privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்

அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்

-

தருமபுரி குழந்தைகள் - இன்குபேட்டரில்

ருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொத்துக் கொத்தாக பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்க காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு இரண்டு நேரெதிரான விடைகள் தரப்படுகின்றன.

இந்தச் சாவுக்கு காரணம் மருத்துவர்களின் அலட்சியமோ, ஊழியர்கள் மற்றும் மருத்துவக் கருவிகளின் பற்றாக்குறையோ அல்ல; தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைவு, இளவயது திருமணம், குழந்தைகளின் எடைக் குறைவு, மூச்சுத் திணறல் நோய் போன்றவையே மரணத்துக்குக் காரணம் என்று மருத்துவத்துறை அதிகார வர்க்கமும் அரசும் கூறுகின்றன.

“போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. மொத்தத்தில் சுமார் 400 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் 28 குழந்தைகளைக் கவனிக்க இரண்டு செவிலியர்கள்தான் உள்ளனர். போதிய இன்குபேட்டர்கள் இல்லாத காரணத்தால் ஒரு இன்குபேட்டரில் 2,3 குழந்தைகள் வைக்கப்படுகின்றனர். கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் உதவித்தொகை மாதக்கணக்கில் வழங்கப்படுவதில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய மருத்துவர்களோ, மருத்துவக் கருவிகளோ இல்லை – இவை போன்றவையே குழந்தைகளின் மரணத்துக்கான உண்மையான காரணங்கள்; இவற்றை அரசு இருட்டடிப்பு செய்கிறது” என்று ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும், சமூக அக்கறை கொண்ட சில மருத்துவர்களும் கூறுகின்றனர்.

தர்மபுரி குழந்தைகள் படுகொலைமருந்தில்லை, மருத்துவரில்லை, கருவிகள், கட்டில்கள் இல்லை என்பனவெல்லாம் மறுக்கவியலாத உண்மைகள்தாம். படுப்பதற்கான பாயைக்கூட பிரசவத்துக்கு வரும் பெண்கள்தான் கொண்டுவர வேண்டும் என்பது தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எழுதப்படாத விதியாக இருக்கிறது என்கிறார்கள் மக்கள். பற்றாக்குறைகள்தான் பிரச்சினையா? போதுமான மருத்துவர்களும் ஊழியர்களும் நியமிக்கப்பட்டிருந்திருந்தால் இத்தகைய மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமா என்பதுதான் இதிலிருந்து எழும் கேள்வி. இதற்கெப்படி விடை காண்பது? தற்போது பதவியில் இருக்கும் மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நடத்தையிலிருந்துதான் இதற்கான விடை நமக்குக் கிடைக்கிறது.

தருமபுரி குழந்தைகள் மரணம் குறித்த செய்தி வெளியானவுடனே, “இதெல்லாம் சகஜம், தேசிய சராசரியை விட இந்த சாவு எண்ணிக்கை குறைவுதான்” என்று பதிலளித்தார் அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன்.

அலட்சியம் காட்டும் மருத்துவமனை
மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிராத இந்த மருத்துவர்களிடமிருந்து நோயாளிகள் என்ன சேவையைப் பெற்றுவிட முடியும்?

“விலங்குகளைப் போல குளிர்காலத்தில் கூடுவதால் இந்த சீசனில் பிரசவமும் அதிகம், மரணமும் அதிகம் என்ற பொருள்பட, இதெல்லாம் திருப்பதி சீசன் போல ஒரு சீசன்” என்று விசாரிக்கச் சென்ற மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் திமிராகப் பேசியிருக்கிறார் மருத்துவமனையின் டீன் நாராயண பாபு. “மதுரை மருத்துவமனையில் கூடத்தான் ஒரே நாளில் 66 குழந்தைகள் இறந்தன” என்றது மருத்துவர்கள் சங்கம். “மருத்துவர்களையும் ஊழியர்களையும் குறை சொல்லாதீர்கள்” என்று எச்சரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர்.

இவர்கள் யாருடைய அறிக்கையிலாவது பாதிக்கப்பட்ட மக்கள் மீதான கரிசனையோ, குழந்தைகளின் மரணம் குறித்த துயரமோ, இந்த மரணங்களை எப்படித் தடுப்பது என்ற அக்கறையோ கடுகளவேனும் தென்படுகிறதா? இவர்களுடைய பேச்சு முழுவதும் நிரம்பி வழிவது அதிகார வர்க்கக் கொழுப்பு, மக்களுக்கு எதிரான வன்மம், ஏழைகள் மீதான வெறுப்பு, மேட்டுக்குடி வர்க்கத் திமிர் ஆகியவை மட்டும்தான்.

மருத்துவர் பற்றாக்குறை, ஊழியர் பற்றாக்குறை என்பதெல்லாம் உண்மைதான். எனினும், இரக்கமற்ற இத்தகைய கொடூரர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதனால் மக்கள் அடையப் போகின்ற பயன் என்ன? இலவச மருத்துவம் வழங்குவது அரசின் கடமை என்ற பொருளில் தனியார் மருத்துவக் கொள்ளைக்கு மாற்று அரசு மருத்துவமனை என்று கூறப்பட்டாலும், மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிராத இந்த மருத்துவர்களிடமிருந்து நோயாளிகள் என்ன சேவையைப் பெற்றுவிட முடியும்?

தற்போது தருமபுரி சாவுகள் அம்பலமான பின்னர், இறந்து போன பெரும்பான்மையான குழந்தைகளின் தாய்மார்களை கவுன்சலிங் செய்கிறோம் என்ற பெயரில் வெளியே விட மறுக்கிறது மருத்துவமனை நிர்வாகம். வெளியேறிய தாய்மார்களிடம் இறந்துபோன குழந்தைகளின் கேஸ் ஷீட் தரப்படவில்லை. இறந்துபோகும் குழந்தைகளின் உடல்களை, ஏழைப் பெற்றோரிடம் நள்ளிரவில் ஒப்படைத்து வெளியேற்றுவதன் மூலம் சாவுக் கணக்கை குறைத்துக் காட்டும் தந்திரம் இந்த மருத்துவமனையில் நீண்ட காலமாக நடப்பதும் தெரிய வந்திருக்கிறது. லாக்-அப் கொலையை மறைக்கும் பொருட்டு தடயங்களை அழிக்கும் காக்கி உடைக் கிரிமினல் கும்பலின் அதே உத்தியைத்தான் இந்த வெள்ளை உடைக் கிரிமினல்களும் கடைப்பிடிக்கிறார்கள்.

கொலைக்கூடமான மருத்துவமனை
கொலைக்கூடமான மருத்துவமனை

போலீசு, அதிகார வர்க்கம், நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பின் உறுப்புகள் தாம் அறிவித்துக் கொண்ட நோக்கத்துக்கு நேர் எதிராகச் செயல்படுவதை அன்றாடம் பல செய்திகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. கனிமவளக் கொள்ளையை தடுக்க ஏற்படுத்தப்பட்ட துறையே திருட்டுக்கு ஏற்பாடு செய்து தருவது போல, சட்டம் – ஒழுங்கின் காவலர்கள் கிரிமினல்களின் காவலர்களாக இருப்பதைப் போல, பேறு கால மரணத்தைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை மரணக் கூடமாகியிருக்கிறது.
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014  (தலையங்கம்)
__________________________________

படங்கள் : இணையத்திலிருந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க