” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட்சுமி

5

என்னை செதுக்கிய ஆசிரியர்கள் – 14

சிரியர்களை பற்றி நினைக்கும்போது, வினவில் வந்திருக்கும் சொர்ணவல்லி மிஸ், ரங்கா மாஸ்டர் போன்ற ஆசிரியர்களை பள்ளிப் படிப்பின்போது கடக்கவில்லையே என்ற ஏக்க பெருமூச்சுதான் வருகிறது.

நான் சேர்ந்த முதல் பள்ளி அ.க.த. துவக்கப்பள்ளி (அ.க. தங்கவேலு முதலியார் துவக்கப் பள்ளி). பிடித்த  வாத்தியார் என்றால்  முதலில் நினைவுக்கு வருவது கன்னியப்பன் “சத்துணவு வாத்தியார்” இண்டர்வெல் பெல் அடிப்பதற்கு முன்பே வந்து, சாப்பாட்டு அட்டெண்டன்ஸ் எடுத்து விடுவார். “புள்ளைங்களா, தட்டு எடுத்துட்டு வரலையினாலும், பரவாயில்லை. தட்டு நம்மகிட்ட இருக்கு, சாப்பிட வந்துடுங்க, இன்னைக்கி முள்ளங்கி சாம்பார்.” என்று சொல்லி விடுவார். அது மட்டுமல்லாமல், நாங்கள் சாப்பிடுவதற்கு முன் அவரும் சாப்பிட்டு பார்த்து, சோறு பரிமாறும் போது, சோற்று கூடையுடன் முதல் மாணவன் முதல் கடைசி மாணவன் வரை தொடர்ந்து வந்து பார்வையிடுவார். வேட்டி சட்டையுடன், எண்ணெய் வழிய வாரிய தலைமுடி, அட்டெனஸ்சும் கையுடன் இருக்கும் கன்னியப்பன் சார் தினமும் வகுப்பில் பேசியது இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.

இரண்டாம் வகுப்பில் கணக்கு டீச்சர் (பெயர் ஞாபகம் இல்லை), நானும், என் தோழி தனலட்சுமியும் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், கணக்கு நன்றாக போடுவோம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் அடிப்பாதத்தில் நிரந்தரமான புண் இருக்கும், மேசையின் கீழ் எங்களை அமர வைத்து பல்பம் கொடுத்து விடுவார். எப்படி சொரிய வேண்டும் என்று ஒருமுறை சொல்லிக் கொடுத்து விடுவார். அவரின் வகுப்பு முடியும் வரை நானும், என் தோழியும் மாறி, மாறி அவருக்கு சொரிந்து விடுவோம். போகும் போது பரிசாக… ஒரு சாக்பீஸ் கொடுத்து விட்டு போவார். கணக்கு சொல்லிக் கொடுத்தால், மற்ற பிள்ளைகள் கவனிப்பார்கள். எங்களை சொரிய வைத்து விடுவதால் கவனிக்கவில்லை. அதற்கு தனி அக்கறை எடுத்துக் கொள்ளவுமில்லை அவர்.

பட்டு நெசவுஎனக்கு கணக்கு கற்றுக் கொடுத்தது, வட்டிக்கடைத் தாத்தாதான். வீட்டின் சூழ்நிலைக் காரணமாக, பட்டுத்தறித் தொழில் செய்யும் பொருட்களை அடகு வைப்பது வழக்கம். புத்தி தெரிந்ததிலிருந்து என்னைத் தான் அனுப்புவார்கள். பள்ளியின் மதிய இடைவெளியின்போது அடுத்த தெருவில் இருக்கும் வட்டிக்கடை தாத்தாவிடம் பட்டு, ஜரிகை அடகு வைத்து பணம் பெற்று வருவேன். கடன் ரசீதீல் கையெழுத்துப் போட்டதை பெருமையாகப் பேசிய காலம் அது. அவர்தான், “எடையை சரியா பாரு, என்ன கலர் பட்டுனு பாரு, எடைக்கு ஏற்ற பைசா கணக்குப் போட்டு சொல்லு” என்று சொல்லுவார், தவறாகத்தான் சொல்லுவேன். பிறகு அவரே பலகையில் கணக்குப் போட்டு காண்பிப்பார். வட்டிக்கடைக்கு சென்று வந்தால், 10 பைசா முதல் 50 பைசா வரை வீட்டில் கமிஷன் கிடைக்கும். அதை செலவழிக்க கணக்கு தெரிய வேண்டுமே?

அதற்கு உதவியவர், பள்ளியின் அருகில் முறுக்கு சுட்டு விற்கும், பெரியம்மா, அப்பளம் 5 பைசா, முறுக்கு 10 பைசா, 50 பைசாவுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டு, செயல் முறை விளக்கங்களுடன், கூட்டல், கழித்தல் கற்றுக் கொடுத்தவர். இப்படியாக, நான்கு வகுப்புகள் கடந்தாயிற்று. ஒன்றும் புரியாது. தோழிகளுடன் சென்று வருவது மகிழ்ச்சியாக இருந்ததால், படிக்க செல்வது மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து, ஐந்தாம் வகுப்பு. எச். எம். டீச்சர்னா அ.க.த. துவக்கப் பள்ளியே பயப்படும். அவர்தான் ஐந்தாம் வகுப்பு டீச்சர் மற்றும் ஆங்கில டீச்சர். அவர் மீது இருந்த பயம் ஆங்கிலம் மீதும் தொற்றிக் கொண்டது. அதுவரையில் அ.க.த. பள்ளியாக இருந்தது. ஆகாத பள்ளியாக மாறியது.

அவரிடமிருந்து தப்பிக்க வழிகாட்டியது தெலுங்கு வகுப்பு, அப்போது எங்கள் பள்ளியில் தெலுங்கு இரண்டாம் மொழியாய் கற்பிக்கப்பட்டது. இதில், தெலுங்கு பேசுபவர்கள் சேருவார்கள். ஆனால் தெலுங்கே தெரியாத நானும் என்தோழியும் சேர்ந்தது, ஆங்கிலத்திடம் இருந்து தப்பிக்க. தெலுங்கு புரியாவிட்டாலும் தெலுங்கு வாத்தியார் பிடிக்கும் நிறைய பாடல்கள் சொல்லி தருவார். மாணவர்களுடன் சகஜமாக பழகுவார்.

ஆயுத பூஜையின் போது நாங்கள் அனைத்து தலைவர் போட்டோக்களுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து பூ சூடி விட்டோம். அதில் பெரியாரின் படமும் அடக்கம். இதை பார்த்த தெலுங்கு வாத்தியார், உடனே ஏறி,  ஈரத்துணியால் அதையெல்லாம் துடைத்துவிட்டு, எங்களுக்கு விளக்கினார். மாணவர்களிடையே, எழுந்த பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். “சாமியே இல்லைனு ஒருத்தர் சொன்னாரா? அப்ப எப்படி பாஸாக முடியும்?” என்ற கேள்விகளுக்கு, “நீதானே படிக்கப் போறே? நீ தானே எழுதப்போறே? சரியா எழுதினா மார்க் போட்டே ஆகணும். இதற்கு சாமியெல்லாம் ஒன்னும் தேவையில்லை” என்று எளிமையாக விளங்க வைத்தார்.

கடைசிவரை ஆங்கிலத்தில் கவனம் செல்லவேயில்லை. ஐந்தாம் வகுப்பு வரை ஏபிசிடி தெரியும் அவ்வளவுதான். ஆனால், கணக்கும், தமிழும் சேர்ந்து என்னை பக்கத்தில் இருக்கும், அ.க.த. உயர்நிலைப் பள்ளிக்கு தள்ளிவிட்டது.

6-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு முடிந்து ரேங்க் கார்டு கையில், ஆங்கிலத்தில் பெயில். ஆனால், இரண்டாம் ரேங்க். தமிழை மேலும் இலக்கணப் பிழை இல்லாமல் எழுத வைத்தது தமிழாசிரியை சந்திரலேகா அம்மாதான். எல்லா மாணவர்களுக்கும் இவரை ரொம்ப பிடிக்கும். .எல்லா மாணவர்களையும் எழுந்து நின்று கதை சொல்ல சொல்லுவார். “நல்லா படிச்சா டீச்சர் ஆகலாம்” என்று அடிக்கடி சொல்லுவார்.

கணக்கு எனக்கு நல்லா வரும். ஆனா, இராமனுஜம் சார் (ஐயர் சார்) என்றுதான்  அழைப்பார்கள். யாரிடமும் சகஜமாகப் பேச மாட்டார். நல்லா படிக்கறவங்களை மட்டும்தான் கவனிப்பார். படிக்காதவங்களை பிரம்பால் அடிப்பார். காதைப் பிடித்து திருகுவார். வட்டிக்கடை தாத்தா, வரவழைத்த கணக்கை பயந்து ஓட வைத்தார்.

இப்படியாக, எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை. ஆனால், சந்திரலேகா அம்மா மட்டும் தினமும் மாணவர்களை அனுப்புவார்கள், “ஜெயலட்சுமியை அவளது பெற்றோருடன் அழைத்து வாருங்கள்” என்று. அதை சென்று கேட்கும் நிலையிலும் நாங்கள் இல்லை. குடிகார தந்தையிடமிருந்து விலகி, தனியே அம்மாவுடன் இருந்தோம். காஞ்சிபுரம் என்பதால், காலாட்டி (பட்டு தறி நெய்து) சோறு தின்ன ஆயத்தமானோம்.

சரோஜா அக்கா, எனது தொழிற்கல்வி, வாழ்க்கை கல்வி ஆசிரியர். பட்டு சேலைகளை ஆண்களே பெரும்பான்மையாக நெய்வார்கள். பெண்கள் மேல் வேலைகளை கவனித்துக் கொள்வார்கள். ஆனால் சரோஜா அக்கா ஆண்களை விடவும் நேர்த்தியாக சேலை நெய்வதில் வல்லவர். வீட்டு வேலைகளையும் திறம்பட செய்வார். இந்த கைப்பக்குவத்தை எனக்கும் வரப்படுத்தினார். “பொம்பளைங்க, எல்லா வேலைகளையும் நல்லா செய்ய கத்துக்கணும், எதுக்கும், யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது.” என்று அடிக்கடி கூறுவார்.அதன்படியே நடந்தும் காட்டுவார். வீட்டு வேலைகளையும் முறையுடன் கற்றுத் தந்தார். வீட்டு வேலைகளையும், கைத்தொழிலும் கற்றுக் கொண்டதற்கு இவர்தான் முக்கிய காரணம்.அங்கும் நிரந்தரமாக இருக்க முடியாத சூழ்நிலை.

அங்கிருந்து, அம்மாவை பெற்ற பாட்டி வீட்டிற்கு பயணம். இரண்டு வருடங்களாக விடுபட்ட கல்வியை கற்க வேண்டிய சூழ்நிலை பாட்டியால் அமைந்தது. பல்லாவரத்தில் இருந்த சாஸ்தா டுடோரியலில் சேர்ந்து, பம்மலில் இருந்த ராதை மிஸ்ஸிடம் டியூசன் சென்றேன். பாஸ் ஆவதற்கு தேவையானவற்றை ராதே மிஸ் சிரத்தையுடன் சொல்லி தந்தார். ஏனென்றால், நான் கொஞ்சம் நல்லா படிக்கிறதாலே எல்லாருக்குமே என் மீது ஒரு பாசம். அவரின் முயற்சியால், அந்த வருடம் டுடோரியலில் தேர்வுக்கு சென்றவர்களில் நான் மட்டுமே கணிசமான மதிப்பெண்களுடன் தேர்ச்சிப்பெற்றேன்.

நர்சிங் பயிற்சிஅடுத்து, எ.என்.எம் நர்ஸிங் கோர்ஸ், தக்கர் பாபா வித்யாலயா. இங்கு எனக்கு அமைந்த ஆசிரியை சகுந்தலா மேடம். அவர்களும் படிப்பை முடித்து அப்போதுதான் சேர்ந்தார்கள். அவர்கள் கற்றுள்ளதை அன்றே எங்களுக்கு கற்றுக் கொடுத்து விட வேண்டும் என்று பொங்கும் ஆர்வத்துடன் சொல்லிக் கொடுப்பார். செய்முறை பயிற்சிக்கு பப்ளிக் ஹெல்த் சென்டர் மேற்கு மாம்பலம். செய்முறை பயிற்சிகளையும் தானே முன்வந்து செய்து காட்டி சொல்லிக் கொடுப்பார். தன்னையே நோயாளியாக பாவித்து வகுப்பெடுப்பார். ஊசி போட கற்றுக் கொடுக்க அவருக்கே  டி.டி. ஊசியை எங்களிடமே போட்டுக் கொண்டவர். ஒவ்வொரு பாடத்தையும் இரண்டு முறை நடத்தி, விவாதத்திற்கு உட்படுத்துவார். மற்றவர்களுடன் பழகுவது, நோயாளிகளை அணுகுவது போன்றவற்றை கற்றுத் தந்தவர். இந்த வகுப்பில் முதல் மாணவியாக தேற இவர்தான் காரணம். எங்களை விட்டுப் பிரியும் கடைசி நாளில்  தன் வீட்டிற்கு அனைவரையும் அழைத்து சென்று வைத்த விருந்து மறக்க முடியாதது. தற்போது எக்மோர்  அரசு கண் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

படிக்க ஊக்கமூட்டி, வெளியில் சென்றுவர தைரியமூட்டி அன்புடன் அறிவூட்டிய ஆயா (அந்தக் காலத்திலேயே திருமணத்திற்கு பிறகும் திண்ணைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்தவர்.) நான் வேலைக்கு சென்ற பிறகும், “ஏம்மா ஏதோ படிக்கனுமுனு சொல்றாங்களே, நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன்” என்று என்னை மீண்டும் துரத்தி, ஆங்கிலம், தமிழ் தட்டச்சு மற்றும் கரஸ்சில் பிபிஎ முடிக்கவும் துணை நின்று எனது வளர்ச்சியை மற்றவர்களிடம் கூறி பெருமைப்பட்ட பாட்டியை நினைக்க வேண்டிய தருணம் இது.

நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள். நான் எப்படியோ கரை சேர்ந்தேன். காரணம், ஒரு கைத்தொழிலும், அருகாமை மனிதர்களின் ஆதரவும்தான். இப்படியாக, பள்ளி கல்வியிலும், வாழ்க்கைக் கல்வியிலும் என்னை செதுக்கிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் தருணம் ஏற்படுத்திய வினவுக்கு நன்றி.

-லட்சுமி

5 மறுமொழிகள்

  1. உணர்வுப்பூர்வமான கட்டுரை. லட்சுமியைப் போன்ற பலரின் இடைநிற்றல் இன்றும் தொடர்கிறது என்பது வேதனை தரும் உண்மை.

  2. // இரண்டாம் வகுப்பில் கணக்கு டீச்சர் (பெயர் ஞாபகம் இல்லை), நானும், என் தோழி தனலட்சுமியும் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், கணக்கு நன்றாக போடுவோம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் அடிப்பாதத்தில் நிரந்தரமான புண் இருக்கும், மேசையின் கீழ் எங்களை அமர வைத்து பல்பம் கொடுத்து விடுவார். எப்படி சொரிய வேண்டும் என்று ஒருமுறை சொல்லிக் கொடுத்து விடுவார். அவரின் வகுப்பு முடியும் வரை நானும், என் தோழியும் மாறி, மாறி அவருக்கு சொரிந்து விடுவோம். போகும் போது பரிசாக… ஒரு சாக்பீஸ் கொடுத்து விட்டு போவார். கணக்கு சொல்லிக் கொடுத்தால், மற்ற பிள்ளைகள் கவனிப்பார்கள். எங்களை சொரிய வைத்து விடுவதால் கவனிக்கவில்லை. அதற்கு தனி அக்கறை எடுத்துக் கொள்ளவுமில்லை அவர். //

    படிக்கும் போது சிரிப்பும், வருத்தமும் சேர்ந்தே வருகிறது.. பின்னாளில் நீங்கள் நர்சிங் கோர்ஸ் வகுப்பில் முதல் மாணவியாக வந்ததில் வியப்பு ஏதும் இல்லை..! கட்டுரை அருமை..!

  3. இந்த கட்டுரையின் மூலம், தோழர் லட்சுமியை போல, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் முதல் தலைமுறையாக படித்து வருபவர்களுடைய ஒவ்வொருவர் வாழ்விலும், இப்படி பல சிரமங்களை கடந்து வரவேண்டியிருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

    இந்த நாட்டின் விவசாய குடும்பங்களுக்கு பிறகு நெசவாளர்களின் குடும்பங்கள் தான் அதிகம். நன்றாக இருந்த காலத்திலேயே, நெசவாளர்களின் பிள்ளைகள் துவக்கப்பள்ளியையோ, நடுநிலை பள்ளியையோ தாண்டுவதில்லை. உலகமய சூழலில் நெசவு தொழில் நசிந்து வரும் மோசமான சூழலில் நெசவாளர்களின் நிலை மிகவும் கவலைக்குரியது. அவர்களின் பிள்ளைகளின் நிலையோ கேள்விக்குறிதான்!

    பெண்களின் கல்வியை உணர்ந்த லட்சுமியின் பாட்டியை போல பல பாட்டிகள் இருந்து கொண்டு இன்னும் பல லட்சுமிகளை காப்பாற்றி கொண்டிருகிறார்கள்.

    கல்வி கற்கையிலும், வாழ்க்கையிலும் தன்னை செதுக்கிய ஆசிரியர்களை உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறார் லட்சுமி. வாழ்த்துக்கள்.

  4. // “சாமியே இல்லைனு ஒருத்தர் சொன்னாரா? அப்ப எப்படி பாஸாக முடியும்?” என்ற கேள்விகளுக்கு, “நீதானே படிக்கப் போறே? நீ தானே எழுதப்போறே? சரியா எழுதினா மார்க் போட்டே ஆகணும். இதற்கு சாமியெல்லாம் ஒன்னும் தேவையில்லை” என்று எளிமையாக விளங்க வைத்தார்.//
    உண்மையான ஆசான்! போற்றதக்கவர்!

Leave a Reply to K Lakshminarasimhan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க