந்த பல ஆண்டுகளில் எத்தனை முறை பார்த்து விட்டோம் என்பதுதான் வரலாறு காணாத சாதனை. எத்தனை தடவை வறுமை வெகுவாக குறைந்து, கணக்கை மாற்றி போட்டதும் திரும்பவும் உயர்ந்து விடுவது நடந்திருக்கிறது!

அதாவது, இந்திய மக்கள் தொகையில் இப்போது அதிகாரபூர்வமாக வறுமைக் கோட்டுக்கு (பி.பி.எல்- BPL) கீழ் இருப்பவர்கள் 29.9 சதவீதம் மட்டும்தான்.   2004-2005-ல் இந்த எண்ணிக்கை 37.2 சதவீதம் ஆக இருந்தது. அந்தக் “கோடு” பற்றிய கதை பேசப்பட வேண்டிய ஒன்று. மேலோட்டமாக பார்க்கும் போது ஊரக வறுமை வீதம் 2004-05-ல் இருந்த 41.8 சதவீதத்திலிருந்து எட்டு சதவீத புள்ளிகள் குறைந்து 33.8 சதவீதத்தில் நிலை கொண்டுள்ளது. நகர்ப்புற வறுமை அதே காலத்தில் 4.8 சதவீத புள்ளிகள் குறைந்து,  25.7 சதவீதத்திலிருந்து 20.9 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. தங்களை அறியாமலேயே கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

போலியான வழிமுறையை மாற்றி அமைத்தல் ஊடகங்கள் மறதி நோயின் காரணமாக புள்ளிவிபரங்களை “எப்போதும் இல்லாத அளவு குறைவான” என்று குழப்புகின்றன. இப்போதைய புள்ளிவிபரங்கள் ‘முன் எப்போதையும் விட குறைந்த’வை இல்லை. இதற்கு முன்பு இதை விட குறைந்த வறுமை வீதத்தை நாம் பார்த்திருக்கிறோம்.

1996-ல் பேராசிரியர் மது தண்டவதே ‘நான் உங்கள் நாட்டின் வறுமையை இன்றைக்கு இரண்டு மடங்காக்கி விட்டேன், அதற்காக என்னைக் கொல்ல வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று கிண்டலாக கூறினார். அப்போதைய திட்டக் குழுவின் துணைத் தலைவராக அந்த நியாய உணர்வுள்ள முதியவர் செய்தது என்னவென்றால் போலியான ஒரு வழிமுறையை தூக்கி எறிந்ததுதான். இந்த வழிமுறை அவர் பொறுப்பேற்பதற்கு முன்பு அதே ஆண்டு திட்டக் குழுவால் தூக்கிப் பிடிக்கப்பட்டது. வழிமுறையிலோ அல்லது வறுமைக் கோட்டிலோ செய்யப்படும் சிறு சிறு மாற்றங்கள் கூட பெருமளவு வேறுபடும் மதிப்பீடுகளை உருவாக்க முடியும்.

1993-94-ம் ஆண்டில் வறுமையை 19 சதவீதமாக குறைக்க மேற்கொள்ளப்பட்ட “முயற்சி” என்ற மோசடியைத்தான் மது தண்டவதே இல்லாமல் ஆக்கினார். அதாவது அந்த முயற்சியின் படி 1987-88-ம் ஆண்டில் 25.5 சதவீதமாக இருந்த வறுமை வீதம் 1993-94-ல் 19 சதவீதமாக குறைக்கப்பட்டது. “தேசிய மாதிரி ஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் திட்டக் குழு நடத்திய ஆய்வின் பூர்வாங்க முடிவுகள்” இவை (எகனாமிக் & பொலிடிக்கல் வீக்லி, ஜனவரி 27, 1996). அந்த புள்ளிவிபரங்கள் உண்மையானவை என்று எடுத்துக் கொண்டால் அதற்குப் பிறகு வறுமை உயர்ந்து கொண்டேதான் இருந்திருக்கிறது என்று பொருள்.

அந்த வரலாறு காணாத வீழ்ச்சியை தூக்கிப் பிடித்தவர் ஒரு நேர்மையான நிதி அமைச்சர், ஒரு போதும் பொய்யே சொல்லாத டாக்டர் மன்மோகன் சிங். ஒரு வணிக தினசரி அந்த நேரத்தில் பெரும் தமாசான ஒரு “எக்ஸ்க்ளூசிவ்” வெளியிட்டது. ‘வறுமை வரலாறு காணாத அளவில் 19 சதவீதமாக குறைந்திருக்கிறது என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.’  சுதந்திரத்திற்குப் பிறகு வெளியான செய்திகளிலேயே தலை சிறந்த செய்தி அது. ஆனால், அதை வெளியிட்ட அந்த அடக்கமான அதிகாரிகள் முகத்தை வெளியில் காட்டவில்லை, தாங்கள் எவ்வளவு முட்டாள்களாக பார்க்கப்படுவோம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இப்போதெல்லாம் தமது மோசடியை விளம்பரம் செய்ய பத்திரிகையாளர் கூட்டங்கள் நடத்துகிறார்கள் அத்தகைய அதிகாரிகள்.

ஏப்ரல் 1996 தேர்தல்களின் அழிவுகளில் “இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான 19 சதவீதம் வறுமை” என்ற மோசடி புதைக்கப்பட்டது. அன்றைய அரசாங்கமும் அதனுடன் சேர்ந்து புதைந்து போனது. அதற்கு பிறகு அந்த “மதிப்பீடு” யாராலும் பேசப்படவில்லை. இப்போது நமக்கு கிடைத்திருப்பது அதே போன்ற ஒரு மதிப்பீட்டின் 29.9 சதவீத அவதாரம். இந்த இரண்டு மதிப்பீடுகளையும் ஏற்றுக் கொண்டால் வறுமை 16 ஆண்டுகளில் 10.9 சதவிகித புள்ளி உயர்ந்துள்ளதாகத்தானே கருத வேண்டும்? அல்லது இதுவும் ஒரு வழிமுறை மோசடிதானா!

இதற்கிடையில், திட்டக் குழுவின் புதிய புள்ளிவிபரங்கள் சாதித்து விட்ட ஒன்றை பாராட்ட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும் பகுதியினரை அது ஒருங்கிணைத்திருக்கிறது. அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த “மதிப்பீடுகளை” பலமாக தாக்கியதோடு விளக்கமும் கேட்டிருக்கிறார்கள்.

டெண்டூல்கர் அறிக்கை தயாரிப்பில் பெரிய கோல்மால்கள் செய்யப்பட்டிருக்கின்றன. டாக்டர் மதுரா சுவாமிநாதன் சுட்டிக் காட்டுவது போல “நகர்ப்புறங்களுக்கு 2,100 கிலோ கலோரி, ஊரக பகுதிகளுக்கு 2,400 கிலோ கலோரி என்ற” என்ற கலோரி வரையறைகளை அந்தக் குழு தூக்கி எறிந்தது. “ஒரு நாளைக்கு 1,800 கிலோ கலோரி என்ற ஒரே வரையறையை பிடித்துக் கொண்டது அது. “உணவு, விவசாய நிறுவனத்தின் ஒரு வரையறை” யின் அடிப்படையில் அப்படி செய்ததாக குறிப்பிடுகிறது.

“உணவு,விவசாய நிறுவனம் நிர்ணயித்த ஆற்றல் தேவைகள் குறைந்த பட்ச ஆற்றல் தேவைகள். அதாவது எளிதான அல்லது ஓய்வான வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றல்” என்பதை சுட்டிக் காட்டுகிறார் டாக்டர் சுவாமிநாதன். அத்தகைய வாழ்க்கைக்கு அந்த நிறுவனம் கொடுத்துள்ள எடுத்துக் காட்டையும் அவர் குறிப்பிடுகிறார் “… வேலை நேரத்திலோ வேலை நேரத்துக்குப் பிறகோ எப்போதாவது மட்டும் உடல் உழைப்பில் ஈடுபடும் நகர்ப்புற ஆண் அலுவலக ஊழியர்”

டாக்டர் சுவாமிநாதன் கேட்பது போல: ” நாள் முழுவதும் மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் தலைச் சுமை தொழிலாளியை எளிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியுமா?” – தி இந்து பிப்ரவரி 5, 2010.

வறுமையை அளவிடுதல்

கார்பரேட்-கொள்ளை-2
படம் நன்றி – www.thehindu.com

வறுமையை அளவிடுவதற்கு இன்னும் பிற வழிமுறைகள் இருக்கின்றன என்பதை ஊடகங்கள் குறிப்பிடுவது இல்லை. அவையும் இதே அரசாங்கம் ஆரம்பித்து வைத்த வழிமுறைகள்தான். முறை சாரா துறை நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பதாக கருதுகிறது. என் சி சக்ஸேனா தலைமையிலான வறுமைக் கோட்டிற்கான (பிபிஎல்) வல்லுநர் குழு அதை சுமார் 50 சதவீதம் என்று தீர்மானித்தது. டெண்டுல்கர் குழுவைப் போலவே, இந்த இரண்டும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவைதான். ஒன்றுக்கொன்று தாறுமாறாக வேறுபட்டாலும், மூன்றுமே ஊரக வறுமையை அரசாங்கத்தை விட அதிகமாகவே மதிப்பிடுகின்றன. அரசாங்கம் விரும்பும் அறிக்கை கிடைக்கும் வரையில் இதே பிரச்சனை மீது இன்னும் பல குழுக்கள் அமைக்கப்படும். அரசாங்கம் தப்பித்துக் கொள்ள உதவும் அறிக்கை கிடைப்பது வரை. (விவசாய தற்கொலைகள் மீதான பல விசாரணைகள் இதை எடுத்துக் காட்டுகின்றன.)

தற்போதைய மோசடியை யாரும் கவனிக்காமல் புகுத்தி விடலாம் என்று திட்டக் குழு நினைத்தது, அதிகார வர்க்கத்தின் ஆணவத்திலும் திறமையின்மையிலும் வரலாறு காணாத சாதனைதான். முதலில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த ஆவணத்தின் மூலம் மக்களின் கோபத்தை தூண்டினார்கள். அங்கு அவர்கள் ஊரக வறுமைக் கோட்டிற்கு ஒரு நாளைக்கு ரூ 26 என்றும் நகர்ப்புற வறுமைக் கோட்டிற்கு ஒரு நாளுக்கு ரூ 32 என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை நியாயப்படுத்தினார்கள். இப்போது ஊரகப் பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ 22.42 நகர்ப் புறத்திற்கு ஒரு நாளைக்கு ரூ 28.35 என்ற அளவீட்டை புகுத்தி விட நினைக்கிறார்கள்.

1996-ம் ஆண்டில், அரசாங்கமும் திட்டக் குழுவும் தமது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட அதே ஆண்டில், தில்லியைச் சேர்ந்த ஒரு முன்னணி சிந்தனைக் குழு நாட்டின் வறுமை பற்றிய “இது வரை இல்லாத பெரிய ஆய்வு” ஒன்று நடத்தியது. அவர்கள் 30,000 குடும்பங்களைசந்தித்து பதில் அளித்தவர்களிடம் 300க்கும் மேற்பட்ட காரணிகளைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள். போபாலில் நடந்த ஒரு கூட்டத்தில் அதன் புகழ் பெற்ற தலைவர் இப்படித்தான் சொன்னார். பார்வையாளர்கள் மத்தியில் இருந்த பத்திரிகையாளர்களை இது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுவரை, பெரும்பான்மை பத்திரிகையாளர்கள் கருத்தரங்குகளில் என்ன செய்வார்களோ அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அமைதியாக, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தூங்கிக் கொண்டிருப்பது. என் அருகில் இருந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் திடுக்கிட்டு உயிர்த்தெழுந்தார். “அந்த குடும்பங்களிடம் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டார்கள் என்றா சொல்கிறார்? கடவுளே! இந்தத் துறையில் முப்பது ஆண்டுகளாக இருக்கிறேன், நான் நடத்திய மிகப் பெரிய நேர்முகத்தில் ஒன்பது கேள்விகள்தான் இருந்தன. அது என் எஜமானரின் மிகச் சிறந்த நண்பருடனான நேர்முகம். அதில் எனது கடைசி கேள்வி, ‘இப்பவாவது நான் போகலாமா’ என்பதுதான்.”

300 கேள்விகளால் தாக்கப்பட்ட அவரது ஆய்வு இலக்குகள் வறுமையால் இல்லா விட்டாலும் சோர்வினால் செத்திருப்பார்கள் என்று அந்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணரிடம் சொன்னோம். அந்த சிந்தனைக் குழுவின் ஒரு மூத்த உதவியாளர் ஒலி பெருக்கியை கையில் வாங்கி நாங்கள் சொல்வது எப்படி தவறானது என்று விளக்கினார். ‘நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு விசாரணையாளர்களை அனுப்பினோம்’ என்று அவர் கூறினார். அது நிச்சயமா புரிந்து கொள்ளக் கூடியதுதான்: ஒருவர் பதில் சொல்பவரின் கையை முறுக்கி பிடித்து வைத்துக் கொள்ள, இன்னொருவர் 300 கேள்விகளை கேட்டிருக்கிறார்.

பிபிஎல், ஏபிஎல், ஐபிஎல், போன்றவற்றின் வரிசையில் நான் என் பங்குக்கு ஒரு எளிய அளவீட்டை சேர்க்க விரும்புகிறேன். அதுதான் சி.பி. எல், அல்லது பெருநிறுவன கொள்ளைக்கோடு. இது பெருநிறுவன உலகத்தையும் பிற பணக்காரர்களையும் அல்லது “உயர் நிகர மதிப்பு நபர்களையும்” தழுவியது. அனைவருக்குமான பொது வினியோக முறைக்கு நம்மிடம் பணம் இல்லை. அல்லது பெரிதும் குறைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதாவுக்குக் கூட பணம் இல்லை. ஊரக வேலைவாய்ப்புக்கான நிகர செலவிலிருந்து பல ஆயிரம் கோடிகளை வெட்டியிருக்கிறோம். மனித வளர்ச்சி புள்ளிவிபரங்களிலும், பட்டினி புள்ளிவிபரங்களிலும் ஊட்டச்சத்து புள்ளிவிபரங்களிலும் நாம் கடுமையாக பின்தங்கியிருக்கிறோம். உணவு விலைகள் உயர்ந்து கொண்டே போகின்றன, கௌரவமான வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகின்றன.

இருப்பினும், வறுமைக் கோடு பற்றிய புள்ளி விபரங்கள் குறைந்து கொண்டே இருக்கின்றன. கார்பொரேட் கொள்ளைக் கோடு புள்ளி விபரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சிபிஎல் (கார்பொரேட் பிளண்டர் லைன் – பெருநிறுவன கொள்ளை கோடு) என்ற கருத்தாக்கம் மத்திய அரசின் அடுத்தடுத்த நிதி நிலை அறிக்கைகளின் “விட்டுக் கொடுக்கப்பட்ட வருமானம்” என்ற பிரிவில் வேர் கொண்டுள்ளது. உதாரணமாக, 2005-06-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு நிறுவன லாப வரியில் ரூ 4 லட்சம் கோடி சலுகை வழங்கியிருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மட்டும் அந்த சலுகையின் மதிப்பு ரூ 50,000 கோடி. இதே நிதி நிலை அறிக்கையில்தான் தேசிய கிராமப் புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றின் மீதான தள்ளுபடிகளையும் சேர்த்தால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் வரிச்சலுகைகள் ரூ 5 லட்சம் கோடியை தாண்டுகின்றன.

கலால் மற்றும் சுங்க வரியின் கீழ் வரும் பொருட்களில் பல, உதாரணமாக எரிபொருட்கள், பரந்து பட்ட மக்களையும் பாதிக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலும் அவை வணிக நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும்தான் உதவுகின்றன. இந்த நிதி நிலை அறிக்கையிலும் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் வைரம், தங்கம், மற்றும் நகைகள் மீதான இறக்குமதி தீர்வையில் ரூ 1 லட்சம் கோடி விட்டுக் கொடுத்திருக்கிறோம். இந்த அளவிலான பணம் மக்களுக்கு உணவு பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையானது. ஆனால் சிபிஎல் (வணிகநிறுவன கொள்ளை கோடு) பிபிஎல் (வறுமைக் கோடு)ஐ ஒவ்வொரு முறையும் தோற்கடித்து விடுகிறது. இயந்திரங்களின் மீதான வரி நீக்கங்களுக்கும் இதே உண்மை பொருந்தும். மருத்துவமனைகள் இறக்குமதி செய்யும் கருவிகள் போன்றவற்றின் மீதான சலுகைகள் எல்லோருக்கும் பலன் தரக் கூடியவை என்றுதான் ஏட்டுப் படிப்பு சொல்லும். ஆனால் நடைமுறையில், இந்தச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளும் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளுக்குள் பெரும்பான்மை இந்தியர்கள் நுழைவது கூட சாத்தியமில்லை.

2005-06 ஆண்டிலிருந்து இந்தப் பிரிவுகளின் கீழ் மொத்த தள்ளுபடி ரூ 25.7 லட்சம் கோடி (அட்டவணையை பார்க்கவும்). அது 2ஜி ஊழலை விட கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம். பெருநிறுவன கொள்ளைக் கோட்டில் சமீபத்தில் சேர்ந்து கொண்ட நிலக்கரி ஊழலை விட இரண்டு மடங்கு அதிகம். அட்டவணையைப் பார்த்து விட்டு அதன் பிறகு கிராமப் புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 22.42, நகரப் புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 28.35 என்று வரம்பு விதிக்கும் வறுமைக் கோட்டுக்கான மதிப்பீடுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பிபிஎல்.ஐ சரி செய்ய சி.பி.எல்.ஐ ஒழித்துக் கட்ட வேண்டியிருக்கும்.

____________________________________________________

– பி.சாய்நாத், நன்றி: தி இந்து.

தமிழாக்கம்: செழியன்.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. ஆமாம். எல்லாமே அரசாங்கமே எடுத்து நடத்திட்டால் நாம க்யூபா போல பெரிய பணக்கார நாடாகி விடலாம்.

    எல்லோருமே வறுமைக் கோட்டுக்குக் கீழே வந்து விட்டால் அப்புறம் என்னத்த அளக்க முடியும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க