privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்காசில்லாக் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறையா ?

காசில்லாக் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறையா ?

-

ருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 குழந்தைகளும் சேலம் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 7 குழந்தைகளும் என்ற 18 குழந்தைகள் கடந்த 5 நாட்களில் இறந்துள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து குழந்தைகள் சாவது குறித்து எவ்வித அக்கறையுமில்லாமல் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் வக்கிரமான முறையில் பதில் அளித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் 18-11-2014 அன்று நேரில்  ஆய்வு மேற்கொண்டனர். அரசு திட்டமிட்டு அரசு மருத்துவமனைகளை புறக்கணித்து தனியார் மருத்துவக் கொள்ளையர்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுக்கிறது என்ற அளவில் தனியார்மயமே இந்த படுகொலைகளுக்கு காரணம் என முடிவு செய்து பிரசுரம் அச்சிட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். மேலும் சுவரொட்டி அச்சிட்டு பெண்ணாகரம், தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டினர்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களிலும், குழந்தைகள் தினம் கொண்டாடினர். ஆனால், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 16 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துள்ளன.

இதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியாமல் கல்லூரி தலைவர், மருத்துவக் கல்வி இயக்குனர் போன்றோர் சிறிதும் மனிதாபிமானமின்றி பல்வேறு பொய்யான காரணங்களை வக்கிரமான முறையில் கூறி வருகின்றனர். ஏதுமறியாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் பெற்றோர் மீதே பழிபோடுகின்றனர்.

எடை குறைவு என்பது பச்சையான பொய்.  போதிய எடையுள்ள குழந்தைகளும் இறந்துள்ளனர். 900 கிராம் எடையிருந்த குழந்தைகளைக் கூட இதற்கு முன்னர் காப்பாற்றியுள்ளனர். மற்றும் சீசன் டெத், சத்துக்குறைபாடு, மூச்சுத் திணறல் என்ற ஏராளமான பொய்யைச் சொல்லி சமாளித்து விடலாம் என்ற கருத்துடனே இருக்கின்றனர்.

இவையாவும் கடைந்தெடுத்த பொய்யே! கிராமப்புற சுகாதார மையங்கள் செவிலியர்களை வைத்து கண்காணிக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது. 30 குழந்தைகளுக்கு இரண்டே செவிலியர்களை அமர்த்தியுள்ளது இந்த அரசு.

இவ்வாறு இருக்கும் போது மருத்துவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள இவ்வாறு பொய்யை வாய்கூசாமல் பேசி வருகின்றனர். வழக்கமான மரணத்தையே ஊதிப் பெரிதாக்கி வருகின்றனர் என்றும் 100 குழந்தை பிறந்தால் 10 பேர் இறக்கத்தான் செய்வார்கள் என்றும் மருத்துவமனை ஊழியர்கள் சாதாரணமாக பேசுவதை, எத்தனை பெரிய மனித படுகொலையை மிக சாதாரண முறையில் பேசுவதை எப்படி ஏற்பது. தனது கையாலாகத்தனத்தை எளிதாக மறைக்க அரசு இதையே கூறி தப்பித்துக் கொள்கிறது.

“அடப்பாவி, நான் அப்போவே சொன்னேன், கெவுருமெண்டு ஆஸ்பத்திரி வேண்டாமுன்னு. நீ கேட்டியா, இப்ப என் குழந்தையே கொன்னுட்டாங்களே” முதல் குழந்தையை இழந்த தாய் ஒருத்தி கதறிக் கதறி கணவனை பார்த்து அழுத அழுகுரலில்தான் இதன் உண்மை அடங்கியிருக்கிறது.

தருமபுரியில் குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை நாளும் அதிகரித்து வந்தது. குறிப்பாக, வசதியற்ற ஏழை எளிய மக்களுக்கு ஒரே நம்பிக்கை மிகுந்த குழந்தை பெற்றெடுக்கும் இடமாக இருந்த ஆஸ்பத்திரி மீது நம்பிக்கை இழக்க வைத்து தனியார் மருத்துவமனையை நோக்கி நெட்டித் தள்ள வைத்துள்ளனர் இந்த கொலைகார பாவிகள். இதுதான் தனியார்மயத்தை ஆதரிக்க செய்யும் சதியான வழி. எனவே, தனியார்மயத்தை ஆதரிப்பவர்களும், அமுல்படுத்தும் அரசும்தான் கொலைக்குற்றவாளிகள்.

இறந்து போன குழந்தைக்கான நீதியை யார் வழங்குவது? இறந்த குழந்தையை போஸ்ட்மார்ட்டம் செய்து விடுவார்கள் என்று பச்சைக் குழந்தையை அப்படியே எடுத்துச் சென்று புதைப்பதையே விரும்பும் பெற்றோர்கள், ஆஸ்பத்திரியில் செய்யும் மிரட்டல் வேலைகளை நம்பி அப்படியே எடுத்து சென்று விடுகின்றனர்.

கொத்துக் கொத்தாக குழந்தை இறப்பு என்பதை இந்த அரசு இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றி எந்த உயர் அதிகாரியோ, நம்மிடம் ஓட்டுவாங்கிச் சென்ற அரசியல் தலைவர்களோ யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. என்ன, ஏது என்று விசாரித்துக் கூடப் பார்க்கவில்லை. அடுத்த முறை ஓட்டு வாங்கத் துடிக்கும் சில அரசியல் தலைவர்களைத் தவிர யாரும் இதனை கவனிக்கவில்லை.

நமது மாவட்டத்தினை முதல் மாவட்டமாக ஆக்கத் துடிக்கும் அரசியல் தலைவர்கள் கூட குழந்தை என்ன பின்னணி என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் போல. ஏனெனில் எல்லா ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் தனியாரை ஆதரிக்கும் தீவிர ஆதரவாளர்களே! தனியார்மயத்தை ஆதரித்து தீவிரமாக அமுல்படுத்தி வருகின்றனர். இதனை யாரும் தட்டிக் கேட்டு விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

இதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியா போன்ற ஏழை நாடுகளில் பரிசோதிக்க மத்திய, மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளன பன்னாட்டு மருந்து கம்பெனிகள். இதற்கு இந்தியா சிறந்த இடமாக இருக்கிறது என்ற பில்கேட்ஸ் அறக்கட்டளை நடத்தும் அமெரிக்க முதலாளி பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

இதனால், நமது நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சாவதும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு பக்க விளைவுகளால் பாதிக்கப்படு நடைபிணமாக்கப்படுவதும் வாடிக்கையாளியுள்ளது. எனவே, தற்போது நமது மாவட்டத்தில் நடந்துள்ள குழந்தைகள் கொத்தான மரணம் என்பது இயற்கையான காரணம் அல்ல, படுகொலைதான்.

இன்று நம்மை அழுத்திக் கொண்டிருக்கும் இந்த நாசகார கொள்கையான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி நமது சந்ததியரையும், நமது வாழ்வையும், வளங்களையும் ஒழித்து முன்னேற்றம் காணத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களையும், தரகு முதலாளிகளையும் அவர்களை தாங்கிப் பிடிக்கும் இந்த அரசையும் தூக்கியெறியாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வில்லை என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது. எனவே, மக்களை நேசிக்கும் புரட்சிக அமைப்புகளின் பின்னால் அணிதிரண்டு போராட வாருங்கள்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அராஜக போக்கை கண்டிக்கும் வகையில் அந்த மருத்துவமனை முன்பு   19-11-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர் தோழர்கள்.  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடத்திக் கொள்ள கூறியது நிர்வாகம்.

தோழர்கள் தடையை மீறி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் தொடர் படுகொலைகள் பற்றியும் தோழர்களின் கைது குறித்தும் அடுத்த கட்ட பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

ஆசைஆசையாய் பெற்ற குழந்தை
கண்ணெதிரே கதறி
கொத்துக் கொத்தாய் மடிவது
என்று அரசு மொத்தமாய் கொல்வதற்கா
பத்துமாதம் காத்திருந்தோம்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையா
இல்லை கொன்று புதைக்கும் சுடுகாடா?

வெட்கக் கேடு நேருவின் பிறந்த நாளாம்,
குழந்தைகள் தினம் கொண்டாடுவது வெட்கக் கேடு
குழந்தை மரணம் நிகழும் இந்த நாட்டில்
குழந்தைகள் தின கொண்டாட்டம் வெட்கக் கேடு.

காசில்லா ஏழை மக்கள்
பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு
கருவறைதான் கல்லறையா? – இல்லை
கருவறை விட்டு வெளியே வந்தால்
மருத்துவமனைதான் கல்லறையா?

வல்லரசு கனவெல்லாம்
பல்லிளிக்குது, பல்லிளிக்குது
தூய்மை இந்தியா திட்டமெல்லாம்
துர்நாற்றம் வீசுது

தனியார் மருத்துவக் கொள்ளைக்காக
பிள்ளைக்கறி தின்னும் அரசுகளை
கீழே தள்ளிப் புதைக்காமல்
வாழ்க்கையில்லை

அவமானம் அவமானம்
பத்து மாதம் சுமந்து பெற்ற
பச்சிளம் குழந்தைக்கு பாடை கட்டும்
கொலைகார அரசுகளை
சகித்துக் கொள்வது அவமானம்

துடைப்பம் தூக்கி போஸ் கொடுக்கும்
சவுண்டு ஸ்பீக்கர் மோடியே
16 குழந்தைகள் மரணத்திற்கு
யாரை துடைப்பத்தால் அடிப்பது?

இது தர்ம ஆசுப்பத்திரியா – இல்லை
எமதர்மனின் பாசக்கயிறா
தரம்கெட்ட அரசுகளே
குழந்தைகளை கொல்வதற்கா
அரசு மருத்துவமனை

நட்ட ஈடு வழங்கு, நட்ட ஈடு வழங்கு
பிறந்த குழந்தைகள் இறந்ததற்கு
பொறுப்பேற்று நட்ட ஈடு வழங்கு

முறியடிப்போம்! முறியடிப்போம்.
தனியார் மருத்துவக் கொள்ளைக்கு
வழிவகுக்கும் சதித் திட்டத்தை
முறியடிப்போம், முறியடிப்போம்.

  • தனியார் மருத்துவமனைக்கு சேவை செய்யவே தருமபுரி மருத்துவமனையில் குழந்தைகள் 16 பேர் படுகொலை. நீதி விசாரணை நடத்திடு!
  • கொத்துக் கொத்தாய் குழந்தைகள் இறப்புக்கு பொய்யான, சப்பையான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றாதே!
  • பன்னாட்டு மருந்து கம்பெனிகளையும், தனியார்மயத்தை ஊக்குவிக்கும் மக்கள் விரோத அரசினையும் தூக்கி எறிவோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி மாவட்டம்