பீகார் தலித் மக்களுக்கு கருப்பு சுதந்திர தினம் !

0

பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்திலுள்ள பட்டி என்ற கிராமத்தில் இந்த ஆண்டு ‘சுதந்திர’ தினத்தன்று குரு ரவிதாஸ் கோவிலின் முன்பாக மூவர்ணக் கொடி ஏற்றுவது தொடர்பான சச்சரவில் தாழ்த்தப்பட்ட சமார் சாதியினர் மீது ஆதிக்க சாதி இராஜபுத்திர சாதி வெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் விலாஸ் ராம் என்ற தலித் கொல்லப்பட்டார். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 54 பேர் படுகாயமடைந்து பாட்னா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது விளையாடிக் கொண்டிருந்த பல குழந்தைகள் ஆலயத்தின் கூரைப் பகுதியில் இருந்து கீழே தூக்கி வீசி எறியப்பட்டுள்ளனர். இரும்புக்கம்பி, தடிகள், பெட்ரோல் குண்டுகளுடன் நடந்த இத்தாக்குதலில் சமார் சாதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கருக்கலைந்து போயுள்ளது.

ரவிதாஸ் கோயில்
ரவிதாஸ் ஆலயம்

ஆதிக்க இராஜபுத்திர சாதியினர் சுமார் 500 பேர் திரண்டு வந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே சமார் சாதியினர் வழிபடும் குரு ரவிதாசின் கோவிலானது தங்களது சாதியை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் நிஷாந்த் சிங் பெயரில் அமைந்த பள்ளிக்கூடத்தை மறைக்கும் விதமாக அமைந்திருப்பதாக அவர்கள் பிரச்சினையை கிளப்பி வந்தனர். கோவிலுக்கு முன்புறம் உள்ள ரவிதாசின் சிலையை அகற்ற வேண்டும் என்றும், அதற்கு பதிலாக நிஷாந்த் சிங்கின் சிலையை அமைக்க வேண்டும் என்றும் கோரி வந்தனர். சுற்றியிருக்கும் கிராமங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஆதிக்க சாதியினர் அனைவரும் கூடி கடந்த ஜூன் முதல் இந்த பிரச்சினையை கிளப்பி வருகின்றனர்.

1983-ல் அரசு வழங்கிய நிலத்தில் தான் ரவிதாசின் ஆலயம் கட்டப்பட்டது. ஆனால் அதனை தங்களுக்கு சொந்தமானது எனப் போலியாக கோப்புகளைக் காட்டி வாதிடும் இராஜபுத்திர சாதி வெறியர்கள் இந்த பிரச்சினையை கிளப்பவே அரசு தரப்பில் ‘சுதந்திர’ தின கொண்டாட்டம் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. ரவிதாசின் ஆலயத்தில் இருந்த தேசியக் கொடியை இறக்க வேண்டும் என இராஜ்புத்திர சாதியை சேர்ந்தவர்கள் கூறியபோது சமார் மக்கள் கொடியை இறக்கினர்.

குடிசை
எரிக்கப்பட்ட குடிசை

‘சுதந்திர’ தினத்தன்று ரவிதாஸ் ஆலயத்திற்கு அருகில் உள்ள நிலத்தில் கொடியேற்ற முயற்சித்த ஆதிக்க சாதி கும்பல் ஒன்றை தலித் மக்கள் விரட்டியிருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதிவெறிக் கும்பல் ஆலயத்தில் குழுமியிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தனது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரவிதாசின் சிலையை உடைத்ததுடன், ஆலயத்தின் கதவுகளை உடைத்துவிட்டு, கோவிலுக்கும் அருகில் உள்ள குடிசைக்கும் தீ வைத்துள்ளனர். அங்கிருந்த ஓட இயலாத பெண்கள், குழந்தைகள், முதியவர்களை ஆயுதங்களாலும் கற்களாலும் தாக்க துவங்கவே, தாக்குதலை சமாளிக்க வழியில்லாத அம்மக்கள் ஓடத் துவங்கினர். அப்போது நடந்த கொலைவெறித் தாக்குதலில் கல்லடி பட்டே 70 வயதான விலாஸ் ராம் இறந்தார். தப்ப முயன்ற 70 பேரில் 54 பேர் படுகாயமடைந்தனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக பிரபலமடைந்த பாபு ஜெகஜீவன்ராமின் மகளும், நாடாளுமன்ற சபாநாயகருமான மீரா குமாரின் நாடாளுமன்ற தொகுதியான சசாரமின் கீழ் வரும் இக்கிராமத்தில் வசிக்கும் சமார் என்ற தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் செருப்பு தைக்கும் தொழிலை செய்து வருபவர்கள்.

ராகுல்
தாக்குதலில் காயமடைந்த ராகுல் என்ற 15 வயது சிறுவன்.

இச்சாதி மக்களின் தெய்வமாக வழிபடப்படும் குரு ரவிதாஸ்  15-ம் நூற்றாண்டின் பக்தி இயக்க காலகட்டத்தை சேர்ந்தவர். இந்து மற்றும் சீக்கிய மதங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் குருவாக விளங்கிய அவர் வருணாசிரம தர்ம எதிர்ப்பாளராகவும், சாதித் தீண்டாமையின் மனித விரோதத்தன்மையை எதிர்ப்பவராகவும், பக்தி இயக்கத்தின் தலைசிறந்த கவிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கியவர். ஒருவனது சாதிப் பிறப்பே அவனை இறைவனிடம் சேர்த்து விடாது என்றும், தனது செயல்களால் (கர்மா) மட்டுமே இறைவனை அடைய முடியும் என்றும் மக்களிடம் துணிச்சலாக பிரச்சாரம் செய்தவர். பஞ்சாப், உபி, பீகார், நேபாளம், பாகிஸ்தான் என இவருக்கு பக்தர்கள் பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களாகவே இருப்பதில் வியப்பேதும் இல்லை.

சாதித் தீண்டாமைக்கெதிராகப் போராடிய, தாழ்த்தப்பட்ட மக்களின் குருவுடைய ஆலயம் ஊர்முகப்பில் இருப்பதை எந்த ஆதிக்க சாதியாலும் தாங்கிக் கொள்ள முடியாது தான். எனவே தாக்குதல் நடத்தும்போதும், ஆலயத்தை சூறையாடும்போதும் “நிஷாந்த் சிங் வாழ்க” என்றும், “ராஜ்புத் வர்க்கம் வாழ்க” என்றும் முழங்கியபடியே சமார்களையும், ஆலயத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் குருவோ,  கோவிலோ, அரசியலோ எதுவாக இருந்தாலும் ஆதிக்க சாதிவெறியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மீறினால் தலித் மக்களது வாழ்வையும், உடமையையும் அழிப்பதற்கும் தயங்குவதில்லை.

‘சுதந்திர’ தினத்திற்கு கொடியேற்றுவது கூட தலித் மக்களை ஒடுக்குவதற்கான நடைமுறையாக இருக்கும் போது சுதந்திர தினத்திற்கு என்ன பொருள்? நாட்டின் இறையாண்மையை விற்றுவரும் காங்கிரசு கும்பலும் சரி, தலித் மக்களை கொலை வெறியுடன் தாக்கும் சாதிவெறியர்களும் சரி, இந்தியாவிற்கு சுதந்திரமில்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். ஆளும் வர்க்கத்தையும், ஆதிக்க சாதி வெறியர்களையும் எதிர்த்து உழைக்கும் மக்கள் ஓரணியாக போராடாத வரை அவர்களுக்கு சுதந்திரமில்லை.

படங்கள் : நன்றி  தி இந்து

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க