privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்வெண்ணெய்த் திருடன் கண்ணன் - எண்ணெய்த் திருடன் மோடி

வெண்ணெய்த் திருடன் கண்ணன் – எண்ணெய்த் திருடன் மோடி

-

ரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலையைவிட, ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருக்கும் அதிசயத்தக்கதொரு சூழலில் இன்று உலகம் நிற்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பன்னாட்டு சந்தையில் 106.85 அமெரிக்க டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் (159 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை தற்பொழுது கிட்டதட்ட 30 அமெரிக்க டாலர்களாகக் குறைந்துவிட்டது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, உலகப் பொருளாதார மந்த நிலை என்ற எதிரும் புதிருமான நிலைமைகள் மற்றும் அமெரிக்காவின் அரசியல் கணக்குகள் ஆகியவை காரணமாகப் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 30 டாலருக்குக் கீழாகவும் சரியும் என்று ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களும், அவற்றைச் சேர்ந்த நிபுணர்களும் கருத்துக் கூறி வருகின்றனர்.

வரிக் கொள்ளையர்கள்: நரேந்திர மோடி மற்றும் அருண்ஜெட்லி
வரிக் கொள்ளையர்கள்: நரேந்திர மோடி மற்றும் அருண்ஜெட்லி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 106.85 டாலராக இருந்தபொழுது, இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.71.41, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.56.71 என இருந்தன. அச்சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க., இந்த விலையை “மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பெரும் சுமை” என சவுண்டுவிட்டு, அப்பொழுது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங்கைக் கண்டித்து வந்தது. இப்பொழுது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நான்கில் ஒரு பங்காகச் சரிந்துவிட்டது. ஆனால், பா.ஜ.க.வின் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நான்கில் ஒரு பங்குகூட வேண்டாம், நான்கில் இரண்டு பங்காகக்கூடக் குறையவில்லை.

கச்சா எண்ணெய் விலை 30 டாலராகச் சரிந்துவிட்டதையடுத்து, ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.19.95 ஆகக் குறைந்துவிட்டது. ஒரு லிட்டர் டீசலின் அடக்கவிலை அதனைவிடக் குறைவாக (ரூ.15.04) உள்ளது. ஆனால், இந்தியச் சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோலும் டீசலும் அவற்றின் அடக்க விலையைவிட மூன்று மடங்கு அதிகமாக அறுபது ரூபாய்க்கும், ரூ.44-க்கும் விற்கப்படுகின்றன.

உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டளைக்கு அடிபணிந்தும், இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக முதலைக் கண்ணீர் வடித்தும் பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிப்பதில் அரசுக்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளைக் கைகழுவி, பெட்ரோல், டீசலுக்கு வழங்கி வந்த ‘மானியங்களை’ முற்றிலுமாக நிறுத்திக் கொண்டுவிட்டது இந்திய அரசு. ‘மானிய’ விலையில் மண்ணெண்ணெயும், சமையல் எரிவாயுவும் விநியோகிப்பதில் வரம்புகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பன்னாட்டு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளைப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றி (ஏற்றி) அமைக்கும் சீர்திருத்தம் புகுத்தப்பட்டிருக்கிறது. இத்தனியார்மய-தாராளமய நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயரத் தொடங்கின.

முகேஷ் அம்பானி
பெட்ரோல் விலையேற்றத்தால் கொள்ளை இலாபமடையும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி…

புண்ணுக்குப் புனுகு தடவும் தந்திரத்தைப் போல, “பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கூடினால்தான் பெட்ரோல், டீசல் விலைகள் கூடும். அங்கு இறங்கினால், அதன் முழுப் பயனும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்” எனக் கூறி, இத்தனியார்மயத் தாக்குதலை நியாயப்படுத்தி வருகிறது, இந்திய அரசு. இதோ, 106 டாலருக்கு மேல் விற்கப்பட்ட கச்சா எண்ணெய் 30 டாலராகச் சரிந்துவிட்டது. இந்த சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகள் ஏன் குறையவில்லை என்ற கேள்விக்கு அதிகார வர்க்கமும், மோடி அரசும் மட்டுமல்ல, தனியார்மயத்தை ஆதரித்துப் பேசிவரும் கனவான்களும் பதில் அளிக்க மறுக்கிறார்கள். தனியார்மயத்தின் கீழ் அனைத்துவிதமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை, கட்டணத்தை சந்தைதான் தீர்மானிக்கும் எனத் தனியார்மய தாசர்கள் சாமியாடுவதெல்லாம் முழுப் பொய், பித்தலாட்டம் என்பதை அறுபது ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் அம்பலப்படுத்துகிறது.

2014 ஏப்ரலில் 106 டாலர்களாக இருந்து கச்சா எண்ணெய், 2015 ஜனவரியில் 46 டாலர், நவம்பரில் 42 டாலர்கள், இப்பொழுது 29.85 டாலர்கள் எனக் கடந்த ஓராண்டாக கடகடவெனச் சரிந்து விழுந்து வருவதன் பலனையும்; இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் விலைகள் செயற்கையாகத் தூக்கி நிறுத்தப்பட்டிருப்பதால் கிடைக்கும் இலாபத்தையும் இந்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் அனுபவிக்கவில்லை. கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிலில் இறங்கியிருக்கும் ரிலையன்ஸ், எஸ்ஸார், கெய்ர்ன் இந்தியா, பிரிட்டிஷ் பெட்ரோலியம், சென்னை பெட்ரோலியம், அபான் ஆஃப் ஷோர், இந்திரபிரஸ்தா கேஸ், ஷெல் உள்ளிட்ட இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களும், பன்னாட்டு ஏகபோக எண்ணெய் நிறுவனங்களும் இந்தப் பகற்கொள்ளையில் பங்குதாரர்களாக உள்ளனர்.

இந்த நிறுவனங்களுக்கு அப்பால், பெட்ரோலியப் பொருட்களை நம்பி தொழில் செய்யும் பல கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளையும் வீங்க வைத்திருக்கிறது, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி. பெட்ரோல், டீசலை நேரடியாகச் சார்ந்து நிற்கும் மாருதி சுசுகி, ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள்; பெட்ரோலியப் பொருட்களை மூலப் பொருட்களாகப் பயன்படுத்தும் அப்போலா டயர்ஸ், டி.வி.எஸ்.சக்ரா, எம்.ஆர்.எஃப். உள்ளிட்ட வாகன டயர் தொழில் நிறுவனங்கள்; பெயிண்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், பெர்கர் பெயிண்ட்ஸ்; விமான போக்குவரத்து நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட்; நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பாட்டா, இமாமி, இந்துஸ்தான் லீவர், டாபர் இந்தியா உள்ளிட்ட பெரும் தரகு முதலாளித்து நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை சரிவால் 66,000 கோடி ரூபாய் அளவிற்கு இலாபம் அடைந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்திய அரசு மற்றும் இந்த சிறு கார்ப்பரேட் கும்பலைத் தாண்டி கச்சா எண்ணெய் விலை சரிவினால் பொதுஜனம் அடைந்திருக்கும் பலனைப் பூதக் கண்ணாடி கொண்டுதான் தேட வேண்டியிருக்கிறது.

எஸ்ஸார் நிறுவனத் தலைவர் சசி ரூயா.
…மற்றும் எஸ்ஸார் நிறுவனத் தலைவர் சசி ரூயா.

கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி ஜனவரி வரையுள்ள ஆறு மாதங்களில் பன்னாட்டு சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலை பத்து முறையும், டீசல் விலை ஆறு முறையும் குறைக்கப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டுகிறது, மோடி அரசு. ஆனால், இந்த விலைகுறைப்பு கடைந்தெடுக்கப்பட்ட மோசடி, நாடகம் என்பதே உண்மை. கடந்த இரண்டு ஆண்டுகளில் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை எழுபது சதவீதத்திற்கு மேலாகக் குறைந்துள்ள நிலையில் வெறும் 20 சதவீதம் அளவிற்கு மட்டுமே பெட்ரோல், டீசலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்னொருபுறமோ இந்த அற்பமான விலை குறைப்பைக் காட்டிலும் அதிகமாக பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரியை உயர்த்தி வருகிறது மோடி அரசு.

குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஐம்பது பைசா, ஒரு லிட்டர் டீசலுக்கு 46 பைசா என 96 காசுகள் அளவிற்கு விலையைக் குறைத்த கையோடு, அவற்றின் மீது விதிக்கப்படும் கலால் வரி ரூ.1.47 ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32 பைசா, ஒரு லிட்டர் டீசலுக்கு 85 பைசா என ரூ.1.17-ஐ குறைத்த கையோடு, அவற்றின் மீது விதிக்கப்படும் கலால் வரி ரூ.2.58 ஆக அதிகரிக்கப்பட்டது.

petrol-price-modi-theft-4கடந்த 13 மாதங்களில் (ஜன.2015 முதல் ஜன.2016 முடிய) ஐந்து தவணைகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.6.65-ம், ஒரு லிட்டர் டீசல் மீதான கலால் வரி ரூ.7.40 அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரிக்குள் மிகவும் குறுகிய கால இடைவெளியில் (நவ.7, டிச.16, ஜனவரி 15) பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அடுத்தடுத்து மூன்று தவணைகளில் ஆறு ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மோடி பிரதமராகப் பொறுப்பேற்றபொழுது ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9.48 ஆகவும் ஒரு லிட்டர் டீசலின் மீதான கலால் வரி ரூ.3.56 ஆகவும் இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த கலால் வரி படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று அது பெட்ரோலுக்கு ரூ.19.37, டீசலுக்கு ரூ.13.83 என விண்ணைமுட்டும் அளவிற்குச் சென்றுவிட்டது. கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதெல்லாம் கலால் வரியை உயர்த்தி, அதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளைச் செயற்கையாகத் தூக்கி நிறுத்தியிருக்கிறது, மோடி அரசு. இத்தகைய கயமைத்தனமான வரிச்சுமை மக்கள் மீது திணிக்கப்படாதிருந்தால், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை தற்போது இருப்பதைவிட பத்து ரூபாய் குறைவாக இருந்திருக்கும். மாறாக, இந்த செயற்கையான விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் மற்றும் கலால் வரி உயர்வின் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானம் – என இரண்டு விதமாகக் மக்களைக் கொள்ளையடித்து வருகிறது, மோடி அரசு.

modi-petrol-caption-1கச்சா எண்ணெய் விலை சரிவால் கடந்த ஏப்ரல் 2015 முதல் நவம்பர் 2015 முடியவுள்ள எட்டே மாதங்களில் 2.2 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதன் கொள்முதல் செலவீனம் குறைந்து, அத்தொகை மைய அரசிற்கு சேமிப்பாகக் கிடைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். இதுவொருபுறமிருக்க, பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை முழுமையாக வெட்டியது, மானிய விலையில் மண்ணெண்ணெயும் சமையல் எரிவாயுவும் வழங்குவதில் வரம்புகள் விதித்தது, சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் ஆகிய ‘சீர்திருத்தங்கள்’ மூலம் ஏறத்தாழ 80,000 கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய மானியத்தை மைய அரசு சுருட்டிக் கொண்டுள்ளது. இப்படி மூன்று இலட்சம் கோடி ரூபாய்க்கு மேலான தொகையை மக்களிடமிருந்து தட்டிப் பறித்துள்ள மோடி அரசு, இதுவும் போதாதென்று கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரி விதிப்பின் மூலம் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டின் (2014) கடைசி இரு மாதங்களில் கலால் வரியை உயர்த்தியன் மூலம் மட்டும் 10,000 கோடி ரூபாயை மக்களிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது.

“வாகனங்கள் ஓடுவதற்குத் தரமான சாலைகள் வேண்டுமென்றால், இந்தக் கூடுதல் வரியை மக்கள் சுமந்துதான் தீர வேண்டும்” எனத் தெனாவட்டாகக் கூறி இந்தக் கொள்ளையை நியாயப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு. இதுவொருபுறமிருக்க, தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிதி திரட்டுவது என்ற பெயரில் கடந்த நவம்பர் மாதத்தில் சேவை வரி 14 சதவீதத்திலிருந்து 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இச்சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்ட ஆறே மாதத்தில் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

petrol-price-modi-theft-5நல்ல சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் கக்கூஸ்களைக் கட்டிக் கொடுப்பது போன்ற நல்ல நோக்கங்களுக்காகத்தான் கூடுதல் வரிகள் (செஸ்) விதிக்கப்படுவதாக மோடி அரசு நியாயப்படுத்துவது கீழ்த்தரமான ஏமாற்று உத்தி. ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, சாலை மேம்பாடு, கட்டிட மற்றும் பீடித் தொழிலாளர் நலனைப் பேணுவது எனப் பல பெயர்களில் வசூலிக்கப்பட்ட கூடுதல் வரி (செஸ்) 1.4 இலட்சம் கோடி ரூபாய் அந்த நோக்கங்களுக்காகச் செலவழிக்கப்படவேயில்லை.

குறிப்பாக, இடைநிலைக் கல்வி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு உதவுவது என்ற பெயரில் 2006 முதல் 2015 முடிய 64,000 கோடி ரூபாய் கூடுதல் வரியாக வசூலிக்கப்பட்டது. இதில் ஒரு பைசாகூட அந்த மாணவர்களின் நலனுக்குச் செலவழிக்கப்படாத அதே சமயத்தில், தேசிய திறனறிவுத் தேர்வை எழுதாமல் ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்திவிடப் போவதாக அறிவித்திருக்கிறது, மோடி அரசு. ஏழை மாணவர்களின் பெயரில் வரியை வசூலித்துவிட்டு, அவர்களை உயர் கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் நேர் எதிரான வேலையைச் செய்து வருகிறது, பா.ஜ.க. கும்பல்.

பொது மக்களின் மீது விதிக்கப்படும் சேவை வரி, கலால் வரி, கூடுதல் வரி (செஸ்) உள்ளிட்ட மறைமுக வரிகளை உயர்த்திக் கொண்டே செல்லும் பா.ஜ.க. கூட்டணி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் என்ற பெயரில் வளையவரும் பங்குச் சந்தை சூதாடிகள் மீது விதிக்கப்படும் கார்ப்பரேட் வருமான வரி, இலாப ஈவு வரி உள்ளிட்ட நேரடி வரிகளைப் பெருமளவு குறைக்கவும், முடிந்தால் அந்நேரடி வரிகளுள் பலவற்றை அடியோடு ரத்து செய்யவும் முயலுகிறது. மோடியும் அருண் ஜெட்லியும் மூச்சுக்கு முன்னூறு தடவை கூறும் வரிச் சீர்திருத்தத்தின் வர்க்க உள்ளடக்கம் இதுதான் -முதலாளிகளுக்கு வெண்ணெய்; மக்களுக்குச் சுண்ணாம்பு!

modi-petrol-caption-2
அரசின் செலவு குறைந்து கிடைத்த சேமிப்பு 2.2 இலட்சம் கோடி ரூபாய் என்பது மேலே 2.2 கோடி ரூபாய் என்று தவறாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கப்படும் பல்வேறு விதமான வரிச் சலுகைகளால்தான் மைய, மாநில அரசுகளின் பற்றாக்குறையும், கடன் சுமையும் எகிறிக்கொண்டே போகின்றன. இதனை ஈடுகட்டுவதற்கு மக்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகளை உயர்த்திக் கொண்டே போவது என்ற பகற்கொள்ளை இன்று அரசின் கொள்கையாகவும், சட்டமாகவும் மாறிவிட்டது. கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கலால் வரி, கூடுதல் வரிகள் மூலம் மட்டும் ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி ரூபாயை சுருட்டிக் கொண்ட மைய அரசு, இந்த ஆண்டில் அந்த வரிகளை அடுத்தடுத்து உயர்த்தியிருப்பதன் மூலம் 1,20,000 கோடி ரூபாய்க்கும் மேலாக ஈட்டத் திட்டமிட்டிருக்கிறது. மக்களின் பாதுகாவலனாக, சேவகனாக அரசு இருக்க வேண்டும் எனக் கூறப்பட்ட தாத்பரியங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு, இன்று அரசு அதற்கு நேர்எதிராக கருணையே அற்ற ஈட்டிக்காரனாக மாறிநிற்கும் பேரபாயத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

– செல்வம்
_______________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2016
_______________________________