Saturday, June 6, 2020
முகப்பு உலகம் ஆசியா மேக் இன் இந்தியா : வல்லரசா ? கொத்தடிமை தேசமா ?

மேக் இன் இந்தியா : வல்லரசா ? கொத்தடிமை தேசமா ?

-

“இன்றைய தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாப்பது பற்றிக் கவலைப்படும் தொழிற்சங்கங்கள் நாளைய தொழிலாளர்களின் உரிமையைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்.” சமீபத்தில் தன்னைச் சந்தித்த தொழிற்சங்கத் தலைவர்களிடம் மோடி கூறியிருக்கும் கருத்து இது. இந்த “மோடி மொழி”யின் பொருள் எல்லோருக்கும் புரிவதற்கு வாய்ப்பில்லை.

“எல்லோரையும் சமமாக நடத்துவோம்” என்று மோடி பேசினால், “சிறுபான்மை மக்களின் உரிமைகளை ரத்து செய்வோம்” என்பது அதன் பொருள். அந்த வகையில் “நாளைய தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்படுவது” என்று மோடி கூறும்போது அதன் பொருள், “இன்றைய தொழிலாளர்களின் உரிமைகளை ரத்து செய்வது” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனைத் தெளிவாகக் கூறியிருக்கிறார் மோடியின் ஆலோசகரும், திட்டக் கமிசனுக்கு மாற்றாக மோடி உருவாக்கியிருக்கும் “நிதி ஆயோக்” அமைப்பின் துணைத் தலைவருமான அரவிந்த் பனகாரியா. “தொழிற்தகராறுகள், தொழிற்சங்கங்கள், அப்ரன்டீஸ்கள் நியமனம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு-இவை தொடர்பாக தற்போது இருக்கின்ற சட்டங்கள்தான் முதலீடுகள் வருவதற்குத் தடையாக இருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குவதால், திறன் குறைந்த தொழிலாளர்கள் (unskilled labour) ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை.”

வங்கதேச தொழிலாளர் போராட்டம்
கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கும் கொத்தடிமைத்தனத்துக்கும் எதிராக வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டம்.

மேற்கண்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லாம் காகிதத்தில் இருப்பவைதான் என்ற போதிலும், “அமர்த்து – துரத்து” (Hire & Fire) என்ற இரண்டு சொற்களுக்கு மேல் தொழிலாளர் சட்டம் என்ற பெயரில் வேறு எதுவும் இருக்கக் கூடாது. அப்போதுதான் முதலாளிகளின் மனம் குளிரும், மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறும் என்கிறது மோடி அரசு. இதன் பொருட்டுத்தான் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் திணிக்கப்படுகின்றன.

40 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்கள் எதுவும் பொருந்தாது என்று கூறும் திருத்தம், 300 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் நிறுவனத்தில் கதவடைப்பை அறிவிக்க அரசு அனுமதி தேவையில்லை என்ற திருத்தம், ஒரு ஆலையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 30% பேர் உறுப்பினரானாலன்றி தொழிற்சங்கம் தொடங்க முடியாது என்ற திருத்தம், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களாக இருந்தாலும், பெற்றோரின் தொழிலை (அதாவது குலத்தொழிலை) செய்வதற்குத் தடை இல்லை என்ற திருத்தம், தொழிற்தகராறு சட்டம், தொழிற்சங்க சட்டம், தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம் ஆகியவற்றைத் திருத்தி தொழிலுறவு மசோதா ஆகியவை கொண்டு வரப்படுகின்றன.

மேக் இன் இந்தியாவுக்கும் தொழிலாளர் உரிமைகளை ஒழித்துக் கட்டும் மோடியின் திட்டத்துக்கும் இடையிலான உறவையும், மோடி உருவாக்கப் போகிற “வல்லரசு இந்தியா” எப்படி இருக்கும் என்பதையும் அரவிந்த் பனகாரியாவின் கீழ்க்கண்ட வார்த்தைகளிலிருந்தே நாம் புரிந்து கொள்ள இயலும்.

“சீனத் தொழிலாளர்களின் ஊதியங்கள் உயர்ந்து விட்டன. சீனாவின் ஏற்றுமதி சந்தையைக் கைப்பற்ற வியத்நாமும் கம்போடியாவும் போட்டி போடுகின்றன. இன்று உலகளவிலான ஏற்றுமதி வணிகத்தில் சீனாவின் பங்கு 12%. இந்தியாவின் பங்கோ 2%-க்கும் குறைவு. இந்தியாவில் குறைந்த கூலிக்கு வேலை செய்ய பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். சீனாவிடமிருந்து 2% பங்கைக் கைப்பற்றினாலே, மேக் இன் இந்தியா வெற்றியடைந்து விடுமே” என்கிறார் பனகாரியா. (India Today, Dec 19, 2014)

“சீனத் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிப்பது, டாலருக்கு நிகரான சீன நாணயத்தின் மதிப்பு உயர்ந்திருப்பது ஆகிய காரணங்களால் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறுகின்றன. இதன் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் பத்து கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கூலி குறைவாக இருப்பதால் மேற்கூறிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் அந்த நாடுகளை நோக்கிச் சென்றுவிடும்” என்று பதறுகிறார், உற்பத்தித்துறை போட்டிக்கான தேசிய கவுன்சிலின் உறுப்பினர் அஜய் சங்கர்.

மேலை நாடுகளுக்கு ஆண்டொன்றுககு ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளின் சந்தை மதிப்பு 20,000 கோடி டாலர். இதில் சீனாவின் பங்கு 8,000 கோடி டாலர். வங்க தேசத்தின் பங்கு 2,100 கோடி டாலர். இந்தியாவின் பங்கோ சுமார் 1,300 கோடி டாலர்தான்.

வங்கதேச தொழிற்கூடம்
2013-ல் வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள ராணா பிளாசா என்ற ஆயத்த ஆடைத் தொழிற்கூடத்தின் 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 1135 தொழிலாளர்களைப் பலிகொண்ட கொடூரம்.

ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டலையும், சுற்றுச்சூழல் நாசத்தையும் ஏற்படுத்துகின்ற “சீனப்பாதை”யில் சென்று, கொடிய வறுமை தாண்டவமாடும் வங்கதேசத்தின் இடத்தைப் பிடிப்பதை நோக்கித்தான் இந்தியாவைச் செலுத்துகிறது மோடி அரசு. ஆகவே, ‘மேக் இன் இந்தியா’ வின் குறியீடாக மோடி படங்காட்டும் “சிங்கம்” என்பது “வங்கம்”தான்.

அந்த வங்கதேசத்தின் ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழில் வழங்கும் வேலைவாய்ப்பின் யோக்கியதை என்ன? இதனை “எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி” இதழில் (ஜூன், 20, 2015) அனு முகமது எழுதியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

***

யத்த ஆடை ஏற்றுமதியில் சீனத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது வங்கதேசம். வால் மார்ட், கேப், டெஸ்கோ, காரஃபோர் உள்ளிட்ட எல்லாப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆயத்த ஆடைகளும் இன்று வங்க தேசத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1981-ல் ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் வங்கதேசம் ஈட்டியது 35 லட்சம் டாலர். தற்போது அது 2,400 கோடி டாலராக, சுமார் 7,000 மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்தத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 40 இலட்சம் பேர். அதில் பெரும்பான்மையினர் இளம் பெண்கள்.

கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திலேயே கைத்தறி ஆடைகளுக்கு உலகப் பகழ் பெற்றது வங்கதேசம். டாக்கா மஸ்லின்களுடன் பிரிட்டனின் மில் துணிகள் போட்டி போட முடியாத காரணத்தினால்தான், பிரிட்டிஷ்காரர்கள் கிழக்கு வங்க நெசவாளர்களின் கட்டை விரலை வெட்டினார்கள் என்பது வரலாறு. அது காலனியாதிக்க காலம். ஆயத்த ஆடை உற்பத்தியின் அடிமையாக வங்கதேசம் மாற்றப்படுவது 1980-களில் தொடங்குகிறது.

1980-களின் துவக்கத்திலிருந்து அமலாக்கப்பட்ட கட்டுமான மறுசீரமைப்புக் கொள்கை எல்லா பின்தங்கிய நாடுகளிலும் உள்நாட்டுத் தொழில்களையும் அரசுடைமைத் தொழில்களையும் திட்டமிட்டு ஒழித்துக் கட்டியதைப் போலவே, வங்கதேசத்தின் தொழில்களையும் ஒழித்தது. – அவற்றில் முக்கியமானது சணல் ஆலைத்தொழில்.

இத்தொழில்களின் அழிவுக்குப் பின் வங்கதேச உழைப்பாளிகள் ஆயத்த ஆடைத் தொழிலுக்குள் தள்ளப்பட்டார்கள். இது அந்த நாட்டுக்கு கருணையுடன் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு அல்ல, சர்வதேச உழைப்புப் பிரிவினைத் திட்டத்தின் கீழ் ஏகாதிபத்தியங்களால் வங்கதேசத்துக்கு ஒதுக்கப்பட்டவேலை. விவசாயியின் நிலத்தைப் பறித்துக் கொண்டு அவனை அபார்ட்மென்ட் வாசலில் செக்யூரிட்டியாக நிற்க வைப்பதைப் போன்றது.

சணல், சர்க்கரை மற்றும் நூற்பாலைகளில் தொழிலாளிகளாக இருந்த போது தொழிலாளர்களுக்கு இருந்த தொழிற்சங்க உரிமைகளும் வேலை உத்திரவாதமும் ஆயத்த ஆடைத் தொழிலில் இல்லை. முன்னர் அவர்கள் பெற்று வந்த உண்மை ஊதியத்தை விடவும் மிகக் குறைவான ஊதியத்துக்கு அவர்கள் உழைக்க வேண்டியிருந்தது. மொத்த தொழில்துறை வேலைவாய்ப்பில் 45%, மொத்த ஏற்றுமதியில் 77% ஆயத்த ஆடைத் தொழிலைத்தான் நம்பியிருக்கிறது என்ற நிலையில் நாடே சிக்கிக் கொண்டது. ஆடை ஏற்றுமதி செய்ய வேண்டும். இல்லையேல் பட்டினியால் அழிந்துபட வேண்டும் என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டது வங்கதேசம்.

ஆயத்த ஆடைத் துறையில் பணியாற்றும் வங்கதேசத் தொழிலாளர்களின் அவல நிலையைப் பளிச்சென்று எடுத்துக் காட்டுபவை, அங்கே நடைபெறுகின்ற விபத்துக்கள். 1990 முதல் வங்க தேச ஆயத்த ஆடை நிறுவனங்களில் சுமார் 2,000 தொழிலாளர்கள், (இவர்களின் பெரும்பான்மையானவர்கள் பதின்ம வயதுப் பெண்கள்) கட்டிடம் இடிந்து விழுந்ததாலோ, தீ விபத்தினாலோ இறந்திருக்கிறார்கள். முதலாளிகளின் அடியாட்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டும், போலீசு துப்பாக்கிச் சூட்டிலும் சுமார் 1,000 பெண் தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மேக் இன் இந்தியா சிங்கம்
வங்கத்தின் வழியில் தொழிலாளர்களின் உரிமையைப் பறித்து ‘வளர்ச்சி’யைச் சாதிக்க மோடி கும்பலால் ஆரவாரமாக தொடங்கப்பட்ட “மேக் இ்ன் இந்தியா” திட்டம்

2005-இல், “ஸ்பெக்ட்ரம்” என்ற ஆயத்த ஆடை நிறுவனத்தின் 9 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 100 பேர் கொல்லப்பட்டார்கள். 100 பேரைக் காணவேயில்லை. 2006-ல் டாக்காவிலும் சிட்டகாங்கிலும் நடந்த தொழிற்சாலை விபத்துக்களில் 142 பேர் கொல்லப்பட்டார்கள். 500 பேர் ஊனமானார்கள். டாக்காவில் இன்னொரு நிறுவனத்தில் தீப்பிடித்து 31 பேர் கொல்லப்பட்டார்கள். 2012-ல் வால் மார்ட், வால்ட் டிஸ்னி நிறுவனங்களுக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் தஸ்ரின் ஃபாஷன்ஸ் என்ற நிறுவனத்தில் 100 தொழிலாளிகள் எரிந்து சாம்பலானார்கள்.

இது நடந்த ஐந்தே மாதங்களில் ஏப்ரல், 2013-ல் ராணா பிளாசா என்ற 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 1,135 தொழிலாளிகள் நசுங்கிச் செத்தார்கள். இத்தனை பெரிய படுகொலை நடந்து, கொந்தளிப்பான தொழிலாளர் போராட்டங்கள் நடக்கத் தொடங்கியதும்தான் 20 ஆண்டுகளாக அங்கே நடக்கும் கொடுமை வெளியுலகுக்கு தெரியத் தொடங்கியது.

அஸ்திவாரமில்லாத கட்டிடங்கள், ஆபத்தான மின்சார வயரிங்குகள், வெளியேற வழியில்லாத காற்றோட்டமில்லாத அறைகள், குறுகலான படிக்கட்டுகள் – எல்லா தொழிலகங்களுமே விதிகளுக்கு முரணான மரணக் குகைகளாக இருந்தும் அங்கே இவற்றைக் கேட்பார் யாருமில்லை.

1990 முதல் ஆண்டுதோறும் கொத்துக்கொத்தாக ஆயிரக்கணக்கில் தொழிலாளிகள் கொல்லப்பட்ட போதிலும், நாடு முழுதும் உள்ள 50,000 தொழிற்சாலைகளை கண்காணிப்பதற்கு அங்கே நியமிக்கப்பட்டிருக்கும் ஆய்வாளர்கள் வெறும் 20 பேர்தான். பணியிடப் பாதுகாப்புக் கோரி தொழிலாளர் போராட்டம் நடக்கும் போதெல்லாம், தொழிலகப் போலீசுப் படைதான் அதிகரிக்கப் பட்டிருக்கிறதேயன்றி, தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

***

த்தனை கொடூரமான விபத்துகளுக்குப் பின்னரும் வங்கதேச அரசு அலட்சியம் காட்டுவதேன்? குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்திரவாதப் படுத்துவதற்குக்கூட ஆடை ஏற்றுமதி முதலாளிகள் மறுப்பது ஏன்? ஒரு ஆயத்த ஆடையின் விலையில் யாருக்கு எத்தனை விழுக்காடு செல்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால், மேற்கண்ட கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ள இயலும்.

14 அமெரிக்க டாலருக்கு விற்கப்படும் ஒரு “போலோ” சட்டையின் விலையில் 26.35% கச்சாப்பொருட்களுக்குப் போகிறது. கப்பலில் அனுப்பும் செலவு – 7.36%, வங்கதேச தொழிற்சாலையின் லாபம் – 4.14%, தரகுத்தொகை – 1.28%, நிர்வாகச் செலவு- 0.5%, தொழிலாளியின் ஊதியம் – 0.85%.

வால் மார்ட்டுக்கு – 59.5%. மேற்கண்ட 59.5%-ல் அமெரிக்க அரசு வசூலிக்கும் 25% வரியும் அடக்கம். மொத்தத்தில் ஒரு சட்டையின் சந்தை விலையில் 60 விழுக்காட்டை, உற்பத்தியுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஏகாதிபத்திய அரசும், அதன் தொழில் நிறுவனங்களும் விழுங்குகின்றன.

ஒரு சட்டையை அமெரிக்காவில் தயாரிப்பதென்றால் அமெரிக்கத் தொழிலாளிக்கு 7.47 டாலர் (ரூ. 478) ஊதியம் தரவேண்டியிருக்கும். அதே சட்டைக்கு வங்கதேசத் தொழிலாளிக்குத் தரப்படும் ஊதியம் 0.22 டாலர் (ரூ. 14). கொடூரமான உழைப்புச் சுரண்டல், வறுமை தோற்றுவிக்கும் சமூகச் சீர்கேடுகள், சாயப்பட்டறைகள் உள்ளிட்ட தொழில்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, நீர்வளம் அழிவது, நோய்கள் உள்ளிட்ட எல்லாத் தீமைகளும் ஏழை நாடுகளுக்கு! ஆயத்த ஆடையும் கொள்ளை இலாபமும், வரி வருவாயும் அமெரிக்காவுக்கு அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு!

அதுமட்டுமல்ல, வால்மார்ட் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் உற்பத்தி செய்யும் (வங்கதேச) நிறுவனத்துக்கு கொடுக்கும் விலையை ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கின்றன. எடுத்துக்காட்டாக, வங்கதேச உற்பத்தி நிறுவனத்தின் காற்சட்டைகளுக்கு 2000 ஆண்டில் கொடுத்த விலையை விட 40% குறைவான விலையையே 2014-ல் கொடுக்கின்றன அமெரிக்க நிறுவனங்கள்.

09-make-in-india-captionஇப்படி விலைக் குறைப்பு செய்யப்படும்போது, தன்னுடைய லாப விகிதத்தை எந்த முதலாளியும் குறைத்துக் கொள்வதில்லை. தொழிலாளியின் ஊதியம் குறைக்கப்படுகிறது அல்லது வேலை நேரம் கூட்டப்படுகிறது. ஒரே கட்டிடத்துக்குள் மூச்சு முட்ட தொழிலாளிகள் திணிக்கப்படுகிறார்கள். காற்று, ஒளி, கழிவறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்துக்குமான செலவுகள் வெட்டப்படுகின்றன. செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்காமலும் தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அவ்வளவு ஏன், ராணா பிளாசாவில் கொல்லப்பட்ட 1,135 தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு முதலாளிகள் ஒரு ரூபாய் நிவாரணம் கூட கொடுக்கவில்லை. கொல்லப்பட்ட தொழிலாளிகளின் பெண்டு பிள்ளைகள் நிர்க்கதியாகத் தெருவில் நிற்கிறார்கள்.

தமக்கான சங்கமோ, சட்டங்களோ இல்லாத நிலையில் தொழிலாளிகள் விலங்குகளைப் போலச் சுரண்டப்படுவதும், புழு-பூச்சிகளைப் போல செத்து மடிவதும் கேள்விக்கிடமின்றி நடக்கிறது. சம்பள பாக்கி கேட்டுப் போராடும் தொழிலாளிகள் மீது கூட துப்பாக்கிச் சூடு நடத்துகிறது வங்கதேச அரசு. நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் தீ விபத்தில் சாம்பலாகியிருந்த போதிலும், அந்த நிறுவனங்களில் அடுத்த ஓரிரு நாட்களில் உற்பத்தி தடையின்றி நடக்கிறது.

ராணா பிளாசா படுகொலையைத் தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் பரவிய போர்க்குணமிக்க போராட்டங்களுக்குப் பிறகு தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை 77% உயர்த்தி, மாதமொன்றுக்கு 4,350 ரூபாய் என்று அறிவித்திருக்கிறது ஷேக் ஹசீனா அரசு. அந்நாட்டு அரசின் கணக்குப் படியே மூன்று பேர் கொண்ட குடும்பத்தின் மாத ஊதியம் 14,875 ரூபாய்க்கு (18,000 டாகா) குறைவாக இருந்தால், அது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பமாகும். ராணா பிளாசா படுகொலைக்கு முன் அவர்கள் பெற்று வந்த மாத ஊதியம் வெறும் 2,500 ரூபாய்.

***

யத்த ஆடைத்துறைத் தொழிலாளர்களின் ஊதியம் சீனாவை விட இலங்கையில் குறைவு, இலங்கையை விட பாகிஸ்தானில் குறைவு, அதைவிட இந்தியாவில் குறைவு. வங்கதேசத்திலோ இந்தியாவை விடக் குறைவு என்பதால், பல இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்துக்குத் தமது உற்பத்தியை மாற்றிக் கொண்டு விட்டன.

இச்சூழலில் மேக் இன் இந்தியா என்பதெல்லாம் வெறும்பேச்சு. பொருளாதார மந்தம் காரணமாக ஏற்றுமதி வாய்ப்புகளும் சுருங்கிவிட்டன. ஆகவே முதலீடுகளும் வராது. உள்நாட்டு சந்தையை உருவாக்கும் விதத்திலான ‘மேக் ஃபார் இந்தியா’ வைப் பற்றி சிந்திப்பதுதான் தீர்வு என்று தாராளமயக் கொள்கையாளரான ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனே உண்மை நிலையை சொல்லியிருக்கிறார்.

நிலத்தையும் காடுகளையும் பறித்து தொழில் வளர்ச்சி வரவில்லை, பகற்கொள்ளை மட்டுமே நடந்திருக்கிறது என்பது ஏற்கெனவே அம்பலமாகிவிட்டது. அடுத்து, தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைக் குறைத்தால்தான் தொழில் வளரும் என்கிறார் மோடி. இது தொழிலாளி வர்க்கத்தின் உரிமை குறித்த பிரச்சினை மட்டுமல்ல. வல்லுறவுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தால்தான் வயிற்றை நிரப்ப முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்ணின் நிலைக்கு நம் நாட்டைத் தள்ளிவருகிறது மோடி அரசு.

வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு, ஆடைகளைக் குறைக்கச் சொல்லும் விபச்சார விடுதித் தலைவியைப் போல, பன்னாட்டு முதலாளி வர்க்கத்தைக் கவரும் பொருட்டு தமது உரிமைகளை ஒவ்வொன்றாகக் களைந்து விட்டு தொழிலாளி வர்க்கத்தை நிர்வாணமாக நிற்கச் சொல்கிறார் மோடி. இருப்பினும், இவர் இந்த நாட்டின் பிரதமர் என்றே அறியப்படுகிறார்.

– அஜித்
________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
________________________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. திருப்பூரில் பீஸ் ரேட்டில் தைக்கும் ஒரு சிங்கர் டைலர் தினந்தோறும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றார். ஷிப்ட் ரேட்டில் பணிபுரியும் ஓவர் லாக் டைலர் ரூபாய் 350 முதல் 400 வரை. அதுவே பேட்லாக் டைலர் இன்னும் நூறு ரூபாய் அதிகமாக. நிச்சயமாக மாதம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தவிர்த்து ஒரு டைலராக பணிபுரிபவர் குறைந்தபட்சமாக பத்தாயிரம் ரூபாய் பெறுகின்றார். பீஸ் ரேட்டில் பணிபுரிபவர் மாதந்தோறும் குறைந்தபட்சமாக (வேலைக்குச் சரியாக வரும்பட்சம்) இருபதாயிரும் ரூபாய் சம்பாரிக்க முடியும்.

 2. ஒரு நாளைக்கு 1000 குடுத்தாலும் தச்சனோ மின் ஊழியனோ கிடைப்பதில்லை
  கிராமத்திலும் வயலில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை
  சிறு தொழில் முனைவோர் படும் பாடு சொல்லி மாளாது. பல தொழிலளர்களுக்கு தொழில் சிரத்தை, ஒழுங்கு எதுவும் கிடையாது
  உங்களது இந்த கட்டுரை எடுபடாது

  • தச்சனோ,மின் ஊழியனோ எவ்ளோ மருவாதி குட்து பேசுறாப்ல பாருங்கோ.கூலிக்கு வேலை செஞ்சா உனுக்கு இளக்காரமா இருக்கா.இதுவே கோயில மணியாட்டுற ,குருக்களையோ ,பாங்க் மனஜரையோ அவன்,இவன்னு சொல்வியா.

  • ஆயிரத்தில் அகப்படவில்லை என்றால் பத்தாயிரமோ அதற்கு மேலோ கொடுத்து பாருங்கள், தேவை இருந்தால் எவ்வளவு விலையாவது கொடுக்க வேண்டும் என்பது தானே உங்கள் முதலாளிகளின் வாதம்.

   உழைப்பாளிக்கு சம்பளம் கொடுக்கும் போது, அவர்கள் பொது பங்கீட்டில் கிடைக்கும் மலிவான அரிசி போன்ற பொருட்களை தானே பயன்படுத்துகிறார்கள், அதனால் அவர்களுக்கு குறைந்த செலவே ஆகிறது அதனால் அவர்கள் குறைவான சம்பளத்தில் தங்கள் சேவைகளை அளிக்கவேண்டும் எனும் திமிரான எண்ணம்.

   பொது பங்கீட்டுக்கு உங்கள் வருமானத்தில் ஒரு பங்கை தாருங்கள் என்றால், தங்களின் உழைப்பை யாரோ திருடிச் செல்வது போல் புலம்பும் கயமை.

   என்று துயில் எழுவார்கள் இந்த பொய்தூக்ககாரர்கள்

 3. அன்புள்ள ஜோதி!
  இங்கு மணிக்கு 7.50 டாலர் சம்பாதித்தால்…
  அதில்…ஒரு மணி நேரம் வேலை செய்தாலம்….retirement pension-medicare பிடிப்பு கட்டாயம். (அதே 6.5% முதலாளியும் கட்டவேண்டும்) வேலையில் விபத்து நடந்தால் அரசு ஓய்வு ஊதியமாக வாழ் நாள் முழுவதும் கொடுக்கும்). மேலும், வரியையும் அரசு பிடித்துக்கொள்ளும்

  கேள்வி!
  திருப்பூரில் எந்த முதலாளி தனது வேலை ஆட்களுக்கு காப்பு கொடுக்கிறார்கள். இங்குள்ள முதலாளிகள் யோக்கியம் என்று சொல்லவில்லை–ஆனால், அரசு தொழிலார்களுக்கு காப்பு கொடுக்கிறது.

  இந்தியாவிற்கு….மென் பொருள் வேலை அதிகாமா வரக் காரணம்! அமெரிக்காவில் செய்யும் கூலியில் ஒன்றில் ஏழு பங்கு கொடுத்தால் போதும். எப்ப வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இந்தியாவில்–காரணம் அரசியல் வாதிகள்–நம்ம பங்காளிகள்.

  போபால் மாதிரி விபத்து இங்கு நடந்து இருந்தால்? UNION CARBIDE புல் பூண்டு இல்லாமல் அழிந்து இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க