Thursday, March 20, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வீனஸ் பள்ளி கொள்ளைக்கு எதிராக சிதம்பரத்தில் போராட்டம் !

வீனஸ் பள்ளி கொள்ளைக்கு எதிராக சிதம்பரத்தில் போராட்டம் !

-

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவி முதலிடம் பெற்றுள்ளார். அதற்காக ‘வரலாற்று சாதனையாளர் வீனஸ் குமார்’ என சிதம்பரம் நகரமெங்கும் முதலாளிக்கு ஆதரவாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அதே போல் அரசு கட்டணத்தை மட்டுமே செலுத்துவோம் என திரண்ட பெற்றோர்களை 10-6-13 அன்று பள்ளி துவங்கிய முதல் நாளே அனைத்து கட்சி பிரமுகர்களையும் அவர்களது அடியாட்களுடன் திரட்டி பள்ளிக்கு வரவழைத்து மிரட்டிய சாதனையையும் வீனஸ் குமார் செய்திருக்கிறார்.

மாநிலத்தில் முதலிடம் என்பதை காரணமாக வைத்து இந்த ஆண்டு பலமடங்கு கட்டணத்தை உயர்த்தினார். கட்ட இயலாத பெற்றோர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே கட்டுவேன் என போராட ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை சார்ந்தவர்கள். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சிதம்பரம் உதவி ஆட்சியர், அனைவரிடமும் புகார் அனுப்பினர். எவ்வளவு கட்டணம் என்பதை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். பல ஆயிரம் பணத்திற்கு துண்டு சீட்டை ரசீதாக கொடுப்பதை ஏற்க முடியாது. நாங்கள் டி.டியாக எடுத்து பதிவுத் தபாலில் அனுப்புகிறோம் என அதிகாரிகளிடம் சங்க நிர்வாகிகள் வாதாடினார்கள்.

பள்ளிக் கட்டண போஸ்டர்
பள்ளிக் கட்டண போஸ்டர்

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 7-6-13 அன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடை பெற்றது. வீனஸ் பள்ளி முதலாளி குமார், முதல்வர் மகேஷ் ஆகியோர் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டனர். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பச்சையப்பன் பள்ளி முதலாளி காரில் வந்தார். உதவி ஆட்சியர் அவர்களிடம் “வீனஸ் பள்ளி முதல்வர் அரசு கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறார். ரசீதும் தருகிறார்கள். புத்தகமும் தருகிறார், கட்டண உத்திரவு, அறிவிப்பு பலகையில் ஒட்டப் பட்டிருக்கிறது” என சாட்சியம் அளித்தார். “பெற்றோர்கள்தான் வீண் பிரச்சினை செய்கிறார்கள்” என்றும் கூறினார்.

பெற்றோர் சங்க நிர்வாகிகள் அவரின் கூற்றை மறுத்தனர். “சரி நாங்கள் டி.டி எடுத்து அனுப்புகிறோம் வாங்கச் சொல்லுங்கள்” என பேசினர், உதவி ஆட்சியரும் அதை ஆமோதித்தார். ஆனால் பள்ளி முதலாளி “என்னிடம் பேங்குக்கு போக ஆள் வசதியில்லை அதோடு கலெக்சன் சார்ஜ் வரும், டி.டி.வாங்க முடியாது” என திட்டவட்டமாக மறுத்தார். உதவி ஆட்சியர் சங்க நிர்வாகிகளிடம், “நீங்களும் கொஞ்சம் அனுசரித்து போங்கள், அரசு கட்டணம் வாங்கி கொள்கிறேன் என கூறுகிறார் போய் கட்டுங்கள்” என்று மிக சுமுகமாக முடித்தார்.

சமச்சீர் பாடம் வந்த பிறகு புத்தகத்திற்கு ரூ 2000 கேட்கிறார்கள் என்ற சங்க நிர்வாகிகள் முறையீட்டை உடனே முதல்வர் மறுத்து, “நாங்கள் எக்ஸ்ட்ரா ஆங்கில புத்தகம் கொடுக்கிறோம் அப்போதுதான் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவு வளரும்” என ஆங்கிலத்தில் சொன்னார். அதை உதவி ஆட்சியர் ஆமாம் என வழி மொழிந்தார். இன்றைய முடிவுகளை எழுத்து பூர்வமாக கொடுங்கள் என பெற்றோர்களும் சங்க நிர்வாகிகளும் கேட்டதற்கு “என் மீது நம்பிக்கை இல்லையா? போங்க” என அனுப்பினார். “கட்டண நகலை எங்களுக்கு வாங்கிக் கொடுங்கள்” என்று கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.  ஆட்சியர், “நான் சொல்லுகிறேன் குறித்துக் கொள்ளுங்கள்” என சொன்னார்.

  • எல்.கே.ஜி.- யு.கே.ஜி ரூ 6,100
  • ஒன்று முதல் ஐந்து வரை ரூ 7,300
  • ஆறு முதல் எட்டு வரை ரூ 9,200
  • ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு ரூ 9,700
  • 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூ 12,250

மறுநாள் நடந்த சங்க பொதுக்குழுவில் 100-க்கு மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அந்த கட்டணத்தை போஸ்டராக அச்சடித்து விரிவாக நகரம் முழுவதும் ஒட்டவேண்டும் என முடிவு செய்யப்பட்டு அவ்வாறே நிறைவேறியது.

பள்ளி முதலாளி கேட்கும் கட்டணம்

  • எல்.கே.ஜி. – யு.கே.ஜி  ரூ 12,000
  • ஒன்று முதல் ஐந்து வரை ரூ 14,000 முதல் 18,000
  • ஆறு முதல் எட்டு வரை ரூ 20,000 முதல் ரூ 24,000
  • ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு ரூ 23,000 முதல் ரூ 35,000
  • 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூ 45,000 முதல் ரூ 55,000

10-6-13 அன்று அரசு கட்டணத்தை செலுத்துவதற்கு சங்கப் பெற்றோர்கள் மட்டும் அல்லாது ஏனைய பெற்றோர்களும் போஸ்டரை பார்த்து பெருமளவில் வீனஸ் பள்ளி முன்பு திரண்டனர். ஆத்திரமுற்ற பள்ளி முதலாளி வீனஸ் குமார் அனைத்து கட்சி பிரமுகர்களையும் அவர்கள் அடியாட்களுடன் குவித்தார்.

வீனஸ் பள்ளி முதலாளிக்கு அடியாட்களாக கட்சி பாகுபாடில்லாமல் வந்தவர்கள்

  • தி.மு.க கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், வெங்கடேசன் அவர்களின் அடியாட்கள் 20 பேர், எம்.டி.கிருஷ்ண மூர்த்தி
  • தி.மு.க, எம்.எம். ராஜா
  • பா.ம.க மாவட்ட செயலாளர் வேணுபுவனேஸ்வர், அவருடன் 20 அடியாட்கள்,
  • காங்கிரசைச் சேர்ந்த வைத்தியநாதன், குமார்
  • கீரப்பாளையம் பா.ம.க ஒன்றிய கவுன்சிலர் நாகவேல் மற்றும் அவரது அடியாட்கள், (இந்த குரூப்தான் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சிவசாமி கொலை வழக்கில் விடுதலையானவர்கள்)

கட்டணம் செலுத்தத் திரண்டிருந்த பெற்றோர்களை அச்சுறுத்தி “கவர்மெண்ட் பீஸ் கட்டவர்ரீங்களா? ஏண்டா கட்ட வக்கில்லன்னா கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போங்கடா, உங்களால எங்க பிள்ளைங்க படிப்பு கெடுது, நாதியத்த நாலு பேர் சங்கம் வச்சிக்கிட்டு பிரச்சினை பன்றீங்களா” என்று வந்தவர்கள் கூடியிருந்த பெற்றோர்களை பார்த்து வாய்க்கு வந்த மாதிரி பேசினர். பள்ளி வாசலில் குறுக்கே நின்று கொண்டு, “என்ன வேனும் கவர்மெண்ட் பீசா போ வெளியே” என விரட்டினர். “போஸ்டரா ஒட்டுரீங்க நாதியத்த பசங்களா, நாங்க தான் இனி பெற்றோர் சங்கம், நான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்” என்று அறிவித்தார் பா.ம.க. மாவட்டச் செயலாளர் வேணு புவனேஸ்வர். அனைவரும் கைதட்டினர். நமது சங்க நிர்வாகிகளை பார்த்து கேவலமாக பேசி வம்புக்கு இழுத்தனர்.

dinamalar-photoபெரிய அளவில் கலவரம் நடக்க இருந்த சூழலில் சிதம்பரம் டி.எஸ்.பி. காவல் ஆய்வாளர் வந்தார். சவுண்டு விட்டு கொண்டிருந்த அடியாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கினர். வந்த ரவுடிகள் “பெயிண்ட் அடிக்கலாமா?” எனக் கேட்டனர் மற்றொருவர் “கொஞ்ச நேரம் கழித்து அடிக்கலாம்” என பதில் அளிக்கின்றார். பெயிண்ட் அடிக்கலாம் என்றால் இறங்கி அடிக்க வேண்டும் என்று சிக்னல் என்பதை நாம் விசாரித்து தெரிந்து கொண்டோம். பெற்றோர்களை தவிர இங்கு யாரும் நிற்க கூடாது என கூறி நமது சங்க நிர்வாகிகளையும் அப்புறப்படுத்தினர். திங்கள் கிழமை முதல் அரசு கட்டணத்தை மட்டும் வாங்குகிறோம் என பள்ளி தாளாளர் உதவி ஆட்சியரிடம் உத்திரவாதம் அளித்து விட்டு இன்று அடியாட்களை வைத்து மிரட்டுகிறார் என விளக்கமாக ஆதாரங்களுடன் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தினர் விவரித்தனர். டி.எஸ்பி. பள்ளி தாளாளரிடம் சென்று விசாரித்தார். அப்படி ஒன்றும் இல்லை இவர்கள் தான் பிரச்சினை செய்கிறார்கள் என பதிலளித்தார். இங்கு யாரும் கூட்டம் கூடாது. வரிசையாக நின்று பணம் கட்டுங்கள் என மூன்று போலீசாரை காவலுக்கு போட்டு விட்டு சென்று விட்டார். போன அடியாட்கள் திரும்பி வந்தனர் பணம் கட்ட நின்ற பெற்றோர்களிடம் வம்பிழுத்தனர். நமது நிர்வாகிகள் போலீசிடம் சார் பாருங்கள் என புகார் தெரிவித்தனர். அதற்கு எங்களை கண்காணிக்க மட்டுமே சொல்லியுள்ளனர் என ஒற்றை பதிலோடு நிறுத்தி கொண்டனர்.

இதற்கு மேல் இருந்தால் அடிதடி பிரச்சினை ஆகிவிடும் என்பதால் பெற்றோர்கள் ஆட்சியரிடம் சென்றனர். அவர் பெற்றோர்களிடம் “தாளாளர் போன் நம்பர் கொடுங்க, ஒத்துகிட்டு போய் ஏன் இது மாதிரி செய்கிறார்” என நம்பர் வாங்கி பள்ளிக்கு போட்டார் லைன் போகவில்லை. “சரி நான் பேசுறேன் நீங்கள் போங்க” என்றதுடன் காவல்துறையில் பேசி “பெற்றோர்களைத் தவிர கட்சிகாரர்கள் யாரும் பள்ளியில் இருக்கக் கூடாது அப்புறப்படுத்துங்கள்” என வாய் மொழி உத்திரவிட்டார். சிறிது நேரத்தில் மூன்று பெற்றோர்களை நமது சங்க நிர்வாகிகள் அழைத்து வந்தனர். “எங்கள் பிள்ளைகள் 5 லிருந்து 6 ஆம் வகுப்பிற்கு செல்கிறார்கள். அரசு நிர்ணியித்த கட்டணம் மட்டும் செலுத்துகிறேன் என கூறினேன். டி.சி கொடுத்து விட்டார்கள்” என மாணவர்களுடைய டி.சியை காட்டினர். அதற்கு ஆட்சியர் “இது சீரியசான விசயம். டி.சி கொடுக்கக் கூடாது. நான் விசாரிக்கிறேன்” என அனுப்பி விட்டார்.

தினமலர் செய்தி
தினமலரில் வெளியான செய்தி

10-6-13 அன்று மாலையே 6-00 மணிக்கு பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சங்க நிர்வாகிகளுடன் கொடுக்கப் பட்ட டி.சியுடன் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடமும் புகார் அளித்தனர். இரண்டு நாள்களுக்குள் சரி செய்து விடுகிறேன் என கல்வித் துறை அதிகாரி உத்திரவாதம் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தால் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி மனுவை வாங்கி பார்த்து விட்டு “அதே பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேர்த்தால் மீண்டும் பிரச்சினை பண்ணுவார்களே அரசு பள்ளியில் சேர்த்து விட்டு நிம்மதியாக இருங்கள்” என ஆலோசணை கூறினார். நமது நிர்வாகிகள், “டி.சி.கொடுத்தது சட்டபடி தப்பு, அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். பெற்றோர்களை அடியாட்களை வைத்து அச்சுறுத்திய வீனஸ் பள்ளி தாளாளரின் இத்தகைய சட்ட விரோத செயல்களுக்காக சிதம்பரம் டி.எஸ்.பியிடம் நேரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தின் சார்பில் கட்டணம் தொடர்பாக ஒட்டபட்ட அனைத்து போஸ்டர்களிலும் வீனஸ் பள்ளி நிர்வாகத்தினர் போஸ்டர் ஒட்டி மறைத்து விட்டனர். சில பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. சிதம்பரம் கிளைத்தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கலையரசன், துணைத் தலைவர்முஜுப்பூர் ரகமான் மற்றும் இதர நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். பள்ளி தரப்பில் அடியாட்கள் மூலம் வேண்டும் என்று பெற்றோர்களிடம் வம்பிழுத்து கலவரத்தை ஏற்படுத்தி இனிமேல் யாரும் கூடுதல் கட்டணத்தை எதிர்த்து போராடக் கூடாது என்ற சதிதிட்டத்துடன் செயல்படுகின்றனர் என்ற பள்ளி முதலாளியின் நோக்கத்தை விளக்கமாக காவல்துறையின் அதிகாரியின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தக்க ஆதாரங்களுடன்,கல்வி துறை அதிகாரிகளிடம் நேரிலும் பதிவு தபாலிலும் அனுப்பப்பட்டுள்ளன. அரசின் செவிட்டு காதுகளுக்கு புரியும்படி சொல்ல 14-6-13 அன்று சிதம்பரத்தில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடத்த ஆயத்தமாகியுள்ளனர்.

இந்த வீனஸ் குமார் என்பவர் காமராஜ் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் லட்சுமி காந்தனின் சகோதர உறவினர். இவர்கள் இருவரும் எம்.ஏ.எம்.செட்டியாரின் நேர்முகச் செயலாளர் எஸ்.ஆர். என்பவரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிட தக்கது. நமது சங்கத்தின் தொடர்ந்த போராட்டத்தின் காரணமாக இந்த ஆண்டு காமராஜ் பள்ளி முதலாளி லட்சுமிகாந்தன் அரசு கட்டணத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டியதுடன் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்க்கான கட்டணம் விரும்பும் பெற்றோர்கள் கட்டலாம் என அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க