பத்ரியின் ஓட்ஸ் கஞ்சி ஒரு நாள் செலவு ரூ 1320 !

25

திவுலகத்தில் டெண்டூல்கரை போல இன்று வரை சளைக்காமல் நின்று அடித்தாடும் மூத்த பதிவரான பத்ரி நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் அனைத்துக்கும், குறிப்பாக பொருளாதார பிரச்சினைகளுக்கு முடிந்த வரை தனது கருத்தை சொல்லி விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வரிசையில் வறுமைக் கோடு பற்றிய தனது சிந்தனைகளை சென்ற வாரம் வெளியிட்டிருந்தார்.

இந்தியாவில் வறுமை குறைந்து விட்டது என்று திட்ட கமிஷன் சொல்கிறது, அதற்கு அளவீடாக நகர்ப் புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 33.33-ம் (மாத வருமானம் ரூ 1000) கிராமப் புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 28-ம் (மாத வருமானம் ரூ 816) நுகர்பவர் வறியவர் இல்லை என்று வரையறுத்துள்ளது. இதன்படி நகர்ப்புறங்களில் 13.7 சதவீதம் மக்களும் கிராமப்புறங்களில் 25.7 சதவீதம் மக்களும் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். 2009-10ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வறியவர்களின் எண்ணிக்கை ஊரக, நகர்ப் புற பகுதிகளில் முறையே 8 சதவீத புள்ளிகளும் 7 சதவீத புள்ளிகளும் குறைந்திருக்கிறது. இதே கணக்கீட்டில் பார்த்தால் 2014-15 கணக்கீட்டில் வறுமையே ஒழிக்கப்பட்டு விடும்.

இதை ‘போலி முற்போக்காளர்களான’ இடது சாரிகள் விமர்சிக்கிறார்கள். என்னதான் பத்ரிக்கு ஒப்புதல் இல்லாத காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பொருளாதார விஷயங்களில் ‘வலது சாரி’யான, சில சமயங்களில் ‘லிபர்டேரியனா’ன அவரால் திட்ட கமிஷனின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மீது வைக்கப்படும் ‘அவதூறு’களை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த ‘ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ரூ 30 செலவு’ என்ற சமாச்சாரத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார். நேர்மையான அணுகு முறையை பின்பற்றி, தன்னிலிருந்து ஆய்வை தொடங்குகிறார். தனது வாழ்க்கை முறை பற்றிய சுய விமர்சனத்தோடு, தானும், மனைவியும், மகளும் பின்பற்றும் உணவு பழக்கத்தை விளக்குகிறார். அந்த அடிப்படையில் உணவு சாப்பிட்டால் ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு ரூ 50-தான் செலவாகிறது என்ற முடிவுக்கு வருகிறார்.

பத்ரிதமிழின் முன்னணி பதிப்பகமான கிழக்கு பதிப்பகத்தின் முதலாளி என்பதால் பத்ரியை நாம் ஒரு தொழிலதிபர் என்று அழைக்கலாம். இதனால் அவரது முதலீடும், இலாபமும் கோடிகளில் இருக்கும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். எனினும் வருமானத்தில் கோடிகளை குவித்தாலும் பத்ரி என்ன சாப்பிடுகிறார் என்று பார்த்தால் அனைவரும் அதிர்ச்சியடைவார்கள். காலையில் சிறு தானியக் கஞ்சி, மதியம் சோறு அல்லது சப்பாத்தி, இரவு ஓட்சு கஞ்சி – இவைதான் பத்ரியின் ஒரு நாளைய உணவு. அவர் நினைத்தால் ஐந்து நட்சத்திர விடுதிகள், இல்லையென்றால் அஞ்சப்பர், சரவண பவன் போன்ற உயர்தர உணவகங்களிலேயே வயிற்றை நிரப்ப முடியும். ஆனால் உடல் நலம் கருதியும், இந்தியாவின் வறுமைக் கோட்டை அழிப்பதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் ஓட்ஸ் கஞ்சி குடித்தே காலம் தள்ளுகிறார். தனக்கே இத்தனை மலிவாக உணவு கிடைக்கும் போது சக இந்தியர்களும் அப்படி சாப்பிட்டு சிக்கனமாக வாழ்ந்தால் இந்தியாவில் ஏழைகள் என்று யாரும் இருக்க வேண்டிய தேவை இல்லையே என்று அவர் கண்டுபிடிக்கிறார்.

ஆனாலும், அத்தோடு நின்று விட அவருக்கு மனதில்லை. நம்மைப் போன்ற அசைவ சாப்பாட்டு ராவணன்களுக்காக கூடுதலாக முட்டை, பால், பழங்கள், இறைச்சிக்கும் இடம் கொடுக்க விரும்புகிறார். சமையல் செலவையும் சேர்க்கிறார். அதை எல்லாம் சேர்த்தால் ஒரு நாளைக்கு கூடுதலாக ரூ 70 வரை செலவாகலாம்.

இதன் மூலம் பத்ரி வந்தடையும் முடிவு : சென்னை மாநகரில் வாழும் ஒரு குழந்தை, பெற்றோர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ஆகும் உணவு செலவு அதிகபட்சம் ரூ 120 குறைந்த பட்சம் ரூ 50. ரேஷன் கடையில் ஓட்ஸ் கிடைக்கவில்லை என்றாலும் தரமான பிராண்டட் ஓட்ஸ் வாங்கிக் குடித்தாலும் ரூ. 50-ஐ தாண்டாது என்பது பத்ரியின் கள ஆய்வு மட்டுமல்ல, சொந்த அனுபவமும் கூட.

“அரசு தரும் விலை மலிவான அரிசி, கோதுமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஒரு நாளைக்கு ரூ. 30-க்குள்ளேயே ஒருவருடைய உணவுத் தேவைகள் பூர்த்தி ஆகிவிடும் என்று சொல்லலாம். அதற்கு மேலும் ஒருவர் செலவு செய்யலாம்; பணம் இருந்தால். ஆனால் இதற்குள்ளாகவே அடிப்படைப் பசியை எளிதில் போக்கிவிடலாம். போஷாக்கான உணவும் கிடைத்துவிடும்.”

பத்ரியே இவ்வளவு ஆய்வு செய்து இந்தியாவில் யாரும் பட்டினி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டுபிடித்ததை கொஞ்சம் நாமும் ஆய்வு செய்து பார்ப்போம்.

சாலையோரம் வசிக்கும் பிச்சைக்காரர்களைத் தவிர வேறு எந்த ஒரு குடும்பத்திலும் உணவுக்கான செலவு மட்டும் இடம் வகிப்பதில்லை. வீட்டு வாடகை (அல்லது வீட்டுக் கடன் தவணை), மின் கட்டணம், தண்ணீர் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவம், வேலைக்குப் போவதற்கான போக்குவரத்து செலவு இவற்றுக்கு ஒதுக்க வேண்டிய வரிசையில்தான் உணவுச் செலவும் வருகிறது.

அந்த கணக்கை பத்ரியின் பட்ஜெட்டோடு சேர்த்து போட்டு பார்க்கலாம். பத்ரி வசிப்பது சென்னையின் மையப் பகுதியில் உள்ள குடியிருப்பு, சுமார் 3,000 சதுர அடி பரப்பளவு என்று வைத்துக் கொண்டால், அவரது வீட்டுக்கு மாத வாடகை (அல்லது சொந்த வீடென்றால் வாடகைக்கு இணையான செலவு) ரூ 30,000.

பத்ரியின் குழந்தைக்கு கல்விக் கட்டணம், யூனிஃபார்ம், போக்குவரத்துச் செலவு, மற்ற சிறப்பு பயிற்சிகள், புத்தகங்கள் எல்லாம் மாதத்துக்கு குறைந்த பட்சம் ரூ 10,000 வரை ஆகலாம். பத்ரியின் குழந்தை பிராண்டட் பள்ளியில் படிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இதே போல பத்ரியின் மனைவியின் உணவு தவிர மேக்கப் உள்ளிட்ட இதர செலவுகளை ரூ 5,000 என்று வைத்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ் கஞ்சி தினமும் அருந்த வேண்டுமென்றால் பத்ரி தனது உடலை வேர்வை சிந்தும் எந்த உடலுழைப்புக்கும் ஒதுக்க முடியாது. அதனால் அவர் பேருந்து, ரயில், நடை மூலம் அலுவலகம் செல்ல முடியாது என்பதை வாசகர்கள் கருணை கூர்ந்து பரிசீலிக்க வேண்டும். அதனால் தினமும் அலுவலகத்துக்குப் போய் வருவதற்கான போக்குவரத்து செலவு, அவரது சொந்த காரிலோ, அதற்கு இணையான கால் டாக்சியிலோ வைத்துக் கொண்டால் மாதத்துக்கு ரூ 15,000 ஆகலாம்.

இதே போல ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் இதர வசதிகள் இருந்தால்தான் வீட்டில் வியர்வை சிந்தாமல் இருக்க முடியும். பத்ரி சூரியத் தகடுகள் மூலம் மின்சாரத்தை வீட்டில் உற்பத்தி செய்கிறார் என்றாலும் அதன் மூலதனச் செலவு அல்லது மின் கட்டணம் மாதத்துக்கு ரூ 5,000 வரை ஆகலாம். குடி தண்ணீருக்கு மாதத்துக்கு ரூ 4,000. மற்ற தண்ணீருக்கு ரூ 1,000.

இது தவிர அவசர மருத்துவ செலவு அல்லது வழக்கமான பரிசோதனைகளுக்கு மாதம் ரூ 10,000 என்று வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் உடல் சுகவீனம் வந்தால் பத்ரி அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போக மாட்டார், அப்பல்லோ, எம்ஆர்ஐ ஸ்கேன் என்றுதான் போவார் என்று நாங்கள் ஊகிக்கிறோம்.

மூன்று பேரின் தொலைபேசிச் செலவுகள் ரூ 5,000, தொலைக்காட்சி டிஷ் இணைப்பு, இணையம் இவற்றுக்கான செலவு ரூ 3,000.

இவை தவிர, கல்யாணங்கள், மொய், பரிசுப் பொருட்கள், பயணங்கள், கோயில் குளங்கள், திரைப்படம் போன்ற செலவுகளுக்கு மாதம் குறைந்தது ரூ 20,000 ஒதுக்கலாம்.

இவற்றில் ஏதாவது விட்டுப் போயிருந்தால் அல்லது மிகைப்படுத்தப்பட்டிருந்தால் பத்ரியே சரியான கணக்கு கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு மேல் வெளியில் போய் சாப்பிடுவது, உள் நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள், உடைகள், நகைகள் வாங்குவது என்று மற்ற செலவுகளையும் சேர்த்துக் கொள்ளட்டும்

இவை எல்லாவற்றையும் கூட்டினால் 3 பேர் கொண்ட பத்ரியின் குடும்பத்துக்கு உணவு செலவை சேர்க்காமல் மாதச் செலவு குறைந்த பட்சம் ரூ 1,08,000. அதாவது ஒரு நாளைக்கு ரூ 3,600 மூன்று பேருக்கு வருகிறது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ 1,200. இந்த ரூ 1,200 செலவுகளை கவனித்த பிறகுதான் சமச்சீரான, ஆரோக்கியமான உணவை வாங்கி உண்ண முடியும் என்பதை கவனிக்க வேண்டும். இந்த ரூ 1,200 இல்லாத நிலையில் உணவில் கடுமையான வெட்டுகளை நடத்தி, சத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் வயிற்றை நிரப்பவோ, அல்லது அரை வயிற்றுக்கு சாப்பிடுவதையோ செய்ய வேண்டியிருக்கும்.

அதன் படி அவரது கணக்கில் வரும் ரூ 120 உணவுச் செலவையும் எடுத்துக் கொண்டால் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நுகர்வாக ரூ 1,320 தேவைப்படுகிறது.

அதாவது, பத்ரியின் எளிமையான உணவு பழக்கத்துக்கு (ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ 50 மட்டும் செலவு) பின்பு பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறை இருக்கிறது. அதே போல, ஒரு எளிய, உழைக்கும் குடும்பத்தின் அடிப்படை உணவு தேவைகளுக்குக் கூட குறைந்த பட்ச வாழ்வாதாரங்கள் தேவைப்படுகின்றன.

பத்ரி போன்று இயற்கையிலேயே குண்டாக இல்லாமல், டயட் இருக்க வேண்டிய தேவை இல்லாமல், உழைக்கும் கட்டாயத்தில் இருப்பவரின் குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்திலும் அம்மா, அப்பா, ஒரு குழந்தை என்று மூன்றே பேர் என்றே வைத்துக் கொள்வோம். அவர்கள் பத்ரியின் வீட்டிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் ஒரு குடிசைப் பகுதியில் வசிப்பதாக வைத்துக் கொள்வோம்.

அவர்களது பட்ஜெட் எப்படி இருக்கும்?

அடிப்படை தேவைகள்

வீட்டு வாடகை – ரூ 1,000
மின்சாரம் – ரூ 300
செல்போன் பில் – ரூ 200
மருத்துவம் – ரூ 200
கேபிள் டிவி – ரூ 100
கோவில் – ரூ 40
பேஸ்ட், சோப் முதலியன – ரூ 250
பள்ளி – ரூ 500
முடி வெட்டு – ரூ 100
போக்குவரத்து – ரூ 1,000

மொத்தம் – ரூ 3,690

உணவு வகைகள்

தண்ணீர் – ரூ 50
கேஸ், மண்ணெண்ணெய் – ரூ 450
பால் – ரூ 300
காய்கறி – ரூ 1,000
மளிகை – ரூ 1,800 (இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டு இதர மளிகை)
கடை தேநீர் மற்றும் நொறுக்குத் தீனி – ரூ 300
இறைச்சி – ரூ 300 (மாதத்துக்கு ஒரு முறை மட்டும்)

மொத்தம் – ரூ 4,200

அதாவது ஒரு நாளைக்கு 3 பேருக்கு ரூ 140, ஒருவருக்கு ரூ 46.67 உணவுக்கு செலவிட்டால்தான் மூன்று வேளை ஓரளவு சாப்பிட முடியும். அதற்கு முன்பு அடிப்படை தேவைகளுக்காக ரூ 3,690 செலவிட்டிருக்க வேண்டும். அதாவது மூன்று பேருக்கு உணவல்லாத செலவு ஒரு நாளைக்கு ரூ 123, ஒருவருக்கு ரூ 41. இந்த ரூ 41 இல்லை என்றால் அது நேரடியாக உணவு நுகர்வை பாதிக்கும்.

இந்த கணக்கின்படி பார்த்தால் மிகவும் அடித்தட்டில் உள்ள ஒரு குடும்பத்துக்குக் கூட மாத வருமானம் ரூ 7,890 இருந்தால்தான் வறுமையை விரட்டி அடிக்க முடியும். அதாவது ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ 87.67 நுகர்வு குறைந்த பட்சம் இருந்தால்தான் ஒருவரை ஏழை இல்லை என்று சொல்ல முடியும். இதற்கு மேல் பணம் இருந்தால்தான், புத்தகங்கள் வாங்குவது, உடைகள் வாங்குவது, திரைப்படங்களுக்கு போவது, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா போவது, கார் வாங்குவது என்று ஆடம்பரமாக வாழ்ந்து கொள்ளலாம்.

உழைக்கும் மக்கள்கடின உழைப்பில் ஒரு நாளைக்கு ரூ 300-லிருந்து ரூ 500 வரை ஈட்டும் தொழிலாளிகள் தமது உடல்வலியை போக்க டாஸ்மாக்கிற்கு ரூ 100 மொய் எழுதி விட்டு,  இரு வேளை உணவுக்காக வெளியில் ரூ 100 செலவழித்து விட்டு மீதி 200 இல்லது 300-ஐ வீட்டில் கொடுத்தால் பெரிய விசயம். இதன்படி பார்த்தாலும் மேலே உள்ள குடும்ப பட்ஜெட் கணக்கு சரியாக வருகிறது. ஒருவேளை ஏசி ரூமில் இருந்து பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை பார்க்கும் வேலையில் இருந்தால் உடல் வலியும் வராது, டாஸ்மாக்கிற்கு மொய் எழுத வேண்டிய தேவையும் இருக்காது.

இத்தகைய உழைக்கும் மக்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் அரிசி, மண்ணெண்ணெய் கிடைக்க வேண்டும்; இலவச பள்ளிக் கல்வி, அரசு மருத்துவமனை இவை இயங்க வேண்டும். பத்ரியும், மான்டேக் சிங் அலுவாலியாவும் முன் வைக்கும் வலதுசாரி அல்லது லிபர்டேரியன் பொருளாதார அமைப்பில் இவை அனுமதிக்கப்படப் போவதில்லை. திட்ட கமிஷனின் திட்டப்படி ரூ 32-க்கு அதிகமாக ஒருவருக்கு நுகர்வு கிடைத்தால் அவர் ஏழை இல்லை, அவருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் இல்லை.

உண்மையில் 2009-10ல் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகு ஒரு நாளைக்கு 2,200 கலோரி வழங்கக் கூடிய உணவைப் பெற முடியாத மக்கள் கிராமங்களில் 75.5 சதவீதம், 2,100 கலோரி உணவை நுகர முடியாதவர்கள் நகரங்களில் 73 சதவீதம் இருக்கிறார்கள். 2004-05ல் இது கிராமப் புறங்களில் 69.5 சதவீதமாகவும், நகர்ப் புறங்களில் 64.5 சதவீதமாகவும் இருந்தது. இதன் மூலம் வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருக்கிறது என்று தெரிகிறது.

திட்ட கமிஷன் நிர்ணயிக்கும் வறுமைக் கோடு அளவானது, 1973-74ம் ஆண்டின் விலைவாசிகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் விலைக் குறியீட்டு எண் உயர்வின் (பணவீக்கத்தின்) அடிப்படையில் அதிகரித்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் பண வீக்கத்தின் அடிப்படையில் மட்டும் கணக்கிடுவது வாழ்வாதார தேவைகளை முழுமையாக பிரதிபலிப்பதில்லை என்பதுதான் நடைமுறை. உதாரணமாக, 1973-74ல் 1,000 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கிய ஒரு அரசு ஊழியருக்கு பண வீக்கத்தின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கியிருந்தால் அவரது சம்பளம் ரூ 18,000 ஆக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நியமிக்கப்படும் சம்பள கமிஷன்களின் படி அத்தகைய அரசு ஊழியரின் ஊதியம் இப்போது ரூ 70,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்ட கமிஷனின் அலுவாலியாவும், கிழக்கு பதிப்பகத்தின் பத்ரியும், சுவாமிநாதன் அங்கேலேஷ்வர் அய்யர் போன்ற பொருளாதார நிபுணர்களும் தமது சொத்துக்களையும் வருமானங்களையும் விட்டுக் கொடுத்து விட்டு, மாதம் ரூ 3,000 வருமானத்தில் (மூன்று பேர் குடும்பத்திற்கு) ஒரு பெருநகரத்தில் வாழ்ந்து காண்பித்தால் அவர்கள் பேசுவதில் இருக்கும் அபத்தத்தை புரிந்து கொள்ளலாம்.

தொழிலதிபர் பத்ரியின் எளிமையான வாழ்க்கை மற்றும் ஓட்ஸ் கஞ்சியின் பின்னே இப்படி ஒரு உண்மை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

மேலும் படிக்க