விநோதினி
அமில  வீச்சினால் உயிரிழந்த விநோதினி

காதலர் தினத்திற்க்காக ரோஜாப்பூ முதல் பரிசுப் பொருள் அங்காடி வரை காதலை பரிமாறிக் கொள்வதற்காக எண்ணிறந்த பொருட்கள் கடைவீதியினை நிரப்பியிருக்கின்றன. ஒற்றைத் தண்டுடன் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்துடன் வரும் பெங்களூர் ரோஜாதான் காதலர்களின் ஏகோபித்த வரவேற்பாம். அமில வீச்சால் கண்ணை இழந்த விநோதினியை பெண் என்பதற்காக ஒரு மலருடன் ஒப்பிட்டு கவிஞர்கள் யாரேனும் கவிதைகள் எழுதியிருப்பார்களா தெரியவில்லை! எனினும் அந்த மலர் நேற்றோடு கருகிப் போனது.

அடித்தோ, விரட்டியோ, துன்புறுத்தியோ அடக்கியாள வேண்டியவள்தான் ஒரு பெண் என்பதை எண்ணிறந்த கதைகளின் மூலம் சொல்லிக் கொடுக்கும் திரைப்படங்கள் ஒருபுறம். அந்த திரைப்படங்களை வைத்தும், அந்தக் கதைகளின் மூலமாகவும் சமூகப் பிரச்சினைகளை செய்திகளாக்கித் தரும் பத்திரிகைள் அனைத்தும் ஒரே மாதிரியான சோகத்தில் விநோதினியின் மரணத்தை அறிவிக்கின்றன, கண்டிக்கவும் செய்கின்றன. சஹானா எனும் கேரளப் பெண்ணை ஊடகத் திமிரால் வன்புணர்ச்சி செய்த தினமலரும் கூட வெட்கமில்லாமல் விநோதினிக்காக வருந்துகிறது. அதை உண்மையென நம்பும் அப்பாவிகளும் வாசகர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

டெல்லி மாணவியின் மரணத்திற்கு பிறகு, வர்மா கமிஷன் பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் அவசரச்சட்டத்திற்கு பிறகு அமிலத்தை வீசிய சுரேஷை தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை எண்ணிறந்த முறையில் கோரப்படுகின்றது. விநோதியினை அழித்த சுரேஷை தண்டிப்பது கடினமல்ல. ஆனால் சுரேஷ் எனும் ஆணாதிக்க பன்றியினை வடிவமைத்த ஊடகக் குற்றவாளிகள் இங்கே நீதிபதிகளாக தீர்ப்பளிக்கும் கொடுமையினை என்ன செய்ய?

காதலர் தினக் கொண்டாட்டங்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நாட்டில்தான் விநோதினி எனும் 23 வயது பெண் ‘காதலின்’ பெயரால் கொல்லப்பட்டிருக்கிறாள், அதுவும் கொடூரமான சித்திரவதைக்குப் பிறகு. பரிசுகள், வாழ்த்துக்கள், சந்திப்புகள் என்பதாக காதலை நுகர்வு கலாச்சார விற்பனைக்குரிய சரக்காக மாற்றி விட்டு அதன் விளம்பரங்களில் கல்லா கட்டும் ஊடகங்கள் இங்கே காதல் என்ற பெயரில் கற்றுத் தருவது என்ன? பெண்ணடிமைத்தனத்தை போற்றும் விதமாக அழகு, உடைகள், அணிகலன்கள், பரிசுகள், வார்த்தைகள் எதற்கும் குறைவில்லை. காதலை எப்படி கவர்ச்சியாக தெரிவிப்பது, பரிமாறிக் கொள்வது என்பதை நீயா நானா அலசுகிறது.

ஆனால் சாதி, மத, ஆணாதிக்க அடக்குமுறைகளுக்குள் சிக்கியிருக்கும் காதலை எப்படி வெற்றி பெறவைப்பது என்பதை ஊடகங்களோ இல்லை திரையுலகமோ பேசத் துணியாது. கலப்புத் திருமணம் குறித்து விவாதம் நடத்தும் விஜய் டி.வி, எந்த சாதியையும் குறிப்பிட்டு பேச மறுக்கிறது. யாராவது தப்பித் தவறி சாதியைக் கூறினால் மியூட் செய்து மறைக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் விருந்தினர் கொங்கு வேளாள முன்னேற்றக் கழகத்தின் ஈசுவரன்.

கொலவெறி பாட்டின் உள்ளடக்கமோ, இல்லை அந்த பாடலை பாடி பிரபலமடைந்த தனுஷோ, அவரது  போட்டியாளரான சிம்புவோ அனைவரும் தத்தமது கதைகளில் பெண்களை காதல் என்ற பெயரில் மானை வேட்டையாடும் ஓநாய்கள் போலத்தான் வருகின்றனர். அப்படித்தான் அவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு. ஆனால் சுரேஷ் மட்டும்தான் குற்றவாளி என்றால் என்ன செய்வது?

விநோதினியின் மரணத்திற்கு ‘அய்யா’ ராமதாசும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். காதலர்களை வெட்டுவேன் என்று சபதம் புரிந்திருக்கும் காடுவெட்டி குருவும் கூட கண்டித்திருக்கக் கூடும். ஒரு ஆணும் பெண்ணும் சாதி மாறி காதலித்தால் அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து கொண்டு ஒரு ஆண் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணை காதலித்தால் அய்யாவின் அடிப்பொடிகள் வெட்டுவார்கள். மாறாக அந்தக் காதலை குறிப்பிட்ட பெண் மறுத்தால் சுரேஷ் போன்ற ஆண்கள் கொலை செய்வார்கள். கவனியுங்கள் இங்கே காதலை ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் ஒரு பெண்ணுக்கு உரிமையில்லை. அந்த உரிமையினை அமிலத்தாலும், அரிவாளாலும் மறுக்கும் சுரேசுக்கும் ராமதாசுக்கும் என்ன வேறுபாடு?

காதலர் தினக் கொண்டாட்டங்களை கடுமையாக எதிர்ப்பதில் சங்க பரிவாரங்கள் மட்டுமல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இசுலாமிய மதவாதிகளும் போட்டி போடுகின்றனர். ஆபாசம், வெளிநாட்டுக் கலாச்சாரம், என்று தமது ‘நியாயத்தை’ பேசுவதில் இருவரும் ஒன்றுபடுகின்றனர். அமெரிக்காவைக் காதலிக்கும் சவுதியையும், பாரத மாதாவை அமெரிக்காகாரனுக்கு நேர்ந்து விட்டதையும் ஆதரிக்கக் கூடிய இந்த மதவாதிகள்தான் சாமானியர்களின் காதலை சகித்துக் கொள்ள முடியாது என்கின்றனர். காதல் எனும் குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகூட தமது மதங்களில் கிடையாது என்று ஆணையிடும் இவர்கள்தான் இந்து மற்றும் முசுலீம் மக்களின் பிரதிநிதிகள் என்றால் நமது மக்கள் எத்தனை பரிதாபத்திற்குரியவர்கள்?

ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஒரு தோழரின் நண்பர் தேவர் சாதியைச் சார்ந்தவர். முதலியார் சாதியைச் சார்ந்த பெண்ணை காதலிக்கிறார். இருவரும் பசையான சம்பளம் வாங்குபவர்கள். ஐந்தாண்டு காதலுக்கு பிறகும் பெண் தரப்பில் ‘மேல்’ சாதி என்பதால் குடும்பத்தினர் மறுக்கிறார்கள். அந்த மறுப்பைத் தாண்டி போராடி வாழ்வதற்கு பெண் தயாராக இல்லை. அந்த இல்லையை இன்னும் பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி நியாயப்படுத்தி விட்டு அந்த ஆண் சொந்த சாதியில் வீட்டார் பார்த்த பெண்ணை மணந்து கொள்கிறார். எனில் இந்தக் கதையில் ‘காதல்’ என்பது என்ன என்று கேட்டால் நமது தோழரிடம் பதில் இல்லை.

மனித குலத்தின் மிகவும் அன்னியோன்னியமான உறவு என்று போற்றப்படும் காதலே இத்தனை தரமிழந்து காணப்படுகிறது என்றால் ஏனைய உறவுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஜனநாயகம், ஆண் – பெண் சமத்துவம், சாதி மத பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பது போன்றைவையெல்லாம் நமது இந்தியக் காதலில் பெருமளவு கிடையாது. இருப்பதெல்லாம் நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் சரக்குக் காதல்தான். இத்தகைய அபாயரகமான சமூக சூழலில்தான் சுரேஷ் போன்ற வெளிப்படையாகத் தெரியும் கொலைகாரர்களிடம் விநோதினி போன்ற பெண்கள் உயிரை இழக்க வேண்டியிருக்கிறது.

ஒரு நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமூக போராட்டங்கள் என்ன வகை தரத்தினைக் கொண்டிருக்கிறதோ அதுதான் காதலிலும் பிரதிபலிக்கும். சமூக அக்கறையில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் காதலை எந்த அளவுக்கு சமூக மதிப்பீடுகளின் பால் கொண்டு வருகிறோமோ அந்த அளவு இங்கே கண்ணியமான காதலை உருவாக்க முடியும். அது வரையிலும் விநோதினிகள் காதல் பலிகளாக தமது உயிர்களை துறக்க வேண்டியிருப்பது வெட்கக் கேடு. சமூக அக்கறையுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.