Sunday, September 15, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்மோடியின் மிஷன் - 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் !

மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் !

-

மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என பிரதமர் நரேந்திர மோடி அடுத்தடுத்து அவிழ்த்துவிட்டிருக்கும் திட்டங்களைக் கேள்விப்பட்டுள்ள நமக்கெல்லாம், அவரின் கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் “மிஷன்-2016” என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவது அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முன்னவற்றைப் போல இந்த நடவடிக்கை குறித்து பா.ஜ.க. அரசும் பெரிய அளவில் தம்பட்டம் அடித்துக் கொள்வதுமில்லை. காரணம், இதுவொரு போலீசு நடவடிக்கை; சொந்த நாட்டு மக்கள் மீது ஏவப்பட்டுள்ள போர் நடவடிக்கை.

“சத்தீஸ்கர் மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ள மாவோயிஸ்டுகளையும், அவர்களுக்கு ஆதரவான பழங்குடியினரையும் 2016-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மாநிலத்தை விட்டே விரட்டியடிப்பது அல்லது அழித்தொழிப்பதுதான் மிஷன் 2016-இன் நோக்கம்” என பஸ்தார் போலீஸ் ஐ.ஜி. கல்லூரி அறிவித்திருக்கிறார்.

மோடியின் காட்டு வேட்டை
அரசுப் படையினரால் கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெத்தகேலூர் கிராமத்தைச் சேர்ந்த பதின்வயது சிறுமி (இடது – முகம் மறைக்கப்பட்டுள்ளது). அருகில் அரசுப் படையினரால் தாக்கப்பட்ட சிறுமியின் அத்தை

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சி.ஆர்.பி.எப். துணை இராணுவப் படை, சத்தீஸ்கர் மாநிலப் போலீசு மட்டுமின்றி, ஜன் ஜாக்ரான் அபியான், சமாஜிக் ஏக்தா மன்ச், விகாஸ் சங்கர்ஷ் சமிதி, நாக்ரிக் ஏக்தா மன்ச் என்ற பெயர்களில் இயங்கிவரும் குண்டர் படைகளும் இறக்கிவிடப்பட்டு, பழங்குடியின மக்கள் வசித்து வரும் பகுதி முழுவதும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதற்கு அப்பால், பழங்குடியின மக்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தவும் தயாராகி வருகிறது, பா.ஜ.க. அரசு.

கனிம வளங்களும் பழங்குடியின மக்களும் நிறைந்திருக்கும் சத்தீஸ்கர், ஜார்கண்டு மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளாகவே ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்து நடத்திவருகிறது, மைய அரசு. முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மாவோயிச பயங்கரவாதம் தடையாக இருப்பதாகக் கூறி, காட்டு வேட்டை என்ற பெயரில் அம்மாநில பழங்குடியின மக்கள் மீது போர் தொடுத்தது. அச்சமயத்தில் சல்வா ஜுடும் என்ற சட்டவிரோத குண்டர் படை உருவாக்கப்பட்டு, முதுகுத்தண்டை சில்லிடச் செய்யும் அடக்குமுறைகள் பழங்குடியின மக்கள் மீது ஏவப்பட்டன.

அக்காட்டு வேட்டை நடவடிக்கையின்போது பல்லாயிரக்கணக்கான பழங்குடியினர் தங்களது கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். சிறை, சித்திரவதை, பாலியல் வல்லுறவு, போலி மோதல் கொலைகள் என நடந்த அரசு பயங்கரவாத அட்டூழியங்களைத் தட்டிக் கேட்ட, அம்பலப்படுத்திய அறிவுத்துறையினர் மாவோயிஸ்டுகளின் அனுதாபிகளாக முத்திரை குத்தப்பட்டனர்.

புகழ்பெற்ற குழந்தை மருத்துவரும் பி.யு.சி.எல். என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவருமான பினாயக் சென் தேசத் துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். காந்தியவாதியான ஹிமான்ஸு குமாரின் ஆசிரமம் இடித்துத் தள்ளப்பட்டது. இதன் மூலம் காட்டு வேட்டைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அடக்கிவிட முடியும் என எதிர்பார்த்த மன்மோகன் சிங் அரசு மேலும் மேலும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனது.

காட்டுவேட்டைக்கு எதிராக நாடெங்கும் பரவலாக எழுந்து எதிர்ப்பின் காரணமாக, சல்வா ஜுடும் அமைப்பைக் கலைக்குமாறு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம். தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பினாயக் சென் விடுதலை செய்யப்பட்டார்.

சோனி சோரி
முகத்தில் இரசாயனக் கலவை ஊற்றப்பட்ட நிலையில் சோனிசோரி.(கோப்புப்படம்)

மன்மோகன் சிங் அரசு காட்டுவேட்டையிலிருந்து சற்றுப் பின் வாங்கியதை, கனிம வளங்களைக் கொள்ளையிடக் காத்திருத்த பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய தரகு முதலாளிகளும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அக்கும்பல், காங்கிரசு அரசு செய்யத் தவறியதை, செய்து முடிக்காமல் பாதியில் நிறுத்தியதைச் செய்து முடிப்பதற்காகவே மோடியை பிரதமர் பதவியில் அமர்த்தியது.

காங்கிரசு அரசு நடத்திய காட்டு வேட்டையை, மோடியும் பா.ஜ.க. அரசும் மிஷன் 2016 என்ற பெயரில் தொடர்ந்தும், முன்னைக் காட்டிலும் தீவிரமாகவும் நடத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட சல்வா ஜுடும், இப்பொழுது, ஜன் ஜாக்ரான் அபியான், சமாஜிக் ஏக்தா மன்ச், விகாஸ் சங்கர்ஷ் சமிதி, நாக்ரிக் ஏக்தா மன்ச் என்ற பெயர்களில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டீஸ்கர் மாநில அரசு “துணைப் படைகள் சட்டம்” என்றொரு கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து, அதன் மூலம் மாவட்ட ரிசர்வ் படை என்ற அரசு பயங்கரவாத அமைப்பை உருவாக்கி, அதில் சல்வா ஜுடும் அமைப்பில் செயல்பட்டு வந்த குண்டர்களைச் சேர்த்து, அவர்களைச் சட்டபூர்வ போலீசாக்கிவிட்டது. மக்கள் விரோத, சட்டவிரோத அமைப்பாக அம்பலப்பட்டுப் போன சல்வா ஜுடுமை, மோடி கும்பல் சட்டபூர்வமாக்கிவிட்டது.

மிஷன்-2016 தொடங்கப்பட்ட நான்கே மாதங்களில் 70 போலி மோதல் கொலைகள் பஸ்தரில் நடந்துள்ளன. பெக்தபள்ளி, சின்ன கேலூர், பெத்த கேலூர், கண்டேம், பர்கிச் செரு, நேந்த்ரா, பெத்த பாரா, மான்ஹெம் ஆகிய கிராமங்கள் தாக்கப்பட்டு, பழங்குடியின மக்களின் அற்ப உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டு, அவர்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

இந்த அட்டூழிங்களை அம்பலப்படுத்திப் போராடி வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆசிரியரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரான சோனி சோரியின் முகத்தில் அபாயகரமான இரசாயனக் கலவை வீசப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இவர் மட்டுமின்றி, ஜக்தல்பூர் பகுதியில் இயங்கிவரும் “ஜக்லக்” என்ற பெண் வழக்கறிஞர் குழு, போலீசின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்களுக்காக 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்திவருகிறது. இதனால், இக்குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர்களை சட்டீஸ்கர் மாநிலத்தை விட்டே வெளியேறிமாறு போலீசே நிர்பந்தம் கொடுத்துவருகிறது.

மேலும், பத்திரிக்கையாளர்கள் மாலினி சுப்ரமணியம், பேலா பாட்டியா ஆகியோர் அச்சுறுத்தப்பட்டு, அந்த மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மனித உரிமை செயல்பாட்டாளரும் மருத்துவருமான சாய்பால் ஜனா, கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பழங்குடியின மக்கள், மாவோயிஸ்டுகள், ஜனநாயக மற்றும் மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புகளை அரசு பயங்கரவாதத்தை ஏவி நசுக்குவதன் மூலம் பிர்லா, ஜின்டால், வேதாந்தா, அதானி, ஜி.எம்.ஆர். உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய தரகு முதலாளிகளும் சட்டீஸ்கர் மாநிலத்தின் கனிம வளங்களைத் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது, மோடி-ராமன் சிங் கும்பல்.

குறிப்பாக, “ஹஸ்தியோ அரந்த்” வனப்பகுதியில், அதானியின் நிறுவனத்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் இயங்குவதற்குத் தடையாக இருக்கும் சட்டங்களை ரத்து செய்யும் நோக்கில், அவ்வனப்பகுதி மீது பழங்குடியினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது; அங்கு சுரங்கம் தொடங்க கிராம சபையின் அனுமதி தேவையில்லை என்று கடந்த ஜனவரி 8 அன்று ஒரு அரசாணையை சட்டீஸ்கர் பா.ஜ.க. அரசு வெளியிட்டிருக்கிறது. பல லட்சம் கோடி ருபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கம் வெறும் 12 சதவீத ராயல்டிக்கு வேதாந்தா நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

பஸ்தார் பகுதியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களைக் கொள்ளையிடத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்துப் பழங்குடியின மக்கள் போராடுகிறார்கள் என்றால், தஞ்சை பகுதி விவசாயிகள் தமது நிலங்களைப் பாதுகாத்துக் கொள்ள மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். எனவே, இன்று பஸ்தார் பகுதி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் காட்டுவேட்டை, மிஷன் -2016 நடவடிக்கைகள், நாளை தஞ்சை பகுதி விவசாயிகளை நோக்கியும் திரும்பக் கூடும். பஸ்தாரும் தஞ்சையும் தூரப் பிரதேசங்களல்ல, பஸ்தார் பழங்குடியின மக்களும் தஞ்சை விவசாயிகளும் வேறு வேறானவர்கள் அல்ல என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

– அழகு
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க