privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்

வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்

-

முன்னுரை:

emc21905-ம் ஆண்டு இன்றைய தேதியான ஏப்ரல் 11 அன்றுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற சிறப்பு சார்பியல் தத்துவத்தை வெளியிடுகிறார். அதை நினைவு கூர்ந்து இந்த ஆவணப்பட விளக்க கட்டுரையை வெளியிடுகிறோம். நெடிய இந்த கட்டுரை ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளை வரலாற்றுப் பார்வையோடு விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, கூடவே அதன் நெடிய பாதையில் அரசியலும், மக்கள் புரட்சிகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் எப்படி பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன என்பதையும் இங்கே புரிந்து கொள்ள முடியும். மதங்களையும், கடவுள்களையும் அருங்காட்சியகத்திற்கு மட்டும் அனுப்ப வேண்டிய அடையாளங்கள் என்பதை ஐன்ஸ்டீனது கண்டுபிடிப்புகள் நமக்கு வலியுறுத்துகின்றன. அறிவியலை கற்பது என்பது அரசியல் போராட்டம், மனித குல வரலாறு கற்பதோடு பிரிக்க முடியாத ஒன்று என இந்த ஆவணப்படம் எடுத்துக் கூறுகிறது. படியுங்கள், நண்பர்களிடம் பகிருங்கள்!

வினவு

___________

வீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்த சமன்பாட்டின் படி ஒரு ரூபாய் நாணயத்தின் மொத்த நிறையையும், திட, திரவ, வாயு மிச்சம் ஏதுமின்றி ஆற்றலாக உருமாற்றம் செய்தால், அதைக் கொண்டு மொத்த தமிழ் நாட்டின் இரண்டு நாட்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். இது சாத்தியமா? உண்மையில் இச்சமன்பாட்டின் பொருள் என்ன? அது எப்படி உருவானது? அது மனித வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நம்மில் வெகுசிலரே அறிந்திருக்கிறோம்.

நோவாவின் “ஐன்ஸ்டீனின் பெரும் சிந்தனை” என்ற ஆவணப்படம் பார்ப்பதற்கு எளியதாக தோன்றும் இந்த சமன்பாட்டின் வரலாற்றையும், அது உருவான கதையையும் நம் சிந்தனையை தூண்டும் விதத்தில் விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், கருதுகோள்கள் ஒரு வெற்றிடத்திலோ அல்லது ஒரு விஞ்ஞானியின் மூளைக்குள்ளிருந்து மட்டும்  உருவாக்கப்படுவதில்லை. மனிதகுலம் பல நூற்றாண்டு காலமாக திரட்டிய அறிவுச் செல்வத்தின் மீது நின்று கொண்டு அறிவியலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் அவை கட்டியெழுப்பபடுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

இளம் ஐன்ஸ்டீன்
இளம் ஐன்ஸ்டீன்

E=mc2 என்ற சமன்பாட்டை நினைக்கும் போது ஐன்ஸ்டீனை வெள்ளை முடியும் சுருக்கம் விழுந்த வயதான மனிதராக பலர் உருவகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இச்சமன்பாட்டை உருவாக்கிய போது ஐன்ஸ்டீன் வயோதிகர் இல்லை; துடிதுடிப்பும் துள்ளலும் நிறைந்த இளைஞர். காதல், குடும்பம், கல்லூரி வகுப்புகள், வேலை தேடல், அலுவலக நெருக்கடிகள் என்ற சராசரி போராட்டங்களுக்கு மத்தியில்தான் இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.

அவருக்கு முன் இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்கப் போராடிய, பலருடைய வேலையை கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து அவற்றைக் கொண்டு ஒரு கோட்பாட்டு பாய்ச்சலை செய்ததுதான் ஐன்ஸ்டீனின் மேதைமை. இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு பின்னாலும் சாதனை, தோல்வி, சண்டை, பகை, காதல், போட்டி, அரசியல் மற்றும் பழிவாங்கும் கதைகள் உள்ளன.

E = mc2 சமன்பாட்டின் கதை ஐன்ஸ்டீனுக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ஆற்றல் மாறும் கோட்பாடு கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது.

E – ஆற்றல்

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஞ்ஞானிகள் ஆற்றலை அடிப்படையாக கொண்டு உலகை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கவில்லை. அவர்கள் காற்றின் சக்தி, கதவு மூடப்படும் விசை, மின்னலின் சக்தி இப்படி ஒவ்வொன்றையும் விசைகளாகவும், சக்திகளாகவும் தனித்தனித் தீவாக ஆய்ந்து வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை  ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனிமுதலானவை, தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை.

அக்காலகட்டத்தில் அறிவியல் என்பது மேன்மக்களுக்கான துறையாகவே இருந்தது. அவர்களுக்கே அறிவியல் கல்வி கற்கவும், ஆய்வுகள் நடத்தவும் வாய்ப்புகள் கிடைத்தது. ஒவ்வொரு சக்தி அல்லது விசையின் பின்னிருந்து இயக்கக் கூடிய, அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கக்கூடிய ஆற்றல் பற்றிய கருத்தாக்கம் இன்னும் அந்த மேன்மக்களிடையே உருவாகவில்லை. இது அறிவியலின் அன்றைய வரம்பு என்பதோடு கனவான்களின் புத்தார்வ தடைகளும் சேர்ந்த ஒன்று. கல்விக்கும், அறிவியலுக்கும் பிறப்பு காரணமாக அனுமதி மறுப்பில்லை என்ற மேலை நாடுகளிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவில் பார்ப்பனியத்தின் பிடியில் அவை வளராமல் சிக்குண்டிருந்தன எனலாம். இந்த பின்னணியில்தான் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனிதனின் இயற்கையின் புதிர்களை புரிந்துகொள்ளும் உந்துதல், ஆற்றல் குறித்த அறிவியல் கோட்பாட்டை மாற்றியமைப்பதற்கான தொடக்கமாக அமைந்தது.

மைக்கேல் ஃபாரடே - 1842ல்
மைக்கேல் ஃபாரடே – 1842ல்

ஒரு இரும்புக் கொல்லரின் மகனான மைக்கேல் ஃபாரடே, புத்தகம் பைண்டிங் செய்யுமிடத்தில் பழகுநராக வேலை செய்து வருகிறார். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில் புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்தில் உழைக்கும் மக்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அவர்கள் சிறுபட்டறைகளிலும், தொழிற்கூடங்களிலும் தொழில் பழகுனராக சேர்ந்து தொழில் கற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. ஃபாரடே பைண்டிங் தொழிலின் திறனை கற்றுக் கொண்டதோடு நில்லாமல், அவர் கைகளுக்கு வரும் எல்லா புத்தகங்களையும் படித்து சுயமாக கல்வி கற்கிறார்.

தனது வேலையை விட அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் அதிகம் கொண்டிருந்த ஃபாரடே, தனது சொற்ப வருமானம், ஓய்வு நேரம் அனைத்தையும் சுயகல்வி கற்பதிலும், இயற்கை விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதிலும் செலவிட்டார். அன்றைய சமூகத்தில் விஞ்ஞானிகள் நட்சத்திர அந்தஸ்து உடையவர்களாக மதிக்கப்பட்டதுடன் அவர்களை சந்திப்பதோ, அவர்களுடைய விரிவுரைகளுக்கு செல்வதோ சாதாரண மக்களுக்கு அரிதாக கிடைக்கும் வாய்ப்பாகவே இருந்தது. இளம் ஃபாரடேயின் உற்சாகத்தையும், பேரார்வத்தையும் கண்ட வாடிக்கையாளர் ஒருவர், பிரபுகுலத்தை சேர்ந்தவரும் அக்காலத்தைய மிகப்பிரபலமான வேதியியலாளருமான சர் ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளை கேட்பதற்கு ஃபாரடேவுக்கு அனுமதிச்சீட்டு பெற்றுத் தருகிறார்.

ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளை கேட்ட ஃபாரடே உற்சாகமடைந்து அவரை தனது ஆதர்ச நாயகனாக மதிக்க ஆரம்பிக்கிறார். ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளில் தான் எடுத்த குறிப்புகளை புத்தகமாக தொகுத்து அதை அவரை நேரில் சந்தித்து பரிசளிக்கிறார். கட்டுப்பாடுகள் மிகுந்த, அறிவுத் தேடலை முடக்கிப் போடும் மற்றும் சுயநலம் மிகுந்த வர்த்தக உலகிலிருந்து தான் விடுபட விரும்புவதாகவும், சுதந்திரமும், முற்போக்கானதும் தனது மனதிற்கினியதுமான அறிவியலுக்கு சேவையாற்ற தனக்கு வாய்ப்பளிக்குமாறும் கோரி டேவியின் உதவியாளராக சேர விண்ணப்பிக்கிறார். டேவி ஆரம்பத்தில் ஃபாரடேவை அவமானப்படுத்தி அவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். பின்னர் ஆய்வகத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமுற்ற பிறகே தனது ஆய்வுகளில் உதவி செய்ய ஃபாரடேயை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

சர் ஹம்ப்ரி டேவி
சர் ஹம்ப்ரி டேவி

அக்காலத்தின் கவர்ச்சிகரமான அதிசயிக்கத்தக்க ஒன்றான மின்கலமும் மின்சக்தியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. விசித்திரமான மின்சக்தியை குறித்து அறிந்து கொள்ள அனைத்து விதமான சோதனைகளும் நடத்தப்பட்டு வந்த போதிலும் அதைப் பற்றி இன்னும் சரியாக மதிப்பிடப்பட்டிருக்கவில்லை.

1821-ல் டேனிஷ் (டென்மார்க்) ஆய்வாளர் மின்சாரம் பாயும் மின் கடத்தியின் அருகில் காந்த திசைகாட்டியை கொண்டு செல்லும் போது அதன் ஊசி செங்கோணத்தில் விலக்கப்படுவதை கண்டறிந்தார். மின்கடத்தியின் எந்த பக்கத்தில் வைத்தாலும் ஊசி செங்கோணத்தில் விலக்கப்பட்டது.

உயர்கல்வி கற்ற மேன்மக்களான அப்போதைய அறிவியலாளர்கள் மத்தியில், குழாயினுள் நீர் பாய்வதைப்போல் மின்கடத்தியினுள் மின்சாரம் பாய்வதாக கருத்து நிலவி வந்தது. அப்படித்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது என்று அவர்கள் ஃபாரடே போன்ற ‘தற்குறி’களுக்கு இடித்துரைக்கவும் செய்கின்றனர். ஆனால், ஃபாரடே மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது அதை சுற்றிலும் காந்தப்புலத்தை உருவாக்குகிறது எனும் கருத்தை முன்வைத்தார். அக்காந்தப்புலமே காந்த திசைகாட்டியின் ஊசியை விலக்குகிறது என்றும் விளக்கினார்.

அத்துடன், நிலை காந்தத்தின் அருகில் வைக்கப்படும் மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது, கடத்தியை சுற்றி உருவாகும் காந்தப்புலத்திற்கும், நிலை காந்தப்புலத்திற்கும் இடையேயான எதிர் வினை விலக்குவிசையை உருவாக்கும் என்பதை கண்டறிந்தார். இதுவே அந்நூற்றாண்டின் மிகப்பெரும் கண்டுபிடிப்பான மின் மோட்டார் ஆகும். இவ்வாய்வே எல்லா இயக்க சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பற்றிய கோட்பாடு உருவாக காரணமாக அமைந்தது.

பிரிட்டனின் உயர் அறிவியல் அமைப்பான ராயல் சொசைட்டியில் – அவ்வமைப்பின் தலைவராக அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஹம்ஃப்ரி டேவி, ஃபாரடேவை கருத்து திருடர் என குற்றம் சுமத்தி ஆய்வறிக்கையை திரும்பப் பெறுமாறு நிர்பந்தித்ததையும் மீறி – ஃபாரடே தனது ஆய்வை சமர்ப்பிக்கிறார்.

ஹம்ஃப்ரி டேவியின் மரணத்திற்கு பின் ஃபாரடே தனது பணிகளுக்கான அங்கீகாரத்தை பெற்றதோடு தனது புகழ்பெற்ற அடுத்த கண்டுபிடிப்பான மின்காந்த தூண்டல் விதிகளை கண்டறிந்தார். அதாவது, மின்கடத்தியை சுற்றியுள்ள காந்தப்புலம் மாறுதலடையும் போது கடத்தியுள் மின்சாரத்தை உருவாக்கும் என்பதை கண்டறிந்தார்.

இவ்விரு கண்டுபிடிப்புகளும், மின்சக்தியும், காந்தசக்தியும் ஒன்றை ஒன்று சார்ந்தியங்குகின்றன என்பதையும் ஒன்று மற்றொன்றை தூண்டுகிறது என்பதையும் வெளிக்கொணர்ந்ததுடன், ஆற்றல் அழிவின்மை விதி உருவாக காரணமாக அமைந்தன.

ஃபாரடேவின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தைத் தொடர்ந்து ஐன்ஸ்டீன் ஆற்றல் பற்றிய இயற்பியலில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதை இந்தப் படம் விவரிக்கிறது.

குழந்தை ஐன்ஸ்டீன்
குழந்தை ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீனின் குழந்தைப்பருவத்திலிருந்தே அவருக்கு நம் கண்களுக்கு தெரியாத மின்சக்தி, காந்தசக்தி போன்றவற்றின் மீது கவர்ச்சி ஏற்பட்டது. அவரது பள்ளி மற்றும் கல்லூரிப்பருவத்தில் இயற்பியல், கணிதம், தத்துவம் ஆகிய துறைகளில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அவரது பள்ளி, கல்லூரி பேராசிரியர்களை பொருத்தமட்டில் உலகின் எல்லா ஆற்றலும் – சக்தியும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஐன்ஸ்டீன் பின்னாட்களில், ஒரு புதிய, கண்டறியப்படாத மீப்பெருமளவிலான ஆற்றலை பொருட்களின் இதயமான அணுவில் கண்டறிந்து அவர்களுடைய கருத்து தவறென்பதை நிருபிக்கப்போகிறார்.

E=mc2 சமன்பாட்டில் M என்பது Mass – நிறையை குறிக்கிறது. இதை பற்றி அறிந்து கொள்ள ஐன்ஸ்டீன் பிறந்ததற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நிலபிரபுத்துவ அரசு அல்லது எதேச்சதிகார முடியாட்சியை எதிர்த்த மக்கள் புரட்சி (முதலாளித்துவ புரட்சி) காலகட்டத்திலான பிரான்சுக்கு செல்லவேண்டும். அதுவரை திருச்சபைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவியலை வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு துறையையும் பகுத்தறிவின் மூலம் பிரித்தாய்ந்து வளர்த்தெடுத்த காலம் அது. இந்தியாவில் அத்தகைய அரசியல் புரட்சி நடப்பதற்கு பார்ப்பனியம் பெரும் தடையாக இருந்ததால் இங்கே அறிவியல் வளரவில்லை மட்டுமின்றி காலனி ஆதிக்கமும் சடுதியில் நிலைநாட்டப்பட்டது.

பிரான்சில் பிரபுகுலத்தை சேர்ந்த அன்டோன் லவாய்சியர், பிரபலமான வேதியலாளரும், மன்னர் பதினாறாம் லூயி-யின் வரிவசூலிக்கும் அதிகாரியும் ஆவார். வரி வசூலை பெருக்குவதற்கு பாரிஸ் நகரத்தைச் சுற்றி சுவரெழுப்பி நகரத்தினுள் நுழையும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி வசூலிக்கும் முறையை கொண்டு வந்து மக்கள் மத்தியில் ‘இழி’புகழ் ஈட்டிய பணியை செய்தவர். ஆனால், அவரது முக்கிய பங்களிப்பு வேதியல் துறையில், வேதி வினைகளில் பொருட்களின் நிறை மாறாமல் இருக்கும் கோட்பாட்டை நிரூபிப்பதில் இருந்தது.

அவர் மொத்த இயற்கையும் மூடிய அமைப்பாக இருப்பதையும், வேதியல் நிலைமாற்றங்கள் அனைத்திலும், எந்தப் பொருளின் நிறையும் அழிவதுமில்லை, புதிதாக உருவாவதுமில்லை என்பதை ஆய்வுக்கூடத்தில் நிருபித்துக் காட்டினார். அவருடைய ஆய்வுக்கூடத்தில் செஞ்சூட்டிலிருக்கும் இரும்புக் குழாயின் வழியாக நீராவியை செலுத்தி மறுபுறம் அதை சேகரித்து குளிர்வித்தார். (அதாவது இரும்புக் குழாயை துருப்பிடிக்க வைக்கும் வேதி வினையை நிகழ்த்தினார்).

சூடேற்ற பயன்படுத்திய நீரின் நிறைக்கும், இறுதியில் குளிர்வித்து பெறப்பட்ட நீரின் நிறைக்கும் இருந்த வித்தியாசம் வேதி வினையின் போது வெளியான வாயுவின் நிறை மற்றும் இரும்பு குழாயின் அதிகரித்த நிறையின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருந்தது. இச்செயல் முறையை பின்னோக்கி – தலைகீழாக – செய்து காட்டி தனது கோட்பாட்டை நிரூபிக்க அவர் முயன்றார்.

லவாய்சியர்
அன்டோன் லவாய்சியர்

லவாய்சியரின் சிறப்பு துல்லியமான அளவீடுகளிலும், தரவுகள் அனைத்தையும் முழுமையாக சேகரித்து ஆய்வு செய்யும் நேர்த்தியுமாகும். லவாய்சியர் வரிவசூல் அதிகாரியாக ஈட்டிய செல்வம் அனைத்தையும் தனது அதிதுல்லியமான ஆய்வுக்கூடத்தை மேம்படுத்துவதற்கே செலவிட்டுக் கொண்டிருந்தார். லவாய்சியரின் ஆய்விலிருந்து எந்த பொருளும் தப்பவில்லை.

அவருடைய கோட்பாடு பொருள் முதல்வாதத்திற்கு நிரூபணமாகவும், எல்லாப் பொருளும் எல்லா வகையான நிலைமாற்றங்களிலும் வேறொன்றாக மாறுவதாகவும், அவற்றின் அடிப்படை துகள் (பருப்பொருள்) அழிவதில்லை என்ற நிறைமாறாக் கொள்கை (நிறை அழிவின்மை கொள்கை) உருவாகவும் காரணமாக அமைந்தது.

அவருடைய பங்களிப்பு விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனினும், அப்போதைய சமூக சூழலில் உயர் பிரபுகுலத்தோர் சமூகத்தின் மீது கேள்விக்கிடமற்ற அதிகாரம் வகித்ததுடன் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வாய்ப்புகளை ஏகபோகமாக ஒதுக்கிக் கொண்டனர். ஆனால், இந்த ஆதிக்கத்தை எதிர்த்த பரந்து பட்ட மக்களின் போராட்டமும் வலுப்பெற்று வந்தது.

ஜோன் பால் மாரட் என்ற உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அறிவியல் ஆர்வலர் நெருப்பின் துகள்களை திரையில் படம்பிடிக்கும் கருவியை தாம் கண்டறிந்துள்ளதாக லவாய்சியரிடம் வருகிறார். மாரட்டின் சோதனைச்சாலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத வர்க்க பின்னணியையும், அறிவியல் ஆர்வத்தையும் கணக்கில் கொள்ளாத லவாய்சியர், நெருப்பின் துகளை பிடித்து அதை துல்லியமாக அளவிட்டிருந்தால் மட்டுமே மாரட்டின் கண்டுபிடிப்பை தான் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று அவரை அலட்சியப்படுத்தி அனுப்பி விடுகிறார்.

1789-ல் மகத்தான பிரஞ்சு புரட்சி நடக்கிறது. எதேச்சாதிகாரத்தின் தலைகளை மக்களும் புரட்சியாளர்களும் கில்லட்டினால் வெட்டியெறிகின்றனர். இப்போது ஜேகோபின் புரட்சியாளர்களில் ஒருவராக இருக்கும் ஜோன் மாரட், வரி வசூலிக்கும் அதிகாரியாக மக்களை ஒடுக்கிய லவாய்சியருக்கு சம்மன் அனுப்ப, லவாய்சியரும் கில்லடினுக்கு தப்பமுடியவில்லை.

சமூக அலைவீச்சில் அடித்துச் செல்லப்பட்டு குறுக்கப்பட்ட லவாய்சியேவின் வாழ்வைத் தொடர்ந்து ஐன்ஸ்டீனை ஒளியைப் பற்றி சிந்திக்க வைத்த நிகழ்வுகளை பார்க்கிறோம்.

பேராசிரியர் ஃபாரடே
பேராசிரியர் ஃபாரடே (முதிய வயதில்)

ஐன்ஸ்டீனின் இளம்பருவத்தில் அவரை அதிகம் கவர்ந்த, அவர் அதிகம் சிந்தித்து கொண்டிருந்த விசயம் ‘ஒளி’யைப் பற்றியது. கல்லூரி நாட்களில் அவர் தனது நண்பர்களுடன் மட்டுமின்றி தனது காதலியான மிலெவா மாரிக்குடனும் ஒளியைப் பற்றியும் அதன் வேகத்தை பற்றியும் விவாதிப்பதில் நேரத்தை செலவிடுகிறார். ஐன்ஸ்டீனின் ஒளியை பற்றிய பேரார்வம், பின்னர் ஆற்றலையும், பருப்பொருளையும் (நிறை) ஒருங்கிணைத்து மனிதகுலத்தின் பிரபஞ் பார்வையையே மாற்றியமைத்தது.

E=mc2 சமன்பாட்டின் அடுத்த பகுதி c என்பது ஒளியின் திசைவேகத்தைக் குறிக்கிறது. 19-ம் நூற்றாண்டிற்கு வெகுகாலத்திற்கு முன்னரே அறிவியலாளர்கள் ஒளியின் திசைவேகத்தை செயல்முறை அளவீடுகள் மூலம் கணக்கிட்டிருந்தனர். உலகின் அறியப்பட்ட அனைத்திலும் அதிவேகமாக பாய்வது ஒளி. அதன் வேகம் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர்.

ஹம்ஃப்ரி டேவியின் மரணத்திற்கு பிறகு ஃபாரடே, பேராசிரியர் ஃபாரடேவாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மின்சக்தியும், காந்தசக்தியும் மின்காந்த அலைகள் என்ற ஒரே ஆற்றலின் இரு வடிவங்கள்தான் என்ற அவரது கருதுகோளையும், ஒளியும் அதே மின்காந்த அலையின் ஒரு வடிவம்தான் என்பதையும் அறிவியல் உலகம் ஏற்க மறுத்தது. தன்னுடைய கருதுகோளை நிரூபிக்கத் தேவையான உயர்கணித புலமை ஃபாரடேவிடம் இருக்கவில்லை.

சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வயது முதிர்ந்த ஃபாரடேவின் உதவிக்கு வருகிறார் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல். உயர்கணிதம் கற்ற இளம் பேராசிரியர் மேக்ஸ்வெலும் ஃபாரடேவும் வயது வரம்பைத் தாண்டிய நண்பர்களாயினர். மேக்ஸ்வெலின் புதிய உயர்கணித சமன்பாடுகள் மின்விசையும் காந்தவிசையும் ஒன்றையொன்று சார்ந்தும் ஒன்று மற்றொன்றை தூண்டுவதாகவும், அவை மின்காந்த அலைகள் என்ற ஒரே ஆற்றலின் கூறுகள் என்பதை உறுதி செய்தன. அம்மின்காந்த அலைகள் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் ஒன்றையொன்று தூண்டி பரவுவதாக அச்சமன்பாடுகள் உறுதிசெய்தன. அவ்வேகம் ஒளியின் திசைவேகமான வினாடிக்கு 3லட்சம் கிலோமீட்டர் என்பதை மேக்ஸ்வெலின் சமன்பாடுகள் நிரூபித்தன. இவ்வகையில் ஃபாரடேயின் மின்காந்த அலை என்ற கருது கோளும், ஒளியும் மின்காந்த அலையின் ஒரு வடிவமென்பது கணிதவியலால் உறுதி செய்யப்பட்டது. மேலும், மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் ஒளியின் வேகம் அளக்கப்படும் ஆதாரத்தைப் பொறுத்தும், நிலைமத்தொகுதிகளை (Inertial Frame) பொறுத்தும் வேறுபடா மாறிலி என்று முன் வைத்தது.

இப்போது ஒளியின் வேகம் எந்த நிலையிலும் மாறுவதில்லை என்ற மேக்ஸ்வெல் கோட்பாட்டை சார்பியல் தத்துவமாக வளர்த்தெடுக்கும் நிகழ்முறை ஐன்ஸ்டீனின் வாழ்வில் எப்படி உருவாகிறது என்பதை பார்க்கலாம்.

ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன்

ன்ஸ்டீன் தான் பார்க்கக்கூடிய அனைத்தையுமே ஒளியின் பண்புகளுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முற்பட்டார். உதாரணமாக ஆற்றில் படகு நீரைக் கிழிப்பதால் ஏற்படும் அலைகள். படகும் அலைகளும் ஒரே வேகத்தில் செல்வதால் படகில் அமர்ந்திருகும் பயணியைப் பொறுத்தமட்டில் நீரலைகள் நிலையாக இருக்கிறது. கரையிலிருந்து பார்க்கும் பார்வையாளரோ அலைகள் படகின் வேகத்தில் நகர்வதாக காண்பார். ஒளியுடன் இதை ஒப்பிட்டால், நாம் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது நம் முன் இருக்கும் கண்ணாடிக்குப் போய்ச் சேரும் ஒளி திரும்பி நம்மை வந்து அடையாமலே போய் விட, கண்ணாடியில் நமது உருவம் தெரியாமல் இருக்கும். இது எப்படி சாத்தியம்?

மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின்படி படி ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தாலும் ஒளியின் c என்ற அளவை விட குறையாத வேகத்தில் நம்மை விட்டு விலகிச் சொல்லும். மற்ற அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்ளாத இந்த கோட்பாட்டை அங்கீகரிப்பதன் மூலம் ஐன்ஸ்டீன், பருப்பொருள் (நிறை), ஆற்றல், ஒளியின் வேகம் இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் மிகை யதார்த்த (Surreal) அண்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்.

E=mc2 என்ற சமன்பாட்டில் அடுத்து பார்க்க வேண்டியது கணிதக்கூறான நிறையை வேகத்தின் வர்க்கத்தால் (c Squared) பெருக்குவதை பற்றி. பிரெஞ்சு புரட்சி ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், அறிவியலாளர்கள் பொருட்களின் இயக்கத்தை அளவிடவும் வரையறுத்துக் கூறவும் முயன்று வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ பிரான்சில் உயர்குலத்தைச் சேர்ந்த எமிலி டு சாட்லே என்ற பெண் அடுத்த 150 ஆண்டுகளில் கூட பெரும்பாலான பெண்களுக்கு வழங்கப்படாத சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்றார். சிறுவயது முதலே அறிவு தேடலில் நாட்டம் கொண்டிருந்த எமிலி, அறிவியல், உயர்கணிதம், தத்துவத்துறைகளில் சிறப்பான பயிற்சியை பெற்றார். பிரான்சின் பிரபல கணிதவியலாளரும், நியூட்டன் இயற்பியல் வல்லுனருமான பியர் டி மாபெர்டசிடம் (Pierre de Maupertuis) உயர்கணிதம் கற்கிறார்.

பிரஞ்சு இராணுவ அதிகாரி ஒருவரை மணந்த எமிலியைச் சுற்றி அப்போதைய அறிவுஜீவிகள் கூட்டம் நண்பர்களாகவும் வழிகாட்டியாகவும் இருந்தனர். பிரஞ்சு புரட்சியின் வித்தகர்களில் ஒருவரும் கவிஞருமான வால்டருடன் எமிலிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. முடியரசையும், திருச்சபையையும் கடுமையாக விமர்சித்ததால் வால்டர் இரு முறை சிறை தண்டனைக்குள்ளாகிறார். ஒரு முறை இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படுகிறார். நாடு திரும்பும் வால்டருக்கு எமிலியும் அவரது கணவரும் அடைக்கலம் தருகின்றனர். அன்றைக்கு அறிவியலாளர்களும் அரசியல் புரட்சி ஆர்வமும் பிரிக்க முடியாத படி இருந்ததை இது காட்டுகிறது.

எமிலி டூ சாட்லே
எமிலி டூ சாட்லே

நியூட்டனின் இயக்கம் பற்றிய பிரபலமான கட்டுரையான பிரின்சிபா (Principia) வை எமிலி பிரஞ்சு மொழியாக்கம் செய்கிறார். இன்று வரை பிரான்சின் கல்வி நிலையங்களில் எமிலியின் மொழி பெயர்ப்பே பாடப்புத்தகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நியூட்டனின் கோட்பாட்டின்படி, ஒரு பொருளின் இயக்க ஆற்றல், அப்பொருளினது நிறையின் மடங்கு திசைவேக அளவு (E=mv) இருக்கும். ஆனால், ஜெர்மனியை சேர்ந்த கோட்ஃபிரைட் லெப்னிஸ் (Gottfried Leibniz) ஒரு பொருளின் இயக்க ஆற்றல், அப்பொருளின் நிறையின் திசைவேகத்தின் இருபடி மடங்காக (E = mv2) இருக்கும் என்று முன்மொழிந்தார். அதை பெரும்பாலான அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கோட்ஃபிரைடின் கோட்பாட்டின் மீது ஈர்ப்படைந்த எமிலி, நியூட்டனின் விதியை சந்தேகிக்க ஆரம்பித்தது, அவருடைய வழிகாட்டிகளான மேதைகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உண்மை என்பது நடைமுறையில் சோதித்தறியப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று எனும் அறிவியல் அணுகுமுறையின்படி எமிலி கோட்ஃபிரைடின் கோட்பாட்டை பரிசோதனை மூலம் உறுதி செய்கிறார். 1740-ம் ஆண்டு மிகப் பிரபலமானதும், சர்ச்சையைக் கிளப்பியதுமான இயற்பியலின் நிறுவன விதிகள் (Institutions of Physics) என்ற கட்டுரையை வெளியிடுகிறார்.

“பெண்ணாகப் பிறந்த மிகச்சிறந்த ஆண்மகனென்று” எமிலியைப் பற்றி வால்டர் வருணித்தார். எமிலி அவருடைய 43-ம் வயதில் கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த பின் நோய்தொற்றினால் உயிரிழந்தார். தன் காலத்தின் தளைகளை உடைத்துக் கொண்டு அறிவியல் தேடலில் ஈடுபட்டு அறிவியலுக்கு அழியா பங்காற்றிய முன்னோடிகளில் ஒருவராக எமிலி தூ சாட்டலே விளங்குகிறார்.

இப்போது, ஐன்ஸ்டீன் எப்படி ஆற்றலையும், நிறையையும் இணைத்து 20-ம் நூற்றாண்டின் நவீன அறிவியலுக்கு அடித்தளம் இடுகிறார் என்று பார்க்கலாம்.

1903-ம் ஆண்டு தன்னுடன் பயின்ற மிலெவா மாரிக்கை மணந்து கொண்ட ஐன்ஸ்டீன் பல்கலைக் கழகங்களில் வேலை தேடுவதற்கு தேவையான பரிந்துரைகளை அவரது பேராசிரியர்கள் யாரும் தரத் தயாராக இல்லாத நிலையில் சுவிட்சர்லாந்தில் வடிவுரிமை அலுவலகத்தில் ஒரு கீழ்நிலை எழுத்தராக வேலை செய்து பொருள் ஈட்டுகிறார். மரபுகளை உடைத்துக் கொண்டு ஒரு துறையின் இயற்பியல் விதியை இன்னொரு துறைக்கு பொருத்தி இயற்கையின் அடிப்படை இயக்க விதிகளை, அதாவது இப்பிரபஞ்சத்தை படைத்த கடவுளின் சிந்தனையை அறியும் தேடலில் இருக்கும் ஐன்ஸ்டீனுக்கு பதவி உயர்வு, கூடுதல் ஊதியம், குடும்ப வாழ்க்கை, துணைவியின் குறிக்கோள்கள் அனைத்துமே அற்ப விசயங்களாகப்படுகின்றன. எழுத்தர் வேலையில் கவனத்தை செலுத்தாததால் பதவி உயர்வு மறுக்கப்படுகிறார். குடும்பச் சுமை தன்னுடைய சுயத்தையும் மேல் கல்வி கற்கும் வாய்ப்பையும் முடக்கிப் போடுவதை உணரும் மிலெவா, ஐன்ஸ்டீனுக்கு ஊதிய உயர்வு கிடைக்காமல் போனதைக் கேட்டு ஆத்திரப்படுகிறார். அவர்களுடைய திருமண வாழ்க்கை முரண்பட ஆரம்பிக்கிறது.

Albert_Einstein_(Nobel)ஐன்ஸ்டீன் தன்னுடைய நெருங்கிய நண்பரான மிக்கேல் பெஸ்ஸொவுடன் நகரில் உலாவச் செல்லும் போது வெவ்வேறு தொலைவிலிருக்கும் கோபுர கடிகாரங்களிலிருந்து வரும் ஒளி தங்களை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது மிக முக்கியமான நுண்ணறிவுப் புரிதலை அடைந்தார்.

மேக்ஸ்வெலின் சமன்பாடு முன்னறிவித்து ஒளியின் வேகம் மாறாதது என்பதை ஏற்றுக் கொண்டு நாமறிந்த மற்ற எல்லா நிகழ்வுகளையும் அத்துடன் பொருத்த முயன்றார். அப்படி பொருத்துவதற்கு இயங்கும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க நேரம் குறுக்கப்பட வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.

அது வரை காலம் என்பதை தனிமுதலான ஒன்றாக அதாவது காலம் என்பது கடவுளின் கையிலிருக்கும் கடிகாரத்திலிருப்பதை போல் எல்லா இடங்களுக்கும் மாறாத நிலையான ஒன்றாக அறிவியலாளர்கள் கருதி வந்தனர்.

ஒரு பொருள் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க அப்பொருளின் காலம் சுருங்கிக் கொண்டே போவதால்தான் ஒளிஅலை அதனின்று வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் என்ற மாறா வேகத்தில் விலகிச் செல்கிறது என்று ஐன்ஸ்டீனின் முன் வைத்தார். 1905-ம் ஆண்டு ஐன்ஸ்டீன் ஐந்து மிக முக்கியமான ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். அவற்றுள் நான்காவது ஆய்வறிக்கையில் விளக்கப்பட்ட ‘சிறப்பு சார்பியல் தத்துவத்தின்’ (Special Relativity) படி ஐன்ஸ்டீனின் பிரபஞ்சத்தில் தனிமுதலான மாறிலி (constant) காலமோ, வெளியோ அல்ல. ஒளியும், அதன் வேகமும் தான் மாறிலியாகும்.

வேகமாக செல்லும் ரயில் வண்டியை உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் வேகத்தை கூட்ட ஆற்றலை அதாவது மேலும் மேலும் கூடுதல் எரிபொருளை போட்டுக் கொண்டே செல்கிறோம். அதன் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க ஒளி அதை விட்டு மாறா வேகமான வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டரில் விலகிச் செல்லும், ரயில் வண்டியினுள் காலம் சுருங்கும் எனில் நாம் உயர்த்திக்கொண்டே செல்லும் ஆற்றல் எங்கே செல்கிறது?

E = mc2

அது நிறையாக மாறுகிறது. ஆம் ஆற்றல் பருப்பொருளாக மாறுகிறது. ஆற்றலும் பொருளும் ஒன்றை ஒன்று சாராத தனிமுதலானவை அல்ல. ஆற்றல் பொருளாக மாறும், பொருள் ஆற்றலாக மாறும், பொருளையும் ஆற்றலையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

ஒரு பொருளில் உறைந்திருக்கும் ஆற்றலை கணக்கிட அதன் நிறையுடன் ஒளியின் வேகமான 3 லட்சம் மீட்டர் என்பதன் “வர்க்க”த்தை (அதாவது 9 ஆயிரம் கோடியை) பெருக்க வேண்டும். அவ்விதத்தில் பருப்பொருள் (அணு) ஒவ்வொன்றும் உறைந்திருக்கும் ஆற்றலின் சேமக்கலனாக உள்ளது. ஒரு பேனாவின் நிறை முழுவதையும் ஆற்றலாக மாற்றினால் அது அணுகுண்டு வெடிப்பதற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரே ஆண்டில் இயற்பியல் உலகைக் குலுக்கிப் போடக் கூடிய 5 ஆய்வறிக்கைகளை வெளியிட்ட ஐன்ஸ்டீனின் சாதனைக்கு எதிர்வினையாக என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் பதில். ஐன்ஸ்டீனின் சராசரி, காப்புரிமை அலுவலக எழுத்தர் வேலையும், சச்சரவுகள் நிறைந்த திருமண வாழ்வும் தொடர்ந்தன. அடுத்த 4 ஆண்டுகளில் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் குறித்து ஒவ்வொன்றாக கடிதங்கள் வர ஆரம்பித்தன. அவை அனைத்துக்கும் ஐன்ஸ்டீனை பொறுமையாக பதில் எழுதினார். இறுதியில் மேக்ஸ் பிளாங்க் என்ற முக்கியமான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ரசிகர் மன்றத்தின் ஒரே உறுப்பினராக சேர்கிறார். அவரது உதவியால் ஐன்ஸ்டீன் ஜூரிக் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பதவி நியமனம் பெறுகிறார்.

ஐன்ஸ்டீனின் வெற்றி அவரது திருமண வாழ்க்கையின் தோல்வியாக முடிந்தது. 1919-ம் ஆண்டில் ஐன்ஸ்டீன், மிலேவாவை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொண்டார்.

E=mc2 இயற்பியல் உலகின் புனிதக் கோட்பாடாக மாறியது. அணுக்களில் பூட்டப்பட்டிருக்கும் ஆற்றலை விடுவிப்பதற்கு குறைந்தது 100 ஆண்டுகள் பிடிக்கும் என்று ஐன்ஸ்டீன் கருதினார். ஆனால், அவர் இரண்டாம் உலகப் போரையும், ஹிட்லரின் ஜெர்மனியில் பணியாற்றிய ஒரு யூதப் பெண்ணின் மேதமையையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.

1907-ம் ஆண்டு ஆஸ்திரியவைச் சேர்ந்த 28 வயதான யூதப் பெண் லிசா மைட்னர் கதிரியக்கத் துறையில் ஆய்வு மேற்கொள்வதற்காக பெர்லின் நகருக்கு வருகிறார். அன்றைய ஜெர்மனியில் பல்கலைக்கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் பெண் ஆய்வாளர்களை பணிக்கமர்த்துவதில்லை.

ஆட்டோ ஹான்
ஆட்டோ ஹான்

ஜெர்மானிய வேதியலாளர் ஆட்டோ ஹான், லிசாவுக்கு உதவ முன்வருகிறார்.  கதிரியக்கம் பற்றிய தனது ஆய்வில் லிசாவை சககூட்டாளியாக சேர்த்துக் கொள்கிறார். 1912ல் அவ்விருவரும் கைசர் வில்ஹெல்ம் (Kaiser Wilhelm) ஆய்வு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். பல்கலைக் கழகத்தின் பிற பேராசிரியர்கள் லிசா மைட்னரை தொடர்ந்து புறக்கணித்து அவமதிக்கின்றனர். ஆனால் ஆட்டோ ஹானுடனான நட்பும் இயற்பியல் மீதான வேட்கையும் அவரை தாக்குப்பிடிக்க வைக்கிறது.

லிசா மைட்னர் ஜெர்மனியின் முதல் பெண் பேராசிரியராக நியமிக்கப்படுகிறார்.

1930-களில் பருப்பொருளின் அடிப்படைத் துகளான அணுவின் அணுக்கரு புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்பது கண்டறியப்பட்டிருந்தது. அந்த ஆண்டுகள் அணுக்கரு ஆய்வுகளின் பொற்காலமாக திகழ்ந்தன. அன்றைக்கு அறியப்பட்ட தனிமங்களில் மிகப்பெரிய உட்கருவைக் கொண்டிருந்த தனிமம் யுரேனியம். 238 புரோட்டான்களும் நியூட்டான்களும் கொண்ட யுரேனியத்தின் உட்கருவுக்குள் நியூட்ரான்களை செலுத்தி புதிய தனிமங்களை உருவாக்கும் ஆய்வில் லிசாவும் ஆட்டோவும் ஈடுபட்டிருந்தனர். ஆய்வின் வேதியல் செயல்முறைகளை ஆட்டோவும், இயற்பியல் கோட்பாடுகளை லிசாவும் பங்களித்து வந்தனர்.

1930-களில் ஆட்சிக்கு வந்த நாஜிக்கள், இனவெறி காரணமாக யூதர்களை அறிவுத்துறையில் இருந்து வெளியேற்றத் துவங்கினர். அதனால் 1933-ல் ஐன்ஸ்டீன் நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆய்வுகளில் தீவிரமாக இருந்த லிசாவுக்கு எதிராகவும் நாஜிக்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கின்றனர். நாஜி எதிர்ப்பு கருத்துக்களை கொண்ட ஹான், லிசாவை பாதுக்காக்க முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆயினும், சூழ்நிலை மோசமடைந்து லிசா ஜெர்மனியில் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவரைக் காப்பாற்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் அமைப்புகளிலிருந்தும் அறிவியல் உரையாற்ற அழைப்புகள் அனுப்பப்படுகின்றன. ஆனால், நாஜிக்கள் அவரை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. ஆட்டோ ஹானும், லிசாவுக்கு சார்பான தனது போராட்டங்களை கைவிடுகிறார்.

1938-ம் ஆண்டு சூழ்நிலை மிகவும் மோசமடைய, டச்சு நண்பர் ஒருவரின் உதவியுடன், தனது வாழ்நாள் முழுவதும் ஈட்டிய பொருட்கள், ஆய்வுப் பணிகள் அனைத்தையும் விட்டு விட்டு ஒரு பெட்டியுடன் அகதியாக ஹாலந்துக்கு தப்பிச் செல்கிறார் லிசா. பெர்லினில், நடந்து வரும் ஆய்வு விபரங்களை கடிதம் மூலம் பெற்று ஆட்டோ ஹானுக்கு தனது வழிகாட்டல்களை அளித்து வருகிறார்.

யுரேனியம் அணுக்கருவில் நியூட்ரானை உட்செலுத்திய சோதனையில் பேரியம் உருவாக்கப்படுவதாக ஆட்டோ ஹான் தகவல் அனுப்புகிறார். எதிர்பார்த்தபடி பெரிய தனிமத்தை உருவாக்காமல் சிறிய தனிமம் எப்படி உருவானது என்பதை ஆட்டோ ஹான் புரிந்து கொள்ள முடியவில்லை. லிசா, அதைப்பற்றி தனது மருமகனும் அறிவியலாளருமான ஒட்டோ ராபர்ட் ஃபிரிட்சுடன் விவாதிக்கிறார். ஒரு பெரிய நீர்க் குமிழி  எந்த நேரமும் உடைந்து சிதறும் நிலையில் இருப்பதைப் போல பெரிய உட்கருவான யுரேனியத்துக்குள் நியூட்ரானை செலுத்தும் போது, அது ஆட்டோ ஹான் மற்றும் பிற அறிவியலாளர்கள் நினைத்தது போல பெரிய தனிமத்தை உருவாக்காமல், சிறிய தனிமங்களாக உடைகிறது என்று லிசா உணர்கிறார்.

லிசா மைட்னர்
லிசா மைட்னர்

ஆனால், உட்கரு பிளவுபட்டால் இரண்டு பகுதிகளும் உயர் ஆற்றலுடன் (இரு அணுக் கருக்களுக்கிடையிலான எதிர்விசை சுமார் 200 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் இருக்க வேண்டும்) ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து விலக வேண்டும். அவ்வாற்றல் எங்கிருந்து  பெறப்படுகிறது என்று இருவரும் ஹானின் ஆய்வு முடிவுகளை சரிபார்க்கிறார்கள். பிளக்கப்பட்ட அணுக்களின் நிறைகளின் கூட்டுத்தொகையானது யுரேனியம் அணுவின் நிறையை விட, புரோட்டானின் நிறையில் ஆறில் ஒரு பங்கு குறைவாக இருந்தது. அந்நிறையை ஐன்ஸ்டீனின் சமன்பாட்டில் பொருத்திப்பார்க்கும் போது அது கிடைக்கும் ஆற்றல் அவர்கள் பரிசீலிக்கும் அணுப்பிளவில் எதிர்பார்க்கும் அளவிலானது என்பதை லிசா மெய்ட்னர் கணக்கிடுகிறார்.

“அவர் (ஆட்டோ ஹான்) அணுவை பிளந்து விட்டார்” என்கிறார் லிசா. அவரது மருமகனோ, “இல்லை! இல்லை! நீங்கள் அணுக்கருவை பிளந்திருக்கிறீர்கள்!” என்கிறார்.

ஐன்ஸ்டீன் சொன்னது மிகச்சரியென நிரூபிக்கப்பட்டாகி விட்டது. யுரேனியம், ரேடியம் போன்ற தனிமங்கள் கதிரியக்கத்தின் மூலம் ஆற்றலை வெளியிடுவதை ஐன்ஸ்டீனின் சமன்பாட்டின் மூலம் விளக்க முடிந்தது.

லிசா மைட்னரும் பிரிட்சும் தங்களது கண்டுபிடிப்பான அணுக்கரு பிளப்பை பற்றிய ஆய்வுக்கட்டுரையை வெளியிடுகிறார்கள். ஆனால், ஜெர்மனியில் ஓட்டோ ஹான் தனது ஆய்வு முடிவுகளை சமர்ப்பிக்கும் போது நாஜிக்களின் நெருக்குதலால் அதில் யூதரான லிசாவின் பெயரை குறிப்பிடாமல் விட்டுவிடுகிறார். அணுக்கரு பிளப்பிற்கு 1944-ம் ஆண்டில் ஹானுக்கு நோபல்பரிசு வழங்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரும் கூட ஹான், லிசா மெய்ட்னரின் பங்களிப்பை அங்கீகரிக்காமல் தாமே அணுப்பிளவை கண்டறிந்ததாக கூறுகிறார். ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் காரணங்கள் கூட ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை கண்டு கொள்ளாமல் செய்து விடும்.

1942-ம் ஆண்டில் அமெரிக்காவில் “மான்ஹட்டன் திட்டம்” என்ற பெயரில் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவந்தன. அத்திட்டத்தில் பணிபுரிய லிசாவுக்கு வந்த அழைப்பை அவர் நிராகரித்து விடுகிறார். அவருடைய மருமகன் ராபர்ட் பிரிட்ஸ் நாஜி ஜெர்மனை தோற்கடிக்க அணு ஆயுதம் தேவை என நம்பி அத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உணர்ச்சி சார்ந்த உத்வேகத்தை மக்கள் போராட்டங்களும், ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுமே வழங்குகின்றன.

அமெரிக்காவின் மான்ஹட்டன் திட்டத்தில் செய்யப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று 1945 ஆகஸ்டு 6ம் நாள் ஜப்பானின் ஹிரோசிமாவிலும் மற்றொன்று மூன்று நாட்களுக்கு பின் நாகசாகியிலும் போடப்பட்டு, மனித குலம் இதுவரை கண்டிராத பேரழிவு நிகழ்த்திக் காட்டப்பட்டது. நூற்றாண்டு கால விஞ்ஞானிகளின் உழைப்பும், தியாகமும் முதலாளிகளின் கையில் பேரழிவுக்கு பயன்படுத்தப்படுவது அதற்கு முன்பும், பின்னரும் தொடர்ந்து நடக்கின்றன.

ன்ஸ்டீனின் E=mc2 என்ற சமன்பாடு நமது சூரியனின் இயக்கத்தைப் பற்றியும், அதனுள் நடக்கும் அணுக்கரு பிணைப்பில் நிறை உருமாறி வெளிப்படும் பேரளவு ஆற்றலை விளக்க உதவுகிறது. நட்சத்திரங்களின் தோற்றத்தையும், வாழ்வையும், மறைவையும், பிரபஞ்சம் தோன்றியதையும், இயங்குவதையும் புரிந்து கொள்ள உதவுகிறது.

முதலில் பெரும் அழுத்தத்தில் இருந்த பேரளவு ஆற்றல், பெருவெடிப்பாக வெடித்து சிதறியது. அப்போது ஆற்றல், நிறையாக – பருப்பொருளாக மாறி இப்போது நாம் காணும் பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்கிறது.

இன்று அறிவியலாளர்கள், அணுத்துகள் முடுக்கிகளில் அணுத்துகள்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு பெருவெடிப்பை ஆய்வக அளவில் செய்து பார்க்கின்றனர். சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட அத்தகைய ஆய்வில் தான் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு உலகத்தைப் பற்றிய மனிதகுலத்தின் பார்வையையே ஐன்ஸ்டீனுடைய சமன்பாடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.

அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு சில நேரங்களில் மகிழ்ச்சியானதாகவும், சில நேரங்களில் வலிமிகுந்ததாகவும் இருக்கிறது. ஆனால் இயற்கையை புரிந்து கொள்ள முனையும் மனிதனின் பேரார்வம் எப்போதும் முடிவுறுவதில்லை.

இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்து அதன் எண்ணிலடங்கா இயக்கங்களையும், விசித்திரங்களையும் கடவுள்கள் தோற்றுவித்திருப்பதாக மதங்கள் இன்றைக்கும் ஊளையிடுகின்றன. கீதையிலும், குர்ரானிலும், பைபிளிலும் அனைத்து அறிவியல்களும் விளக்கங்களும் பொதிந்திருப்பதாக மதத்தை வைத்து பிழைக்கும் மதகுரு முட்டாள்கள் தொடர்ந்து ஓதி வருகின்றனர். பிழைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கும் அப்பாவிகள் அதை நம்பவும் செய்கின்றனர்.

ஆனால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறும் கடமையை மனித குலம் தனது கூட்டுழைப்பு சமூகப் போராட்டத்தால் சாதித்து அதை அறிவியலாளர்கள் மூலம் நிரூபித்திருக்கிறது.

இன்றைக்கு முதலாளித்துவம் அறிவியலை பிடித்து வைத்துக் கொண்டு அறிவுக்கு எதிராகவும், சந்தைக்கு ஆதரவாகவும் நடந்து வருவதால் நாம் மதங்களை முறியடித்து அறிவியலை அதன் பீடத்தில் வைத்து மரியாதை செய்ய முடியாமல் இருக்கிறது.

ஆனால் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் மதங்களையும், கடவுள் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு எல்லாம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த அழகான உலகத்தை நாம் அறிந்திருக்கவும் முடியாது. இத்தனை தொழில்நுட்ப புரட்சிகளும் சாத்தியமாகியிருக்காது.

–    மார்ட்டின்.