1962-ம் ஆண்டு சுழற்சிகள் நிறைந்த ஆண்டாகும். 1962-ல் தான் சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. தோழர் பாலதண்டாயுதம் கட்சியின், சென்னை மாவட்டக் குழுச் செயலாளராக இருந்தார். மாநில மாநாட்டை சென்னையில் நடத்துகிற குமாரமங்கலம், ஏ.எஸ்.கே., கே.முருகேசன் போன்ற மூத்த தோழர்களுடன் அரிபட், பரமேஸ்வரன், கஜபதி, டி. பழனிச்சாமி, தா. பாண்டியன் என்று பலரும் இருந்தோம்.

பாலன் விடுதலையான நாளில் இருந்தே திமுக எதிர்ப்பில் கூர்மையாக இருந்தார். மாநில மாநாட்டிற்காக சிறப்பான ஏற்பாடுகளில் இறங்கினோம். நிதி வசூலும் நடந்தது. தோழர்கள் மத்தியில் தமிழ்நாடு முழுவதும் உற்சாகம் வீறிட்டுத் தெரிந்தது. ‘ஜனசக்தி’யில் பெட்டிச் செய்திகளையும் உணர்ச்சியூட்டும் கட்டுரைகளையும் எழுதித் தள்ளினோம். தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் ‘ஜனசக்தி’யில் எழுத என்னை ஊக்கப்படுத்தினார். முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பு. அதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் எதிர்ப்பும் கூர்மையாக இருக்க வேண்டும் என்பது அவரது நிலை. அதுதான் அன்றைக்கும் சர்ச்சைக்குரியதாக இருந்த பிரச்சினை. (நூலிலிருந்து பக்.5)

… தேர்தல் வேலை தொடங்கிய சில நாட்களுக்குள் தோழர் அஜய்குமார் கோஷ் இறந்து விட்ட அதிர்ச்சிச் செய்தி வந்தது. தேர்தல் கூட்டம் அஞ்சலிக் கூட்டமாக மாற்றப்பட்டது.. அஞ்சலி உரை ஆற்றிய ஜீவா, பகத்சிங்கைப் பற்றித் தொடங்கி அவரது தியாக வரலாற்றைக் கூறியவர், தூக்குமேடை ஏறும் நேரத்தில் கூட ‘அரசும் புரட்சியும்” என்ற லெனினுடைய நூலை பகத்சிங் படித்துக் கொண்டிருந்தது பற்றியும், பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன்’ என்ற புத்தகத்தை மொழிபெயர்த்ததற்காக தான் கைதான சம்பவங்ளையும் குறிப்பிட்டார்.

ஜீவாவை கால்களிலும், கைகளிலும் சங்கிலிகளால் கட்டி ஒரு சிங்கத்தை அழைத்துச் செல்வது மாதிரி இழுத்துச் சென்றதையும் வருணித்தார். “நாடு முழுவதிலும் பகத்சிங்கின் புகழ் பரவியது. பகத்சிங் ஏன் குண்டு வீசினான்?” வெள்ளையரை எதிர்த்து பல அதிதீவிரக் குழுக்கள் பல இடங்களில் போராடி வந்தனர். ஆனால் பகத்சிங் குண்டை மட்டும் நம்பியவனல்லன். அவன் இளமையிலேயே சோஷலிஸத்தை நாடியவன். அது எவ்வாறு உருவானது தெரியுமா?

பாலதண்டாயுதம்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்ததைக் கண்டித்து நாடெங்கிலும் கண்டனக் குரல் எழுந்தது. கல்கத்தாவில் நடந்த பெரிய கூட்டம் ஒன்றில் பேசிய தேசிய இயக்கத்தலைவர்களில் ஒருவராக பெர்தாபிரகன்சா என்ற அம்மையார், கடுங்கோபத்துடன்  “இந்த நாட்டில் இளைஞர்களே இல்லையா? அவர்கள் உதடுகளில் இருப்பது மீசைதானா? ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று பேச, அந்தச் செய்தி பரவ, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்கள் “இருக்கிறோம் அம்மா. கேட்பாய் எங்கள் பதிலை சில நாட்களுக்குள்!”” என்று முழங்கி விட்டுத்தான், நாடாளுமன்ற மைய மண்டபத்தில், வெள்யைனை எச்சரிக்கும் முறையில் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பினர். தலைமறைவாக இருந்தபோது வங்கத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவர்களைச் சந்திக்க பகத்சிங் வந்தார். அங்கு தோழர்கள் டாங்கேயையும், பரத்வாஜையும் வேறு சிலரையும் சந்தித்தார். அவர்களுடன் மூன்று நாட்கள் தங்கி விவாதித்து விட்டுத்தான் இந்துஸ்தான் சோஷலிஸ்ட் அமைப்பு என்பதையும் உருவாக்கினர். ‘அரசும் புரட்சியும்’ என்ற புத்தகம் அப்பொழுது கடைகளில் கிடைக்காது. தடை செய்யப்பட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தை இந்தத் தலைவர்களிடமிருந்து பெற்றுச் சென்றவர்தான் பகத்சிங். வங்கம் வந்திருந்த போது தீவிரவாத இளைஞர்களைச் சந்தித்தார். அவரைச் சந்தித்து, வெள்ளையரை எதிர்த்த இயக்கத்தில் தன்னைச் சேர்த்துக் கொண்டவர்தான் அஜய்குமார் கோஷ். (நூலிலிருந்து பக்.14-15)

… இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் ஏற்பட்ட பிளவு அதில் யார் யார், எந்தப் பக்கம் என்ன காரணங்களுக்காகச் சேர்ந்தார்கள் என்று காரணங்களை இங்கு விரிந்துரைக்காது விடுகிறோம். அது ஒரு தனி நூலில் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

இந்தக் கட்டத்தில் அந்தச் சோதனையை ஜீவா எவ்வாறு சந்தித்தார்? அது அவரை எவ்வாறு பாதித்தது?

ஜீவா.

அதுபற்றி அவர் கூறிய சில கருத்துக்களை மட்டும் எழுதுகிறேன். 1962 சிறப்பு மாநாட்டிற்குப் பின் தமிழ் மாநிலக் குழுவின் செயலாளராக தோழர் மணலி கந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலச்செயற்குழுவில் தோழர்கள் மணலி கந்தசாமி, எம். கல்யாண சுந்தரம், என்.கே.கிருஷ்ணன், பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், கே.டி.கே.தங்கமணி இடம் பெற்றிருந்தனர். ஜீவாவும் செயற்குழுவில் இருந்தார். பி. ராமமூர்த்தியும் இருந்தார்.

என்னை சென்னை மாவட்டக் குழுச்செயலாளராகத் தேர்ந்து எடுத்தனர். ஓராண்டு மட்டுமே நான் செயலாளராக இருந்தேன். பின்னர் டி.பழனிச்சாமி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் பாலதண்டாயுதமும், நானும் தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஜீவா யோசனை கூறுகிற நிலையோடு அலுவலகத்தில் தங்கி விட்டார். சில இடங்களுக்கு மட்டும் சென்று பேசினார். (நூலிலிருந்து பக்.21-22)

நூல் : 1962 அரசியல் நிகழ்வுகள்
ஆசிரியர் : தா.பாண்டியன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 40
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க