privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்திருச்சி, கோவை: மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !

திருச்சி, கோவை: மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !

-

7. கோவை

ந்தியத் தொழிலாளி வர்க்கம் கொஞ்சமேனும் அனுபவித்துக் கொண்டிருக்கும் உரிமைகளை மொத்தமாக கருக்கும் விதமாக முதலாளித்துவ எடுபிடி சுயமோகி நார்சிஸ்ட் மோடி அரசு தயாரித்துள்ள தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவைக் கண்டித்து பு.ஜ.தொ.மு கடும் பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் அங்கமாக அந்த சட்ட நகல் எரிப்புப் போராட்டம் தமிழகமெங்கும் செப்.2 வேலை நிறுத்தத்தன்று நடத்தப்பட்டது.

அதிலும், தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகளான பி‌.எம்‌.எஸ் மற்றும் ஐ‌.என்‌.டி‌.யு‌.சி ஆகிய ஆளும் வர்க்கக் கட்சிகளின் நேரடிக் குழந்தைகளான தொழிற்சங்கங்களை நிராகரித்து இந்த கயவாளிகளுக்கு அங்கீகாரம் தேடித் தரும் போலிகளின் சி‌.ஐ‌.டி‌.யு, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி ஆகிய துரோகச் சங்கங்களை புறக்கணித்து உண்மையான பாட்டாளி வர்க்க தொழிற்சங்கத்தின் கீழ் தொழிலாளிகள் அணிதிரள வேண்டும் என்ற கோரிக்கையுடன் பரப்புரையை துவங்கினோம்.

இதே உள்ளடக்கத்துடன் துண்டுப் பிரசுரங்களும் சுவரொட்டிகளும் கடந்த 10 நாட்களாக கோவை முழுக்க பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு ஆலை வாயில்களிலும் ஷிப்ட் கூட்டங்களிலும் ஏராளமான சுவர்களில் எண்ணிலடங்கா கரங்களில் இணையதளத்தில் என பல வடிவங்களில் பரப்புரை செய்தன.

நாம் எதிர்பார்த்தது போலவே மத்திய அரசின் நயவஞ்சகமான ரூ 20,000 குறைந்த பட்ச ஊதியம் என்ற பித்தலாட்ட அறிவிப்பை காரணம் காட்டி பி‌.எம்‌.எஸ் வேலை நிறுத்ததிலிருந்து விலகியது. போலிகளின் சங்கங்களான துரோகக் கூட்டணி சி‌.ஐ‌.டி‌.யு மற்றும் ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி இதனைப் பற்றி வாயே திறக்கவில்லை. இந்த கள்ள மவுனிகள் இன்று இந்த நிமிடம் வரையிலும் கூட்டு நடவடிக்கை குழுவில் (JAC – Joint Action Committee) BMS மற்றும் INTUC உடன் மிக இணக்கமான முறையில் இருந்து வருகிறார்கள். விமர்சனமோ கண்டனமோ ஒன்றும் கிடையாது. இப்படி, எதிரிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு இவர்கள் தொழிலாளி வர்க்கத்துக்கு செய்யும் துரோகம் என்பது மிக மிக அருவெறுப்பூட்டும் ஆபாசமானது. தொழிலாளிகளின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதை மிக நேர்த்தியாக ஒரு கடமையாகவே இந்த ஆளும் வர்க்க “அப்பரசண்டிகள்” செய்து வருகிறார்கள்.

தொழில் நகரமான கோவையில் போலிகளின் தாக்கமும் சாதனைகளும் பல. ஏகப்பட்ட மில்களை மூடியது, தொழிற்சங்கப் போராளிகள் உருவாகுகையிலேயே கருச் சிதைவு செய்தது, தியாகிகளை கொச்சைப் படுத்துவது என பல ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க’ செயல்களை செய்து கொண்டும் இருக்கின்றனர்.

‘ஒரு கம்யூனிஸ்ட் கட்சி. தொழிற்சங்கங்களை அடித்தளமாக கொண்ட கட்சி. தனது அடித்தளமே ஆட்டம் காணும் வகையில் ஒரு அறிவிப்பை அரசாங்கம் செய்கையில் அனுமதி வாங்கி இப்படி ஒரு மொண்ணையான ஆர்ப்பாட்டம் செய்வதா’ என்று ரயில் மறியலுக்கு மிச்சமிருக்கும் ஆளும் வர்க்க சங்கமான INTUC பண்ணையார்களை அழைத்திருக்கிறார்கள். அவர்கள், “நீயே போயி பண்ணிக்கோ போ” எனக் கூறியதும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு தமது மாதர் சங்கத்தினரையும் வாலிபர் சங்கத்தினரையும் ரயில் மறியலில் ஈடுபடுத்தியிருக்கின்றனர்.

இப்படி பகீரத பிரயத்தனம் செய்து 11 மத்திய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். இவர்களின் இந்த நிலைமைக்கும், இவர்களிடம் உள்ள தொழிலாளிகளின் இந்த அரசியலற்ற நிலைமைக்கும் முழுக் காரணமும் இவர்களது ஓட்டுச் சீட்டு அரசியலும் மார்க்சிய-லெனினியம் அற்று போன தலைமையும் தான்.

இந்நிலைமையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் எதிரே நடைபெற்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா எரிப்புப் போராட்டம் 12 பெண் தோழர்களை உள்ளிட்ட 170 தொழிலாளர்களின் பங்களிப்போடு சிறப்பாக நடந்தது.

காலை 10 மணி ஆர்ப்பாட்டத்துக்கு பத்து உளவுப் பிரிவு இரண்டு போலீஸ் வாகனங்களுடன் எட்டரை மணியிலிருந்தே தேவுடு காத்துக் கொண்டிருந்தார் சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் மணிவர்மன். இந்த மணிவர்மன் வேலாண்டி பாளையத்தில் உள்ள பெஸ்ட் தொழிலாளர் போராட்டத்தில் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு தொடர்ச்சியாக போட்டு நீதிமன்றமே வழக்கை திருப்பியனுப்பி மூக்கறுபட்டவர்.

தோழர் ரங்கசாமியின் கணீர்க் குரலில் முழக்கங்களோடு துவங்கிய ஆர்ப்பாட்டம் வெகுமக்களின் பார்வையில் சிறப்பாக இருந்தது.

கோவை பு.ஜ.தொ.மு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதா எரிப்பு
முழக்கம்

முழக்கத்தின் இரண்டாவது ரவுண்டில் சட்ட மசோதாவை தீயை பற்ற வைத்து எரியும் நிலையில் தோழர்கள் வெளியே கொண்டு வர, மணிவர்மனும் உளவுப் பிரிவு ராஜேசும் தாவிவந்து கையிலேயே அணைக்க நம் தோழர்கள் அதை கிழிக்க மிச்சமிருப்பதை பொறுக்கி எடுத்துக் கொண்டு சென்றனர் கடமை தவறாமல். சரி, ஜெயாவுக்கு சாம்பார் வாளி தூக்கி, சரக்கை காவல் காத்து, மக்களிடம் சாணியடி வாங்கிய பெருமை மிகு பாரம்பரியத்துக்கு சொந்தக் காரர்கள் அல்லவா..? இந்த சப்பைக் காயம் அவர்களை எப்படி சோதிக்கும். கையிலிருந்து நகலை பிடுங்கியவுடன், மேலும் தோழர்கள் ஆக்ரோஷமாக முழக்கமிடத் துவங்கினர்.

தோழர் சரவணன்,

‘ஆலைகள், சாலைகள் தனியாருக்கு
ரயில்வே காப்பீடு தனியாருக்கு
கல்வி, மருத்துவம் தனியாருக்கு
வங்கி, மின்சாரம் தனியாருக்கு
எல்லாத் துறையும் தனியார் என்றால்,
மயிரப் புடுங்கவா அரசாங்கம்…
மயிரப் புடுங்கவா அரசாங்கம்…’

என முழக்கமிட, இன்ஸ்பெக்டர் மணிவர்மன் உடனடியாக வந்து ‘மயிரை புடுங்க முடியாவிட்டாலும், மைக்கையாவது புடுங்குவோம் நாங்கள்’ என புடுங்கிக் காட்டினார்.

தோழர்கள் அப்போதும் நிறுத்தாமல் முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். உடனடியாக வண்டிகளை வரவைத்து கைது செய்யத் துவங்கினார்கள். இரண்டு பேருந்துகள் இரண்டு ஜீப்புகள் ஒரு மினி வேனும் சென்ற பின்பு வேறு வண்டியில்லாமல் ரோட்டில் சென்ற ஒரு கால்டாக்ஸியை மடக்கி “ஐயா, கூப்புடுறாங்க..!” என்ற வழக்கமான டயலாக்கை பயன்படுத்தி அவரை பயன்படுத்தினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தொழிலாளிகளை ஆவாரம் பாளையத்தில் உள்ள சி.‌எம் திருமண மண்டபத்தில் அடைத்தார்கள். தொழிலாளிகள் தமக்கே உரிய ஒழுங்கோடு உடனடியாக பிளக்ஸ் கொடிகளை கட்டுதல், நாற்காலிகளை ஒழுங்கமைத்தல் என சிறிது நேரத்தில் அரங்குக் கூட்ட ஏற்பாடுகளை முடித்தனர்.

கோவை பு.ஜ.தொ.மு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதா எரிப்பு
பு.ஜ.தொ.மு கோவை மாவட்டத் தலைவர் குமாரவேலு

சட்ட நகல் எரிப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பு.ஜ.தொ.மு கோவை மாவட்டத் தலைவர் குமாரவேலு அதன் தொடர்ச்சியாக அரங்குக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.

சி‌.எஸ்‌.டபிள்யு மில் செயலாளர் தோழர் முருகேஷ், பங்கஜா மில் செயலர் கோபால், எஸ்‌.ஆர்‌.ஐ தோழர் கனகராஜ், சி‌.ஆர்‌.ஐ கிளைத் தலைவர் தோழர் மூர்த்தி, மண்டல சங்க தோழர் நடராஜ், ஜெகநாதன், மாவட்ட அமைப்பாளர் தோழர் கோபி, மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர் நித்தியானந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர் கவியரசு, தோழர் சரவணன் குழுவினர் பேச்சினிடையே பாடிய அமைப்புப் பாடல்கள் கூட்டத்தினருக்கு உற்சாகமான ஊக்க மருந்தாக இருந்தது.

[நோட்டீசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

உணவு இடைவேளைக்கு பின்னர், தொகுப்புக் கண்டன உரையாற்றிய மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி, போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் சி‌.ஐ‌.டி‌.யு, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி & ஐ‌.என்‌.டி‌.யு‌.சி, பி‌.எம்‌.எஸ் துரோகக் கூட்டணியை விவரித்தார்.

கோவை பு.ஜ.தொ.மு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதா எரிப்பு
தோழர் விளவை ராமசாமி

கடந்த 50 ஆண்டுகளாக கோவையில் தொடர்ச்சியாக பொருளாதாரப் போராட்டங்கள் நடத்திய காரணத்தால் தொழிலாளி வர்க்கம் போராட்ட உணர்வை இழந்து விட்டது. இப்பொழுது பொருளாதார போராட்டம் கூட நடத்த முடியாத அளவுக்கு பலவீனமாகி விட்டனர் தொழிலாளிகள்.

ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் உள்ளே போராட்ட ஆற்றல் உறைந்து கிடக்கிறது. அதனை இனங் கண்டு தட்டியெழுப்ப அரசியல் உணர்வோடு செயல்படுகின்ற தொழிற்சங்கங்கள் எதுவும் கோவையில் கிடையாது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி களத்துக்கு வந்தவுடன் தான் இந்த சில ஆண்டுகளாகத் தான் அரசியல் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அரசியல் போராட்டம் நடத்த துப்பில்லாதவர்கள் தான் ‘தொழிலாளிகள் சரியில்லை. தொழிலாளிகள் வருவதில்லை’ எனப் பழியை போடுகிறார்கள்.

கோவையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அரசியல் போராட்டங்கள் நடந்திருந்தால் இந்நேரம் தொழில் நகரமான கோவை இந்த தொழில் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா முழுவதும் கவனிக்கத்தக்கதாக மாற்றியிருக்கும். ஆகையினால், தொழிலாளி சரியில்லை என்ற புற நிலைமை அப்படித்தான் இருக்கும். நமது அக நிலைமையால் தான் அதனை மாற்ற வேண்டும். இரும்பு இரும்பு என எத்தனை முறை சொன்னாலும் இரும்புதான். அதனை தொழிலாளி கை வைத்தால் தான் பம்பாக மாறும்.”

கோவை பு.ஜ.தொ.மு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதா எரிப்பு
தினத்தந்தி செய்தி

ஆறு மணிக்கு விடுவிக்கப்பட்டவுடன் காவல் துறை செலவில் நாம் அரங்கு மற்றும் உணவு தேநீருடன் அரங்குக் கூட்டம் போட்டதையும் சென்னையில் நடைபெற்ற போராட்ட அனுபவங்களையும் தோழர் விளவை இராமசாமி கூறினார்.

கோவை பு.ஜ.தொ.மு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதா எரிப்பு
காவல் துறை செலவில் நாம் அரங்கு மற்றும் உணவு தேநீருடன் அரங்குக் கூட்டம் போட்டதையும் சென்னையில் நடைபெற்ற போராட்ட அனுபவங்களையும் தோழர் விளவை இராமசாமி விளக்கிக் கூறினார்

பின்னர் அனைவரும் கலைந்து சென்றோம்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கொசுறு : இந்தப் போராட்டத்தை ஒட்டி நாம் ஒட்டியிருந்த சுவரொட்டிகளில் பாரதப் பிரதமர் மோடியை மிகவும் தரக் குறைவாக (முதலாளிகளின் காலை நக்கிப் பிழைக்கும் பி‌ஜெ‌பி மோடி கும்பல்) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி விமர்சித்திருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கமிஷனர் விஸ்வநாதனிடம் பாஜக வழக்குரைஞர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

8. திருச்சி

31-08-2015 அன்று மாலை 4 மணிக்கு பு.ஜ.தொ.முவின் இணைப்பு சங்கமான திருச்சி, பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பாக UNIT-2ல்,  திருச்சி பெல் ஆலை வாயில் கூட்டம்செப்.2 அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றியும், தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்ட தொகுப்பு மசோதாவை தீயிட்டு கொளுத்துவோம் என்ற மைய முழக்கத்தை விளக்கியும் வாயிற்கூட்டம் நடைபெற்றது.

இவ்வாயிற் கூட்டத்திற்கு பாய்லர் பிளன்ட் ஓர்கர்ஸ் யூனியன் உதவித் தலைவர் (பு.ஜ.தொ.மு) தோழர்.பொன்னுசாமி, தலைமை தாங்கினார்.

அவர் பேசுகையில், “ஆகஸ்ட் 22-ல் நடந்த P.F மற்றும் கேண்டீன் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்த நினைக்கிறது. தொழிலாளி வர்க்கம் விழிப்புணர்வு பெற்று இச்சட்ட மசோதாவை முறியடிக்க புரட்சிகர சங்கத்தில் அணிதிரள வேண்டும்” என்றார்.

பு.ஜ.தொ.மு வின் மாநில பொதுச்செயலாளர் தோழர்.சுப.தங்கராசு கண்டன உரையாற்றி பேசுகையில், “செப்-2 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும், தொழிலாளர் நலச் சட்டம் திருத்தப்பட்டு அதனை சட்ட தொகுப்பாக மாற்றியதை ஏன் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்பதின் அவசியத்தை உணர்த்தி பேசினார்.

அரசியல் ஓட்டுகட்சிகளின் சந்தர்ப்பவாத, பிழைப்புவாத தொழிற்சங்கங்கள் 11ம் சேர்ந்து 12 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் நாம் ஒரே அரசியல் கோரிக்கையான முதலாளித்துவ பயங்கரவாத அரசை தூக்கியெறிந்து, தொழிலாளர் நலச்சட்டத் திருத்த மசோதாவை நீக்க வேண்டும். இல்லையேல் அதனை தீயிட்டு கொழுத்துவோம் என்றார்.

திருச்சி பெல் ஆலை வாயில் கூட்டம்சட்டத்திருத்த மசோதா தன்னை புதிய வழிகாட்டும் நெறிமுறை எனக் கூறுக்கொள்கின்றது. இம்மசோதாப்படி இனி பி.எஃப், ஈ.எஸ்.ஐ, போனஸ் சட்டப்படி கிடையாது என்கிறது, போராடி பெற்ற 44 சட்டங்களை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நீக்குகிறது. பி.எஃப் பணத்தை பங்குச் சந்தையில் போட்டு சூதாடி முழுவதுமாக ஏப்பம் விட துடிக்கிறார்கள். 1926-ம் ஆண்டு முதல் போராடி பெற்ற 44 சட்டங்களை ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, தியாகம் செய்து பெற்ற சட்டங்களை ரத்து செய்து முதலாளிகளுக்கு படையல் போட துடிக்கிறார் மோடி.

பட்ஜெட் போடுவதற்கு முன்பு முதலாளிகள் சங்கத்தை சந்திக்கும் நிதிமந்திரியும், பிரதம மந்திரியும், தொழிற்ச்சங்க தலைவர்களை அழைத்து நமது கோரிக்கை என்ன என்பது பற்றி கேட்கக்கூட நேரமில்லை என்கிற அளவுக்கு முதலாளிகளுக்கு உழைக்கிறார்கள். காங்கிரசின் ஐ.என.டி.யூ.சி.யும், பா.ஜ.க-வின் பி.எம்.எஸ்-ம் வேறுவேறு இல்லை, இருவருக்கும் ஒரே கொள்கை முதலாளிகளுக்கு சேவை செய்வது.

மேலும் உலக வர்த்தகக் கழகம் (WTO) எனும் உலக அரசின் உத்தரவுக்கு ஆடுகிறது மத்திய மாநில அரசுகள். 1994 ஒப்பந்தம் கையெழுத்தாகி அன்று முதல் இந்தியாவின் இறையாண்மை கேள்விக் குறியானது. உதாரணமாக மின்சாரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் விநியோகிக்கின்றனர். மொத்த விநியோகத்தில் 3 ல் 2 பங்கு பணக்காரர்களுக்கு ஒரு பங்குதான் பெருமான்மை மக்களுக்கு. மொத்தத்தில் விவசாயிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் பற்றாக்குறை.

கடந்த 5 ஆண்டுகளில் முதலாளிகள் வங்கியில் கடனாகப் பெற்ற 5 லட்சம் கோடி ரூபாயை திருப்பி தர முடியாது என கூறிவிட்டனர். இதற்க்கு எந்த ஜப்தி நடவடிக்கையும் இல்லை. மாறாக மக்கள் 5 ஆயிரம் 10 ஆயிரம் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் உடனே ஜப்தி நடவடிக்கைகள் என மிரட்டுகிறார்கள்.

திருச்சி பெல் ஆலை வாயில் கூட்டம்தனியார்மயம் உலகமயம் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்றார்கள் உதாரணமாக நோக்கியா, ரூ 650 கோடி மூலதனமாகப் போட்டு ரூ 21,500 கோடிக்கு இந்திய அரசுக்கு வரி கட்டாமல் மோசடி செய்து ஏமாற்றி ஆலை மூடல், வேலை பறிப்பு என அடுத்தடுத்த தாக்குதலை நடத்தியும் எதையும் கண்டுகொள்ளவில்லை மத்திய அரசு.

வேலை வாய்ப்பை பெருக்கவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் பொதுத்துறை உருவானது. அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதா என்றால் இல்லை. நிலைமை இவ்வாறிருக்க அரசு துறைகளை ஒழிக்க துடிக்கிறது மோடி அரசு.

சமீபத்திய என்.எல்.சி போராட்டம் குறித்து தலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே செயல்படும் மோடி என்.எல்.சி பிரச்சனையில் தலையிட முடியாது என கூறிவிட்டார்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூடு டாஸ்மாக்கை என போராடினர். போலீசு மிருகங்கள் அவர்களை அடித்து மண்டையை பிளந்தனர். மீண்டும் போராட்டம் தொடர்கிறது. அரசு-அதிகார வர்க்கம் முதலாளிகளின் கைக்கூலி ஏஜென்டாக செயல்படுகிறது. இந்நிலையை ஒழிக்க வேண்டுமென்றால் புரட்சிதான் தீர்வு. சுரண்டலை ஒழித்து மக்களை மகிழ்விக்கும். பு.ஜ.தொ.மு வில் இணையுங்கள் . செப்-2 பு.ஜ.தொ.மு நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வெற்றியடைய செய்யுங்கள் என பேசினார்.

தொழிலாளர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை நின்று பேச்சை கேட்டனர். “நீங்கள் பேசுவதிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டோம்” என தோழரிடம் கை குலுக்கி ஆதரவை தெரிவித்தனர்.

02-09-2015 அன்று தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா 2015-ஐ தீயிட்டுக் கொழுத்துவோம்! என்கிற தலைப்பில் திருச்சி மரக்கடை இராமகிருஷ்ணா தியேட்டர் பகுதியில் காலை 10மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருச்சி தொழிலாளர் சட்ட தொகுப்பு மசோதா எரிப்புஇந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் ராமசாமி தலைமை தாங்கினார். தனது உரையில், “12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 11 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து செப்டம்பர் 2-ல் வேலை நிறுத்தத்தை நடத்தி கொண்டிருக்கின்றன. எந்தக் கட்சிகள் பல ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார்களோ அவர்களுடைய தொழிற்சங்கங்களிடமே கூட்டணி வைத்து அந்தக் கட்சிகளிடமே கோரிக்கை வைத்து கெஞ்சுவதும் போராடுவதும் வாடிக்கையாக வைத்து தொழிலாளர் வர்க்கத்திற்கு துரோகம் செய்கிறார்கள்.

ஆனால் பு.ஜ.தொ.மு மட்டும்தான் ஆளுகின்ற அரசையும் துரோக தொழிற்சங்கங்களையும் அம்பலப்படுத்தி உழைக்கும் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்க்கான போராட்டத்தை முன்னெடுக்கின்றது. எனவே பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர தொழிற்சங்கத்தில் அணிதிரள வேண்டும்” என தனது உரையை நிறைவு செய்தார்.

கண்டன உரையாற்றிய சிவகங்கை பு.ஜ.தொ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர்.நாகராஜ்  பேசும்போது, “இந்திய வரலாற்றில் சென்னை பின்னிஆலை தொழிலாளி வர்க்கம் 1919 ல் இரத்தம் சிந்தி போராடியதன் விளைவாக ஆங்கிலேயரிடம் தொழிலாளர் நலஉரிமைகளை பெற்றது. ஆனால் இன்று 44 வகையான தொழிலாளர் நலச்சட்டங்களையும் பன்னாட்டு முதலாளிகளுக்காகவும், தரகு முதலாளிக்காகவும் திருத்துகின்றது இந்த மோடி அரசு. புதிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை முன்னேற்றும், வேலைவாய்ப்பை பெருக்கும் என்று ஆளும்வர்க்கம் சொன்னது. ஆனால் நாட்டை முன்னேற்றவில்லை.

கேம்பஸ் இண்ட்ர்வியூ மூலம் மாணவர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டுகின்றனர் . இந்த அரசுக் கட்டமைப்பு தானே வகுத்த விதிகளை கூட செயல்படுத்த முடியாமல் தோற்றுபோய் திவாலாகிப் போயிருக்கிறது. இந்நிலையில் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி, பி.ஜே.பியின் பி.எம்.எஸ்-ம் எப்படி தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக செயல்படுவார்கள். இவர்களிடம் கூட்டணி வைத்துதான் துரோகம் செய்கிறார்கள் போலிகம்யூனிஸ்டுகள். இத்தகைய ஓட்டு கட்சிகளின் போலி தொழிற்சங்கங்களை புறக்கணித்து பு.ஜ.தொ.மு வில் இணைந்து மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்” என உரையை முடித்தார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய திருச்சி மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் தோழர் காவிரிநாடன் பேசுகையில் தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பதை வலியுறுத்தி இன்றைய போராட்டம் தனிப்பட்ட தொழிலாளிகளுக்கானது அல்ல. ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கான போராட்டம் என்பதை எளிமையாக விளக்கி பேசினார்.

“பல நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்கின்ற மோடி அங்குள்ள முதலாளிகளுக்கு சவால் விடுகின்றார். நீங்கள் உங்கள் அதிஷ்டத்தை சோதிக்க விரும்பினால் இந்தியாவிலேயே தொழில் தொடங்கிப்பாருங்கள் என்கிறார். அதற்கு தோதாக காலனியாதிக்க காலத்தில் இருந்து தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற 44 நலச்சட்டங்களையும் சுதந்திர இந்தியாவில் கார்ப்ரேட் , பன்னாட்டு நிறுவனங்களுக்காக காவு கொடுக்கப்படுகின்றன.

துரோக தொழிற்சங்கங்களின் கட்சிகள் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றுகின்றனர். அப்புறம் எப்படி தொழிலாளி வர்க்க நலனுக்காக செயல்படமுடியும்.

இன்று நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் போலிகம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கம் உள்ளிட்டு 11 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. பி.எம்.எஸ்,  ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்களின் கட்சிகள் மறுகாலனியாக்க கொள்கைகளை முற்றுமுழுதாக ஏற்றுகொண்டு அமுல்படுத்துபவை. அவர்களுடன் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.சி.ஐ.டி.யு, ஏ.இ.சி.சி.டி.யு வும் ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்டு எதிரிகளை காப்பாற்றுகின்றனர். எனவே தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகளையும் அதனை பாதுகாக்கும் இந்த அரசமைப்பையும் அடித்து நொறுக்காமல் தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியாது” என தனது உரையை முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பட்டத்தின் இடையிடையே தொழிலாளர் நலச்சட்டம் திருத்தப்படுவதற்கு எதிராக விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய மைய கலைகுழுவின் புரட்சிகர பாடல்கள் குழுமியிருந்த மக்களுக்கும், தோழர்களூக்கும் புரட்சிகர உணர்வூட்டியது.

திருச்சி தொழிலாளர் சட்ட தொகுப்பு மசோதா எரிப்பு
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய மைய கலைகுழுவின் புரட்சிகர பாடல்கள்

இறுதியாக சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் முத்துக்கருப்பன் நன்றிவுரையாற்றினார்.

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி கிளை.
தொடர்புக்கு: தோழர்.சுந்தரராசு. பேச: 8903042388.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க