Friday, August 19, 2022
முகப்பு செய்தி நெய்வேலி என்.எல்.சியை தனியாருக்கு விற்க சதி!

நெய்வேலி என்.எல்.சியை தனியாருக்கு விற்க சதி!

-

நெய்வேலி

நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனின் 8.3 கோடி பங்குகளை விற்பதன் மூலம் ரூ 665 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான நடைமுறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விண்ணப்பங்களை செப்டம்பர் 12-ம் தேதிக்குள் அனுப்பும்படி அரசு அறிவித்துள்ளது. இந்த விற்பனைக்கு பிறகு அரசிடம் இருக்கும் பங்குகள் 93%லிருந்து 88% ஆக குறைந்து விடும்.

இந்தியாவிலேயே குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய உதவும் பழுப்பு நிலக்கரி என்எல்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதன் மூலம் யூனிட்டுக்கு 90 பைசா செலவில் மின்சாரம் தயாரிக்க முடிகிறது. ஆண்டுக்கு 24 மெட்ரிக் டன் லிக்னைட் நிலக்கரி எடுத்து 2740 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கிறது என்எல்சி. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் இந்த மின்சாரத்தால் பலன் பெறுகின்றன. என்எல்சி நிறுவனம் மாநில மின்வாரியங்களுக்கு 120 நாட்கள் வரை கடன் கொடுக்கிறது.

என்எல்சியில் சுமார் 19,000 நிரந்தர தொழிலாளர்களும் 14,000 ஒப்பந்த தொழிலாளர்களும் பணி புரிகின்றனர். ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் நிறுவனத்தின் விற்பனையில் சுமார் 25% ஆக உள்ளது. (மும்பையில் இயங்கும் தனியார் மின்சக்தி நிறுவனமான பிஎஸ்ஈஎஸ் மொத்த விற்பனையில் 3% மட்டுமே ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்குகிறது என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.) என்எல்சி 2009-10 நிதி ஆண்டில் ரூ 4,689 கோடி மொத்த வருமானமும் ரூ 1247 கோடி (சுமார் 26%) லாபமும் ஈட்டியது.

நெய்வேலியில் மொத்தம் 3,300 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது செயல்படும் சுரங்கங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மின் உற்பத்திக்கான பழுப்பு நிலக்கரியை கொடுக்கும்.

நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனின் சொத்துக்களும், உற்பத்தி செய்யும் நிலக்கரியும், மின்சாரமும், ஈட்டும் லாபம் நாட்டு மக்களுக்கு உரிமையானவை. அவற்றை கைப்பற்றி தமது லாப வேட்டைக்கு பயன்படுத்தலாம் என்ற காத்துக் கொண்டிருக்கும் தனியார் முதலாளிகளுக்கு என்எல்சியை விட்டுக் கொடுப்பதற்கான நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த பங்கு விற்பனை திட்டம்.

நெய்வேலி  லிக்னைட் சுரங்கங்களுக்காக பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த நிலங்களை விட்டுக் கொடுத்த கிராம மக்களுக்கு நிவாரணத் தொகை மட்டும் கொடுக்கப்பட்டது. மாற்று விவசாய நிலம் வாங்க முடியாத கிராம மக்கள் பொருளாதார அகதிகளாக பெருநகரங்களுக்கு கூலி வேலை செய்யப் போகிறார்கள். அந்த கிராமங்களை சேர்ந்த மக்களில் சிலருக்கு மட்டும் ஒப்பந்தத் தொழிலாளராக வேலை வாய்ப்பு அளிக்கிறது நிறுவனம்.

மக்களின் சொத்தை படிப்படியாக தனியார் கையில் விட்டுக் கொடுக்கும் சறுக்குப் பாதையில் 1991-92, 1992-93 ஆண்டுகளிலேயே என்எல்சியை செலுத்தியது மத்திய அரசு. 2002, 2006-ம் ஆண்டுகளில் கூடுதல் பங்குகளை விற்க முயற்சி செய்த மத்திய அரசின் திட்டங்கள் கடும் எதிர்ப்புக்குப் பிறகு கைவிடப்பட்டன. இல்லை என்றால் இதற்குள் என்எல்சியில் அரசின் பங்கு 70% அளவுக்கு குறையும் நிலை ஏற்பட்டிருக்கும். அடுத்தடுத்த காங்கிரஸ், பாஜக அரசுகள் தமது எஜமானர்களுக்கு விசுவாசமாக நிறுவனத்தை ஒரு தனியார் முதலாளி கையில் ஒப்படைப்பதை சில ஆண்டுகளில் வெற்றிகரமாக செய்து முடித்திருப்பார்கள்.

இப்போதைய பங்கு விற்பனையை என்எல்சி நிர்வாகமே 2011 நவம்பர் மாதம் எதிர்த்திருக்கிறது. ‘தற்போது கைவசம் இருக்கும் கூடுதல் நிதியை வைத்து தேவையான புது திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் சந்தையிலிருந்து பணம் திரட்ட வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் என்எல்சி நிர்வாகம் சொல்லியிருந்தது.

என்எல்சி தனியார் கட்டுப்பாட்டில் சென்றால் லாப அதிகரிப்புக்கான நடவடிக்கைகளாக

  • மின்சார வாரியங்கள் சந்தை விலை கொடுத்துதான் மின்சாரம் வாங்க வேண்டும் (யூனிட்டுக்கு ரூ 18) என்ற விலை நிர்ணயம்
  • கடன் வைத்திருந்தால் மின்சாரம் வழங்கப்படாது என்று கறார் கொள்கை
  • நிலக்கரியை வெட்டி ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று மின் உற்பத்தியை குறைத்து நிலக்கரி ஏற்றுமதி.
  • ஆட்குறைப்பு, நிரந்தர தொழிலாளர்களை நீக்கி ஒப்பந்த தொழிலாளர்களை அதிகரித்தல் என்று லாப அதிகரிப்பு

போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல கோடி மக்கள் மீது பொருளாதார பளு சுமத்தப்படும்.

தனியார் மய கொள்கைகளால் நிலக்கரி, 2G அலைக்கற்றை, இரும்புத் தாது போன்ற துறைகளில் நாட்டுக்கு சொந்தமான பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வளங்கள் தாரை வார்க்கப்பட்டன. இருந்தும் அப்பாவிகள் போலவே முகத்தை வைத்துக் கொண்டு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துகின்றனர் மன்மோகன் சிங், ப சிதம்பரம் போன்ற கார்ப்பரேட் கைக்கூலிகள்.

இதையும் படிக்கலாம்

_______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க