Monday, January 17, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !

அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !

-

த்திய அரசின் நவோதயா பள்ளிகளுக்குத் தடையில்லா சான்று வழங்கும்படித் தீர்ப்பளித்திருக்கிறது உயர்நீதி மன்ற மதுரைக் கிளை. சொன்ன நீதிபதி பா.ஜ.க. -வின் பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசியவராம். நியாயத்தையும் தர்மத்தையும் வாட்சப் வழியே மட்டும் கற்றுணர்ந்த பலர் இந்த தீர்ப்பை கொண்டாடித் தீர்க்கிறார்கள். நவோதயா இல்லாததால்தான் தமிழக கல்வித் தரம் நாசமாய்ப் போய்விட்டதென அம்பிகள் எல்லோரும் ஃபார்வேர்டு மெசேஜ் வழியே புகாரளிக்கிறார்கள். பெருங்குடிகாரன் ஏதோ ஒரு சரக்கு கிடைத்தால் போதும் என தவிப்பது போல, சுயசிந்தனையற்ற மக்கள் பலர் சி.பி.எஸ்.சி.,  நீட், நவோதயா எனக் கிடைக்கும் எல்லா வழியில் இருந்தும் பாபவிமோசனம் பெற்றுவிடலாமென நம்பி, அவற்றை வெறித்தனமாக ஆதரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நவோதயா பள்ளி

மிகப் பலரை வசீகரித்த ஒரு அம்சம் நவோதயாவில் இந்த ஆண்டு +2 படித்து நீட் தேர்வெழுதிய 14000 சொச்சம் பேரில் 7000 பேர் இந்தியா முழுக்க மருத்துவம் படிக்கத் தேர்வாகியிருக்கிறார்கள் எனும் தகவல். இதில் எத்தனை பேர் எம்.பி.பி.எஸ். ஆவார்கள் என்பது தெரியவில்லை. ஆனாலும், 580+ பள்ளிகளில் இருந்து 7000 டாக்டர்கள் எனும் மந்திர எண் மிடில்கிளாசுக்கு உச்சகட்ட கிளுகிளுப்பூட்டுகிறது.

நவோதயா பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. 5-ஆம் வகுப்பு வரை மற்ற பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதி நவோதயா பள்ளிகளில் சேரவேண்டும். சராசரியாக நூறில் இருவர் தேர்வாகிறார்கள். தமிழகத்தில் 10 இலட்சம் மாணவர்கள் ஒவ்வோர் வகுப்பிலும் பயில்கிறார்கள். (5 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் கணிசமாக இருக்கும்) ஒப்பீட்டளவில் மிக அதிக அளவு நகர்ப்புற மாணவர்களைக் கொண்ட மாநிலம் இது. அவர்களின் பெற்றோர்கள் பலர் இனி நவோதயாவை ஒரு வெறித்தனமான இலட்சியமாக வரித்துக்கொள்வார்கள். அதற்கான தயாரிப்பு இரண்டாம், மூன்றாம் வகுப்பிலேயே துவங்கும். இப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களும் 12-ஆம் வகுப்பு மாணவர்களும் வதைமுகாம்களுக்கு ஒப்பான சூழலில் வாழ்கிறார்கள். பள்ளியில் கூடுதல் வகுப்பு, 10-ஆம் வகுப்பு என்றால் 2 மணி நேரத்துக்கும் குறையாத டியூஷன், 12-ஆம் வகுப்பு எனில் குறைந்தது 3 பாடங்களுக்கு டியூஷன். இப்போது நீட் பயிற்சி கூடுதலாக இணைய இருக்கிறது.

+2 முடித்தால் நீட் பயிற்சி மையம்! ஆரம்பப்பள்ளி சிறார்க்கு நவோதயா பயிற்சி மையம்!

இப்போது வரைக்கும் ஓரளவுக்கு நிம்மதியாக இருப்பது ஆரம்பப் பள்ளி வகுப்பு சிறார்கள்தான். இனி 10, 11, 12-ஆம் வகுப்பு குழந்தைகளின் பெற்றோர்களைப் போல, 4, 5-ஆம் வகுப்பு பெற்றோர்களும் பெரும் பதட்டத்துக்கு ஆட்படுவார்கள். இது ஒன்றும் மிகையான அனுமானமல்ல. என் அனுபவத்தில் இந்த காலகட்டத்தில்தான் (10, 12-ஆம் வகுப்பு) பெற்றோர்களால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். காரணம், பொதுத்தேர்வு, அந்த மதிப்பெண் மூலம் மட்டுமே தெரிவு செய்ய முடிகிற உயர் கல்வி வாய்ப்புக்கள். நவோதயா இந்தப் போட்டியை இன்னும் அடிமட்டத்துக்குக் கொண்டுபோய் ஐந்தாம் வகுப்பையே உச்சகட்ட போட்டியுள்ள களமாக மாற்றும்.

நாமக்கல் பள்ளி ( மாதிரிப்படம்)

ஏற்கனவே உயர்கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி கல்லா கட்டுகின்றன. நீட் அதனை 1 இலட்சம் கோடியாக உயர்த்தவிருக்கிறது. இதில் ஆரம்பப்பள்ளியிலேயே நுழைவுத்தேர்வு எனில், என்ன ஆவார்கள் குழந்தைகள்..? ஒருவனுக்கு இலட்ச ரூபாய் பரிசு என அறிவித்துவிட்டு, பல இலட்சம் பேரிடம் கோடிகளில் பணம் பிடுங்கும் லாட்டரி வியாபாரம் போல மத்திய அரசு நவோதயாவைத் துவங்கியிருக்கிறது. ஆனால், இங்கே பரிசு தரப்போவது மத்திய அரசு, லாட்டரி வியாபாரத்தைத் தனியார் பயிற்சி மையங்கள் செய்யும்.

எதிர்கால வாழ்வுக்குக் காலணாகூடச் சேமிக்காமல், சக்திக்கு மீறி கடன் வாங்கி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் பலர் இங்கிருக்கிறார்கள். வீட்டில் ரேஷன் அரிசியில் சமைப்பார்கள் என்பதால், மதிய உணவு கொண்டுவராத மெட்ரிக் பள்ளி பிள்ளையை நான் பார்த்திருக்கிறேன் (அந்த வறுமையிலும் அவர்கள் ஆண்டுக்கு 30 ஆயிரம் கட்டி மகளைப் படிக்க வைக்கிறார்கள்).

தமது ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை பிள்ளைகளின் பள்ளிக் கட்டணமாகச் செலுத்திவிட்டு, மிச்ச பணத்தில் அவல வாழ்வு வாழும் குடும்பங்களைக் கொஞ்சம் மெனக்கெட்டால் உங்களாலும் பார்க்க இயலும். குடிசைப் பகுதியில் இருந்து வருவதால் தம் வீட்டு முகவரியை சொல்லக் கூச்சப்படும் குழந்தைகள் பலரைச் சந்தித்திருக்கிறேன், (அவர்கள் தனியார் பள்ளிகளில் பயில்கிறார்கள்). பள்ளிகளில் கண்டறியப்படும் கற்றல் குறைபாடு கொண்ட மற்றும் நுண்ணறிவுக் குறைபாடு கொண்ட சிறார்கள் குறித்துப் பெற்றோர்களிடம் பேசக்கூட முடிவதில்லை. தம் பிள்ளைகளால் மற்ற பிள்ளைகளைப் போல படிக்க முடியாது என்பதை அனேகப் பெற்றோரால் ஏற்கவே முடிவதில்லை.

நான் சந்தித்த ஒரு தாய் தான் அணிந்திருந்த எல்லா நகைகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டதாகச் சொன்னார். வேண்டுதல் ஒன்றுதான், மகன் பத்தாம் வகுப்பில் (அவர்) சொல்லிக்கொள்ளும்படியான மதிப்பெண் வாங்க வேண்டும்.

தான் எதிர்பார்த்த மதிப்பெண் தன் மகளுக்கு +2வில் வராத நிலையில், நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன வாக்கியம், “நாங்கள் (எங்கள் மகளால்) ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். உறவினர்களை எதிர்கொள்ள அவமானமாய் இருக்கிறது; அதனால் தொலைபேசியைக்கூட எடுக்க மனமில்லை.” மிட் டேர்ம் தேர்வில் 3 பாடங்களில் தேர்ச்சியடையாத ஒரு மாணவரது அப்பா, “இவன் அடுத்த பரீட்சையிலயும் இப்படி மார்க் எடுத்தா, நாங்க (பெற்றோர் இருவரும்) தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழியில்லை” என மகன் முன்னாலேயே அழுகிறார்.

தனியார் பள்ளியில் டிஜிட்டல் வகுப்பு

இவையெல்லாம் மிகையான எதிர்வினைகளாக தோன்றலாம். ஆனால், பெருந்தொகையான பெற்றோரின் மகிழ்ச்சி, கவலை, வெற்றி, தோல்வி, நம்பிக்கை, அவமானம் என சகலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகப் பிள்ளைகளின் மதிப்பெண் இருக்கிறது. அதுதான் வெற்றிகரமான பள்ளி எனக் கருதப்படுபவற்றை நோக்கிப் பெற்றோர்களை ஓடவைக்கிறது. அப்படியான ஒரு பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் பெற்றோர்கள் இங்கே மிகமிக அதிகம். குழந்தைகள் தற்கொலையைக் கேள்விப்பட்டதில்லை, நவோதயா அதைக் கொண்டுவரும்!

இந்த களச்சூழலில் இருந்து நவோதயாவைப் பாருங்கள். மாவட்டத்துக்கு ஒரு பள்ளி. அதில் அதிகபட்சம் வகுப்புக்கு 50 பேர் என்று வைத்தாலும் தமிழகம் முழுக்க 1500 பேருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். தோராயமாக 10 லட்சம் பேர் இருக்கும் இடத்தில் அதிக கற்றல் திறன் கொண்ட 1500 பேரைப் பொறுக்கி எடுத்து, அவர்களுக்கு உச்சபட்ச வசதிகளைக் கொடுத்து அவர்களை இன்னும் திறமையாகத் தேர்வெழுதும் மாணவர்களாக உருவாக்கப் போகிறார்கள்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற தனியார் பள்ளி உணவு விடுதி

குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி செலவில் 6 இலட்சம் ரூபாயை மிச்சம் பிடிக்கவும், அதன் பிறகான கல்லூரி செலவில் இன்னும் அதிகம் மிச்சம் பிடிக்கவும், ஒரு வெற்றிகரமான பெற்றோராக தம்மை நிரூபிக்கவும் உள்ள பெரும் வாய்ப்பு நவோதயா பள்ளி சீட்டுக்களுக்கான ரேஸ்தான். ஆகவே, தமிழக மிடில்கிளாஸ் ஒரு வெறித்தனமான முனைப்போடு, தம் பிள்ளைகளை ஆரம்பப்பள்ளியிலேயே நவோதயா நுழைவுத்தேர்வுக்கு தயார் செய்யும். அமைச்சர்கள் தம் அதிகாரத்தின் கடைசித் துளியையும் சுவைக்க விரும்புவதுபோல, இவர்கள் நவோதயா சீட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பார்கள்.

அந்தக் கனத்தைச் சுமக்கப்போவது, நவோதயா பள்ளி என்றால் என்னவென்றே தெரியாத சிறார்கள். இனி ஆறாம் வகுப்பு மாணவர்களை 4 பிரிவில் அடக்கலாம்.

 • நவோதயாவை அறிந்திராத குழந்தைகள்,
 • அறிந்திருந்தாலும் அதனை அணுகவியலாத குழந்தைகள்,
 • அணுகித் தேர்வாகாத பிள்ளைகள்,
 • நவோதயா பிள்ளைகள்.

இது திறமை அடிப்படையிலான தீண்டாமை!

இதுவரை, நகரம் – கிராமம் என இருந்த பிரிவினை, சற்றே மாறி அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்றானது. பிறகு தனியார் பள்ளி – நாமக்கல் பள்ளி என்றானது. அது இப்போது மாநில பாடம் – சி.பி.எஸ்.சி என்று இருக்கிறது. இனி அது நவோதயா – ஏனையை பள்ளிகள் என்று ஆகப்போகிறது. ஒரு பிரிவு மாணவர்களை மேம்பட்டவர்களாகக் காட்டி இன்னொரு பிரிவினரைத் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளுவது இங்கே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது.

அந்தப் பிளவை இன்னும் கூர்மைப்படுத்த நவோதயா மோகத்தால் முடியும். 14,000 பேரில் 7000 பேரை மருத்துவம் போன்ற உயர்படிப்புக்கு அனுப்ப முடிகிற ஒரு பள்ளியை ஒரு தொழிற்சாலையாகவே கருத முடியும்.  முழுக்க புத்திசாலிகளால் நிறைந்திருக்கும் பள்ளி அடிப்படையில் தவறானது. கற்றல் குறைபாடு உள்ள சிறார்களைக்கூட ஒரு பள்ளி கூடுமானவரை நிராகரிக்கக்கூடாது.

கல்விப் புலத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அனிதா

நடைமுறை சிரமங்கள் இருக்கட்டும். நவோதயா போன்ற ஒரு பள்ளியை அரசே நடத்துவது அறமற்ற செயல். குடிநீரும், கழிப்பறையும் இல்லாத பள்ளிகள், போதுமான ஆசிரியர்கள் இல்லாத ஏராளமான பள்ளிகளை நாடுமுழுக்க வைத்துக்கொண்டு, அதில் படிக்கும் குழந்தைகளுக்கும் வாய்ப்பளிக்கிறோம் என பாசாங்கு செய்து நுழைவுத்தேர்வு வைப்பது உச்சகட்ட வக்கிரம். எல்லா வசதிகளோடு ஒரு சில குழந்தைகளை அரசே படிக்க வைப்பதும், ஏனைய இலட்சக்கணக்கான சிறார்களைப் பிச்சைக்காரர்களைப் போலக் கிடைப்பதை வாங்கிக்கொள்” எனப் படிக்க வைப்பதும் அநீதி என்பது உங்களுக்குப் புரியவில்லையா? 90 மார்க் இல்லை என்பதற்காக உங்கள் பிள்ளையை வராண்டாவில் உட்காரவைத்தால் ஒத்துக்கொள்வீர்களா?

எல்லா திட்டங்களையும் குறை சொல்கிறோம் என உடனடியாக தேசபக்தர்கள் எதிர்வினையாற்றுவார்கள். அவர்களுக்குப் பதிலளிக்க பல உதாரணங்களைக் கொடுக்க இயலும். வடசென்னையில் டான்பாஸ்கோ சபையின் பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. செயல்படுகிறது. பல இடங்களில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிகளில் படிப்பவர்களில் பத்தாவது தேறாதவர்கள் அல்லது குறைவான மதிப்பெண் பெற்று 12 ஆம் வகுப்பு படிக்க ஆர்வமில்லாதவர்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் அது.

தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கிராமப் பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 2 மாணவர்கள் மட்டும் தோல்வியடைந்தார்கள். அவர்கள் இருவரும் போதிய நுண்ணறிவுத்திறன் இல்லதவர்கள். கடுமையான குறைபாடு உள்ளவர் ஒரு பாடத்தில் மட்டும் தேறினார். ஓரளவு குறைபாடு உள்ளவர் ஒரே பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தார். அந்த மாணவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள் என்பதை அறிந்தேதான் அந்தத் தலைமை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதித்திருக்கிறார். ஒரு தலைமை ஆசிரியராக 100% தேர்ச்சியை  தெரிந்தே இழந்து சிறு தோல்வியை சந்தித்திருக்கிறார். ஆனால், அந்த இரு மாணவர்களுக்கும் இது மகத்தான் வெற்றி இல்லையா!

நவோதயா பள்ளிகள் கல்வித்துறையை மேம்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. அதிக நவோதயா பள்ளிகளைக் கொண்ட உ.பி. கல்வித்தரத்தில் கடைசியிலும் கடைசி படியில் இருக்கிறது.

அனிதாக்கள் இனி ஐந்தாம் வகுப்பிலேயே ஒழிக்கப்படுவார்கள்!

அனிதா போன்ற எளிய மாணவர்களை உயர்கல்வி வாய்ப்பில் இருந்து விரட்டிவிடுவதற்கான பல திட்டங்களை அரசு பல தளங்களில் இருந்தும் செயல்படுத்துகிறது. ஆரம்பப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களையே நியமிக்காமல் இருப்பது, நீட் தேர்வு, ஐந்து, எட்டாம் வகுப்புக்களுக்குப் பொதுத்தேர்வு, உயர்கல்வி உதவித்தொகை குறைப்பு, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை வெட்டுவது என்பவை எல்லாமே பாமர மக்கள் உயர்கல்வி பயில்வதை நிறுத்தும் பல்வேறு உத்திகள்தான்.

நவோதயா என்பது அத்தகைய நடவடிக்கைகளின் காஸ்ட்லி வெர்ஷன். அதன் மூலம் ஒரு தரப்பு மக்களுக்கு போதையூட்டி, இன்னொரு தரப்பு பிள்ளைகளை இலாயக்கற்றவர்கள் என முத்திரை குத்தி ஒதுக்குவதே அதன் நோக்கம். இப்போது மாநில பாடத்திட்டம் மட்டமானது என மாணவர்களும் பெற்றோர்களும் நம்புவது போல, நவோதயா வந்தால் மற்ற பள்ளிகள் மட்டம் என மக்களும் மாணவர்களும் நம்புவார்கள். அவர்கள் நம்பிக்கையை 6 ஆம் வகுப்பிலேயே கொன்றுவிட்டால், 12 ஆம் வகுப்பில் அனேகமாக போட்டியே இருக்காதில்லையா?

ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிப்பது என்பது மலிவான கூலிகளை உற்பத்தி செய்யும் நுட்பம். மிக அதிக அளவு மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் (தமிழகம், கேரளா) அடிமட்ட வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அங்கெல்லாம் வேலைக்கு வருவது ஏழைகளின் உயர்கல்விக்கு வாய்ப்பு குறைவாக உள்ள மாநில இளைஞர்கள்தான்.

அரசுப் பள்ளிகளை முற்றிலுமாக அழித்தொழிக்க எல்லா வேலைகளையும் செய்யும் இந்த அரசாங்கம், நவோதயா எனும் பெயரில் அரசுப் பள்ளிகளை கொண்டுவர இத்தனை முனைப்பாக இருப்பதில் இருந்தே அதன் பின்னால் ஒரு மோசமான உள்நோக்கம் இருப்பதை உணர இயலும். குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச்செல்வதைத்தான் நவோதயா செய்யும். அது உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யாமல் போகலாம். ஆனால், யாரோ  ஒருவரின் பிள்ளைகளை உளவியல்ரீதியாகக் கொல்லத்தான் போகிறது. யாரோ ஒரு குழந்தை கொல்லப்படுவதை உங்களால் இயல்பாக கடந்து போக இயலும் என்றால், நவோதயாவை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்றால், இந்த நவோதயா எனும் கல்வித் தீண்டாமைக்கு எதிரான உங்கள் குரலை பதிவுசெய்யுங்கள்.

-வில்லவன்

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 1. கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இளம் சிறார்கள் மனதை ஊனப்படுத்தும் நீட் மற்றும் நவோதயா பள்ளிகள்,சமூகத்தில் களை யப்பட வேண்டும்.

 2. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
  இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே ….. ?

 3. வில்லவன் போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதையே இந்த கட்டுரை காட்டுகிறது. உயர்கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் உலகளவில் நிலவும் போட்டியான சூழ்நிலையையும் போட்டித்தேர்வுகளையும் கருத்தில் கொள்ளாமல் ஒரு பாடத்திட்டத்தை (பள்ளியானாலும் கல்லூரியானாலும்) கொண்டு வந்தால் அது நிச்சயம் தோல்வி அடையவே செய்யும். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்ததை மட்டும் சொல்லிக் கொடுத்து விட்டு ஹாயாக இருப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் இந்த சமச்சீர்க்கல்வி திட்டம். சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலும் குறைபாடுகள் உள்ளன. ஆனால் சமச்சீர்க்கல்வி திட்டத்தோடு ஒப்பிடும் போது அது எவ்வளவோ பரவாயில்லை. பாடப்புத்தகங்களும் புரிந்து படிக்கும்படியானவை. தன்னளவில் முழுமையானவை. மேலும் rote learning எனப்படும் மொட்டையான மனப்பாட முறைக்கு குறைந்த முக்கியத்துவம் மட்டும் தருவது. பெற்றோரும் பிள்ளைகளும் அதை விரும்புவதில் தவறு என்ன இருக்கிறது. தமிழகத்தின் மாநில கல்வி முறையும் அரசியல் சூழ்நிலையும் பலவீனமாக இருப்பதையே நவோதயா பள்ளிகளின் வரவு உணர்த்துகிறது. வில்லவனின் இந்த கட்டுரையானது வினவு தளம் அறிவு வறுமை கொண்டது என்பதை மீண்டும் நிறுவுகிறது.

  • திருந்த வேண்டியது வில்லவன் போன்றோர் அல்ல், நீங்கள் தான் என்பதற்கு நீங்கள் எழுதிய பத்தியே சான்று. அறிவு நாணயத்தோடு நீங்கள் எழுதியவற்றை நீங்களே மறு பரிசீலனை செய்வீர்களானால் அது புரியும்.

   • உயர்கல்விக்கும் வேலை
    வாய்ப்புக்குமான தமிழக மாணவர்களின் தேடலை தமிழகத்துக்கு உள்ளேயே அதுவும் மாநில அரசின் நிறுவனங்கள் அளவில் மட்டும் முடக்கி வைக்கும் மிகவும் சராசரியான ஒரு கல்வித் திட்டத்தை ஆதரிப்பதும் பாராட்டி கட்டுரை எழுதுவதும் தான் அறிவு நாணயம் எனில் அது எனக்கு இல்லை தான்.

 4. ஏம்ப்பா இவ்வுளவு பெரிய கட்டுரைகள் எல்லாம் எழுதிக்கிட்டு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சமசீர் கல்விலேயே படியுங்கள் யாரும் உங்களை கட்டாயப்படுத்தி நவோதய பள்ளியில் படிக்க சொல்ல போவதில்லை.

  விருப்பம் உள்ளவர்கள் நல்ல தரமான கல்வி வேண்டும் என்பவர்கள் நவோதய போகட்டுமே அது பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் விருப்பம். தங்கள் பிள்ளையின் வருங்காலத்திற்கு எது நல்லது என்று முடிவு செய்வது பெற்றோர்களின் உரிமை அதில் யாரும் தலையிட கூடாது.

  சமசீர் கல்வி, நவோதய, CBSE என்று பல வாய்ப்புகள் உருவாவது மாணவர்களுக்கு நல்லதே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க