Saturday, July 20, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் 4

தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் 4

-

10. புதுச்சேரி

விவசாயம் – நெசவு – சிறுவணிகம் – சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்!

puduvai-may-day-21இது மேதினத்தின் 130-வது ஆண்டு நிறைவு. 1886-வது ஆண்டில் தொழிலாளி வர்க்கம் எத்தகைய அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்தும், 8 மணிநேர வேலை என்கிற உரிமைக்காகவும் போராடி ரத்தம் சிந்தியதோ அந்தக் கொடிய நிலைமை இன்றைக்கு மீண்டும் வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் அடக்குமுறையும், சுரண்டலும் அப்போது இருந்ததை விட பன்மடங்கு கொடூரமானதாகவும், நவீனப்படுத்தப்பட்டும் அமல்படுத்தப்படுகிறது.

கார்ப்பரேட்மயம் – காண்டிராக்ட்மயம்!

எந்த ஒரு ஆலையிலும், நேரடி உற்பத்தி சாராத வேலைகளில் மட்டும் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நேரடி உற்பத்தி நடக்கிற வேலையிலும் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது. எந்த ஆலையிலும் நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கையை விட காண்டிராக்ட் தொழிலாளர்களது எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காண்டிராக்ட் தொழிலாளர்கள் இல்லையென்றால் ஆலையே ஓடாது என்கிற அளவுக்கு ஒட்டுமொத்த ஆலையுமே காண்டிராக்ட் தொழிலாளிமயமாகி விட்டது.

puduvai-may-day-banners-32-2நெருப்புக் குழம்பு ஓடுகின்ற இரும்பு உருக்காலையானாலும், தூசும், மாசும் மூச்சை முட்டுகிற சிமெண்ட் ஆலையானாலும், பாறைகள் சரிந்து உயிரைப் பறிக்கிற சுரங்கமாக இருந்தாலும் காண்டிராக்ட் தொழிலாளி இல்லாமல் ஒரு துரும்பு கூட நகர முடியாது. கல்லூரி பேராசிரியர் நியமனம் கூட காண்டிராக்ட் முறையில் நடக்கிறதென்றால் இதை விட அவலம் வேறென்ன இருக்க முடியும்?

தொழில்துறையின் உயிர்த்துடிப்பு! ஆனால், உயிராதாரம் பறிப்பு!

தொழிலின் உயிர்த்துடிப்பாகிவிட்ட காண்டிராக்ட் தொழிலாளிக்கு உயிர்வாழும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. வேலை நிரந்தரம் கேட்டால் கேலி பேசுகிறான், முதலாளி. ஆபத்துகள் மிகுந்த வேலைகளில் கூட எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அப்போது விபத்து ஏற்பட்டு உயிரே போனாலும், அற்பப் பணத்தை வீசி எறிந்து விட்டு அடுத்த காண்டிராக்டுக்கு மாறி விடுகிறான், முதலாளி. ஆலை விபத்துகளில் செத்துப்போன பல்லாயிரக்கணக்கான காண்டிராக்ட் தொழிலாளர்களது கதியும், கதையும் இப்படித்தான் முடிக்கப்பட்டது.

puduvai-may-day-banners-32-8காண்டிராக்ட் தொழிலாளிக்கு முறையான சம்பளம் கூட கிடைப்பதில்லை. நிரந்தரத் தொழிலாளிக்கு கிடைக்கின்ற சம்பளத்தில் பாதிகூட கிடைப்பதில்லை. இரண்டு பேரும் ஒரே வேலையை செய்தாலும், காண்டிராக்ட் தொழிலாளி என்றால் கொத்தடிமைதான். சம்பளத்தில் மட்டுமல்ல, சாப்பிடும் சோற்றிலும் கூட இரண்டாம் தரமாக நடத்தப்பட்டு, அவமானத்தில் குன்றிப் போகிறான். காண்டிராக்ட் தொழிலாளி. இதனை நிரந்தரத் தொழிலாளியும் அவர்களது சங்கமும் கண்டும் காணாமல் இருப்பது மானக்கேடு. இன்னும் ஒரு படி மேலே போய் நிரந்தரத் தொழிலாளிக்கு சம்பள உயர்வு கொடுத்து காண்டிராக்ட் தொழிலாளி மீதான சுரண்டலை பாதுகாத்துக் கொள்கின்றனர், முதலாளிகள். ஊழல்படுத்தப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களோ, முதலாளியின் இளைய பங்காளிகளாக மாறி காண்டிராக்ட் தொழிலாளிக்கு எதிரியாக மாறி, தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கின்றனர்.

மறுகாலனியாக்கத்தால் தீவிரமாகும் நிலைமை!

puduvai-may-day-19தனியார்மய – தாராளமய – உலகமய – மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவாக விவசாயம் நாசமாகிப் போன நிலையில் தற்கொலை செய்து கொள்வதை விட நகரத்துக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓடி வருகின்ற விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் வேறென்ன வழி இருக்கிறது? நெசவும், நூற்பும் பன்னாட்டுக் கம்பெனிகளது ஏகபோகத்துக்குப் போய்விட்டதால் நவீன எந்திரங்களுடன் போட்டி போட முடியாமல் உடைந்த தறியோடும், முதுகு நிறைந்த கடனோடும் வருகின்ற நெசவு தொழிலாளிக்கு வேறு போக்கிடம் என்ன இருக்கிறது?

செய்து வந்த சிறுதொழிலை நவீன எந்திரங்கள் முழுங்கிவிட்டன. சிறுவணிகத்தை கார்ப்பரேட் கடைகளும், ஆன்லைன் வர்த்தகமும் காவு வாங்கி விட்டன. இதனால் பிழைப்பு தேடி, அலைபவர்கள் வேறெங்கு போக முடியும்? இவர்கள் அனைவரும் தொழிற்பேட்டை என்கிற நரகத்து தள்ளி விடப்படுகின்ற நிலையில் காண்டிராக்ட் புரோக்கர்களைத் தவிர வேறு யாரும் கை கொடுப்பதில்லை. காண்டிராக்ட் கூலிகளில் பெரும்பாலானோர் இப்படி வந்தவர்கள் தான். எந்த மலிவான கூலிக்கும் உழைப்பது, எத்தனை ஆபத்தான வேலையையும் செய்வது என்கிற நிர்ப்பந்தத்தில் வாழ்கின்ற இவர்களை வைத்துத் தான் கார்ப்பரேட் உலகம் தன்னுடைய லாபவெறியைத் தீர்த்துக் கொள்கிறது.

puduvai-may-day-banner-83-220 காண்டிராக்ட் தொழிலாளிக்கு மேல் வைத்துக் கொண்டால் லைசென்சு வாங்க வேண்டும் என்கின்ற விதிமுறையினை மாற்றி 100 பேர் வரை லைசென்சு இல்லாமலேயே வைத்துக் கொள்ளலாம் எனவும், எந்த வேலையிலும் எத்தனை மணிநேரத்துக்கும் காண்டிராக்ட் தொழிலாளியை ஈடுபடுத்தலாம் எனவும் சட்டதிருத்தம் செய்ய மோடி அரசு தயாராகி வருகிறது. சட்டத்தின் பெயரால் கட்டுப்பாடுகள் இருக்கின்ற போதே கசக்கிப் பிழிகின்ற முதலாளிகள், சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் சட்டப் பூர்வமாகவே அங்கீகாரம் கிடைத்து விட்டால் எப்படி நசுக்குவார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.

தொழிலாளர்களது உரிமைகளை உத்திரவாதம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற தொழிலாளர் நலத்துறையானது, முதலாளிகள் நலத்துறையாக அப்பட்டமாக செயல்படுகிறது. தொழிலாளர்களது சட்டப்பூர்வமான கோரிக்கைகளைக் கூட பரிசீலிக்க மறுப்பதோடு, நாங்கள் முதலாளிகளின் பக்கம்தான் நிற்போம் என்று பகிரங்கமாக சொல்கின்றனர். புதுச்சேரி தொழிலாளர் அதிகாரி தயாளன், தொழிலாளர் ஆய்வாளர் ரவி போன்ற அதிகாரிகளும், வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கு பயிற்சி வகுப்பு நடத்தி வருகின்ற முன்னாள் தொழிலாளர் நலத்துறை ஆணையரான ரவீந்திரனும் இதற்கு எடுத்துக்காட்டு.

puduvai-may-day-20தொழிலாளர் நலத்துறையின் தொழிலாளர் விரோதப்போக்கு அரியானாவில் மாருதி ஆலை, ராஜஸ்தானில் ஹோண்டா மோட்டார்ஸ், மராட்டியத்தில் பஜாஜ் ஸ்கூட்டர்ஸ், குஜராத்தில் நானோ, கர்நாடகத்தில் டயோட்டா, தமிழகத்தில் ஹூண்டாய், நோக்கியா, ஜி.எஸ்.எச்., புதுச்சேரியில் சுஸ்லான், ஹைடிசைன், என பலநூறு உதாரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும், தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்கு எதிர்நிலையாகவும், செயல்படுவதற்கு தகுதியற்றதாகவும் மாறியுள்ள நிலையில் தொழிலாளர் நலத்துறையானது ஒரு சுற்று அதிகமாக நாறுகிறது,

மூடப்பட்ட கதவு தானாக திறக்காது! உடைத்தெறி!

சமீபத்தில் பெங்களூருவில் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தொழிலாளர்கள் தங்களது சேமிப்பினை பெறுவதற்கு மத்திய அரசு போட்ட புதிய விதிமுறைகளை தகர்த்தெறிந்தது, பெண் தொழிலாளர்கள் முன்நின்று நடத்திய போராட்டம். தினம் தினம் தீவிரமடைந்து வருகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு மென்மையான வார்த்தைகளோ, சாந்தமான, சட்டப்பூர்வமான போராட்டங்களோ புரியாது. அவற்றை நசுக்கத்தான் செய்யும். 1886-ல் மேதினத்தில் தொழிலாளி வர்க்கம் சிந்திய இரத்தமும், மேதினத் தியாகிகளது உயிர்பலியும் நமக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுப்பது ஒன்றைத்தான். தொழிலாளி வரிக்கமே அடங்கிக் கிடக்கின்ற உனது குரலையும், கைகளையும் உயர்த்து; மூடப்பட்டுள்ள நெடுங்கதவை நொறுக்கு; காட்டுத்தீயாய் பரவிடு; கார்ப்பரேட் கொட்டத்தைப் பொசுக்கிடு!

உழைக்கும் மக்களே,

  • உலகையே சூறையாடி வருகின்ற சர்வதேச நிதியாதிக்கக் கும்பலை முறியடிப்போம்!
  • தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!

  • நாட்டை சுடுகாடாக்கி வருகின்ற மறுகாலனியாக்கத்திற்கும், இந்துமதவெறி பாசிசத்திற்கும், முடிவுகட்டுவோம்!

  • அழுகி நாறிவரும் அரசுக் கட்டமைப்பை அப்புறப்படுத்துவோம்!

  • போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!

  • புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

என்ற மே நாள் சூளுரையோடு 131 -வது மேதினப் பேரணி – ஆர்ப்பாட்டம் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நடத்தப்பட்டது.

மே நாள் காலை முதல், மேதின சூளுரை ஏற்று, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இயங்கும், கிளை மற்றும் இணைப்பு சங்கங்களில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்புடன் கொடியேற்றப்பட்டது.

மறுபுறம், மேதின பேரணி – ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை தேர்தல் துறை நிகழ்ச்சி துவங்கும் வரை இழுத்தடித்தது. ஏற்கனவே, ஒலிபெருக்கி அமைக்கும் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களைக் கூட்டி பல்வேறு கெடுபிடி உத்தரவுகளைப் போட்டிருந்ததால், ஒலிபெருக்கி உரிமையாளர், அனுமதி உத்தரவு இருந்தால் மட்டுமே தன்னால், வரமுடியும் என்று தெரிவித்திருந்ததால், அனுமதிக்கு இறுதிவரை தேர்தல்துறையில் முட்டி மோதி அனுமதி பெறப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர். சரவணன் பேரணியை துவக்கி வைத்தார்.

போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகளும் தேர்தல் திருவிழாவில் சங்கமமாகி, மேதினத் தியாகிகளின் தியாகத்தை, தங்களது வாக்குறுதிகளில் தேடிக் கொண்டிருந்தனர். அதே வேளையில், பேரணி, இன்னுமொரு மேதினப் போராட்டத்திற்கு அறைகூவிய படியே நகரத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஆர்ப்பாட்டம் நடக்கும் சாரம் பெரியார் சிலையை வந்தடைந்தது.

puduvai-may-day-18ஆர்ப்பாட்டத்தில், நமது உரிமைகளுக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்திப் போராடாமல், அவர்களின் தியாகத்தையும், மேநாள் போராட்டத்தின் இன்றைய தேவையையும் இருட்டடிப்பு செய்யும் வகையில் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடும் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தியும், இன்றைய தேவை, சாதி, மத, இன உணர்வல்ல, மே நாள் போராட்டத்தால் உருவான உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! என்ற சர்வதேசப் பாட்டாளிவர்க்க முழக்கம் என்று கூறி புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் சரவணன், தலைமை உரையாற்றினார்.

puduvai-may-day-01புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர். லோகநாதன், சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளாத வகையில் முதலாளிகள் தொழிலாளர்களை உழைக்கும் இயந்திரங்களாக மாற்றி வைத்துள்ளனர். அவர்களைப் புரியவைத்து போராட்டத்திற்கு அழைத்து வருவதே நம்முன் உள்ள சவாலான விசயம். இதற்கு தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டிய தேவையை விளக்கிப் பேசினார்.

இறுதியாகப் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராஜூ, “இந்தியாவில் பல கோடி தொழிலாளர்கள் இருந்தாலும் 2 கோடி பேர் தான், சொல்லிக் கொள்ளும் வகையில் ஓரளவு சட்டப் பாதுகாப்புடன் உள்ளனர். மீதமுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை ஒடுக்குமுறை மிகுந்ததாகவே உள்ளது. puduvai-may-day-22எனினும், தொழிலாளர்கள் போராடுவதற்குத் தயாராகவே உள்ளனர். இதை பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போராட்டம் உணர்த்துகிறது. எந்த ஓட்டுக்கட்சிகளின் துணையில்லாமல், சுயமாக தங்களது பலத்தில் அந்தப் பெண் தொழிலாளர்கள் போராடியுள்ளனர். அது தான் அவர்களின் முதல் வெற்றி! ஆண்டுக்கணக்கில் தொழிலாளர்களின் பல கோரிக்கைகள் நீதிமன்றங்களில் தூங்கும் போது, காலை 06.30 மணிக்குத் துவங்கிய போராட்டம், ஒரே நாளில் கோரிக்கையை வென்றெடுத்துள்ளது எனில், அத்தொழிலாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களிடம் உள்ளது அச்சம் என்ற ஒரே தடைக்கல் தான். அதை தகர்த்தெறியும் போது, உலகமே நமது காலடியில் என்பதை உணர வேண்டும். மக்கள் தான் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்கள். இது ஆற்று மணல் கொள்ளை மற்றும் டாஸ்மாக் எதிரான போராட்டங்கள் நிரூபிக்கிறது. எனவே, இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறிந்து, மக்கள் தங்களது அதிகாரத்தைக் கையில் எடுக்கும் போது அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கான விடுதலை சாத்தியமாகும்” என்று கூறி நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மே நாள் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, மேநாள் சூளுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க