Wednesday, February 28, 2024
முகப்புஉலகம்அமெரிக்காகோக் பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ?

கோக் பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ?

-

“மாப்பிள்ளை விநாயகர்” என்ற பெயரை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மதுரை சுற்று வட்டார இளைஞர்களுக்கு அது ஒரு திரையரங்கின் பெயராக நினைவிருக்கலாம். ஆனால் அதே பெயரில் ஒரு குளிர்பானமும் “பெப்சி – கோக்” வருகைக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்தது. மாப்பிள்ளை விநாயகர் திரையரங்க உரிமையாளர்களே இந்த குளிர்பான நிறுவனத்தையும் நடத்தி வந்தனர்.

விற்பனையாளர்களுக்கு அதிக இலாபத்தைக் கொடுப்பது, குளிர்சாதனப் பெட்டியை விற்பனையாளர்களுக்கு குறைந்த மாதத் தவணையிலோ இல்லை இலவசமாகவோ கொடுத்து தமது கோலாக்களை மட்டும் விற்பனை செய்ய வற்புறுத்துவது, திரையரங்குகளில் பெரும் பணம் கொடுத்து விற்பனை செய்வது, சோடா பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களைக் கைப்பற்றுவது, சினிமா- கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்டு விளம்பரம் செய்வது என ”பெப்சி – கோக்” நிறுவனங்கள் 1990-களில் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்தன.  ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிலேயே வெறும் பெப்சி மட்டுமே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிறுவனங்கள் எவ்வாறு, இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்களை ஒழித்துக் கட்டி வளர்ந்துள்ளன என்பதை 2001-ம் ஆண்டே மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !! என்னும் கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியது புதிய கலாச்சாரம்.

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் செயல்படத் துவங்கிய கோகோ கோலா ஆலைக்கு எதிராக கடந்த 2005-ம் ஆண்டு ம.க.இ.க, பு.மா.இ.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தொடர் பிரச்சாரங்களையும், ஆலை முற்றுகைப் போராட்டங்களையும் மேற்கொண்டன. இருப்பினும் போலீஸ் அடக்குமுறை, பொய் வழக்குகள், சிறை, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கோக் நிறுவனத்திற்கு அடியாள் வேலை பார்த்தது அரசு. அன்றைக்கு நெல்லை பேருந்து நிலையத்தில் கூட கோக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடியாது. மீறிய தோழர்கள் சிறை வைக்கப்பட்டார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கவெறி

இப்புரட்சிகர அமைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாகக் களத்தில் நின்று அமெரிக்கக் கோலாக்களுக்கு எதிராகப் போராடிய போது வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் போன்றோர் இப்போராட்டங்களை ஆதரித்தாலும் சில்லறை வணிகர்கள் பலரும் வருமானம் கருதி அமெரிக்கக் கோலாக்களுக்கு எதிரான நிலையை எடுக்க முன்வரவில்லை. அமெரிக்க கோலாக்கள் தமிழகத்தின் நீர்நிலைகளையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி, பல்வேறு உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை முடக்கி, தாமிரபரணி போன்ற ஜீவநதிகள் வற்றியதையும்தமிழக மக்களோடு சில்லறை வணிகர்களும் படிப்படியாக கண்டுணர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழக மக்கள் இவ்வாண்டு (2017) ஜனவரி மாதம் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அயல்நாட்டு குளிர்பானங்களான ”பெப்சி, கோக்கைத் தடை செய்” என்பதை ஒரு முழக்கமாகவே முன் வைத்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அமெரிக்க கோலாக்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பினை மக்கள் பதிவு செய்தனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜனவரி 26 முதல் தமது பேரவையின் கீழ் உள்ள பல்வேறு சங்கங்களின் கடைகளில் அமெரிக்க கோலாக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மார்ச் 1 முதல் விற்கமாட்டோம் என அறிவித்தது.

பெப்சி – கோக் அல்ல – அமெரிக்க மூத்திரம்இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை கிட்டத்தட்ட 75% வரையில் குறைந்தது. ஒட்டு மொத்த இந்தியக் குளிர்பானச் சந்தையில் சுமார் 14,000 கோடியை ஒவ்வொரு ஆண்டும் சுருட்டிக் கொண்டிருக்கும் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு விழுந்த முதல் அடி இது. தமிழகத்தின் வணிகர் சங்கங்களின் இந்த நடவடிக்கை பெப்சி கோக்கிற்கு மட்டுமல்ல அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களுக்கே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். இந்தியாவிலேயே வெறெங்கும் இல்லாத வகையில் இப்படியானதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது.

இது ஒன்று போதாதா? உடனடியாக இந்திய முதலாளிகளின் சங்கங்களும், அவர்களின் விளம்பரங்களை வைத்து செய்திக்கடை விரிக்கும் ஊடகங்களும், இவர்களின் அமெரிக்க ஆண்டையிடம் நிதியும் அறிவும் இரவல் பெற்று ‘போராடும்’ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தற்போது குய்யோ முய்யோ என குதிக்கின்றன.

இது வெறுமனே தனித்த ஒரு அமைப்பின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாக இருப்பதால் இக்கூட்டத்தினரால் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை அரசு அடக்குமுறையைக் கொண்டு நேரடியாக அடக்க முடியாது. ஆகவே அறிவியல், சூழலியல் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் கூச்சலிடுகின்றனர்.

”இத்தகையத் தடை விவசாயிகள், வியாபாரிகள், விற்பனையாளர்களின் நலனிற்கு எதிரானது. பொருளாதார வளர்ச்சிக்கு நிறுவனங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் இந்தத் தடை அறிவிப்பு இருக்கிறது” என புலம்பியிருக்கிறார் இந்திய பானங்கள்- உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அரவிந்த் வர்மா. அதாவது பெப்சி – கோக்கின் உற்பத்திதான் இந்தியாவின் பொருளாதாரத்தை வளரச் செய்து விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, கல்வி – சுகாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை தீர்த்து வருகிறதாம். கேழ்வரகில் நெய் அல்ல அமுதமே வடியும் என்று கூசாமல் பொய்யுரைக்கிறார்கள் இக்கோமான்கள்.

அடுத்ததாக இவர்கள் கையிலெடுத்திருக்கும் வாதம் “சுதந்திரச் சந்தை ஜனநாயகத்துக்கு” ஆபத்து என்பது தான்! அம்பானியின் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்னும் இணையதளம் கோக் பெப்சி மீதான தடை சுதந்திர சந்தை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளது எனக் கூச்சலிடுகிறது. அதாவது பஞ்சத்தில் வெம்பிப் போயிருக்கும் ஆப்ரிக்கச் சிறுவர்களும், பிசா பர்கரால் பெருத்திருக்கும் மேட்டுக்குடி அமெரிக்க சிறுவர்களும் ஒரே மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டுமாம். இதுதான் ஜனநாயகமாம். காஞ்சிபுரம் பன்னீர் சோடாவை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்களும், ஒட்டுமொத்த சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டுத் தமது கோலாக்களை விற்பனைச் செய்யும் பெப்சி – கோக் நிறுவனங்களும் சந்தையில் ஒரே மாதிரியாக போட்டி போடும் உற்பத்தியாளர்களாம் ! இத்தகைய சுதந்திரச் சந்தை ஜனநாயகத்தைத்தான் இந்திய மக்கள் காப்பாற்ற வேண்டுமாம்.

நித்யானந்த் ஜெயராமன் – சூழலியளாலர்.
நித்யானந்த் ஜெயராமன் – என்ஜிவோ சூழலியலாளர்.

அடுத்ததாக இவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம், ’நீர்நிலைகள் மீதான அக்கறை’.  இதனைக் கையிலெடுத்திருப்பவர்கள் சூழலியல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ-க்கள்). பெப்சி , கோக் விற்பனையை புறக்கணித்திருக்கும் வணிகர் சங்கங்களின் முடிவை வரவேற்றிருக்கும் சூழலியல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன், ”பன்னாட்டுக்  குளிர்பானங்களுக்கு பதில் உள்ளூர் குளிர்பானங்களை பயன்படுத்துவதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை” என்றும் தண்ணீர் பஞ்சத்திற்கு பவண்டோ, காளிமார்க், டொரினோ உள்ளிட்ட உள்நாட்டு குளிர்பானத் தயாரிப்பாளர்களும் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். கொஞ்சம் விட்டால் அடுத்தபடியாக,  இளநீரும், பதநீரும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விரயமாக்குவதால் மக்கள் வெறும் நீரை மட்டும் குடிக்க வேண்டும் என்று நித்தியானந்த் ஜெயராமன்  போராடுவார் என எதிர்பார்க்கலாம்.

மேலை நாடுகளில் மட்டுமல்ல, சிங்கப்பூர் போன்ற ’மாதிரி’ மேலை நாடுகளாக இருக்கும் நாடுகளிலும் இன்று தாகம் வந்தால் மக்கள் தண்ணீரைக் குடிப்பதில்லை. ஒரு உணவு விடுதிக்குச் சென்றால் கூட அங்கு நம்மூர் போல குடிநீர் வைக்கப்படுவதில்லை, கோலாக்கள் தான் வைக்கப்படுகின்றன. அமெரிக்க கோலா நிறுவனங்கள், ’மக்களுக்கு தாகம் வந்தால் தமது கோலாக்கள் தான் நினைவுக்கு வரவேண்டும்’ என்ற அளவிற்குத் கோலாக்களை அத்தியாவசியப் பண்டமாக மாற்றுவதை தமது இலக்கு என வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றன. தண்ணீரை வியாபாரமயமாக்குவதையே இலக்காக வைத்திருக்கும் இந்நிறுவனங்களை உள்ளூர் கோலி சோடா நிறுவனங்களோடு ஒப்பிடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். மேலதிகமாக இன்று குடிநீர் கூட அரசால் அளிக்கப்படுவதற்கு பதில் தனியார் நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்டு மக்கள் அதற்கென மாதந்தோறும் கணிசமான பணம் ஒதுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

நெடுவாசல் போராட்டத்திற்கும் கூட ”காவிரி டெல்டாவில் விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. அதுவும் சுற்றுச் சூழல் பாதிப்பே!, ஆகவே ஹைட்ரோ கார்பனை எதிர்ப்பவர்கள், விவசாயத்திற்கு நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப் படுவதையும் எதிர்க்க வேண்டும்” என்று சில அறிவுஜீவிகள் சமூக வலைத்தளங்களில் கண்டிசன் போடுகிறார்கள். சரி, நிலத்தடி நீரை எடுக்குமாறு விவசாயிகளை நிர்ப்பந்தித்த குற்றவாளிகள் யார்?  விவசாயிகளா ? காவிரியை மறுத்து, மணலைக் கொள்ளையடித்து, கார் கம்பெனிக்கும், கோலா கம்பெனிக்கும் ஆற்று நீரை அள்ளிக் கொடுத்த  முதலாளிகள் – அரசியல்வாதிகள் – அதிகாரிகள் கூட்டணியா?

ஏகாதிபத்தியங்களின் நிதியில் வளர்ந்து ஏகாதிபத்தியங்களின் நலனுகாக செயல்படும் இத்தகைய சூழலியல் என்.ஜி.வோ-க்கள் அனைவரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை திசை திருப்புவதோடு பன்னாட்டு நிறுவனங்களின் நலனை இறுதியில் வேறு காரணங்களை முன்வைத்து காப்பாற்ற உதவுகிறார்கள்.

இந்த ஏகாதிபத்தியங்கள் வடிவமைத்திருக்கும் நுகர்வுக் கலாச்சார வாழ்வின் அங்கங்களான மல்டி பிளக்ஸ், ஆடம்பர உடைகள், ஆடம்பர பொழுதுபோக்குக் கருவிகள், வாகனங்கள், உணவகங்கள், பிசா, பர்கர், கேஎப்சி வகையறாக்களில் முதன்மையான சின்னமே பெப்சியும் கோக்கும் தான். உள்ளூர் சோடாக்கள் எவையும் மேற்கண்ட நுகர்வுக் கலாச்சார ஆக்கிரமிப்பின் அங்கமாக அணிவகுப்பதில்லை. அவை விலையுயர்ந்த வாஷிங்டன் ஆப்பிளின் அருகே பரிதபமாய் சிதறிக் கிடக்கும்  இலந்தைப் பழம் போன்றவையாகவே இருக்கின்றன. அதனால்தான் உலகமெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஓர் குறியீடாக  கோக் இருக்கிறது. கோக், பெப்சிக்கு எதிராக பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. முக்கியமாக நீரை தனியார்மயமாக்க கூடாது என்று பல நாட்டு மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். என்ஜிவோ நிறுவனங்களோ தனியார்மயம், தாராளமயத்தை எதிர்ப்பதற்கு பதில் பெப்சி கோக்கை எதிர்த்தால் கோலி சோடாவையும் எதிர்க்க வேண்டுமென்று கூறி அமெரிக்க கோலாக்களுக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குகிறார்கள்.

ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டமல்ல – ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமே
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு முழக்க அட்டை. பெப்சி கோலாவை தமிழன் தடை செய்கிறான்!

கடைசியாக, அறிவியலை ஆயுதமாய் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்குகிறார்கள் சிலர். அமெரிக்க கோலாக்களில் இருக்கும் வேதிக் கரைசல்களைப் போன்றதே, உள்ளூர் சோடாக்களின் வேதிக் கரைசல்களும். ஆகவே பெப்சி- கோக் மட்டுமல்ல காளிமார்க் வகையறாக்களும் கெடுதியே என்று  இரண்டையும் தடை செய்யக் கோருவதும் அயோக்கியத்தனமே.

காளிமார்க் குடிப்பதால் வரும் உடல்நலக்கேட்டை, அமெரிக்க கோலாக்களால் வரும் சமூக – பொருளாதார – அரசியல் கேட்டோடு துளி கூட ஒப்பிட முடியாது. ஆகவே நீங்கள் அமெரிக்கக் கோலாவைக் குடிப்பதால் முழுகும் குடியை விட பவண்டோவைக் குடிப்பதால் ஒன்றும் பெரியதாகக் குடிமுழுகி விடாது. நீங்கள் பவண்டோவைக் குடித்தாலும் சரி, குடிக்காவிட்டாலும் சரி, நமது சமூக, பொருளாதார, அரசியல் சுய சார்பைப் பறிக்கும் அமெரிக்கக் கோலாக்களை எதிர்ப்பதில் ஒன்று சேருவதே முக்கியம்.

இன்னும் சிலர் வணிகர் சங்கத் தலைவர்கள் நாடார் சாதிக்காரர்களாக இருப்பதால் காளிமார்க் எனும் நாடார் சாதி முதலாளிக்கு ஆதரவாக பெப்சி கோக்கை எதிர்ப்பதாக ‘பயங்கரமான’ ஆய்வு செய்கிறார்கள். ஒரு பெட்டிக் கடைகாரருக்கோ இல்லை மளிகைக் கடைக் காரருக்கோ வாடிக்கையாளர் வாங்கும் அனைத்தையும் வைத்திருந்தால்தான் வருமானம் வரும். பெப்சி கோக்கை விற்பதால் வரும் வருமானத்தை விட காளிமார்க்கின் வருமானம் பல மடங்கு குறைவே. பொது மக்களின் பொதுக் கருத்து வலிமையினால்தான் அவர்கள் பெப்சி கோக் வருமானத்தை இழக்க முன்வந்திருக்கிறார்களே அன்றி சாதி நலனுக்காக அல்ல. மேலதிகமாக வணிகர்கள் அல்லாத பிரிவினர் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், நட்சத்திர விடுதிகள், பெரும் தொடர் அங்காடிகள் போன்றோர் பெப்சி கோக்கை விற்பார்கள். எப்படிப் பார்த்தாலும் இது சிறு வணிகர்களுக்கு இழப்பே!

இன்னும் அரசு, போலீசு, நீதிமன்றம் மூலமாக சிறு வணிகர்களுக்கும் பெரும் நெருக்கடியும், ஏன் அடக்குமுறையும் கூட வரலாம். பெப்சி – கோக் எனும் அமெரிக்க கம்பெனிகளின் பொருட்களை விற்கமாட்டோம் என்று சொல்வது சாதாரணமான ஒன்றல்ல! இத்தகைய சூழலில் வணிகர்களின் முடிவை வரவேற்பதோடு, அவர்களது கடைகளைக்கு நேரில் சென்று வாழ்த்துவது, அரசு மூலம் பிரச்சினை வந்தால் அதை எதிர்த்து போராடுவது போன்றவற்றையும் நாம் செய்ய வேண்டும். கூடவே மாறுவேடம் போட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க:
Pepsi, Coca-Cola boycott: Tamil Nadu trade bodies’ move unhealthy; goes against free-market spirit

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க