Sunday, November 1, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி நீட் தேர்வை ரத்து செய் ! - தமிழகம் தழுவிய பிரச்சாரம் !

நீட் தேர்வை ரத்து செய் ! – தமிழகம் தழுவிய பிரச்சாரம் !

-

நீட் தேர்வை ரத்து செய் ! அடக்குமுறைக்கு அஞ்சாது ! இது வேற தமிழ்நாடு ! தமிழகம் தழுவிய பிரச்சாரம் !

ன்பார்ந்த மாணவர்களே,

‘நீட்மாணவி அனிதா மரணம் தற்கொலையல்ல – படுகொலை. நம்பவைத்து கழுத்தறுத்த மோடி – எடப்பாடி அரசுகள்தான் கொலைக் குற்றவாளிகள்! சுமைதூக்கும் தொழிலாளியின் மகளான அனிதா மருத்துவப் படிப்பையே தனது கனவாகக் கொண்டிருந்தார். மோடி  அரசும், அடிமை எடப்பாடி கும்பலும், உச்சநீதிமன்றமும் இணைந்து ‘நீட்’ என்னும் கொள்ளி வைத்து அனிதாவின் கனவைக் கருக்கி விட்டன.

நீட் தேர்வுக்கு எதிராக அனிதா பற்றவைத்த சிறு தீப்பொறி தமிழகமெங்கும் காட்டுத் தீயாக பற்றி எரிகிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு வீதியில் இறங்கி, சாலைமறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துகிறார்கள். நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை பள்ளி மாணவிகள் தவிடுபொடியாக்கிவிட்டனர்.

ஜல்லிக்கட்டு – மெரினா  எழுச்சியைப் போல, நீட் திணிப்புக்கு எதிரான போராட்டமும் மத்திய –  மாநில அரசுகளை அச்சுறுத்துகின்றன. பி.ஜே.பி-யின் அடிமையான எடப்பாடி கும்பல், போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது, மாணவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறது, 150 -க்கும் மேற்பட்டோரை சிறையிலடைத்துள்ளது. இதன் மூலம் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என மனக்கோட்டை கட்டுகிறது. ஆனால், நீட் தேர்வை விரட்டாமல் மாணவர் போராட்டங்கள் ஒரு போதும் ஓயாது.

நீட் : கோச்சிங் செண்டர்களின் கொள்ளைக்கு வழி!

அகில இந்திய அளவில் மருத்துவக்கல்விக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுதான் நீட். அதாவது, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு. இதற்கான அவசியம் என்ன என்று கேட்டால்? “தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம்” என்கிறது மோடி அரசு. திறமைக்கு இவர்கள் சொல்லும் அளவுகோல் என்ன? 700 மதிப்பெண்களுக்கான ஒரு நுழைவுத்தேர்வு.

அதுவும் சி.பி.எஸ்.இ. எனும் மத்திய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் கொண்ட தேர்வு. +2 வரை படிக்கும்போது சோதிக்க முடியாத தகுதியை ஒரு நுழைவுத்தேர்வில் எப்படி சோதிக்க முடியும்? திறமையான, சீரான மருத்துவக் கல்வி, பயிற்சி மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியுமே தவிர, ஒரு நுழைவுத் தேர்வில் எப்படி தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்?

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுடன் ஃபிட்ஜீ, ஆலென், பினாக்கிள் போன்ற மிகப்பெரிய நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் கூட்டணி அமைத்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளன. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ரூ.1.52 லட்சம் கட்டணம். இதுதான் திறமையை சோதிக்கும் லட்சனம்.

நீட் : நுழைவுத் தேர்வு – தகுதி திறமை என்பதெல்லாம் மோசடி!

நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறுகிறார்கள். ஆனால் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வு இல்லை. வெவ்வேறு மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. நீட் தேர்வு நடத்தி, ரிசல்ட் அறிவிக்கும் வேலை செய்யும் புரோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்துள்ளது.

போட்டித்தேர்வுகளில் நடந்த மிகப்பெரிய ஊழல் பி.ஜே.பி ஆளும் மத்தியப்பிரதேச வியாபம். கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ் மருத்துவக்கல்லூரியில் முறைகேடு மட்டுமல்ல, அதை எதிர்த்த மூன்று மாணவிகள் கொல்லப்பட்டனர். சில மாதங்கள் மூடப்பட்ட கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது.

கேதான் தேசாய் MCI சேர்மனாக இருந்தபோது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க டன் கணக்கில் தங்கமும், வெள்ளியும் லஞ்சம் பெற்று சிறை சென்றார். அவரைத்தான் மோடி அரசு சர்வதேச மருத்துவக்கவுன்சில் தலைவராக்கியுள்ளது.

எஸ்.ஆர்.எம், ராமச்சந்திரா, ஏ.சி.எஸ் போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்க விவகாரங்களில் தலையிடும்  அதிகாரம் அரசுக்கே இல்லை. இப்படி, லஞ்சமும் – ஊழலும் புழுத்து நாறும் இந்த கல்வி அமைப்பில் தகுதி, திறமையை கண்டறியத்தான் அகில இந்திய நுழைவுத்தேர்வு என்பதெல்லாம் பித்தலாட்டம்.

நீட் : தரப்படுத்தவில்லை தனியார் கல்விக் கொள்ளையை சட்டபூர்வமாக்குகிறது!

“நீட் தேர்வு தனியார் மருத்துவக்கல்லூரிகள் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது, கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்று அளந்துவிடுகிறார் தமிழினத்தின் எதிரி தழிழிசை. கேரளாவில் நீட் தேர்விற்குப் பிறகு தனியார் கல்லூரிகளில் 5 லட்சம் என்று இருந்த கட்டணம் 11 லட்சமாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் வழக்குப்போட்டால், நீதிமன்றம் முதலில் 11 லட்சத்தை கட்டு என்கிறது.

எஸ்.ஆர்.எம், ராமச்சந்திரா, போன்ற கொள்ளையர்களுக்கு இதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்? தமிழகத்தில் மொத்தமுள்ள 3,534 இடங்களில் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் வெறும் 5 பேருக்கு மட்டுமே நீட் தேர்வின் மூலம் இடம் கிடைத்துள்ளது. மற்றவர்கள் அனைவரும் தனியார்பள்ளியில் படித்தவர்கள். பி.ஜே.பி காரர்கள் வாங்குன காசுக்குமேல் கூவுகிறார்கள்.

 நீட் : சி.பி.எஸ்.இ. எனும் சிலந்திவலையில் சிக்கவைக்கும் தந்திரம்!

“சி.பி.எஸ்.இ. தரத்திற்கு மாநில பாடத்திட்டத்தை உயர்த்த வேண்டும்’’ என்று நீட் ஆதரவாளர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். சி.பி.எஸ்.இ.  என்ன அவ்ளோ அப்பாடக்கர் பாடத்திட்டமா? அறிவியலாளர் அனில் குமார் மற்றும் IIS -இல் பணியாற்றிய டிபாகர் சட்டர்ஜி ஆகியோர் இந்தியாவில் உள்ள சில மாநிலக் கல்வி வாரியங்களை சி.பி.எஸ்.இ. -யோடு ஒப்பிட்டு ஒரு ஆய்வு செய்தனர்.

இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு அறிவியல் பாடங்களிலும் மேற்கு வங்கக் கல்வி வாரிய மாணவர்களும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் ஆந்திர மாநில மாணவர்களும் சி.பி.எஸ்.இ. மாணவர்களைக் காட்டிலும் சிறப்பாக உள்ளதை நிறுவினர் (ஆதாரம்;Current Science, 2009). சி.பி.எஸ்.இ. யில் படித்த மாணவர்களாக இருந்தாலும் லட்சக்கணக்கில் செலவழித்து பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்காமல் நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாது.

நீட்டுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ. யில் இருந்து கேட்கப்படுவதால் சி.பி.எஸ்.இ.  அடிப்படையிலான தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்றாலே இனி சி.பி.எஸ்.இ.  பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு நவோதயா பள்ளிகளை கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே  மூடப்பட்டு வரும் மாநிலப்பாடத்திட்ட அரசுப்பள்ளிகளை இனி அடியோடு ஒழித்துக்கட்டிவிடுவார்கள்.

நீட் : மாநிலங்களின் உரிமையைப்பறிக்கும் சதி!

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், 3,534 இடங்கள், 192  உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் என வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத கட்டுமானம் இங்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தட்டிப்பறிக்கத்தான் நீட்-ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கில்லை என்பதில் குறியாக உள்ளது மோடி அரசு.

அடுத்து, பிற மருத்துவப் படிப்புகள், பொறியியல், கலை – அறிவியல் என அனைத்து படிப்புகளுக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வு வரப்போகிறது. நெருக்கடி நிலை காலத்தில் (1976 –ல்) கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றார்கள். இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ என கல்வியை மையப்பட்டியலுக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டுகிறார்கள்.

ஏற்கனவே ‘ஒரே நாடு ஒரே வரி’ என ஜி.எஸ்.டியை திணித்து மாநிலங்களின் பொருளாதார உரிமையை பறித்துவிட்டார்கள். அடுத்து ‘ஒரே நாடு ஒரே மொழி – கலாச்சாரம்’ என இந்தி – சமஸ்கிருத்தத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் ஒருபுறம், பல்தேசிய இனங்கள் கொண்ட நாட்டில் அதன் மொழி, கலாச்சாரம், இன அடையாளங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்டகால கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவுவது. மறுபுறம், கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவேட்டைக்காக நாட்டை மறுகாலனியாக்க, மாநிலங்களின் உரிமையைப் பறித்து; அனைத்தையும் மையப்படுத்துகிறது பி.ஜே.பி கும்பல்.

நீட் : மாணவர்களின் பிரச்சனை மட்டுமல்ல மக்களின் சுகாதாரப் பிரச்சனை!

‘நீட்’ தேர்வின் மூலமாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடப்பதால், அரசு மருத்துவ சேவைக்கான உள் ஒதுக்கீடு ரத்தாகிவிடும். இதனால் அரசு மருத்துவமனைகளில் தன்னை வருத்திக்கொண்டு சேவை செய்ய யாரும் விரும்பமாட்டார்கள். அது மட்டுமல்லாமல், லட்சங்களை செலவழித்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்பவர்கள், தாங்கள் போட்ட முதலீட்டை எடுக்க தனியார் மருத்துவமனைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வார்களே தவிர, அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு சேவை செய்ய வரமாட்டார்கள்.

ஏற்கனவே, மோடி அரசு கையெழுத்திட்டுள்ள காட்ஸ் ஒப்பந்தப்படி பொதுசுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி தங்குத்தடை இல்லாமல் அந்நிய நிதியை அனுமதிக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள நமது பொது சுகாதாரத் துறையை கைப்பற்ற வேண்டும். அதற்காகத்தான் தரத்தின் பெயரால் நீட் திணிக்கப்படுகிறது. இது நடந்துவிட்டால், அரசு மருத்துவக் கல்வி மட்டுமல்ல, அரசு மருத்துவ சேவையும் இனி ஏழைகளுக்கு கிடைக்காது. பெருவாரியான மக்கள் நோய், நொடியிலேயே செத்துமடியும் அபாயத்தை உருவாகும்.

இதுவரை வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது என்று இருந்தது. இனி அவர்களும் சேரலாம் என்று MCI சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவக்கல்வியை தரப்படுத்துவது இவர்கள் நோக்கம் இல்லை. சிறு கூட்டமான பார்ப்பனர்கள் – பணக்காரர்களில் இருந்து ‘தரமான’ நவீன கொத்தடிமைகளை உருவாக்குவது என்ற கார்ப்பரேட் நலனையும்,  பெருவாரியான ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை மறுக்கும் பார்ப்பன – புதிய மனுநீதியையும் இணைக்கும் புள்ளிதான் நீட்.

மோடி அரசின் இந்த புதிய மனுநீதிதான் அனிதாவை தூக்கிலேற்றியது. கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட, கிராமப்புற ஏழை மாணவர்களையும் தூக்கிலேற்ற துடிக்கிறது. அரச வன்முறைமூலம் தமிழகத்தை அடிமைப்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு. இந்த வன்முறைக்கு அடங்கியாக வேண்டும் என்கிறது அடிமை எடப்பாடி அரசு. அடங்க முடியாது என்று திமிறி எழுகிறது தமிழகம்.  அனிதாவின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் அனைவரும் ஒன்றிணைவோம்!

அன்று, இந்தி திணிப்பை முறியடித்தோம்!
நேற்று
, ஜல்லிக்கட்டில் வென்றோம்!
இன்று
,எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும்,
எதிர்த்து நின்று நீட் திணிப்பை விரட்டியடிப்போம்!
கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவோம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.
எண்.41,பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை-95,
தொடர்புக்கு : 94451 12675

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. அனிதாவைக் கொன்றவனை
  விரட்டு…
  நீதியைக் கொன்று
  நீட்…டி முழக்கும்
  கயவர்களை வீதியில்
  புரட்டு…
  மருத்துவமென்பது சேவை
  காசாக்கத் துடிப்பவனை
  மலையின் மீதேற்றி
  உருட்டு…
  கல்வியை வளைத்து நிற்கும்
  பூணூலை
  அறுத்துக் கழட்டு…
  வீரம் செறிந்த
  மாணவப் போராளிகளே
  துரோகிகளை துடைத்தெறியனும்
  தமிழகம் முழுமையும்
  மொத்தமாய் திரட்டு..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க