Tuesday, May 18, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி அரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் விருதை மாநாடு

அரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் விருதை மாநாடு

-

விருத்தாச்சலத்தில் நடந்த கல்வி உரிமை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள் (தொடர்ச்சி)

தோழர் முருகானந்தம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருத்தாச்சலம்

privatization-of-education-cards-30 அன்று பார்ப்பானியம் ”பஞ்சமர்களும், சூத்திரர்களும் படிக்கக்கூடாது” என்றது. இன்றைய அரசும் அதையே செய்கிறது. தனியார் பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக இன்று அரசுப்பள்ளிகள் இழுத்து மூடப்படுகின்றன.

முருகானந்தம், பு.மா.இ.மு
முருகானந்தம், பு.மா.இ.மு

ஜேப்பியார் போன்ற முன்னாள் கள்ளச்சாராய ரவுடிகளும், ஜெகத்ரட்சகன், தளி ராமச்சந்திரன் போன்ற ஓட்டுக் கட்சிக்காரன்களும்தான் இன்று கல்வி வியாபாரம் செய்கின்றனர். அதனால் தான் தனியார் பள்ளிகளை இழுத்து மூடு என்று எந்தக் கட்சியும் வாய் திறப்பதில்லை.

தனியார் பள்ளிகளில் என்ன நடக்கிறது. பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், 12-ம் வகுப்புப் பாடத்தைப் 11-ம் வகுப்பிலும் என ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் படிக்க வைக்கின்றனர். பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கும் ரோபோட்டுகளாக, கறிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளைப் போல மாணவர்களை மாற்றுகின்றனர். இதன் மூலமாக தேர்ச்சி விகிதத்தை கூட்டிக்காட்ட முயல்கின்றனர். ஆனால், நமது நாட்டின் அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் போன்ற எதையும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை.

privatization-of-education-cards-01‘அரசுப் பள்ளிகளில் படித்தால் அறிவு வளராது, ஆங்கிலம் தெரியாது, வேலை கிடைக்காது’ என்றும் கூறுகின்றனர். இது தவறு. கணிதமேதை இராமானுஜம், விஞ்ஞானி அப்துல் கலாம் போன்ற பல்துறை அறிவியல் மேதைகளும், இன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் அரசுப் பள்ளிகளில், தாய்மொழியில் படித்து வந்தவர்கள்தான்.

இன்று அரசுப் பள்ளிகளில் ஒருசில குறைபாடுகள் இருப்பது உண்மைதான். நமது வீட்டின் கூரை ஒழுகினால் அதை மாற்றியமைக்கிறோமே தவிர யாரும் வாடகை வீட்டிற்குச் சென்றுவிடுவதில்லை. அதைப்போல, அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளைக் களைய நாம் போராட முன்வரவேண்டும். மாறாக, தனியார் பள்ளிகளில் கொண்டுபோய் நம் பிள்ளைகளைச் சேர்க்கக்கூடாது.

விருத்தாசலத்திற்கருகிலே மணற்கொள்ளை தொடர்ந்து நடந்து வந்தது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியும் மக்களுடன் இணைந்து போராடி மணற்கொள்ளையைத் தடுத்து அந்த மணல் குவாரியை மூடவைத்தன.

privatization-of-education-cards-27ஆர்.டி.ஓ “மணல் அள்ளலாம்” என்றார்; அப்பகுதி மக்கள், “மணலை அள்ள விடமாட்டோம்” என்று எதிர்த்தனர். ஆர்.டி.ஓ. பின்வாங்கிவிட்டார்.

அப்படியானால் அதிகாரம் யார் கையில் உள்ளது? போலீசு, அதிரடிப்படை என்று வைத்துள்ள அரசிடமா? அல்லது, உறுதியாகப் போராடி மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்திய மக்களிடமா? சந்தேகமென்ன! உண்மையான அதிகாரம் மக்களிடம், நம்மிடம் தான் உள்ளது.

இதேபோல இந்தியா முழுவதும் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது அரசுப் பள்ளிகளை, நகராட்சிப் பள்ளிகளைக் காப்பாற்ற முடியும்.

தோழர் ராஜு, ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Adv-Raju
வழக்குரைஞர் ராஜூ

இரண்டு விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று, அரசுப் பள்ளிகள் சரியில்லை என்று கூறுகிறார்கள்.

‘கட்டிடம், வகுப்பறை மோசமாக உள்ளது; ஒழுங்காகப் பாடம் நடத்துவதில்லை; அதனால் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற முடிவதில்லை; அங்கு பயிலும் மாணவர்களுடன் பழகினால் கெட்டுப்போய்விடுகிறார்கள்; இதனால் அவர்களது எதிர்காலம் பாழாகிவிடுகிறது’ என்றெல்லாம் கூறப்படுகிறது.

‘தனியார் பள்ளிகள் பளபளப்பாக உள்ளன; அங்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது. எனவே, அதிக மதிப்பெண்கள் எடுத்து, நல்ல வேலைக்குச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும்’ என்றும் கூறுகிறார்கள்.

privatization-of-education-cards-04தமிழகத்தில் சுமார் 18,000 தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளை நடத்தும் முதலாளிகளின் வாழ்க்கைதான் பிரகாசமாக உள்ளதே தவிர அங்கு பயிலும் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றமடையும் என்பதற்கான சாத்தியம் எதுவுமில்லை. ஏனென்றால் இன்றைய சமூகச் சூழல் அப்படியுள்ளது.

தனியார் பள்ளியில் படித்து ஆங்கிலத்தில் சிறப்பான தேர்ச்சிபெற்று, 1190-க்கும் மேலே மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் உறுதியாக வேலை கிடைத்துவிடும் என்று கூறமுடியுமா? முடியாது; அப்படியெல்லாம் இங்கே வேலைகள் கொட்டிக்கிடக்கவில்லை.

privatization-of-education-cards-05வெள்ளைக்காரன் வியாபாரம் செய்வதற்காக நம் நாட்டிற்கு வந்து, சூழ்ச்சியால் ஆட்சியைப்பிடித்து இங்குள்ள வளங்களையெல்லாம் சுரண்டி அவனது நாட்டிற்கு எடுத்துச் சென்றான். ஆனால் இன்றைய நமது ஆட்சியாளர்கள் நமது வளங்களையெல்லாம் சுரண்டி எடுத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வாரி வழங்குகிறார்கள். அதுதான் அவர்களது நோக்கம்; நமக்கு வேலை தருவதல்ல.

1927-ல் ஆசிரியர் மாநாடு ஒன்றில் பேசும்போது தந்தை பெரியார் ஆசிரியர்கள் சமூக சிந்தனையுடன் செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார். “ஆசிரியர்கள் நடமாடும் புத்தக அலமாரிகளாக, அதாவது துறைசார்ந்த புத்தகங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்களாக மட்டுமே இருப்பதால் படிப்பைப் பற்றி மட்டுமே, பி.ஏ, எம்.ஏ என்று பட்டங்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர்; அவர்கள் தமது வாழ்க்கை வளம்பெறுவதற்காக மட்டுமே மாநாடு நடத்துகின்றார்களே தவிர சமூகத்தின் படிப்பை, சிந்தனையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமின்றி இருக்கிறார்கள்” என்று அம்மாநாட்டிலேயே அவர்களைச் சாடினார். படிப்பு வேறு; அறிவு வேறு என்று அன்றே வேறுபடுத்திக் காட்டினார்.

privatization-of-education-cards-07 தாய்மொழிக் கல்விதான், தமிழ்வழிக் கல்விதான் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகும். தாய்மொழியில் கல்வி கற்கும்போதுதான் குழந்தைகள் எதையும் எளிதாகக் கற்றுக்கொள்கின்றனர்.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும் என்பது மூடத்தனம் ஆகும். தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படித்து தமிழையும் சரியாகப் படிக்காத, ஆங்கிலத்திலும் தேர்ச்சியற்ற இரண்டுங்கெட்டான்களாக, படிப்பறிவற்ற ஆட்டுமந்தைகளாக, கூலி அடிமைகளைத்தான் இந்த அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

தனியார் பள்ளிகள் ஆண்களும், பெண்களும் இயல்பாக பேசிக்கொள்வதற்குக் கூட தடைவிதிக்கின்றன. ஆணும், பெண்ணும் இயல்பாகப் பழகி, நட்புடன் வளரும் வாய்ப்பு தனியார் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவதால் பின்னாட்களில் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் எளிய பிரச்சனைகளைக் கூட தீர்க்கும் வழிதெரியாமல் அவர்களது வாழ்க்கை சீரழிகிறது.

privatization-of-education-cards-08படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்று சேணம் பூட்டிய குதிரைகளாக வளர்த்தெடுக்கப்படும் தனியார் பள்ளி மாணவர்கள் சமூக அக்கறையற்ற சுயநலமிகளாகத்தான் சமூக வாழ்வில் வெளிப்படுகிறார்கள். பிரச்சனைகளை எதிர்கொண்டு, போராடி வெற்றிபெறும் ஆற்றலும் அவர்களுக்கு இருப்பதில்லை.

 

படிப்பு என்பது மனிதனின் சிந்தனையை, பகுத்தறிவை, தொலைநேக்குணர்வை, தொகுத்துப் பார்க்கும் அறிவை வளர்க்கவேண்டும். அவ்வாறு தொகுத்துப் பார்க்கும்போது தான் கல்வி தனியார்மயப் பிரச்சனை மட்டுமல்லாமல், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது உள்ளிட்டு நாம் இன்று எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த அரசுதான் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். இந்த அரசமைப்பே நமக்கு எதிரானதாக மாறிவிட்டதை உணர்ந்துகொள்ளமுடியும். அவ்வாறு உணர்ந்துகொண்டால்தான் அதனை மாற்றுவதற்கான போராட்டத்தை மேற்கொள்ள முடியும்.

மக்கள் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும்போதுதான் இந்த மாற்றங்களை நிகழ்த்த முடியும். அந்தப் பாதையில் மக்களைத் திரட்டுவதற்குத்தான் இம்மாநாடு நடைபெறுகிறது. மக்கள் தமது சொந்த முயற்சியில் அதிகாரத்தைக் கையிலெடுத்தால், கல்வி உரிமை மட்டுமல்லாமல் அனைத்து உரிமைகளையும் பெறமுடியும்.

திரு. செ.நல்லமுத்து, ஆசிரியர் – கோத்தகிரி.

privatization-of-education-cards-07அரசுப்பள்ளிகளைக் காக்கவேண்டியது ஆசிரியர்களாகிய எங்களது கடமை. ஆனால் நாங்கள் செய்யத் தவறிய அப்பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கும் ம.உ.பா.மையத்தைப் பாராட்டுகிறேன். இனி நாங்களும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோம்.

எனது பள்ளி மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட விருதுகளை, கோப்பைகளை வென்று வந்துள்ளனர். குறிப்பாக, கேரம் விளையாட்டில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பல தனியார் பள்ளிகளைத் தோற்கடித்து மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளனர். இந்த ஆண்டு எனது பள்ளியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது படிக்கும் மாணவியர் கேரம் விளையாட்டில் மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர். 20 மாணவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களாக இருக்கிறார்கள். எனது பள்ளி மாணவர்களின் ஆங்கிலக் கையெழுத்து நீலகிரி மாவட்டத்திலுள்ள மற்றெந்தப் பள்ளி மாணவர்களுடையதைவிடவும் மிகவும் அழகாக இருக்கும்.

privatization-of-education-cards-08இன்று இரண்டு வயதுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். நம்பிக்கை, ஒழுக்கம், தியாகம், ஈகம், நகைச்சுவை உள்ளிட்ட நற்பண்புகளைக் கற்றுக்கொள்ளவேண்டிய வயதில் பாடப்புத்தகங்களைப் படிப்பதற்கே அவர்களுக்கு நேரமில்லை தனியார் பள்ளிகளில். ஆனால், அரசுப் பள்ளிகளில் இவை எல்லாமே மாணவர்களுக்குக் கிடைக்கும்.

பள்ளி மாணவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாலே படிப்பு தானாகவே வந்துவிடும். எனது பள்ளியில் மாணவர்களைச் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் கற்றுக்கொடுக்கிறோம். எனது மாணவர்கள் எனது தெய்வங்கள். வகுப்பறை எப்போதும் கலகலப்புடன் இருக்கவேண்டும். ஆனால், தனியார் பள்ளிகள் மாணவர்களை சவங்களைப் போல மாற்றியுள்ளன.

privatization-of-education-cards-09 வகுப்பறைகளில் நகைச்சுவையுடன் பாடங்களைக் கற்றுக்கொடுத்தால் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். குழந்தைகள் இயல்பிலேயே மிகவும் புத்திசாலிகள். அவர்களது புத்திசாலித்தனத்தை மேலும் வளர்ப்பதற்கு நல்ல கல்வி தேவை;  அப்படிப்பட்ட நல்ல, தரமான கல்வி தரும் பள்ளிகள் அரசுப் பள்ளிகளே!

தனியார் பள்ளிகளின் பகட்டுக்கு மயங்காமல் தரமான கல்வி தரும் அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைப் பெற்றோர் சேர்க்கவேண்டும். தன் பிள்ளைகள் எந்தப் பாடத்தை ஆர்வமுடன் விரும்பிப் படிக்கின்றார்களோ அதில் மேலும் சிறப்பாக வளர்ந்திட ஊக்கப்படுத்தவேண்டும்.

privatization-of-education-cards-09

அன்புகாட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் பிறர் மீதும் அதேபோல அன்பைப் பொழியும். அரசுப் பள்ளிகள் தான் குழந்தைகளை அன்போடு வளர்க்கின்றன. அடக்கி வளர்க்கப்படும் குழந்தைகள் பிறரை அடக்கியாள நினைக்கும். தனியார் பள்ளிகளில் குழந்தைகள் அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, உங்கள் குழந்தைகள் நல்லவர்களாக, அடங்கி நடப்பவர்களாக வளர வேண்டுமென்றால் அரசுப் பள்ளிகளில் சேருங்கள்; கெட்டவர்களாக, வெடித்துக் கிளம்புவர்களாக மாறவேண்டுமென்றால் தனியார் பள்ளிகளில் சேருங்கள். எனவே, குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேருங்கள்! மகிழ்ச்சியாக வாழுங்கள்!

தாய்வழிக் கல்வியே சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும், புலவர் அ.சிவராமசேது, தலைமை ஆசிரியர்(ஓய்வு), விருத்தாசலம்.

புலவர் சிவராமசேது
புலவர் சிவராமசேது

தாய்மொழி என்பது தாய்ப்பால் போன்றது. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தான் எளிதில் சீரணம் ஆகும். அதேபோல தாய்மொழியில் படித்தால்தான் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். எளிதில் சீரணமாகாத புட்டிப்பாலைப் போல ஆங்கிலத்தில் படிப்பதும் சிரமமானதே.

ஆங்கிலக்கல்வி நெஸ்லேவின் 8 வகை நூடுல்ஸைப் போன்றது. அது எவ்வித சத்தும் இல்லை என்பதுடன் பல்வேறு நோய்களுக்கும் ஆளாக்கக்கூடியது; கெடுதலானது. அந்நிய மொழியில் புரியாமல் படிப்பவர்கள் படித்ததையே மீண்டும், மீண்டும் படித்து ஞாபகத்தில் வைத்துக்கொண்டு தேர்வுகளில் விடையெழுதுவார்கள். அப்போது ஏதாவது மறந்துபோனால் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் தாய்மொழி மூலமாகப் புரிந்துகொண்டு படிப்பவர்களோ தமது சிந்தனைகளை விடைத்தாளில் சரளமாக எழுதுவார்கள்.

privatization-of-education-cards-10

தாய்மொழியில் படிப்பவர்கள் தமது பெற்றோர்களுடனும், உற்றோர்களுடனும், உறவினர்களுடனும் தாய்மொழியில் பேசிப்பழகி அன்பையும், நட்புறவையும் வளர்ப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இளமையிலிருந்து தம்மை ஆங்கிலப் பள்ளிக்கொட்டடிகளில் சேர்த்து வதைத்ததற்குப் பழிதீர்க்கும் விதமாக தமது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் சேர்ப்பார்கள் ஆங்கிலப் பள்ளியில் பயின்றவர்கள்.

privatization-of-education-cards-11

காந்தியடிகளும், இரவீந்திரநாத் தாகூரும் தாய்மொழிக்கல்வியைத் தான் வலியுறுத்துகிறார்கள். ரஷ்யா. ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளும் தாய்மொழியில் தான் கற்பிக்கின்றன. அறிஞர் அண்ணா முதல் அப்துல் கலாம் வரையிலும், கணிதமேதை இராமானுஜம், பெர்னார்ட்ஷா போன்றவர்களும் தாய்மொழியில் பயின்றவர்கள்தான். எனவே, நாமனைவரும் நமது தாய்மொழியில், தமிழ் மொழியில் பயிலவேண்டும். தமிழில் படித்தோருக்கு இட ஒதுக்கீடும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் தந்தால்தான் தாய்மொழிக் கல்வி வளரும். அதற்காக பெற்றோர்களும், மாணவர்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

நகர்மன்ற ஊழலை ஒழித்தால், நகராட்சிப் பள்ளிகள் சிறக்கும், மருத்துவர் மு. வள்ளுவன், முன்னாள் நகர்மன்றத் தலைவர், விருத்தாசலம்.

டாக்டர் வள்ளுவன்
டாக்டர் வள்ளுவன்

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், 529 நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் 12524 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. நாம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிலும் 2% ஆரம்பக் கல்வி நிதிக்கு ஒதுக்கப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் ரூ 500 கோடி அளவுக்கு சொத்து வரி விதிக்கப்படாமல் உள்ளது. அதேபோல, சுமார் 5,00,000 ஏக்கர் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்ட வகையில் அதற்கான வரியாக ரூ 1,00,000 கோடி வசூலிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி வசூலிக்க வேண்டிய தொகை ரூ 75,000 கோடி. இதுபோல இன்னும் பல உள்ளன.

privatization-of-education-cards-23இவை அனைத்தையும் முறையாக வசூலித்திருந்தால் அந்த மொத்தத் தொகையில் 2% தொகையாக சில ஆயிரம் கோடி ரூபாய்கள் ஆரம்பக் கல்வி நிதியாக வந்திருக்கும். இதைக் கொண்டு நமது அரசுப் பள்ளிகளை சிறப்பாக நடத்தியிருக்க முடியும். ஆனால், லஞ்ச, ஊழல்களில் ஊறித் திளைக்கும் நமது அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் இதில் அக்கறையின்றி உள்ளனர். நமது வரிப்பணத்தைத் தின்று கொழுக்கும் இந்த அதிகாரிகளின் லட்சணம் இதுதான். எனவே, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சியிலும் வசிக்கின்ற மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். தத்தமது பகுதிகளில் சொத்து வரி முறையாக வசூலிக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். தமது ஊராட்சி, நகராட்சி நிர்வாகத்தை செம்மைப் படுத்தவேண்டும். இவ்வாறு தமிழக மக்கள் விழிப்புணர்வு பெற்றால் தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தரம் உயர்ந்த பள்ளிகளாக மாற்ற முடியும்.

ஆசிரியர் செ. நல்லமுத்து, கோத்தகிரி

privatization-of-education-cards-22நான் வேலை செய்யும் கோத்தகிரி அரசுப் பள்ளியில் இதுவரை 20 சிறந்த மாணவ பேச்சாளர்களை உருவாக்கியுள்ளேன். பல விளையாட்டுகளை மாணவர்களை விளையாட உற்சாகப்படுத்தி, பயிற்சி கொடுத்ததின் மூலம் கோப்பைகளாலும், விருதுகளாலும் எங்கள் பள்ளி நிறைகிறது. பள்ளி மாணவர்களின் சேர்க்கையில் பின் தங்கியிருந்த எங்கள் பள்ளியில், இப்பொழுது மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிற்து.

வகுப்பறையில் மாணவர்களை எப்பொழுதும் கலகலப்பாக இருக்க சொல்வேன். இறுக்கமாக இருந்தால் எதுவும் மனதில் ஏறாது. வித்தியாசமான விக்குகள் வாங்கி வைத்திருக்கிறேன். அதை மாட்டிக்கொண்டு, பாடங்களை புதிய புதிய வழிகளில் நடத்தும் பொழுது, மாணவர்கள் எளிதாய் கற்றுக்கொள்கிறார்கள்.

வழக்குரைஞர் மீனாட்சி, சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

வழக்குரைஞர் மீனாட்சி
வழக்குரைஞர் மீனாட்சி

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, பல மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த நீதிமன்றத்தை நாடினால், கடந்த காலத்தில் 11 பேர் கொண்ட பெஞ்ச் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது. உடனே அதைக் காண்பித்து வாதாடி, தடை வாங்கிவிடுகிறார்கள். அந்த மோசமான தீர்ப்பை உடைக்கவேண்டுமென்றால், 13 பேர் கொண்ட பெஞ்ச் தான் தீர்ப்பளிக்கவேண்டும். இப்பொழுது உள்ள தனியார்மய, உலகமய சூழலில் நடக்கிற காரியமா அது?

privatization-of-education-cards-20

தனியார் பள்ளிகளுக்கெதிராக நாம் அரசேயோ, சட்டங்களையோ, நீதிமன்றங்களையோ நம்பிப் பலனில்லை. நமக்கிருப்பது ஒரே வழிதான். அது, தனியார் பள்ளிகளைப் புறக்கணிப்பதுதான். அரசுப் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் உருவானவை; எனவே நாம்தான் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில்தான் அற்புதமான ஆசிரியர்கள் உள்ளனர். இன்று அரசுப் பள்ளிகளில் காணப்படும் குறைபாடுகளுக்குக் காரணம் இந்த அரசுதான். கல்விக்கென்று ஒதுக்கிய பணத்தைக் கூட முறையாகச் செலவிடாமல் அரசுப் பள்ளிகளை சீரழிவை நோக்கித் தள்ளுகிறது அரசு. எனவே, அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க அரசை நிர்ப்பந்திக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுப்பதே இன்று நம்முன் உள்ள ஒரே தீர்வு ஆகும்.

தகவல்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

 1. முதலில் இங்கே பேசிய யோக்கிய சிகாமணிகளில் எத்தனை பேருடைய பிள்ளைகளை, அல்லது பேரப் பிள்ளைகளை அரசாங்க பள்ளிகளில் படிக்க வைத்துள்ளனர்???? அந்த பட்டியலை முதலில் வெளியிடவும்….

  • முதலில் இங்கே பேசிய ”யோக்கிய சிகாமணிகளில்” எத்தனை பேருடைய பிள்ளைகளை, அல்லது பேரப் பிள்ளைகளை அரசாங்க பள்ளிகளில் படிக்க வைத்துள்ளனர்???? அந்த பட்டியலை முதலில் வெளியிடவும்.

   ”Indian” க்கு நாகரீகம் தெரியாதா? மரியாதையான வார்த்தைகள் பயன்படுத்தி கேள்விகள் தொடுத்தால் நல்லது.

 2. டாக்டர் வள்ளுவன் அவர்களின் பேச்சு ஒவ்வொருவரது காதுகளுக்கும் சென்றடைய வேண்டும்.

 3. //ரஷ்யா. ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளும் தாய்மொழியில் //

  GDP of those countries are different. Job, research all available in their mother tongue

  //கணிதமேதை இராமானுஜம்//

  He learned English and read Math books from library which were written in English. Otherwise his brain would have been spent to memorize useless Silapathikaaram..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க