தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை!! சாலை மறியல்!!!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் மக்கள் 55 நாட்களைக் கடந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கெதிரான போராட்ட உணர்வு கிராமம் நகரம் என்பதைத் தாண்டி மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது.

அந்தவகையில் பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மீளவிட்டான், சில்வர்புரம், மடத்தூர், தபால் தந்தி காலனி, 3-ஆம் மைல், தெற்கு வீரபாண்டியாபுரம், கோரம்பள்ளம், மாப்பிள்ளையூரணி என்று பல பகுதிகள் ஸ்டெர்லைட்டை எதிர்த்து தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 09.04.2018 அன்று தூத்துக்குடியில் அறிவிக்கப்படாத பேரணி – முற்றுகை – சாலை மறியல் நடைபெற்றது.

வழக்கமாக திங்கள் காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெரும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பல்வேறு கிராம மக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மனு கொடுக்க திரண்டிருந்தனர், ”ஏற்கனவே தரப்பட்ட மனுவின் மீதான நடவடிக்கை என்ன? எப்போது ஸ்டெர்லைட்டை மூடுவீர்கள்” என்று முழக்கமிட்டவாறு கேட்கத்துவங்கினர்.

மக்களின் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டார் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்.

இதுவரை மனு வாங்ககூட நேரம் ஒதுக்காமல், மக்களை நேரில் சந்திக்க அனுமதிக்காமல் அலைகழிப்பது. பெயருக்கு 2 பேரை அழைத்து மனுவை வாங்கிக் கொள்வது என செயல்பட்டுவரும் ஆட்சியரின் நடவடிக்கைகள் மீது வெறுப்படைந்திருந்த மக்களை இது மேலும் ஆத்திரத்துக்குள்ளாகியது.

ஆட்சியரின் இந்த அலட்சியப் போக்கிற்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், ஆயிரத்தும் அதிகமானோர் திரண்டு திருநெல்வேலி சாலையை மறித்து  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில், மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் எடுத்து நடத்தி வருகிறது. மேலும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டமும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராடும் மக்களுக்கு உறுதுணையாக வழக்கறிஞர்களும் களத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஏற்கனவே போராடும் மக்களுடன் மக்கள் உரிமை பாதுகாப்புமைய தோழர்களும், மக்கள் அதிகாரம் தோழர்களும் களத்தில் இணைந்துள்ளனர். இது ஆளும்வர்க்கங்களுக்கு பீதியுண்டாக்கியுள்ளது.

இவ்வாறு இப்போராட்டத்தின் பரிமாணம் விரிவடைந்து செல்வதை கண்டு பதறியடித்துக்கொண்டு வந்த ஆட்சியர் வெங்கடேசன் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

போராட்டக் களத்தில் இருந்த பெண்கள் “இதுவும் தலைக்கு வெச்சு தூங்கத்தான் போகும்” என்று தங்கள் அனுபவத்தில் இருந்து நேரடியாக விமர்சித்தனர். பதில் சொல் “மூடுவியா – மூடமாட்டியா?” என்று கொதித்துக் கேட்டனர்.

முதல்முறை கலெக்டரை வெளியே வரவழைத்த இப்போராட்டதில் இருந்து, இது போன்ற போராட்டங்கள்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு என்பதை உணர்ந்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி.