முகப்புகட்சிகள்அ.தி.மு.கமாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !

மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !

-

முன்னுரை:

14 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 23ம் தேதி, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து ஊர்வலமாகச் சென்ற தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாகத் தடியடி தாக்குதல்நடத்தினர். இந்தத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஏராளமான மக்கள் அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றில்குதித்தனர்.  ஆற்றிலும் போலிசின் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. பலர் தலையடி பட்டு மூழ்கினர். மொத்தம் 17 பேர்கள் கொல்லப்பட்டன்ர். அரசின் கொடிய அடக்குமுறையின் விளைவான இந்தச் சம்பவத்தின் 14-ம் ஆண்டு நினைவு தினம் கடந்த 23-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. அதை ஒட்டி சம்பவம் நடந்த 1999-ம் ஆண்டில் புதிய கலாச்சாரத்தில் வெளியான கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம்.
-வினவு
_________________________

பிணங்கள், அதுவும் தேர்தல் நேரத்தில் விழும் பிணங்கள் சர்வ வல்லமை வாய்ந்தவை. ராஜீவின் பிணம் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தைத் தந்தது; இந்திராவின் பிணம் ராஜீவுக்கு பிரதமர் பதவியைத் தந்தது; கோவை குண்டு வெடிப்பின் பிணங்கள் பாரதிய ஜனதாவுக்கு வாழ்வையும் செயலலிதாவுக்கு மறுவாழ்வையும் தந்தன.

manjolai-8பிணத்தை வைத்து அரசியல் நடத்துவதில் வல்லமை பெற்ற தி.மு.க., காங்கிரசு ஆட்சியில் குண்டடி பட்டுச் செத்த வால்பாறைத் தோட்டத் தொழிலாளி ஒருவரை காட்டி ”கூலி உயர்வு கேட்டான் அதான், குண்டடி பட்டுச் செத்தான்” என்று முழக்கம் வடித்து ஆட்சியையும் பிடித்தது.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் கொல்லப்பட்ட 17 பேரின் உடல்களைத்தான் யாரும் அரசியலாக்க மறுக்கிறார்கள். தீண்டவே மறுக்கிறார்கள். இது ஏன் அரசியலாக்கப் படவில்லை?

”17 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனை பேர் போலீசால் கொலை செய்யப்படுவது சமீபகாலத்தில் நடந்ததே இல்லை. எனினும் திருநெல்வேலிப் படுகொலையைப் பற்றி அனைத்திந்தியப் பத்திரிகைகள் எதுவுமே எழுதவில்லை. ஒருவரது ஆடு செத்துப் போனால் கூட அதில் மனித உரிமை பாதிக்கப்பட்டு விட்டதாக விசாரணை நடக்கும் காலம் இது. 17 பேர் கொலை செய்யயப்படிடிருக்கும் போது மனித உரிமைக் கமிசன் தானே வந்து தலையிட்டிருக்க வேண்டும். தலையிடவில்லை” என்றெல்லாம் புலம்பினார் ப.சிதம்பரம்.

manjolai-6கொலை செய்யப்பட்டவர்களில் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்களும் அடக்கம். தன் சொந்தக் கட்சித் தொண்டரின் கொலையைக் கூட த.மா.கா. அரசியலாக்காதது ஏன்?

மைதியாக ஊர்வலம் சென்ற நிராயுத பாணியான மக்கள் மீதும் பெண்கள் மீதும், காவல்துறை எப்படி வெறி கொண்டு தாக்குதல் நடத்தியது என்பதை விவரமாக எழுதியிருக்கிறது மார்க்கிஸ்டு கட்சியின் நாளேடான தீக்கதிர். எங்குமில்லாத வகையில் போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டதையும், தங்களது மாவட்டச் செயலாளர் பழனியை போலீசார் குறிவைத்து தாக்கியதையும் கோபம் கொப்பளிக்க எழுதியிருக்கிறது.

தேயிலைத் தோட்ட முதலாளிகளான பன்னாட்டு நிறுவனங்களையும், அவர்களது அடியாட் படையாக செயல்படும் போலீசையும். தொழிலாளி வர்க்க விரோத தி.மு.க. அரசையும் அம்பலப்படுத்த இதுவோர் பொன்னான வாய்ப்பல்லவா?

மதவாத பா.ஜ.க.-வுடன் கூட்டு வைத்தது மட்டுமல்ல, பா.ஜ.க-வை ஆதரிக்கும் பணமூட்டைகளான பெருமுதலாளிகளுடனும் திமு.க. கள்ளக் கூட்டு வைத்திருக்கிறது என்பதை திரை கிழித்திருக்கலாமல்லவா?

manjolai-2சாக்கடைக்குத் தூர் வாரவில்லை, தெரு விளக்கு எளியவில்லை என்பதையெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்பதைக் காட்டிலும் இது வலிமையான ஆயுதமல்லவா? இந்த அரசியல் ஆயுதத்தை மார்க்சிஸ்டு கட்சி ஏன் பயன்படுத்த வில்லை?

ங்கள் பெண் போலீசிடம் தகாத முறையில் நடக்க முயன்றதால்தான் தாக்குதல் நடத்த நேர்ந்தது என்ற போலீசின் புளுகு மூட்டையை தீக்கதிர் அம்பலப்படுத்தியிருக்கிறது. மேலும் பெண்களிடம் போலீசு எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பற்றி வாச்சாத்தி, அண்ணாமலை நகர் வழக்குகளை நடத்தி வரும் மார்க்சிஸ்டுகளுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியும்.

அவற்றையெல்லாம் எடுத்துப் போட்டு ”ஒரு பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்றதற்கு 17 பேரைக் கொல்லலாம் என்றால், பெண்களை பலாத்காரம் செய்வதை தம் உரிமையாகக் கருதும் போலீசாரையெல்லாம் சுட்டுத் தள்ளத் தயாரா” என்று சுவரொட்டி போட்டு தாய்க்குலத்தின் வாக்குகளை அள்ளியிருக்கலாமே! ஏன் செய்ய வில்லை?

manjolai-4மாஞ்சோலைத் தொழிலாளர்களை ஆதரித்து தர்ணா நடப்பதற்கு முன்னால் அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள் மருத்துவர்கள். அடித்து எலும்பை முறித்து ஆற்றில் விரட்டிக் கொல்லப்பட்டவர்களைத் ”தண்ணீரில் மூழ்கி இறந்ததாக” பிரேதப் பரிசோதனை அறிக்கை பொய்யாகத் தரப்பட்டுள்ளது. பொய் அறிக்கையும் கொடுத்துவிட்டு அதைக் கேள்வி கேட்டால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்வோம் என்று தொழிலாளி வர்க்கத்தையே மிரட்டுகிறார்கள் மருத்துவர்கள். கேட்க நாதியில்லை.

பி.எச். பாண்டியன் மாவட்ட ஆட்சியரைத் திட்டிவிட்டாரென்று பாண்டியனை கண்டித்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள் தூத்துக்குடி அரசு ஊழியர்கள்; தாமரைக்கனியை ஜெயலலிதா திட்டி விட்டார் என்று குமுறி எழுகிறது நாடார் சமூகம்; சசிகலா மீது ஊழல் வழக்கு போட்டதை எதிர்த்து சுவரொட்டி ஒட்டுகின்றன தேவர் அமைப்புகள்.

அரசுக்குக் காவடி எடுக்கும் அரசு மருத்துவர்களை, ஊழல் மருத்துவர்களை எதிர்த்து ஒரு சுவரொட்டி கூட ஒட்டப்படாதது ஏன்?

கொலை செய்யப்பட்டவர்கள் பல சாதி மதங்களைச் சார்ந்தவர்கள். இருந்தும் முதலாளி வர்க்கத்துக்கெதிரான இந்தத் தொழிலாளிகளின் போராட்டத்தை, திசை திருப்பி, சாதிப் பிரச்சினை என்று அரசியலாக்கினார் கருணாநிதி.

”மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கிருஷ்ணசாமி கோரியவுடன், பிற்படுத்தப்பட்டவர்கள் கொதித்தெழுவார்கள் என்று அதையும் சாதி அரசியலாக்கினார் கருணாநிதி.

manjolai-3ஆனால் இறந்தவர்களின் உடல்களை அடாவடியாகக் கொண்டு சென்ற காவல்துறை, அந்தந்த உடலை அவரவர்க்கு உரிய சாதிச் சுடுகாட்டில்தான் அடக்கம் செய்தது. சமத்துவபுரம் கண்ட செம்மலின் அரசே முன் நின்று செய்த இந்த தீண்டாமைக் கொடுமை அரசியலாக்கப் படாதது ஏன்?

றந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசு நிராகரித்தது. இறந்தவர்களை ஓரிடத்தில் புதைத்து எரித்து நினைவுச் சின்னம் வைப்பதைக் கூடத் தடுப்பதற்கு அரசுக்கு ஏது அதிகாரம்? ராஜாஜிக்கும், பக்தவச்சலத்துக்கும் நகரின் மத்தியில் ஏக்கர் கணக்கில் நிலம் வளைத்து மணிமண்டபம் கட்டும் அரசு, தொழிலாளிகளுக்காக உயர்நீத்தவர்களை அநாதைப் பிணங்களாக்குகிறதே, இந்தக் கொடுமை கூட அரசியலாக்கப்படாதது ஏன்?

திருநெல்வேலிப் படுகொலையை விசாரிக்கும் ஒரு நபர் கமிசனின் ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி மோகன், தான் யாரென்பதை வாக்குமூலமாகவே தந்திருக்கிறார்:

”தமிழகத்தில் தன்னிகரற்ற தானைத் தலைவரே… இங்கிருக்கும் மூன்று நீதியரசர்களின் சார்பிலும் சொல்கிறேன்; நாங்கள் உயர்நீதி மன்றங்களை அலங்கரித்தோமென்றால் அது கலைஞரால்தான். அவர் இல்லையேல் நாங்கள் நீதிபதிகளாகவே ஆகியிருக்க மாட்டோம். இதை நான் எனது ஒப்புதல் வாக்குமூலமாகவே கூறுகிறேன்” (கலைஞரின் பிறந்தநாள் விழாவில் – துக்ளக் 16.6.99)

கமிசன் தீர்ப்பு எப்படி இருக்குமென்பதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ஒரு வார்த்தை அதிகம் பேசினால் ”இவரிடம் எனக்கு நீதி கிடைக்காது”என்று கூறி ‘அரசியலாக்குகிறார்’ ஜெயலலிதா.

இந்த நீதிபதியின் நியமனத்தை, இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேள்விக் குள்ளாக்காதது ஏன்?

னைத்திந்திய அளவில் தோட்டத் தொழிலாளர்களின் கொத்தடிமை நிலை பற்றியும், தொழிலாளர் நலச் சட்டங்கள் அமல்படுத்தப்படாதது பற்றியும் ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட சங்கங்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளன. தமிழகத்தின் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைத்தனம் இல்லையென்று சாதிக்கிறார் கருணாநிதி.

manjolai-7எடுத்துச் சொல்லலாமே, எத்தனை தலைமுறைகளாக தோட்டத் தொழிலாளிகள் மலைகளில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை; இருபதாண்டு பணி செய்தும் தற்காலிகக் கூலியாக இருக்கும் கொடுமையை; உறைய வைக்கும் குளிரில், அவர்கள் போர்த்தக் கம்பளியின்றித் தேயிலை பறிக்கும் துயரை; தகரக் கொட்டகையும் மண் தரையும் தான் அவர்களின் குடியிருப்பு என்பதை; வேலை நேரத்தில் மாதவிடாய்த் தொல்லைக்காக ஒதுங்க நேர்ந்தால் ஒதுங்கியது அதற்காகத்தான் என்று மேஸ்திரிக்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்ற அக்கிரமத்தை!

தொழிலாளிகளை நாயினும் கீழாக நடத்தும் இந்தச் செய்திகள் தமிழகத் தொழிலாளிகளை எழுச்சி கொள்ள வைக்காதா? இவையெதுவும் அரசியலாக்கப் படாதது ஏன்?

மாஞ்சோலையின் 8500 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை அரசாங்கம் ஏக்கருக்கு ஆண்டுக்கு 10 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டிருப்பதையும் ஆண்டுக்கு 350 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் மாஞ்சோலைத் தோட்டம் தொழிலாளிகளுக்குக் கொடுக்கும் கூலியும், போனசும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்தான் என்பதையும், அரசியலாக்க முடியாதா?

குத்தகைக்கு விடப்பட்ட தோட்டங்களை அரசு எடுத்துக் கொண்டால் தமிழக அரசுக்கு ஆண்டுக்குப் பல நூறுகோடி வருவாய் கிடைக்கும் என்பதையும், அதைக் கோரியதற்குத்தான் துப்பாக்கிச் சூடு என்பதையும் அரசியலாக்க முடியாதா?

ராஜீவின் சிதைந்த உடலைச் சுவரொட்டியாக்கிப் பிரச்சாரம் செய்து வென்றார்களே, ரத்தம் சொட்டும் இந்த 17 உடல்களை சுவரொட்டியாக்கியிருக்க முடியாதா?

manjolai-1சிறையில் இருக்கும் தன் கணவனை விடுவிக்கக் கோரி மனுக் கொடுக்க ஊர்வலத்தில் வந்த மனைவியையும், குழந்தையையும் ஒரு சேரக் கொன்றிருக்கிறார்களே, அந்த ஒரு சம்பவத்தை மட்டுமே அரசியலாக்கியிருக்கக் கூடாதா?

மது தேர்தல் அரசியலின் உடனடி நலனுக்காகக் கூட இந்த உடல்களைத் தீண்டுவதற்கு ஓட்டுக் கட்சிகள் தயாரில்லை. கூட்டணி மோதல்கள், கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டுத் தகராறுகள் என இவர்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இந்த விசயத்தில் மட்டும் ஒற்றுமை காட்டுகிறார்கள். மற்ற அற்ப விசயங்களில் ஒருவரையொருவர் அநாகரிகமாகத் தாக்கிக் கொண்டாலும் இதில் நாகரிகமாக மவுனம் சாதிக்கிறார்கள்.

ஏனென்றால் இவற்றை அரசியலாக்கினால் அவர்களே அரசியலில் நீடிக்க முடியாது. எழுப்புகின்ற பிரச்சினை ஒவ்வொன்றும் இந்த அமைப்புமுறையை கேள்விக்குள்ளாக்குவதை நோக்கித் தள்ளும்.

போலீசையும் நீதித்துறையையும் தங்கள் போராட்டத்தின் தாக்குதல் இலக்காக வைத்தால் ஆட்சியில் அமர்வது என்ற தம் இலக்கையே அவர்கள் மறக்க நேரும். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ள இவர்கள், – விசேடமாக மார்க்சிஸ்டுகள் – பன்னாட்டு நிறுவனங்களின் குத்தகையை ரத்து செய்வதைப் பற்றியோ அரசுடைமை ஆக்குவதைப் பற்றியோ கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாது.

கொல்லப்பட்ட தொழிலாளிகளின் நினைவைக் கிளறும் வகையிலான பிரச்சாரங்களோ, ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோ தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் பெரும் உணர்ச்சி அலையை எழுப்பும். குறிப்பாக பல இலட்சம் தொழிலாளர்களைக் கொண்ட தேயிலைத் தோட்டத் தொழிலை கையில் வைத்திருக்கும் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இது எதிர்க் கட்சிகளின் நோக்கத்துக்கே எதிரானது.

ஏன், ஏன் என்ற இத்தகைய கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு தம் சொந்த அனுபவத்திலுருந்து விடை காண்பதன் வாயிலாகத்தான் தொழிலாளிவர்க்கம் அரசியல் உணர்வைப் பெறும். அரசியல் உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கத்துக் கெதிராக மருத்துவர் சங்கச் செயலாளரைப் போன்ற பங்களா நாய்கள் குரைத்திருக்க முடியாது.

மூன்று புறமும் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டதால் திருநெல்வேலி படுகொலை ஜாலியன் வாலாபாகிற்கு ஒப்பிடப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை நசுக்கியொழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டே குரூரமாக நடத்தப் பட்டதுதான் ஜாலியன் வாலாபாக் படுகொலை; திருநெல்வேலிப் படுகொலையின் நோக்கமோ தொழிலாளி வர்க்க எதிர்ப்பை நசுக்குவது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு, புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். தொழிலாளி வர்க்கத்தால் அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் பூமிக்கடியில் காத்திருக்கின்றன.

– மருதையன்
_____________________________________________
புதிய கலாச்சாரம் – செப்டம்பர், 1999
_____________________________________________

 1. //பெண்களை பலாத்காரம் செய்வதை தம் உரிமையாகக் கருதும் போலீசாரையெல்லாம் சுட்டுத் தள்ளத் தயாரா” என்று சுவரொட்டி போட்டு தாய்க்குலத்தின் வாக்குகளை அள்ளியிருக்கலாமே! ஏன் செய்ய வில்லை?//

  அட போங்க பாஸ் அரசியல் செய்யத்தெரியாத ஆளாயிருக்கீங்க… போஸ்டர் அடிச்சி அரசியல் பண்ண எப்படி ஓட்டு விழும்..

 2. இன்று மாஞ்சோலை தொழிலாளிகளை நினைவை ஜாதிய விழாவாக ஆக்கப்படியிருக்கிறதே அதை ஏன் வினவு கண்டிக்கவில்லை!

  குறிப்பிட்ட சாதிக்காரர்கள்தான் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டதுப் போல் எழுதப்படுகிறதே அதை ஏன் வினவு கண்டிக்கவில்லை!

  ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?

  • நெல்லையில் தோட்ட தொழிலாளர்களை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய போலிசு கூட்டத்தின் தலைவர் மகேந்திரன் ஐபிஎஸ், முத்துராமலிங்கத்திற்கு நடத்தும் விழாயில் கம்பை சுழட்ட வில்லையே? இரண்டும் ஒரே கருணாநிதி ஆட்சியில்தான் நடந்தது. ஏன்? கம்பு சுழட்டபட்டத்து தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக மட்டுமே, அந்த லத்தி கம்பு கள்ளர், மறவர், சேர்வை சாதி ஓநாய்களுக்கு எதிராக சுழட்ட வில்லையே? ஏன்?

   1999இல் அந்த தொழிலாளர்களை நெல்லைக்கு அழைத்து வந்த காங்கிரசு புரோக்கர் எம்.அருணாசலம், ஊரை ஏமாற்றி திரியும் இந்த கட்டுரை அம்பலபடுத்தி இருப்பது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையே? ஏன்?

   இதுக்கு வருத்தபடும் நீர், மக்கள் விடுதலைக்கு போராடிய மருது பாண்டியர் விழா, மக்கள் விழாவாக இல்லாமல், கிட்னி திருடன் சேதுராமன், கிரிமினல் வேலம்மாள் முத்துராமலிங்கம் போன்ற ஓநாய்களால் சாதி விழாவாக கொண்டாடபடுவது ஏன்? இதில் தொண்டமானோடு சேர்ந்து காட்டி கொடுத்த கள்ளர் சாதி இன்னாள் தொண்டமான் வாண்டையார் குருப் ஆட்டம் போடுவது ஏன்? எப்படி ஏன்? ஏன்? ஏன்? என உங்களின் சாதி வெறிக்கு எதிராக கேட்டால்…

 3. அட இது எங்க ஊரு மேட்டர்…

  மஞ்சோலை விவகாரத்தை ஜான் பாண்டியன் என்ற தேச பற்றுமிக்க தியாகி ஊரு முழுக்க போஸ்டர் ஓட்டி சாதி அரசியலை நடத்தினால் _______ வாலாட்டும்…

 4. மிஸ்டர் தியாகு, அனைத்து மக்களும் கலந்து கொண்ட மாஞ்சோலை போராட்டத்தை கருணாநிதி ஜாதி கலவரமாக குறுக்கினார், இறந்தவர்களை ஒரோ இடத்தில் புதைக்க வேண்டும் என்று கோரிய போது, அதனை ஒத்துக் கொள்ளாமல், சாதி ரீதியாக புதைத்தார்கள் என்று இந்த கட்டுரையில் சொல்லப்பட்டும், அதனை கண்டு கொள்ளவில்லையே அது ஏன் ?
  ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க