தலித் வன்னியர் ஜோடியை பிரிக்க முயற்சித்த பா.ம.க. சதித்திட்டம் முறியடிப்பு !

24

ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் 16-7-13 அன்று நீதிபதி கீழ்க்கண்டவாறு உத்திரவு வழங்கினார்.

செந்தமிழ்ச் செல்வி, “என்னை யாரும் கடத்தவில்லை, நானாகத்தான் விரும்பி விமல் ராஜை காதலித்து திருப்பனந்தாள் எனும் ஊரில் பதிவு திருமணம் செய்து கொண்டேன். அவர் என் கணவர், அவருடன்தான் செல்ல விரும்புகிறேன். நான் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிறந்த தேதி படி நான் மைனர் அல்ல” என்ற வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், திருமணத்தை சட்டப்படி சார்பதிவாளரிடம் பதிவு செய்துள்ள சான்றிதழ்படியும், விமல் ராஜ் செந்தமிழ்ச்செல்வியின் சட்டப்படியான கணவர். எனவே அவருடன் அனுப்ப இந்நீதிமன்றம் உத்திரவிடுகிறது. மைனர் என்பதற்காக பெற்றோர்கள் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் குறித்த நம்பகத் தன்மையை விசாரிக்கும் அதிகாரம் இந்நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே உரிய சிவில் நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் நிவாரணம் பெறலாம்.

என்று கூறி மைனர் பெண்ணை காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் பா.ம.க வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

விமல் ராஜ், செந்தமிழ்ச் செல்வி
விமல் ராஜ், செந்தமிழ்ச் செல்வி

இந்த வழக்கில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் விமல் ராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராகி காதலர்களை பிரிக்காமல் ,பெண்ணை கடத்தியதாக பதியப்பட்ட பொய் வழக்கிலிருந்து மீட்டு திருப்பனந்தாள் ஊருக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ், தலித் சமூகத்தை சார்ந்தவர் . இவர் ஜெயங்கொண்டத்தில் தனியார் கேஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளார். செந்தமிழ்ச் செல்வி பெண்கள் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்.

இவர்களது காதல் விவகாரம் செந்தமிழ்ச்செல்வியின் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் உள்ள வேறு ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்து, ஒரு லட்சம் முன் பணம் வாங்கி விட்டனர். செந்தமிழ்ச் செல்வி இந்தத் திருமணத்திற்கு மறுக்கவே, அவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நெசவுத் தொழில் செய்வதற்கு வாங்கிய முன்பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என பெற்றோர் செல்வராஜ், உமாராணி பெண்ணை நிர்பந்தித்தனர். இவரது தங்கை நன்றாக படிக்கக் கூடியவர் அவரையும் 10-ம் வகுப்போடு நிறுத்தி பஞ்சு மில்லிற்கு வேலைக்கு அனுப்பி விட்டனர்.

இச்சூழலில்தான் செந்தமிழ்ச் செல்வி வீட்டை விட்டு வெளியேறி விமல்ராஜிடம் சென்று விட்டார். பெற்றோர்கள் கஷ்டப்பட்டாலும் வன்னியர் சங்கம் இந்த காதலை பிரிக்க ரூ 1 ½ லட்சம் பணம் ஒதுக்கி விமல்ராஜ் பெற்றோர்களை மிரட்டியது. காதலர்களை தேடியது. விமல்ராஜின் வன்னியர் நண்பர்களதான் இச்செய்தியை அவருக்குச் சொல்லி பத்திரமாக இரு என எச்சரித்தனர்.

இந்நிலையில் காதல் தம்பதிகள் இருவரும் கடந்த ஜூன் 25 அன்று திருப்பனந்தாள் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். அதே ஊரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். பா.ம.க வின் தூண்டுதலின் பேரில், “விமல் ராஜ் எனது பெண்ணை கடத்தி சென்று விட்டதாக” கூறி செந்தமிழ்ச்செல்வியின் தந்தை செல்வராஜ் புதிதாக வாங்கிய பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடத்தல் வழக்கும் பதிவு செய்யபட்டது.

001திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தம்பதிகள் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் பெண்ணை கடத்தி விட்டார் என விமல் ராஜ், தாய்மாமன் பரமேஸ்வரன் ஆகியோரை போலீசார் தேடினர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்து அவ்வாறே உத்திரவும் பெற்றனர்.

இதற்கிடையில் உயிருக்கு பயந்த தம்பதிகள் தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்து தஞ்சம் அடைந்தனர். இவர்களை ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார் எஸ்.பி. ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

செந்தமிழ்ச்செல்வியின் பெற்றோர் சார்பில் குருவுக்கு ஆஜராகும் பா.ம.க வை சேர்ந்த அதே 10- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், செந்தமிழ்ச்செல்வி மைனர் என்பதற்கான பிறப்புச் சான்றிதழை தாக்கல் செய்தனர். அது 2-7-13 தேதியில் வாங்கப்பட்ட சான்றிதழ். “பிறப்பு சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி படி அந்த பெண் மைனர். எனவே பெண்ணை அரசு காப்பகத்திற்குதான் அனுப்ப வேண்டும். பையனோடு அனுப்பக் கூடாது” என வாதம் புரிந்தனர்.

மணமக்கள் தரப்பு வழக்கறிஞர்கள், “பிறப்பு சான்றிதழை ஏற்க முடியாது. பள்ளிச் சான்றிதழில் கொடுத்த பிறந்த தேதியும் அவர்கள் பெற்றோர்கள் கொடுத்ததுதான். சட்டப்படி இருவரும் மேஜர். திருமணமும் பதிவு செய்யப்பட்டு விட்டது. எனவே யாரும் தடுக்க முடியாது” என வாதிட்டனர்.

இச்சூழலில்தான் குற்றவியல் நீதிபதி முத்து மனோகரன் பா.ம.க வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து காதல் தம்பதிகளை அவர்கள் விருப்படி போலீஸ் பாதுகாப்புடன் திருப்பனந்தாள் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

பா.ம.க வை சேர்ந்த பிரமுகர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லையே தவிர இவர்களை பிரிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தனர் ஆனால் பொது மக்களில் பலரும் ஆதரவு அளிக்கும் முகமாக கருத்து கூறினார். ஜெயங்கொண்டம் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இறுதி வரை உடன் இருந்தனர்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்.