privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தமிழகமெங்கும் மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !

தமிழகமெங்கும் மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !

-

1.  ஆவடி

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற
தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்!

ஆவடியில் ஆர்ப்பாட்டம் – மசோதா தீயிடப்பட்டது!

மோடி கும்பல் முன்வைத்துள்ள தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவானது தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற கொடுஞ்செயல் என்பதால் இந்த மசோதாவை செப்டம்பர் 2 அன்றுதீயிட்டுக் கொளுத்துவதென புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவல் விடுத்தது.

ஆவடியில் மசோதா தீயிடப்பட்டது!
ஆவடியில் மசோதா தீயிடப்பட்டது!

இதனை அடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்டக் குழு சார்பில் ஆவடியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தலைமையில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கியது. சுமார் 400 தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிர முழக்கமிடப்பட்டது.

பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார். “தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக்கட்டி இந்திய தொழிலாளி வர்க்கத்தை பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்திய தரகு முதலாளிகளின் இலாபவெறிக்கு பலியிடுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; அரசுக் கட்டமைப்பு முழுவதும் தனது பொறுப்பு என்று சொல்லிக்கொண்டதற்கு எதிர்நிலை சக்தியாக மாறி விட்டது” என்று அமபலப்படுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்த முயன்ற போது அதனை பாய்ந்து தடுத்தது, போலீசு.

இதனை எதிர்பார்த்த தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு-வின் இணைப்புச் சங்கம் செயல்படுகின்ற முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் ஆலை எதிரில் மசோதாவை தீயிட்டுக் கொளுத்தினர்.

முன்னதாக முருகப்பா குழுமத்தின் மற்றொரு ஆலையான டியூப் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் வாயிலிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்.

2. ஒசூர்

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்!

சொல்லிவைத்த மாதிரி ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி.யின் பரிவாரங்களில் ஒன்றான பி.எம்.எஸ். அகில இந்திய வேலைநிறுத்தத்தில் இருந்து விலகிக் கொண்டது. மோடி அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச கூலியை உயர்த்தப் போவதாக மோடி அரசின் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஒரு வதந்தியைத் திட்டமிட்டே பரப்பியுள்ளனர். இந்த சதித்தனங்கள் எல்லாம் நேர்மையான அரசியல் நோக்கர்கள் எதிர்ப்பார்த்த ஒன்றுதான்.

இவ்வாறு ஐ.என்.டி.யு.சி., பி.எம்.எஸ்.-டன் போலி கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் கூட்டணி வைத்து வேலை நிறுத்தம், போராட்டங்களில் பங்கேற்பதும், அவை போராட்டம் தீவிரமாக போகும் போது விலகிக் கொள்வதும் வழக்கமானது. இந்த உண்மை நன்கு தெரிந்துதான், போலி கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் (ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ.) இந்த சங்கங்களுடன் கூட்டணி வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன.

‘தொழிலாளர்களின் உரிமைப் பறிப்பு மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான நில அபகரிப்புச் சட்டம், மோட்டார் சட்டத் திருத்தம் போன்ற அனைத்தையும் எதிர்த்து, ஆளும் வர்க்கத்தின் கோடாரிக் காம்பு போன்ற பி.எம்.எஸ்.-ஐ.என்.டி.யூ.சி.யுடன் சேர்ந்து முறியடிக்க முடியும்’ என கருத்தை உருவாக்குவது, இந்த ஆளும் வர்க்கத்தின் புதிய அடக்குமுறைகளின் பால் தொழிலாளர்களின் கண்ணோட்டத்தை சுருக்கி, நெருக்கி காட்டுவதற்குத்தான் என்பதை நாம் உணரவேண்டும். போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்குதான் என்பதையும் உணரவேண்டும். வர்க்க உணர்வை மழுங்கடிப்பதுதான்!

தங்களது முதுகில் குத்திய பி.எம்.எஸ்.-ன் துரோகத்தைக் கண்டித்து, சி.பி.எம்.மின் தீக்கதிர் ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தனது தலையங்கத்தில் பி.எம்.எஸ்.சின் இந்தத் துரோகத்தை துரோகம் என்று கூட சொல்லாமல், தகவலாக சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

இந்தியத் தொழிலாளர்கள் மீதும் உழைக்கும் மக்கள் மீதும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடுத்துள்ள மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தில் பி.எம்.எஸ்-ஐ.என்.டி.யூ.சி.யுடன் கூட்டு வைக்கக் காரணம், ஆளும் வர்க்கத்திற்கு எந்த நெருக்கடியும் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுணர்வுதான். ஆளும் வர்க்கப் பாசம்தான்! இந்த போலி கம்யூனிஸ்டுகள் இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தை அறிவித்தன் மூலம், தொழிலாளியின் தோழன் என்று காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றன. இந்த பச்சையான துரோகத்தை தொழிலாளி வர்க்கம் திரைகிழித்து முன்னேறும்!

இந்த துரோகத்தையும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்புத் திருத்தப்படுவதையும் எதிர்த்து அடையாளப் போராட்டங்களின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது என்பதை உணர்த்தும் வகையிலும் ஒசூர் தொழிற்பேட்டையில் பு.ஜ.தொ.மு. பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று முழங்கி வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஒசூர் நகரில் பு.ஜ.தொ.மு. தலைமையில் தொடர்ச்சியான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

  • லேலாண்டு தொழிற்சாலை முன்பு வாயில் கூட்டம், முழக்கமிட்டு நடத்தினர்.
  • பத்தளப்பள்ளியில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பேருந்து நிறுத்தத்தில் எழுச்சிகரமான தெருமுனைக் கூட்டம் நடத்தினர்.
  • சின்ன எலசகிரி பகுதியில் அனைத்து மக்களுக்கும் உணர்த்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தினர்.

இந்தப் பிரச்சாரங்களின் மூலம் ஒசூரின் மூலை முடுக்குகளிலெல்லாம் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இவ்வியக்கத்தின் முக்கியத்துவம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், பல ஆலைகள் முன்பாக இந்த வேலை நிறுத்தத்தை தொழிலாளர் அதிகாரத்துக்கான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தையும் பிழைப்புவாத தொழிற்சங்கங்களின் தலைமையைப் புறக்கணிக்கக் கோரியும் பிரச்சாரம் செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செப்டம்பர் 2-ம் தேதி,

தொழிலுறவு சட்டத் தொகுப்பினை தீயிட்டுக் கொளுத்துவோம்! தீ பரவட்டும்!!

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைக் காவு கொடுக்கின்ற
தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவைத்
தீயிட்டுக் கொளுத்துவோம்!

என்ற முழக்கத்துடன் ஒசூரில் ஊர்வலம், சட்டத் தொகுப்பு நகல் எரிப்பு, ஆர்ப்பாட்டம் நடத்தி பு.ஜ.தொ.மு. தோழர்கள் கைது ஆனார்கள்.

  • ndlf-set-fire-to-modi-labour-law-amendments-hosur-5தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது சட்டத் தொகுப்பு மசோதா!
  • முதலாளிகளது காலை நக்கிப் பிழைக்கின்ற பி.ஜே.பி. – மோடி கும்பலுக்கு பதிலடி கொடுப்போம்!
  • துரோகக் கூட்டணியான பிழைப்புவாத தொழிற்சங்கங்களது தலைமையை விரட்டியடிப்போம்!
  • செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கான போராட்டமாக முன்னெடுப்போம்!
ஒசூர் பு.ஜ.தொ.மு ஊர்வலம்
ஊர்வலத்திற்கு பு.ஜ.தொ.மு.வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமை தாங்கினார்

ஆகிய முழக்கங்களை முன்வைத்து பு.ஜ.தொ.மு. தலைமையில் செப்டம்பர் 2 காலை 10 மணியளவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தோழர்கள் பாகலூர் சாலையில் உள்ள சங்கீத் ஆடிடோரியம் அருகில் இருந்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்திற்கு பு.ஜ.தொ.மு.வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமை தாங்கினார். ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக வந்த போது போலீசு தோழர்களைக் கைது செய்ய முயற்சித்தது. அப்போது தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவைத் தீயிட்டுக் கொளுத்துவோம் என்று முழக்கமிட்டபடியே சட்டத் தொகுப்பு படிவங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். போலீசு தோழர்களைக் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

***

இந்த வேலை நிறுத்தத்தை “அடையாளப் போராட்டமாக” முடக்க விரும்பிய பிழைப்புவாதத் தொழிற்சங்கங்கள் ஒசூரில் மூன்று இடங்களில் ‘போராட்ட’த்தை நடத்தின.

ராம் நகரில் TVS-ன் வளப்புப் பிராணியான INTUC தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஊறுகாய் போல ஒத்துழைப்புக்கு சி.ஐ.டி.யூ. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரட்டப்பட்ட பல தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் ரூ 15,000 வாங்கித்தருவதற்காக கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்ததாக சில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அடுத்து, இரயில் நிலையம் முன்பாக “இரயில் மறியல்” என்ற அடையாளப் போராட்டத்திற்காக AITUC சங்கத்தினர், தளி எம்.எல்.ஏ.வின் ஆட்கள் காலை 10 மணி முதல் காத்திருந்தனர். இவர்கள் காத்திருந்தது இரயிலுக்காக மட்டுமல்ல, மேக்கப் மன்னன் தளி இராமச்சந்திரனுக்காக. இரயில் வரும் நேரமறிந்தவுடன் ராமச்சந்திரனும் வந்தார். ‘இரண்டையும்’ சந்திக்கவிடாமல் அதாவது இரயிலை மறிக்கவிடாமல் போலீசு “தடுத்ததால்” கைது செய்யப்பட்டார்.

இவ்விரண்டு கோஷ்டிகளிடமும் ஒட்டமுடியாத சி.பி.எம். தனித்து விடப்பட்டதால் அவர்கள் காந்தி சிலை அருகில் அனாதையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

இந்த அடையாளப் போராட்டங்களுக்கு கூட அடி அறுத்துவிட்டது பி.எம்.எஸ். இந்த அசிங்கத்தின் அடையாளம் கூட தெரியாத படி, எல்லா சுவரொட்டிகளிலும் பி.எம்.எஸ். பெயர் இடம்பெற்றுள்ளது. அதாவது, பி.எம்.எஸ்.-ன் துரோகத்தை துரோகம் என்று ஏன் இவர்களால் கருத முடியடிவில்லை. காரணம், இவர்கள் தொழிலாளர்களை ஏமாற்றுகின்ற வகையில் அடையாளத்திற்கு போராட்டம் செய்வதால்தான்!

பி.எம்.எஸ் துரோகம்
இந்த அசிங்கத்தின் அடையாளம் கூட தெரியாத படி, எல்லா சுவரொட்டிகளிலும் பி.எம்.எஸ். பெயர் இடம்பெற்றுள்ளது.

கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாளான மோடி அரசினால் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொகுக்கப்பட்டுவரும் பெரும் தாக்குதலை எதிர்த்து முறியடிக்க வேண்டியது இன்று அவசிய அவசரக் கடமையாக உள்ளது. அவ்வாறு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனில் தொழிலாளர்கள் இந்த அரசுக்கு எதிரான தீர்மானகரமான போராட்டத்தில் இறங்கிவிடுவர் என்று அஞ்சுகின்றன ஆளும் வர்க்கங்கள்! இந்த போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கடமையை போலி கம்யூனிஸ்டுகள் தலைமையிலான AITUC, CITU, FITU போன்ற தொழிற்சங்கங்கள் செய்து வருகின்றன. இதன் மூலம் தொழிலாளி வர்க்கம், வர்க்க உணர்வு பெற்றுவிடாமல் தடுத்துவிடலாம் என்று பகல்கனவு காண்கின்றன.

உண்மையில், அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் மோடி அரசின் தாக்குதலை பொருளாதார ரீதியான தாக்குதலாக மட்டுமே சுருக்கிப் புரிந்து வைத்துள்ளனர். அமைப்பு சாரா பல கோடி தொழிலாளர்களுக்கு மோடி அரசின் தாக்குதல் பற்றி எதுவும் தெரியாது. தங்களுக்கு இன்னின்ன உரிமைகள் இருக்கின்றன என்று கூடத் தெரியாது. இந்தச் சூழலில், தொழிலாளர்களுக்கு மோடி அரசின் அடக்குமுறைகளின் பரிமாணத்தை உணர்த்தி, அவர்களை அணிதிரட்டும் கடுமையான பணி தொழிலாளி வர்க்கத்தின் முன்னே காத்துக் கிடக்கிறது. இந்தச் சூழலில் அடையாளப் போராட்டங்கள் மூலம் தொழிலாளர் உணர்வை மழுங்கடிக்க செய்யும் பிழைப்புவாத சங்கங்களின் துரோகத்தை அம்பலப்படுத்துவதும் அவசியமான பணியாக உள்ளது.

இந்தத் துரோகத்தை திரைகிழித்து தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுவது மட்டுமல்ல, கார்ப்பரேட் முதலாளிகளின் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க தொழிலாளர் வர்க்க அதிகாரத்தை ஒவ்வொரு ஆலையிலும் ஒவ்வொரு தொழிற் பேட்டியிலும் நிலைநாட்டாமல் பு.ஜ.தொ.மு. ஓயப்போவதில்லை! இந்திய கார்ப்பரேட் முதலாளிகளும் அதன் அடிவருடிகளும் அந்த நாளுக்காக காத்திருக்கட்டும்!

தகவல்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்.

3. கோத்தகரி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு சட்டத் தொகுப்பு நகல் தீயிட்டு எரிக்கப்பட்டது.

காலை 11.00 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் – நகலெரிப்பு போராட்டத்திற்கு சங்க உறுப்பினர்கள், வாகனப்பிரிவு தோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழர் சுப்பிரமணி (வாகனப்பிரிவு தலைவர்) முன்னிலை வகிக்க பொருளாளர் தோழர்.விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மத்திய பி.ஜே.பி. மோடி அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்தும், தொழிலாளி வர்க்க உணர்வின் எழுச்சியாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டச் செயலர் தோழர் பாலன் கண்டன உரையாற்றினார்.

அவரது உரையில் “தொழிலாளர்களுக்கு எதிராக காங்கிரஸ்-பி.ஜே.பி. உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் முதலாளிக்கு வாலாட்டுகின்றன. ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களின் தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகமிழைக்கின்றன. எனவே அவற்றை புறக்கணித்து புரட்சிகர சங்கங்களில் அணிதிரள வேண்டும்” என்றார்.

மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் ஆனந்தராஜ் ஆற்றிய உரையில், “போராடுகின்ற தொழிலாளர்களையும் மதுவுக்கு எதிராக போராடும் மாணவர்களையும் போலீசை வைத்து ஒடுக்கும் அரசு மக்களுக்கு எதிரானது. அதனை முறியடிக்க மக்கள் தாங்களே அதிகாரத்தை எடுக்க வேண்டும்” என்று அறைகூவினார்.

இறுதியில் தோழர் ராஜா நன்றியுரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் –
பாலன்,
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி

4. புதுச்சேரி

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைக் காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! – புதுச்சேரியில் மறியல்

labour-law-bill-ndlf-protest-puduvai-01

தொழிலாளர்களே,

  • தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது சட்டத் தொகுப்பு மசோதா!
  • முதலாளிகளது காலை நக்கிப் பிழைக்கின்ற பிஜேபி – மோடி கும்பலுக்கு பதிலடி கொடுப்போம்!
  • துரோகக் கூட்டணியான பிழைப்புவாத தொழிற்சங்கங்களது தலைமையை விரட்டியடிப்போம்!
  • செப் – 2 வேலை நிறுத்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கான போராட்டமாக முன்னெடுப்போம்!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து செப்டம்பர் – 2 அன்று காலை 10.00 மணிக்கு புதுச்சேரி நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிக்னலில் தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே பகுதியில் உள்ள போலி சங்கங்களான சி.பி.ஐ, சி.பி.எம், சி.பி.ஐ (எம்.எல்) உடன் வி.சி.க தொழிற்சங்கமும் இணைந்து நாம் தேர்வு செய்திருந்த இடத்தையும் உள்ளிட்டு நகரின் முக்கியமான 11 இடங்களில் கூட்டாக மறியல் செய்வதாக அறிவித்து இருந்தன. எனவே, நேரடி நிலைமைகளை அவதானித்து அவர்களது மறியலுக்கு முன்னரோ பின்னரோ நாம் போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் மொத்தமே 50 பேருடன் அப்போராட்டத்தை அரைமணி நேரத்திற்குள்ளாகவே நடத்தி முடித்து கைதாயினர்.

புதுச்சேரி பு.ஜ.தொ.மு சட்டத் தொகுப்பு மசோதா தீவைப்பு
தொழிலாளர்களின் உரிமையைக் காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

அவர்களின் கைதுக்குப் பின் நமது போராட்டம் 10.45 க்குத் தொடங்கியது. போராட்ட இடமான இந்திராகாந்தி சிக்னலில் நாலாபுறங்களில் இருந்து தோழர்கள் குவிந்து சிக்னலில் விண்ணதிரும் முழக்கங்களுடன் தொழிலாளர்களின் உரிமையைக் காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. தொடர்ந்து அரைமணி நேரத்திற்கும் மேலாக முழக்கங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

போலிசோ கைது செய்யும் முடிவில் கூட இல்லை. “நீங்கள் இப்படியே கூட கலைந்து செல்லலாம்” என பேசிப் பார்த்தனர்.

“நாங்கள் எங்களது உரிமையை நிலைநாட்ட வந்துள்ளோம். கைதுக்கு அஞ்சவில்லை, தயாராக இருக்கிறோம்” என்று சொன்னவுடன் கைது செய்தது போலிசு.

கைது செய்து நம்மைக் கொண்டு சென்ற இடத்திலும் சாலையில், நமது முழக்கங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. ஏற்கனவே நமக்கு முன்னால் மறியல் நடத்திய வி.சி.க மற்றும் போலி கம்யூனிஸ்டு சங்கங்களை அங்கே கொண்டு வந்திருந்தது. போலிசின் வழக்கமான நடைமுறைகளுக்குப் பின் வெளியில் வந்த போலி கம்யூனிஸ்டு சங்க தலைவர்கள் நின்று நமது முழக்கத்தின் வீச்சைக் கண்டு ஒதுங்கி நின்றனர். சி.பி.ஐ(எம்.எல்)-ன் சோ.பாலசுப்ரமணியன் அவர்கள் மட்டும், “காம்ரேட், உங்களது ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்று கை கொடுத்து சென்றார். அவர்கள் 11 இடங்களில் நடத்திய மறியலின் ஒட்டுமொத்த அணிதிரட்டலை விட நமது தோழர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது என்பதில் இருந்தே போலி கம்யூனிஸ்டுகளுக்கு தொழிலாளர்கள் மத்தியில் உள்ள ‘செல்வாக்கை’ புரிந்து கொள்ள முடிந்தது.

கைதாகி தோழர்கள் அடைக்கப்பட்ட இடத்தில், “நமது சங்கத்தை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அழைத்துப் பேசியதில் நாம் உணர வேண்டியது என்ன? அப்துல் கலாம் மரணம், உண்மையில் நாட்டுக்கு இழப்பா?” என்பதை விளக்கும் வகையில் உரை நிகழ்த்தப்பட்டது. தோழர்கள் உணர்வுபூர்வமாக கேட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செப்டம்பர் – 2 அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஓட்டுக் கட்சி சங்கங்கள் அடையாளப் போராட்டமாக நடத்திய வேளையில், ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைக் காவு கொடுக்கின்ற சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவது மட்டுமல்லாது, இந்த ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பும் உழைக்கும் மக்களுக்கான தனது கடமைகளை ஆற்ற முடியாமல் தோற்றுப் போய், மக்களுக்கு எதிராக செயல்படுகின்றது. மொத்தத்தில் அரசுக் கட்டமைப்பு ஆளும் தகுதியிழந்து போய்விட்டது. உரிமைக்காகப் போராடிய காலம் இன்று இல்லை. மாறாக, அதிகாரத்தைக் கையிலெடுக்கும் வகையில் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான அறைகூவலாய் அமைந்தது இந்தப் போராட்டம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: தோழர். பழனிசாமி. 9597789801.

5. சிறீபெரும்புதூர்

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற, தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம் என்ற தலைப்பில் செப்டம்பர் – 02, திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை இரவோடு இரவாக போலீசு கிழித்தது.

இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன் காலை 6 மணி முதல் 8 மணி வரை தொழிலாளர்கள் மத்தியில் பிரசுரம் வினியோகித்தோம். ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் திரு. பாலு, “ஆர்ப்பாட்டம் சரியாக 9 மணிக்குள் முடிக்க வேண்டும்” என திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கான பேனரை விரிக்க முற்பட்டபோது, அதில் “தீயிட்டுக் கொளுத்துவோம்” என்ற வாசகம் வன்முறை தூண்டுகிற விதமாக இருக்கிறது என கூறி பேனரை வைக்கக்கூடாது எனவும், அவ்வாறு பேனரை வைப்பது என்றால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு என வாய்மொழியாக கூறி, ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதற்கான வேலையில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்டச் செயலாளர் தோழர் சிவா, “ஒரு சாதாரண ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு ஆயிரத்து எட்டு விதிகளை போடுகிறது. தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை அழிக்கின்ற முதலாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் தொழிலாளிகள் எடுக்க கூடாது என்பதை, அவர்களின் அடியாள் படையான போலீசு ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணித்து வருகிறது.” என்றார்.

அடுத்து கண்டன உரையாற்றிய மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன், “இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்னே நாம் எப்படி நடத்த வேண்டும் என்று போலீசு தீர்மானிக்கிறது. இந்த ஜனநாயகத்தின் யோக்கியதை என்ன என்பதை அவர்களுடைய செயலின் மூலம் உணர்ந்தினார்கள். மேலும் நாங்கள் முதலாளிகளின் அடியாள்தான் என்பதை நிரூபித்து காட்டினார்கள். தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா கொண்டு வந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்” என்பதை சுருக்கமாக பேசினார்.

ஆர்ப்பாட்டத்தை அங்கங்கே நின்று கவனித்த தொழிலாளர்களை போலீசு விரட்ட முயன்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாகன ஒட்டுநர் சங்கம் மற்றும் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேரந்த கிளைச் சங்க தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் குழைந்தைகள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம், தொடர்புக்கு 88075 32859

6. கும்மிடிப்பூண்டியில் மோடி மசோதா எரிப்பு – படங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க