Thursday, January 28, 2021

சிப்ரோபிளாக்சசின்

-

“ஐயா! ஐயா! டாக்டர் ஐயா!”

உரத்த சப்த்ததுடன் யாரோ வாசல் கதவைப் பிடித்து உலுக்குவது கேட்டது. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பதினொரு மணிக்குத் தான் மருத்துவ ஆலோசனை அறை வேலைகளை முடித்துவிட்டு, இரவுச் சாப்பாட்டிற்குப் பின் ஏதோ ஒரு புத்தகத்தினைப் படிக்க ஆரம்பித்தேன். இரவு படுப்பதற்கு தாமதமாக செல்வது எனக்கு வழக்கமாகிவிட்டது. மார்கழி குளிர் காரணமாக பாப்பாவிற்கு ஏற்பட்டுள்ள ஆஸ்துமா, அவளின் தூக்கமின்மையே மனைவியையும் விழிப்புடன் வைத்திருக்கச் செய்த்து. எனவே வாசல் குரலுக்கு எந்த எதிர்ச் செயலுமின்றி புத்தகத்தினுள் ஆழ்ந்திருந்த என்னை என் மனைவி உசுப்பினாள்.

கிளாக்ஸோ லாபவேட்டை
பன்னாட்டு மருந்து நிறுவன இலாபம் ! – (கிளாக்ஸோ நிறுவனம் இப்போது கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் – GSK என்று அறியப்படுகிறது.)

“வாசல்ல யாரோ கத்துறாங்க கேக்குதுல்ல போய்ப் பாருங்க. இந்தச் சனியன் வேற இருமிகிட்டே இருக்கு, முழிச்சிக்கப் போவுது.”

“இரு இரு, புத்தகத்துல அடையாளம் வைக்கிற அட்டைய காணோம். இந்த பக்கத்த முடிச்சிட்டுப் போறேன்” என்றவாறு அந்தப் பக்கத்தை முடிக்காமலே புத்தகத்தை மூடினேன்.

கதவைத் திறந்து விளக்கைப் போட்டவாறு வாசல் நோக்கி முன்னேறினேன். வெளி விளக்கை எரியவிட்டவுடன் “யாரது?” என்றேன். “ஐயா, ஆம்பட்டங்க, காலைல ஆசுபத்திரிக்கு வந்தோங்க. இப்ப சுரம் தாங்கலங்க, அதான் அழைச்சிகிட்டு வந்தேன்” என ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

நான் கதவைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்தேன். ஆணும் பெணமணுமாய் நன்றாகத் தெரிந்த முகங்கள். ஆனால் பெயர் ஞாபகம் இல்லை. அழுக்கான சேலை குளிருக்காக அதையே முக்காடாய் தலைக்கு சுற்றி போர்த்திருந்தாள். அவளது கணவன், முகம் மட்டும் தெரியும் வண்ணம் ஒன்றோ, இரண்டோ அழுக்குப் போர்வைகளைச் சுற்றிக் கொண்டிருந்தார். அதையும் மீறி குளிராலும், காய்ச்சலாலும் அவர் பற்கள் கிட்டித்துக் கொண்டிருப்பதையும் உணரமுடிந்தது.

உட்காரச் சொன்னேன். முடியாமல் வாசல் பெஞ்சிலேயே படுத்துவிட்டார்.

“காலைலதானம்மா ஆஸ்பத்திரியில பார்த்து மருந்து எழுதிக் கொடுத்தேன். அதுக்குள்ள என்ன?” என்றேன், சற்று எரிச்சலுடன். கிராமத்து மக்களுக்கு இப்படித்தான். காய்ச்சலோ வாந்தியோ, வயிற்றுப் போக்கோ அப்படியே மருந்து கொடுத்தவுடன் மாறிவிட வேண்டும். இதனால்தான் டாக்டர்களைவிட பூசாரிகள் எளிதில் ஏமாற்றித் திரிகிறார்கள்.

“இல்லைய்யா, ஆசுபத்திரி மாத்திரல கேக்கலய்யா, சுரம் தாங்கல”

“எத்தனை நாளா சுரம் இருக்கு?”

“நேத்திலேருந்து தாங்க.”

“நேத்திலேருந்துதான். கவலைப்படாதீங்க” என்றவாறு வெப்பமானியை வைத்து உடல் வெப்பத்தைப் பரிசோதித்தேன். காய்ச்சல் 104 இருந்தது. “ஒரு நாள் சுரத்திற்கு ரொம்ப பயப்பட வேண்டாம். இந்த பனியில வைரஸ் கிருமியால் கூட ஃபுளு ஜுரம் வரும். அதனால காய்ச்சல் மாத்திரையை மட்டும் விடாம குடுங்க.” என்றேன்.

“ஆசுபத்திரி மாத்திர வேண்டாங்க. நீங்க வேற குடுங்க” அந்தப் பெண்ணின் வாதம் எனக்கு வேடிக்கையாக இருந்தது. அப்போதுதான் உற்றுப் பார்த்தேன். “எந்த ஊரு, ஆம்பட்டமா, உங்க பேரு என்ன பஞ்சவர்ணமா?” என்றதும் அந்தப் பெண் மிகுந்த மகிழ்ச்சியுடன் “ஆமாய்யா… போன மாசம் மார்ல சீழ்வச்சி நீங்கதானே ஆபரேசன் பண்ணி விட்டீங்க. எம் புருஷனையும் எப்படியாவது காப்பாத்துங்க”என்றாள்.

இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு விவசாய குடும்பம். தாய்ப்பால் கொடுக்கும் இப்பெண், குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வயலுக்கு களை எடுக்க செல்வதும், அவசர அவசரமாக திரும்பியவுடன், அழுக்கையும், வியர்வையையும் பொருட்படுத்தாமல் ஏணையில் ஒண்ணுக்கு ஈரத்துடன் கிடக்கும் பிள்ளையை மாரோடு அணைத்துக் கொண்டதன் காரணமாகவோ என்னவோ வலது மார்பகத்தில் சீழ்கட்டி ஏற்பட்டிருந்தது. மார்பகத்திற்கு பிரத்தியேகமான கவனிப்பு தேவை என்பதாலும், கூச்சம் காரணமாகவும் வேறு மருத்துவரிடம் போகுமாறு பரிந்துரைத்தேன்.

“நன்னிலத்துக்கும், திருவாரூருக்கும் போனோம். ஆனா முன்னூறு, நானூறு ஆவுங்கிறாங்க. அதனால திரும்பிட்டோங்க” என்றாவது மறுநாளே என்னிடம் வந்தார்கள். நானே சிகிச்சை அளிக்க நேர்ந்தது. கிட்டதட்ட அரைலிட்டருக்கும் மேல் சீழ் எடுக்கப்பட்டது. சுகாதார நிலையத்திலேயே தொடர் சிகிச்சையளித்து நலமானது.

“அதுசரி! இந்த குளிர்லயும், பனியிலயும், இருட்டுல ஆமபட்டத்துலருந்து வயலுக்குள்ள நடந்து வந்துக்கிறீங்களே. விளக்கு ஒன்னும் எடுத்துக்கிட்டு வரலயா? இரணடும் சின்ன குழந்தைகளாச்சே யார்கிட்ட விட்டுட்டு வந்தீங்க?” என்றவாறு ஊசிக் குழாயில் மருந்தினை எடுத்து நோயாளியை நோக்கி நகரந்தேன். பாவம் அவர் நோயினால் பேச இயலாதவாறு இருந்தார்.

சட்டென்று அந்தப் பெண்ணின் குரல் கரகரப்பானது. கமறும் குரலில் “நல்லா இருக்கனுங்க நீங்க. உங்க கை பட்டதுமே நல்லாயிடும். வீட்டுல பிள்ளைங்கள பார்த்துக்க யாரும்இல்ல. ரெண்டையும் தூங்கப்போட்டுட்டு ஓடியாந்துட்டேன். சீக்கிரம் போனுங்க.” என்றதும் எனக்கு மனது உடைந்து போனது.

ஏனெனில், அது அந்த பெண்ணின் ஒன்றைக் குரலாய் எனக்குத் தெரியவில்லை. ஓராயிரம் ஏழை விவசாயத் தொழிலாளிகளின் குரலாலத்தான் ஒலித்தது. நள்ளிரவில் நண்டும் சிண்டுமாய் இரண்டு குழந்தைகள், ஆதரவற்ற நிலையில், எவர் உதவியுமின்றி, வயலுக்கு நடுவிலுள்ள ஒரு குடிசையில் விட்டு விட்டு, இருட்டில் நினைவு தப்பிய கணவனை சிகிச்சைக்கு அழைந்து வரும் நிலைமையை நினைத்துப் பார்ப்பவர்களுக்குத்தான் அந்தக் கொடிய நிலை புரியும். நான் ஏதும் பேசாமல் ஊசி போட்ட பின் மருந்துச்சீட்டை எழுதிக் கையில் கொடுத்தேன்.

“மாத்திரைக்கு என்ன பண்ணுவீங்க? புத்தகரம் போயில்ல மாத்திரை வாங்கணும்?” என்றேன். புத்தகரம் என் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

அதற்குள் அந்தப் பெண் தட்டுத் தடுமாறி முந்தானையின் முடிச்சை அவிழ்த்து அதற்குள்ளிருந்து கசங்கிய ஒர ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து என்னிடம் நீட்டியவாறு சற்று கூச்சத்துடன் “இதாங்க ஐயா இருக்க வைச்சுக்குங்க, மாத்திரை காலைல வாங்கிக்கிறோம். கையில பணமில்லீங்க. அறுப்பு கிறுப்பு ஆரம்பிச்சாத்தான் கைல காசு இருக்கும். காலைல ஆருகிட்டயாச்சும் கடன் வாங்கி மாத்திரை வாங்கி குடுத்துர்றேங்க.”

மார்கழி மாதத்தில் குளிர் மட்டுமல்ல, வறுமையும் சேர்ந்தல்லவா இவர்களை வாட்டுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதில் விவசாயிகளின் வாழ்க்கையும் ஒளிந்துள்ளதோ என்றவாறு மேசையிலிருந்து பாராசிடமால் மாத்திரை சிலவற்றை எடுத்து அவரிடம் கொடுத்து, “காச அப்புறம் வாங்கிக்கிறேன். இந்த பணத்தை வைச்சு காலைல முதல்ல மருந்து வாங்கிக் கொடுங்க” என்றேன்.

குளிராலும், நன்றியுணர்வாலும் நடுங்கும் கைகளை இருவரும் கூப்பினர். கணவரைத் தாங்கியவாறு அப்பெண் நடக்க ஆரம்பித்தாள். இதற்குள் என் மனைவி பொறுமை இழந்து வாசல்வரை வந்து விட்டாள். “நடுராத்திரியில் என்ன அங்க ஒரே பேச்சு? சட்டுபுட்டுன்னு பார்த்து அனுப்பிவிட்டு வரக் கூடாதா?” என லேசாகச் சீறினாள்.

“நீ பாட்டுக்கு லைட்ட அணைச்சிட்டு தூங்க வேண்டியது தானே!” என்றேன். “எவ்வளவு நேரம்? எனக்கு பயமா இருக்குல்ல. லைட்ட போட்டா பாப்பா முழிச்சிக்குறா,” என்றவாறு என் மனைவி முன்னால் நடந்தாள். என்ன பயம் இவளுக்கு? இவளுடைய பயமும், அந்தப் பெண்ணின் பயமின்மையும்….

அடுத்த சில தினங்களுக்கு வாழ்க்கை வழக்கம்போல் கழிந்தது. அந்தப் பெண்ணையும் அவள் கணவனையும் மறந்து போனேன்.

ஒரு வாரம் சென்றிருக்கலாம். ஒரு நாள் நான் மருந்துவமனையில் பணியில் இருந்தபோது ஒரு கட்டை வண்டியில் இருந்து அதே நோயாளியை இறக்கினர். மெதுவாக கைத்தாங்கலாகக் கொண்டுவந்து மருத்துவமனை முன் உள்ளிருந்த பெஞ்சில் படுக்க வைத்தனர். அதற்குள் மருத்துவ ஊழியர்கள் பதறிக் கொண்டு வந்தனர். “ஏப்பா அப்படி வெராந்தாவுல படுக்க வைக்க வேண்டியதுதான” என்றார் கம்பவுண்டர்.

“வாந்தி வயித்தால கேசுகளை உள்ள கொண்டு வந்து போட்டா யாரு கழுவுறது” என முணுமுணுத்தார் துப்புரவாளர்.

இதற்குள் அந்தப் பெண் இடுப்பிலிருந்த குழந்தையை அணைத்தவாறு, “சார் நீங்கதான் அவர காப்பாத்தணும். ரொம்ப புண்ணியமா போவும் உங்களுக்கு” என்று தரையில் விழுந்து கும்பிட எத்தனித்தாள்.

நான் தடுத்தவாறு “இருங்கம்மா அவசரப்படாதீங்க பார்ப்போம்” என்றேன். அதற்குள் வண்டியோட்டி மாடுகளை அவிழ்த்துக் கட்டிவிட்டு உள்ளே வந்தவர் “இந்த…. நீ போ வெளில, ஐயா இருக்காங்கல்ல, எல்லாம் பாத்துக்குவாங்க” என்றார்.

நான் அவரிடம், “இவரு பேரு என்னாங்க?” என்றேன், “பளனிச்சாமிங்க” என்றார். “பழனிச்சாமி நாக்க நீட்டுங்க” என்றேன் நோயாளியிடம், மிகவும் பலவீனமாக நாக்கை நிட்டினார். நாக்கு உலர்ந்து வெள்ளை படிந்திருந்தது.

உடலைத் தொட்டேன். உடல் கொதித்தது. “ஜூரம்தானா, வேற ஏதும் இருக்கா?” என்றேன். குழந்தையுடன் மீண்டும் அப்பெண் உள்ளே நுழைந்தாள். கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீரை பழைய வெளுத்த நைலக்ஸ் புடவைத் தலைப்பில் துடைக்க முனைந்தாள். நைலக்ஸ் அவளது கணீரை உள்வாங்க மறுத்தது.

“நீங்க ஊசி போட்டு ரெண்டு நாளைக்கு நல்லா இருந்ததுங்க. அப்புறம் சுரம் வந்து உடல் செரிக்கல ஒரே வாந்தி. சீதம் சீதமா வயித்தால வேற போவுதுங்க” என்றார்.

நான் வயிற்றில் கை வைத்துப் பாரிசோதித்தேன். கல்லீரலும், மண்ணீரலும் வீங்கிப் பெருந்திருந்தது. டைபாய்டு காய்ச்சலாக இருக்கவேண்டும் எனினும் பலரைப் போல் நான் வழக்கமா டைபாய்டு நோய்க்கு என உள்ள குளோரோம்பினிகால் மருந்தினை பரிந்துரைப்பதில்லை. எதற்கும் டைபாய்டு நோய் என தீர்மானிக்கும் ‘வைடால்’ இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளியின் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்க வேண்டுமே, எனவே குளோரோம்பினிகால் மருந்தினை கொடுக்க தீர்மானித்து, வார்டில் படுக்கச் செய்து சிரைவழி நீர்மம் மருந்துகளும் அளித்தேன்.

வசதியற்ற மருந்துவமனையிலும் அந்த மருந்துவம் அவர்களுக்கு மகத்தானதாக பட்டிருக்க வேண்டும். ஆயினும் நோயாளிக்கு காய்ச்சல் குறையவே இல்லை. காய்ச்சல் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. எனவே ‘வைடால்’ பரிசோதனை செய்ய தீர்மானித்தேன்.

துணைக்கு யாருமற்று அனாதரவாக நிற்கும் பெண்ணிடம் இதைக் கூறுவதற்கே எனக்கு கஷ்டமாக இருந்தது.

“இதப்பாரும்மா டைபாய்டு காய்ச்சல் மாதிரி தெரியுது. ஆனா அதுக்கு மருந்து கொடுத்தும் கேட்க மாட்டேங்குது. இரத்தம் எல்லாம் டெஸ்ட் பண்ணித்தான் பார்க்கணும். நீங்க ஏதாவது பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போங்க அல்லது ஒரு ஐம்பது ரூபாய் ஆகும். ஒரு ரத்த டெஸ்ட் மட்டுமாவது பண்ணுங்க” என்றேன். அப்பெண்ணின் குழந்தைகள் இருவரும் அங்குள்ள வேப்ப மரத்தடியில் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.

கண்களில் நீர்மல்க “கொஞ்சம் இருக்க வர்றேன்” என்றவாறு வேப்பமரத்திற்குப் போய் சின்னவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பெரியவனுக்கு முதுகில் ஒரு அடி கொடுத்து இழுத்துக் கொண்டு நகர்ந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் பணத்துடன் வந்தாள் அப்பெண். அந்தக் ‘கதையைக்’ கேட்பதற்கு என் மனம் இணங்க வில்லை. இரத்தம் எடுத்துக் கொடுத்தனுப்பிப் பரிசோதனை செய்தேன்.

சோதனை ‘டைபாய்டு நோய்’ என்பதை உறுதி செய்த்து. எனக்குள் குழப்பம், பின்னர் ஏன் குளோரோம்பினிகால் வேலை செய்யவில்லை? மருந்து எதிர்ப்பு குணம் ஏற்பட்டிருக்குமோ? கவலையுடன் புத்தகங்களை ஆராய்ந்தேன். சமீபத்திய மருந்துவ ஆய்வு இதழ் ஒன்று சிக்கியது. இதழ் விவாதத்திலிருந்த முக்கிய விஷயம் – Drug resistant typhoid – Danger in india – “இந்தியாவில் அபாயம் – மருந்து எதிர்ப்பு டைபாய்டு நோய்”

வழக்கமான மருந்துகளுக்கு பதிலாக கிளாக்சோ நிறுவனம் இவ்வகை நோய்களுக்கு புது மருந்தினைக் கண்டு பிடித்துள்ளது. ‘சிப்ரோபிளாக்கசின்’: இது ஒருவகை குயினோலின் வகை மருந்து என விளக்கங்கள் நீண்டன. உதவிக்காக திருவாரூரில் எம்.டி. படித்த மருத்துவரைத் தொடர்பு கொண்டேன். அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

“இந்த மருந்து லேட்டஸ்டா இப்பத்தான் வந்திருக்கு சிவா. இத கிளாக்சோ அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஆஸ்பத்திரியில கிடைக்கிறதில்லை. மாத்திரை ஒன்று 28, முப்பது ரூபாய் வரும். நீங்க சொல்ற நிலைமையில இருக்கிற பேஷண்டுக்கு ஐ.வி.யாத்தான் கொடுக்கிறது நல்லது. ஐ.வி. மருந்து 125 ரூபாய் ஆகும்.” என்றார்.

எனக்குத் தலை சுற்றியது. குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?

வேறு வழியில்லாமல் அந்தப் பெண்ணை அழைத்து விவரமாக விளக்கம் கூறினேன். “குறைந்தது மருந்துக்கே 1000 ரூபாய் ஆகும். உங்க கஷ்டம் எனக்குத் தெரியும். நம்ம ஊரு கவர்மெண்டு ஆஸ்பத்திரிலயெல்லாம் இன்னும் அந்த மருந்து வரலயாம். அதனால நீங்க எதுக்கும் காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க. அங்க இருக்கலாம். என்னால முடிஞ்சத எல்லாம் நான் செஞ்சுட்டேன்” என்றவுடன் அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

நான் அந்தப் பெண்ணை ஏறிட்டு நோக்க அஞ்சி வண்டியோட்டியிடம் “எப்படி கொண்டு போகப் போறீங்க; காரைக்கால் தானே?” என்றேன்.

“இல்லைங்க சார் அந்த பெண்ணு ஒரு ரெண்டாங்கெட்டான். சொந்தபந்தமும் யாருமில்லை, நீங்களே முடியாதுன்ன பிறகு என்ன செய்யுறது. வீட்டுக்குத்தான் கொண்டு போறோம்.”

மறுநாள் காலை வண்டி கட்டிக் கொண்டு அதே ஆள் வந்தான். நான் அந்தப் பெண்ணை ஏறிட்டு நோக்க அஞ்சி வண்டியோட்டியிடம் “எப்படி கொண்டு போகப் போறீங்க; காரைக்கால் தானே?” என்றேன்.

“இல்லைங்க சார் அந்த பெண்ணு ஒரு ரெண்டாங்கெட்டான். சொந்தபந்தமும் யாருமில்லை, நீங்களே முடியாதுன்ன பிறகு என்ன செய்யுறது. வீட்டுக்குத்தான் கொண்டு போறோம்.”

எனக்குள் மண்டைக்குள் ஏதோ வெடிப்பது போல இருந்தது. எளிதில் குணமாகும் இந்த நோயை இப்படிச் சிக்கலாக்கியது யார்? அவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சிக்கலான நோய்க்கு ஏன் ஒரு பன்னாட்டு நிறுவனம் மட்டுமே மருந்து தயாரிக்க வேண்டும்? ஏன் அவர்களே விலையை நிர்ணயிக்க வேண்டும்?

இரண்டு நாட்கள் கழித்து பழனிச்சாமி வீட்டிலேயே இறந்து போன செய்தி வந்தது.

பத்துநாள் கழித்து கருமாதிப் பத்திரிகை கொடுக்க சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் ‘பழனிச்சாமிக்கு என்ன வியாதி சார்’ என்றார்.

நான் அவர் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

பின்குறிப்பு : டைபாய்டு நோய்க்கு மருந்தாகும் ‘குளோரோம்பினிகால்’ எனும் மருந்து ஏனோ பலனளிக்காத நிலையில், ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றாக ‘சிப்ரோபிளாக்சசின்’ மருந்தினைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தின. அறிமுகமாகும் முதல் 5 ஆண்டுகளுக்கு (‘காட்’ ஒப்பந்தத்திற்கு முந்திய நிலை) காப்புரிமை உண்டு என்பதால் மிக அதிக விலையில் விற்று கொள்ளை லாபம் அடித்தனர். இச்சம்பவம் நடந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகியிருக்கும்.(தற்போது 30 ஆண்டுகள்) அப்போது இம்மருந்து வாங்க இயலாமல், அந்நோய்க்குப் பலியான ஏழைக் கூலி விவசாயி ஒருவரின் கதை இது.

– சிவசுப்ரமணிய ஜெயசேகர், மருத்துவர்
________________________________
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2000
________________________________