தேர்தல் ரீமிக்ஸ் !

6

1. போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்!

கூட்டத்தில் மோடி பேசக் கண்டேன் – அய்யோ!
கொண்டையில் பூவும் கருகக் கண்டேன்

ஆந்தைபோல் வை.கோ. அலறக் கண்டேன் – பக்கத்தில்
கேப்டன் உளறி சாயக் கண்டேன்!

வாழைத்தோப்பும் அழியக் கண்டேன் – அய்யோ
மறுபடியும் காங்கிரசு கத்தக் கண்டேன்!

பலகட்சி ஓட்டு கேட்கக் கண்டேன் – இந்த
பாஞ்சை நகரம் அழியக் கண்டேன்!

ஜெயா, கலைஞரை பார்த்தேன் அத்தான் – அதில்
கம்பங் களியும் போச்சுதத்தான்!

கோட்டை மதிலும் இடியக் கண்டேன்
நாட்டில் பன்னாட்டுக் கம்பெனி நுழையக் கண்டேன்!

போகாதே போகாதே என் கணவா – இது
போலி ஜனநாயக தேர்தல் அத்தான்!

(வீரபாண்டிய கட்டபொம்மன் படப் பாடல் மெட்டு)

2. சட்டி சுட்டதடா! கை விட்டதடா!
பொழப்பு கெட்டதடா! நெஞ்சை தொட்டதடா!

நாலும் நடந்து முடிந்த பின்னால்
இடதும், வலதும் தெரிந்ததடா!

பாதி மனதில்
அம்மு இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில்
மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா!

அம்மா தெய்வம்
முழு மனதில் கோயில் கொண்டதடா
ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா!
அடுத்த எலக்சன் ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தா.பா.வின் கோயிலிலே ஒளி துலங்குதடா!
மனம்
அம்மா, அம்மா, அம்மா, என்று ஓய்வு கொண்டதடா
எங்கள் தோலை உரித்துப்பார்க்க தேர்தல் வந்ததடா!
எங்கள் இதய தெய்வம்
உரித்து பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த குழப்பம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா!

( ஆலய மணி படப் பாடல் மெட்டு )

3.
ஜீ.ரா
:
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
தோழனே! தோழனே! தோழனே!
இந்த நாள் அன்று போல்
இன்பமாய் இல்லையே அது ஏன் தோழனே!

தா.பா :
தேர்தல் கூட்டு ஆட்டம் பாட்டம் – இதைத்தவிர
வேறு எதைக் கண்டோம்
கொள்கையோ பையிலே புத்தியோ போயசிலே
எலக்சனைப் பார்த்ததும் ஒதுங்குவோம் இலையிலே
நித்தமும் தத்துவம், நினைவெல்லாம் சீட்டிடம்
கேப்டனும், எவனுமே இல்லையே நம்மிடம்
போயசு விட்டதும் பாதைகள் மாறினோம்
தேர்தலும் வந்தது கவலையும் வந்தது.

ஜீ.ரா :
கட்சி என்றும் தேர்தல் என்றும் தொகுதி என்றும்
ஓட்டு என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதி எங்கே! அமைதி எங்கே!

தா.பா:
அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் அம்முவின் விளைவுகள்
இடதிவன், வலதிவன் நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன் நம்மிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளால் இதயமே பாரமாய்
என்ன தவறு செய்தோம்! என்ன தவறு செய்தோம்!

( உயர்ந்த மனிதன் படப் பாடல் மெட்டு )

– துரை.சண்முகம்