privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகேரளா : கடவுளின் தேசத்தில் அம்பேல் ஆகும் மருத்துவப் படிப்பு !

கேரளா : கடவுளின் தேசத்தில் அம்பேல் ஆகும் மருத்துவப் படிப்பு !

-

கேரள மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 28, 2017 அன்று ஒரு உத்தரவை வழங்கியுள்ளது. அதில் கேரளாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான ’கல்விக் கட்டண நிர்ணயக் குழு’ கட்டணத்தை அறிவிக்கும் வரை, தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் ரூபாய் 11 இலட்சம் வரை கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நடுத்தர வர்க்க, ஏழை மாணவர்கள், நீட் வரிசைப் படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும், சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஆண்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.11 இலட்சத்தில், சேர்க்கை நடைபெறும் போதே ரூ.5 இலட்சத்தை கல்லூரியில் மாணவர்கள் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள ரூ.6 இலட்சத்தை பணமாகவோ, அல்லது வங்கி உத்தரவாதமாகவோ சேர்க்கை முடிவடைந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் கல்லூரிகளில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அவ்வுத்தரவில் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பல பெற்றோர்களுக்க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா – மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் காத்திருக்கும் மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர்

கேரளா முழுவதும் கடந்த 2017,ஆகஸ்ட் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மருத்துவச் சேர்க்கையில், இந்நீதிமன்ற உத்தரவால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. பல மாணவர்கள் உடனடியாக ரூ. 5,00,000 திரட்டுவதற்கு இயலாத சூழலில், தங்களுக்கு நீட் தேர்வு மூலம் கிடைத்த மருத்துவக் கல்லூரி இடங்களை இழந்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் ரூ.5,00,000-கான வரைவோலையை கல்லூரியில் செலுத்திய பின்னர், கல்லூரி நிர்வாகம் ரூ.6 இலட்சத்திற்கான வங்கி உத்தரவாதத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. அவ்வாறு உடனடியாக அவ்வாறு கட்ட இயலாதவர்கள், ஏற்கனவே தாங்கள் கட்டிய ரூ. 5,00,000-ஐத் திரும்பக் கேட்டுள்ளனர். பல இடங்களில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் அதனைத் திரும்பத் தராமல் இழுத்தடித்துள்ளன.

மேலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் வழக்கமே நடைமுறையில் உள்ள சூழலில், அம்மாணவர்களிடமும் முதலில் கட்ட வேண்டிய ரூ.5,00,000 பணம் இல்லாமல் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள முடியாது என பல தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கூறியுள்ளன.

பல பெற்றோர்கள், உடனடியாகக் கட்ட வேண்டிய ரூ.5 இலட்சத்திற்கே அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கி வந்திருந்ததாகவும், அடுத்த 15 நாட்களில் கட்ட வேண்டிய ரூ.6 இலட்சத்தைத் தங்களால் கட்ட இயலாது என்றும் கூறி தங்களது பிள்ளைகளின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலாத வருத்தத்தில் கண்ணீர் விட்டனர்.

கலந்தாய்வு மூலமாக கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றுள்ள மாணவர்கள், ஏதேனும் ஒரு காரணத்தால் சேர முடியாமல் போகும் பட்சத்தில் விழும் காலி இடத்தை பெரும் பணக்காரர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு நிர்வாக ஒதுக்கீட்டில் விற்று விடுகின்றனர் தனியார் மருத்துவக் கல்லூரிகள். இதற்குகந்தாற் போலவே உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்திருப்பது ஒன்றும் தற்செயலான நிகழ்வல்ல.

கடந்த 2016-ம் ஆண்டும் கேரள உயர்நீதிமன்றம் தனியார் கல்லூரி முதலாளிகளுக்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தது. கேரளாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பும் வகையில், அந்த இடங்களை அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது, கேரள அரசு. இதனை எதிர்த்து கல்லூரி முதலாளிகள் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், “மாநில அரசு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு நடத்துவதை மைய அரசு நிபந்தனையாக விதிக்கவில்லை” என வாதிட்டது. அந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, கேரள அரசின் உத்தரவை ரத்து செய்து, தனது விருப்பம் போல தனியார் கல்லூரி முதலாளிகளைக் கொள்ளையடிக்க அனுமதித்தது கேரள உயர்நீதிமன்றம்.

நன்றி: கார்ட்டூனிஸ்ட் பாலா

அன்று உயர்நீதிமன்றம் திறந்துவிட்ட பாதைக்கு இன்று உச்சநீதிமன்றம் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. நீட், புதிய கல்விக் கொள்கை போன்ற வித விதமான பெயர்களில் வரும் கல்வித்துறை மாற்றங்கள் எல்லாம், கல்வியைச் சரக்காக்கி, அதனை பணம் உள்ளவர்கள் மட்டும் பெற்றுக் கொள்ளத்தக்கதாக மாற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கும் திட்டங்களே.

உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அனைத்து ஏகாதிபத்திய நிறுவனங்களும் வகுத்துத் தரும் திட்டங்களை பிசிறின்றி இந்தியாவில் செயல்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பான நிதி ஆயோக், கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகள் குறித்து ஒரு பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்திருந்தது.

அதில் ”தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தின் மீதான அரசு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டால், மாணவர் சேர்க்கையில் மோசடிகளுக்கு இடமிருக்காது” எனக் கூறியிருப்பதோடு, ”இலாபம் நிறையக் கிடைத்தால் தான் தனியார்கள் ஆர்வத்தோடு கல்லூரி தொடங்க முன் வருவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளது. ஏகாதிபத்தியங்களின் விருப்பத்தையே இன்று நீட் தேர்வு வடிவிலும், கட்டணக் கொள்ளையின் வடிவிலும் நிலைநாட்டியுள்ளன, நீதிமன்றங்களும் அரசும். பாதிக்கப்பட்டவர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?

மேலும் படிக்க:
Supreme court fixes fees of Kerala’s self-financing medical colleges at Rs 11 lakh per annum
Medical aspirants in Kerala rush to cancel admissions

_____________

இந்த செய்திக் கட்டுரை உங்களுக்கு பிடித்துள்ளதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் ஒலிக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி