விநோதினி
அமில  வீச்சினால் உயிரிழந்த விநோதினி

காதலர் தினத்திற்க்காக ரோஜாப்பூ முதல் பரிசுப் பொருள் அங்காடி வரை காதலை பரிமாறிக் கொள்வதற்காக எண்ணிறந்த பொருட்கள் கடைவீதியினை நிரப்பியிருக்கின்றன. ஒற்றைத் தண்டுடன் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்துடன் வரும் பெங்களூர் ரோஜாதான் காதலர்களின் ஏகோபித்த வரவேற்பாம். அமில வீச்சால் கண்ணை இழந்த விநோதினியை பெண் என்பதற்காக ஒரு மலருடன் ஒப்பிட்டு கவிஞர்கள் யாரேனும் கவிதைகள் எழுதியிருப்பார்களா தெரியவில்லை! எனினும் அந்த மலர் நேற்றோடு கருகிப் போனது.

அடித்தோ, விரட்டியோ, துன்புறுத்தியோ அடக்கியாள வேண்டியவள்தான் ஒரு பெண் என்பதை எண்ணிறந்த கதைகளின் மூலம் சொல்லிக் கொடுக்கும் திரைப்படங்கள் ஒருபுறம். அந்த திரைப்படங்களை வைத்தும், அந்தக் கதைகளின் மூலமாகவும் சமூகப் பிரச்சினைகளை செய்திகளாக்கித் தரும் பத்திரிகைள் அனைத்தும் ஒரே மாதிரியான சோகத்தில் விநோதினியின் மரணத்தை அறிவிக்கின்றன, கண்டிக்கவும் செய்கின்றன. சஹானா எனும் கேரளப் பெண்ணை ஊடகத் திமிரால் வன்புணர்ச்சி செய்த தினமலரும் கூட வெட்கமில்லாமல் விநோதினிக்காக வருந்துகிறது. அதை உண்மையென நம்பும் அப்பாவிகளும் வாசகர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

டெல்லி மாணவியின் மரணத்திற்கு பிறகு, வர்மா கமிஷன் பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் அவசரச்சட்டத்திற்கு பிறகு அமிலத்தை வீசிய சுரேஷை தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை எண்ணிறந்த முறையில் கோரப்படுகின்றது. விநோதியினை அழித்த சுரேஷை தண்டிப்பது கடினமல்ல. ஆனால் சுரேஷ் எனும் ஆணாதிக்க பன்றியினை வடிவமைத்த ஊடகக் குற்றவாளிகள் இங்கே நீதிபதிகளாக தீர்ப்பளிக்கும் கொடுமையினை என்ன செய்ய?

காதலர் தினக் கொண்டாட்டங்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நாட்டில்தான் விநோதினி எனும் 23 வயது பெண் ‘காதலின்’ பெயரால் கொல்லப்பட்டிருக்கிறாள், அதுவும் கொடூரமான சித்திரவதைக்குப் பிறகு. பரிசுகள், வாழ்த்துக்கள், சந்திப்புகள் என்பதாக காதலை நுகர்வு கலாச்சார விற்பனைக்குரிய சரக்காக மாற்றி விட்டு அதன் விளம்பரங்களில் கல்லா கட்டும் ஊடகங்கள் இங்கே காதல் என்ற பெயரில் கற்றுத் தருவது என்ன? பெண்ணடிமைத்தனத்தை போற்றும் விதமாக அழகு, உடைகள், அணிகலன்கள், பரிசுகள், வார்த்தைகள் எதற்கும் குறைவில்லை. காதலை எப்படி கவர்ச்சியாக தெரிவிப்பது, பரிமாறிக் கொள்வது என்பதை நீயா நானா அலசுகிறது.

ஆனால் சாதி, மத, ஆணாதிக்க அடக்குமுறைகளுக்குள் சிக்கியிருக்கும் காதலை எப்படி வெற்றி பெறவைப்பது என்பதை ஊடகங்களோ இல்லை திரையுலகமோ பேசத் துணியாது. கலப்புத் திருமணம் குறித்து விவாதம் நடத்தும் விஜய் டி.வி, எந்த சாதியையும் குறிப்பிட்டு பேச மறுக்கிறது. யாராவது தப்பித் தவறி சாதியைக் கூறினால் மியூட் செய்து மறைக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் விருந்தினர் கொங்கு வேளாள முன்னேற்றக் கழகத்தின் ஈசுவரன்.

கொலவெறி பாட்டின் உள்ளடக்கமோ, இல்லை அந்த பாடலை பாடி பிரபலமடைந்த தனுஷோ, அவரது  போட்டியாளரான சிம்புவோ அனைவரும் தத்தமது கதைகளில் பெண்களை காதல் என்ற பெயரில் மானை வேட்டையாடும் ஓநாய்கள் போலத்தான் வருகின்றனர். அப்படித்தான் அவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு. ஆனால் சுரேஷ் மட்டும்தான் குற்றவாளி என்றால் என்ன செய்வது?

விநோதினியின் மரணத்திற்கு ‘அய்யா’ ராமதாசும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். காதலர்களை வெட்டுவேன் என்று சபதம் புரிந்திருக்கும் காடுவெட்டி குருவும் கூட கண்டித்திருக்கக் கூடும். ஒரு ஆணும் பெண்ணும் சாதி மாறி காதலித்தால் அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து கொண்டு ஒரு ஆண் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணை காதலித்தால் அய்யாவின் அடிப்பொடிகள் வெட்டுவார்கள். மாறாக அந்தக் காதலை குறிப்பிட்ட பெண் மறுத்தால் சுரேஷ் போன்ற ஆண்கள் கொலை செய்வார்கள். கவனியுங்கள் இங்கே காதலை ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் ஒரு பெண்ணுக்கு உரிமையில்லை. அந்த உரிமையினை அமிலத்தாலும், அரிவாளாலும் மறுக்கும் சுரேசுக்கும் ராமதாசுக்கும் என்ன வேறுபாடு?

காதலர் தினக் கொண்டாட்டங்களை கடுமையாக எதிர்ப்பதில் சங்க பரிவாரங்கள் மட்டுமல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இசுலாமிய மதவாதிகளும் போட்டி போடுகின்றனர். ஆபாசம், வெளிநாட்டுக் கலாச்சாரம், என்று தமது ‘நியாயத்தை’ பேசுவதில் இருவரும் ஒன்றுபடுகின்றனர். அமெரிக்காவைக் காதலிக்கும் சவுதியையும், பாரத மாதாவை அமெரிக்காகாரனுக்கு நேர்ந்து விட்டதையும் ஆதரிக்கக் கூடிய இந்த மதவாதிகள்தான் சாமானியர்களின் காதலை சகித்துக் கொள்ள முடியாது என்கின்றனர். காதல் எனும் குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகூட தமது மதங்களில் கிடையாது என்று ஆணையிடும் இவர்கள்தான் இந்து மற்றும் முசுலீம் மக்களின் பிரதிநிதிகள் என்றால் நமது மக்கள் எத்தனை பரிதாபத்திற்குரியவர்கள்?

ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஒரு தோழரின் நண்பர் தேவர் சாதியைச் சார்ந்தவர். முதலியார் சாதியைச் சார்ந்த பெண்ணை காதலிக்கிறார். இருவரும் பசையான சம்பளம் வாங்குபவர்கள். ஐந்தாண்டு காதலுக்கு பிறகும் பெண் தரப்பில் ‘மேல்’ சாதி என்பதால் குடும்பத்தினர் மறுக்கிறார்கள். அந்த மறுப்பைத் தாண்டி போராடி வாழ்வதற்கு பெண் தயாராக இல்லை. அந்த இல்லையை இன்னும் பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி நியாயப்படுத்தி விட்டு அந்த ஆண் சொந்த சாதியில் வீட்டார் பார்த்த பெண்ணை மணந்து கொள்கிறார். எனில் இந்தக் கதையில் ‘காதல்’ என்பது என்ன என்று கேட்டால் நமது தோழரிடம் பதில் இல்லை.

மனித குலத்தின் மிகவும் அன்னியோன்னியமான உறவு என்று போற்றப்படும் காதலே இத்தனை தரமிழந்து காணப்படுகிறது என்றால் ஏனைய உறவுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஜனநாயகம், ஆண் – பெண் சமத்துவம், சாதி மத பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பது போன்றைவையெல்லாம் நமது இந்தியக் காதலில் பெருமளவு கிடையாது. இருப்பதெல்லாம் நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் சரக்குக் காதல்தான். இத்தகைய அபாயரகமான சமூக சூழலில்தான் சுரேஷ் போன்ற வெளிப்படையாகத் தெரியும் கொலைகாரர்களிடம் விநோதினி போன்ற பெண்கள் உயிரை இழக்க வேண்டியிருக்கிறது.

ஒரு நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமூக போராட்டங்கள் என்ன வகை தரத்தினைக் கொண்டிருக்கிறதோ அதுதான் காதலிலும் பிரதிபலிக்கும். சமூக அக்கறையில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் காதலை எந்த அளவுக்கு சமூக மதிப்பீடுகளின் பால் கொண்டு வருகிறோமோ அந்த அளவு இங்கே கண்ணியமான காதலை உருவாக்க முடியும். அது வரையிலும் விநோதினிகள் காதல் பலிகளாக தமது உயிர்களை துறக்க வேண்டியிருப்பது வெட்கக் கேடு. சமூக அக்கறையுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.

17 மறுமொழிகள்

 1. ‘காதல்’ என்ற மனிதனின் இயற்க்கையான உனர்வை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது. அந்த உன்ர்வை இந்த சமுகம் எப்படி கையாளுகிறது என்பது தான் வேதனையான விஷயம்.

  இது போன்ற குற்றச் செயலுக்கு காரணம் இன்றைய கார்ப்பரெட் சினிமா இளைய சமுதாயத்தை தவறாக வழிநடத்துகிறது என்பதில் இரு வேறு கருத்தில்லை. அதற்கு எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

  ஆனாலும் எக்காரணம் கொண்டு இந்த கொடிய செயல் செய்த இந்த மனித மிருகத்தை தண்டணையிலிருந்து தப்பவிடக்கூடாது.

 2. முதலாளிகளுக்கு எந்தெந்த பண்டிகைகள், விழாக்கள், தினங்களில் எல்லாம் நன்றாக லாபம் அடைய முடியுமோ, அந்த தினங்களை எல்லாம் கொண்டாட வைப்பார்கள்,

  எந்த தினம் முதலாளிகளுக்கு லாபம் ஈட்ட வழியில்லையோ அந்த தினத்தை மக்களால் கொண்டாட வேண்டிய அவசியமில்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது. ஆகவே முதலாளித்துவ நாடுகளில் தனிதனி தினமாக கூறாமல், எல்லா தினங்களையும் முதலாளிகளின் தினம் என்று கூறுவதே சரி!

 3. அசிட் அடித்த அந்த வாலிபன் 5 வருடஙளாக அவளுக்கு படிக்க பண உதவி செய்துள்ளான் அவளுடைய அப்பா அவனுக்கு அவளை திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் அவள் வேலைக்கு சென்ட்ரதும் அவனை களட்டி விட்டுள்ளுனர்

  • இது உண்மையா ?? இது பற்றி எந்த செய்தியும் இல்லையே ?? இது உண்மையா இருந்தாலும், அந்த சொறி நாய்க்கு, அசிட் அடிக்க என்ன திமிர்…இவனுடைய ஆண் உறுப்பில் அசிட் அடிக்க வேண்டும்

 4. அது என்னாங்க காதல் செய்யுறது ? அண்டா குண்டா செய்யுற மாதிரி சொல்லுறீங்க. இப்போ காதல் செய்யுறது எப்படி நடக்குதுன்னு கொஞ்சம் கண்ணை தொறந்து உலகத்த பாருங்க. தெரு நாய்களே வெட்கி தலை குனியும். உதாரணத்திற்கு பிரவுசிங் செனட்டர் விடியோக்களை வலைதளங்களில் பாருங்க. அங்க “காதல் செய்யுற” காட்சிகள் தான் இப்போதைக்கு பதிவாக கிடைக்குது. ஒருவருக்கு ஒருவர் பிடிச்சி இருந்தால், சொந்த காலில் குடும்பத்தை நடத்த நம்பிக்கை இருந்தால், பிறந்தது முதல் கருத்தாக வளர்த்த பெற்றோர்களை கை கழுவ மனமிருந்தால் பதிவு திருமணம் செய்துக்கொண்டு காதலை செஞ்சி தொலைங்களேன். காதல், தெய்வீகம், காவியம், இதயம், ரோஜாபூ, மலர், ம…று மட்டைன்னு சொல்லிக்கொண்டு ஆன்கள் தான் கொள்ளை லாபம் அடைகின்றனர் காலம் காலமாய். எதார்த்தத்தில் இந்த “காதல் செய்யுற” விஷயத்தில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஆண்களுக்கு ஒரு முடி கூட நஷ்டமில்லை.

 5. இதுவே ஒரு போலீஸ் காரனோ இல்ல ஒரு பணக்காரனோ இத செய்து இருந்தானா பணத் திமுரு அதிகார திமுரு நு அழுதிருப்ப? இப்ப செஞ்சது உன் ஜாதிக்காரன் தான். தொழிலாளர் வர்க்கம்.அதான் ஆணாதிக்கம் அது இதுன்னு எழுதுற… உனக்கு வெக்கமா இல்லையா ?

  தில்லு இருந்த இத publish பண்ணு. விவாதிக்க நான் ரெடி.

 6. நிறைய பேர் அவன் நல்லது செஞ்சு கழட்டி விடப்பட்டு வெறுத்து போய் ஆசிட் ஊற்றியதாக சொல்றாங்க, அதெப்படி இப்படிப்பட்ட ஒரு குரூர செயலுக்கு காரணமாக சொல்ல தோன்றுகிறதோ! அது உண்மையாக இருப்பினும் சுயநலமாக செயல்பட்டு ஏமாறுவதற்கு அவனே காரணம்!

  வினவு இவ்வளவு திட்டு திட்டுவதற்கு பதிலாக, அவனை பற்றி சிறிது எழுதி, அவன் படத்தையும் அவன் குடும்பத்தினர் படத்தையும் போட்டிருக்கலாம்! அப்படி போடாததும் ஆணாதிக்கமோ என்று தோன்றுகிறது?

 7. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத கொடுங்கோலன் சுரேஷ். ஒரு பெண் காதலிக்க மறுக்கிறாள் என்பதற்காக அவளை அமிலம் வீசி சிதைப்பேன் என திரியும் ஆணாதிக்க வெறியர்களை காயடிக்க வேண்டும்.விருப்பம் இல்லாதவளை அடைய நினைப்பது ஒருவகை கற்பழிப்பு. ஒழுங்கா படிக்காத கொத்தனாருக்கு Engineer பொண்ணு கேக்குதா? இப்போது காதல் பொருளாதாரம், கல்வி சார்ந்து சமநிலை அடைந்துவிட்டால் ஜாதி ஒரு பொருட்டே இல்லை.காதலிக்க நினைக்கும் போதே பொருளாதார முன்னேற்றத்தை வுறுதி செய். அப்புறமா காதல் பண்ணலாம். காட்டுமிராண்டி காதலை வளர்ப்பதில் வினவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆசிரியர் மறக்க வேண்டாம். காதல் செய்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்த நான், இப்போது நடக்கும் காதலை கண்ணியமாக நினைக்க முடியவில்லை.இப்போது ராமதாஸ் செய்யும் செயல் பல சமயம் ஏற்ப்பு உடையதாகவே நினைக்க தோண்றுகிறது.ராமதாஸ் சொன்னது 23வயது ஆணும் 21 வயது பென்னும் விரும்பினால் சுயமாக திருமணம் செய்யலாம். இல்லைஎன்றால் பெற்றோரின் சம்மதம் வேண்டும். ராமதாஸ் சொன்னதில் தவறு இல்லை. காதல் என்பது கட்டாயபடுத்தி வருவது அல்ல. உழைப்பு செய்ய தயாராக இல்லாதவனுக்கு காதல் ஒரு கேடா?

 8. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத கொடுங்கோலன் சுரேஷ். ஒரு பெண் காதலிக்க மறுக்கிறாள் என்பதற்காக அவளை அமிலம் வீசி சிதைப்பேன் என திரியும் ஆணாதிக்க வெறியர்களை காயடிக்க வேண்டும்.விருப்பம் இல்லாதவளை அடைய நினைப்பது ஒருவகை கற்பழிப்பு. ஒழுங்கா படிக்காத கொத்தனாருக்கு Engineer பொண்ணு கேக்குதா? இப்போது காதல் பொருளாதாரம், கல்வி சார்ந்து சமநிலை அடைந்துவிட்டால் ஜாதி ஒரு பொருட்டே இல்லை.காதலிக்க நினைக்கும் போதே பொருளாதார முன்னேற்றத்தை வுறுதி செய். அப்புறமா காதல் பண்ணலாம். காட்டுமிராண்டி காதலை வளர்ப்பதில் வினவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆசிரியர் மறக்க வேண்டாம். காதல் செய்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்த நான், இப்போது நடக்கும் காதலை கண்ணியமாக நினைக்க முடியவில்லை.இப்போது ராமதாஸ் செய்யும் செயல் பல சமயம் ஏற்ப்பு உடையதாகவே நினைக்க தோண்றுகிறது.ராமதாஸ் சொன்னது 23வயது ஆணும் 21 வயது பென்னும் விரும்பினால் சுயமாக திருமணம் செய்யலாம். இல்லைஎன்றால் பெற்றோரின் சம்மதம் வேண்டும். ராமதாஸ் சொன்னதில் தவறு இல்லை. காதல் என்பது கட்டாயபடுத்தி வருவது அல்ல. உழைப்பு செய்ய தயாராக இல்லாதவனுக்கு காதல் ஒரு கேடா???

 9. காதல்ன்னு வந்தாலே அது கண்டிப்பாக பெண்கள் மட்டும் பாதிக்கப்படுறாள் என்பதே உண்மை. அதனால்தான் சொல்கிறேன் காதல் வேண்டும், காதலர் தினம் வேண்டும் என்று கோஷம் போடுவதே பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வக்கிரத்தின் சூழ்ச்சியே. காதல் செய்யனும், காதல் செய்யிறது ஜனநாயக உரிமைன்னு எல்லாம் எழுதுறீங்கள்ள சரி காதல் செய்யுறதுன்னா என்ன? அத எப்படி செய்யிறது ? அதற்கு என்ன அளவுகோல் ? ஒரு தகப்பன் தான் பெற்ற மகள் காதல் என்ற பெயரில் யாருடனும் அந்த காதலை செய்ய அனுமதிக்கலாமா ? அந்த காதலை எங்கே செய்ய அனுமதிப்பது ? ஒரு பெண் தானாக ஒருவனை தேடிக்கொள்ளும்போது அந்த ஆணைபற்றிய அவன் குடும்பத்தை பற்றிய முழு விபரங்களும் அந்த பெண்ணுக்கு தெரியாமலே அவனை தேர்ந்தெடுத்து மணம்புரிய விரும்புகிறாள். இதற்கும் பெண்ணின் பெற்றோர் தனக்கு தெரிந்த குடும்பத்தில் அந்த ஆணை பற்றிய முழுவிபரங்களும் தெரிந்துக்கொண்டு மணம் செய்ய விரும்புவதும் ஒன்றாகுமா ? இதில் பெண்ணுக்கு எதில் பாதுகாப்பு என்பதையும் சிந்திக்கவேண்டாமா ?

 10. காதலும் இல்லை சாதலும் இல்லை .அவள் காதலித்தாள் .அவளது படிப்பு செலவுக்காக ,
  அவன் காதலித்தான் ,அவளை அடைய வேண்டும் என்பதற்காக ,அல்லது அடைந்ததற்காக
  அவன் அவளை காதலித்தது உண்மையெனின் உன் காதல் எனக்கு போதும் ,இனி நான் வாழ்ந்தால் என்ன ,மறைந்தால் என்ன ?என்று மனநிறைவு அடைந்திருப்பான் .அல்லது அவன் மரணித்திருப்பான் .

 11. //திராவகம் வீசியவனை தூக்கில் போட இனி கோரிக்கைகள் வலுக்கும். மக்களிடமிருந்து திராவகத்தை ஒளித்து வைக்க உச்சநீதிமன்றம் ஆலோசனை சொல்லியிருக்கிறது. இதை தனிப்பட்ட ஒரு குற்றச் செயலாக பலரும் பார்க்கிறார்கள். பார்ப்பார்கள். நான் அப்படி பார்க்கவில்லை. இங்கு எல்லா ஆண்களுக்குள்ளும், பெண்ணை இழிவுப்படுத்தும் எண்ணம் சாதுவாகவோ அல்லது சுரேசை விட கொடூர மனமோ ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது. சுரேசை தண்டித்துவிடலாம். ‘நம்முடைய’ சட்டத்திற்கு அது எளியது தான். ஆனால், இதை செய்ய தூண்டிய பலருக்கு என்ன தண்டனை!//

  http://socratesjr2007.blogspot.in/2013/02/blog-post_12.html

 12. Only thing to understand from today’s life is that dont waste your money trusting anyone/anything,parents are the only people to be trusted and even that is doubtful at times.

 13. காதலர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
  சங்ககாலத்தில் காதல் எங்கள் மத்தியில் இருந்திருக்கின்றது . காதலின் உவகையும் வலியும் பதிவான அழியாயிலக்கியங்கள் அவை. ஆனால் சங்கம் மருவிய சிலப்பதிகார காலகட்டத்தில் குழந்தைத்திருமணமுறை எம் மத்தியில் வழக்கத்திற்கு வர காதலும் மருவிவிட்டது..இன்று எங்கள் சமூகம் காதல் அற்றதாக மாறிவிட்டது. “ஆதலினால் காதல்செய்வீர்” என எமக்கு அறிவுரை வழங்கியவன் பாரதி.
  சங்கம் மருவிய காலகட்டத்தில் தென்னிந்தியாவில் முடிசூடிய மூவேந்தர்கள் ஓங்கி பேரரசுகள் உருவாகின. பேரரசுகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரத்தை . பிறப்பு சார்ந்தே உலகமெங்கும் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிக் கொண்டிருந்தது.
  சங்ககாலம் முதலே தமிழகத்தில் சாதியதிகாரமும் சாதிப்பிரிவினையும் வலுவாக இருந்திருந்தன. சங்கம் மருவிய காலத்தில் சாதியதிகார கட்டுமானமாகி சாதியடையாளங்களை மீறுவது உறுதியாக தடுக்கப்பட்டு அதற்காகவே குழந்தை வயதில் திருமணம் அறிமுகமாகி பதினைந்து நூற்றாண்டுகளாக நாங்கள் காதல் என்றால் என்ன என்று அறியாது. வாழ்ந்து வந்திருந்தோம். இதனால் நாங்கள் அறிந்ததெல்லாமே வெறும் பாலுறவு மட்டுமே.
  திருமணத்தில் காதல் இல்லாத காரணத்தால் நம் மூதாதையர் விபச்சாரிகளை தேடிப்போனார்கள்
  இளைஞனும் யுவதியும் தமது விருப்புக்கும் ரசனைக்கும் இயல்புக்கும் ஏற்ற துணையை தாமே தேடிக்கொள்வதுதான் உண்மையான காதல். தன் தோழனையும் தோழியையும் தேடிக்கொள்ள அனுமதி வழங்கிய எங்கள் சமூகம் வாழ்நாள் முழுக்க நீளும் திருமண உறவைத் தேடிக்கொள்ள கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக அனுமதிக்கவில்லை.
  திருமண பொருத்தத்தில் சொத்து, குடும்ப அந்தஸ்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள் .திருமணம் செய்ய விருப்பவர்களுக்கிடையில் விருப்பு, ரசனை, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் பொருத்தம் உண்டா? என்று பார்த்தது கிடையாது. .இந்தப் பொருத்தங்கள் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகாமல் தெரிய வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய. திருமண முறைகளில் ஜோடியாக தம்பதிகளென முடிவுசெய்தபின்னர்தான் அவர்களை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம்.
  இருவர் தமக்கிடையே பகிருந்தோறும் நெருங்குந்தோறும், பழகுந்தோறும் அகத்தை பகிர்ந்துகொள்வதால் வளரும் ஓர் உறவுதான் காதல்.
  எமது விருப்பு, ரசனை, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் இணைவு இல்லாத ஓருவரோடு கொஞ்ச நேரத்திற்குப் பின் எங்களால் பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவரை திருமணம் புரிந்தால் அந்தத் திருமணம் எப்படி தொடர முடியும்?
  பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத்தளம் இல்லாத நிலையில் நம் மத்தியில் தம்பதிகளுக்கிடையில் வெறும் வெற்று உரையாடல்கள் மட்டுமே சாத்தியம்.
  எங்கள் மத்தியில் நடைபெறும் திருமணங்களில் சில காலம் தாண்டியபின் தம்பதிகளுக்கிடையில் உரையாடலே நிகழ்வதில்லை. உணவு ரெடியா?, பிள்ளைகள் சாப்பிட்டார்களா? என சில வரிகளுகளுக்குமேல் தமக்கிடையில் உரையாடும் தம்பதிகள் மிக மிக அபூர்வம். வேறு வழியே இல்லாத நிலையில் நம் மத்தியில் திருமண உறவு என்பது வெறும் ஒப்புக்கு போலியாக நிகழ்வதாக மாறிவிடுகின்றது
  நம் மத்தியில் திருமணமான தம்பதிகள் பெரும்பாலும் தமது நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுகிறார்கள். திருமணம் புரியும் தம்பதிகளுக்கிடையில் காதலை வளராதலால் வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன் வெறும் சினிமா, நாவல்கள் நாடகங்கள் மூலம் வெறும் கற்பனையில் காதலைத் தரிசித்துவிட்டு அநேகமானவர்கள் மரணித்துப் போய்விடுகின்றார்கள்.
  இன்னமும் உண்மையான காதல் என்றால் என்ன என்று எங்களுக்கெல்லாம் . தெரியாத காரணத்தால் எந்த தெரிவும் இல்லாமல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள அருகாமையையே காதலுக்கான காரணமாக எடுத்துக் கொள்கின்றோம். எங்கள் மத்தியில் இருவர் அருகருகே பழக நேர்ந்தாலே திருமணம் செய்து கொள்கின்றார்கள்.
  இறுகிய எங்கள் சமூகத்தின் மத்தியில் காதல் தடை செய்யப்பட்ட ஒன்றாக இன்னமும் இருப்பதனாலேயே அது இரகசியமானதாக உளவு பாக்கப்படும் ஒரு விடயமாக அமைந்துள்ளது. . இதனால் காதலை நிதானமாக அணுக முடியாது சில கண்களில் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே திருமணங்களாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளில் முடிவடிகின்றன.
  காதலை நிதானமாக அணுகவும் முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும் அனுபவம் தேவை. அத்தகைய அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் தேவை.
  ஆரோக்கியமான சமூகங்கள் காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரத்தினை கொண்டிருக்கும். . பொருத்தமான ஆண்பெண் உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்

  – நல்லையா தயாபரன்

 14. அமில தாக்குதலில் உருக்குலைந்து போன வினோதினி மருத்துவமனை படுக்கையிலிருந்து அளித்த நேர்காணலில் தன மீது அமிலம் வீசிய கயவன் மீது தண்டனையாக அமிலம் வீச வேண்டும் என கோரியிருந்தார்.அவரது மறைவுக்கு பின் அவரது தந்தையும் அதே கோரிக்கையை வைக்கிறார்.இது பற்றி பதிவில் கருத்தில்லை.வினவு கொண்டிருக்கும் கருத்தை அறிந்து கொள்ளலாமா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க