மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது – தாக்குதல் !

மக்கள் பாடகர் தோழர் கோவனை கைது செய்வதன் மூலம் கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கப்பார்க்கிறது இந்த அரசு. இதனை அம்பலப்படுத்தும் செய்தி தொகுப்பு இது...

தோழர் கோவனை கைது செய்ய போலீசு அத்துமீறல் ! மக்கள் மீது அதிரடி போலீசு தாக்குதல் !

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு பாடகரான தோழர் கோவன் அவர்களை கடந்த 13.04.2018 அன்று காலை கைது செய்வதற்காக வந்துள்ளோம் எனக் கூறிக்கொண்டு, சிலர் அவர் வசிக்கும் திருச்சி அரவானூர் பகுதிக்கு TN – 15 G – 1063 எனும் வேனில் வந்தனர்.

தோழர் கோவன் (கோப்புப் படம்)

வேனில் வந்த 15 பேரும் தங்களை போலீசு என கூறிக்கொண்டாலும் அதற்கான எந்த அடையாளத்தையும் காண்பிக்காமல் ஒரு கடத்தல் கும்பலைப் போல் செயல்பட்டனர். இந்த ஆள்கடத்தல் நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவன் அவர்களின் துணைவியார் கோவன் அவர்களை காக்க முயற்சி செய்துள்ளார். அவரை கீழே தள்ளிவிட்டது அந்த கும்பல்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் திரண்டு வருவதைப்பார்த்த அந்த கும்பல் ஓடிவிட்டது. அதன்பின்னர் காவல்துறை வாகனத்தில் திருச்சி போலீசார் வந்துள்ளனர். அவர்கள் தோழர் கோவன் அவர்களை கைது செய்வதாக அறிவித்தனர். ஆனால் ஒருவரை கைது செய்யும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் போலீசு கோவன் அவர்களை பலவந்தப்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவன் அவர்களை காக்கும் பொருட்டு தோழர் கோவன் வீட்டினுல் போலீசு நுழையாதவாறு தடுப்பரணாக நின்றனர். இந்த சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அங்கு பத்திரிக்கையாளர்கள் குவியத்தொடங்கினர். தங்களின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அம்பலப்பட்டுபோய்விடும் என பதறிய போலீசு அதிரடிப் படைகளைக் கொண்டு அரணாக நின்ற பொதுமக்களைத் தாக்கத் தொடங்கியது.

மேலும் தோழர் கோவன் அவரது வீட்டுக் கதைவை உடைத்து அராஜகமாக கைது செய்தது. கைது செய்து அவரை அழைத்து (இழுத்து) சென்றபோதும் அவரை பத்திரிகையாளர்களிடம் பேசமுடியாதவாறு தடுத்தது போலீசு.

ஏற்கனவே ஜெயா உயிருடன் இருக்கும் போது டாஸ்மாக் பாடலுக்காக இதே போல சட்டவிரோதமாக கைது செய்து வழக்கு போட்டனர். தற்போதும் பாஜக ஆணையின் பேரில் தமிழக அரசும், போலீசும் தோழர் கோவனை கைது செய்து அவரது பாடலை முடக்கப் பார்த்தனர்.

ஆனால் இந்த தடைகளைத் தாண்டி வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் தோழர் கோவனை அன்று மாலையே பிணையில் விடுவித்தது நீதிமன்றம்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தோழர் கோவன் தனது பேட்டியில் “ஏற்கனவே டாஸ்மாக் பாடலுக்காக என்னை கைது செய்து என் மனவலிமையை உடைக்கப் பார்த்தார்கள். அதே போல இப்போதும் செயல்பட்டுள்ளார்கள், உண்மையில் கைது நடவடிக்கைகளுக்கு நான் அஞ்சவில்லை. அதே போல் ஆட்சியாளர்களை விமரிசிப்பதை எனது நோக்கம், திட்டுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஒரு மனிதனாக எமது மக்களை அழிக்க நினைக்கும் அரசின் செயல்பாடுகளைக் கண்டு அமைதியாக இருக்கமுடியாது. அவர்களின் மொழியே எங்களது பாடல்கள்; அவர்களின் சொற்களை நாங்கள் பாடல்களில் சொல்கிறோம்.” எனக் கூறினார்.

துருக்கியின் மக்கள் கவிஞன் நசீம் இக்மத் அவர்கள் “என்று கவிதை எழுதத் தொடங்கினேனோ அன்றிலிருந்தே – கலை, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அது நல்ல எதிர்காலம் படைக்க அவர்களை அறைகூவி அழைக்கவேண்டும் என்றே விரும்பினேன்; கலையை மக்களின் துன்பதுயரம், அவர்களின் கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி, வேதனைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் – கருவியாக்கிவிட வேண்டும்.” என்று கூறியிருந்தார். அப்படி செயல்படும் ம.க.இ.க கலைக்குழுவை முடக்கவேண்டும் என்பதே அரசின் முடிவு. ஆனால் அவர்கள் இதற்கு அஞ்சப் போவதில்லை.

*****

 

மக்கள் பாடகர் கோவன் கைது – தாக்குதல் !
கருத்துரிமைக்கெதிரான அராஜகத்தை முறியடிப்போம் !

பத்திரிகைச் செய்தி

நாள் : 13/4/2018

க்கள் கலை இலக்கியக்கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், கலைக்குழு பொறுப்பாளருமான தோழர் கோவனை திருச்சி காவல்துறை கைது செய்துள்ளது. சீருடை அணியாத காவல் துறை எந்த நாகரீக, சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாது அவரது குடும்பத்தினரையும் தாக்கி, வீட்டுக்கதவை உடைத்து கைது செய்துள்ளது. பாடல் மூலம் வன்முறையை தூண்டியதாக 153A,504,505 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அன்றாடம் சிறுபான்மை மக்களின் மீதும் பெரும்பான்மை மக்களின் மீதும் அவதூறுகளை பரப்புவதையே வேலையாகக்கொண்ட காவி பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசு , திருச்சியிலேயே தங்கி தொடர்ந்து ம.க.இ.க , மக்கள் அதிகாரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வரும் தோழர் கோவனை ஏதோ பயங்கரவாதியைப் பிடிப்பது போல அநாகரீகமாகவும் அராஜகமாகவும் கைது செய்துள்ளது

ஆர்.எஸ்.எஸ்-ன் அடியாளாகவே மாறிவிட்ட தமிழக காவல்துறையின் இந்த அராஜகத்தை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக காவல்துறை கருத்துரிமையைப் பறித்து ஆட்டம் போடுகிறது. ஆர்.எஸ்.எஸ் ரத யாத்திரிக்கைக்கு முழு பாதுகாப்பளித்து எதிர்ப்பு தெரிவித்தோரை கைது செய்து ஒடுக்கியது மட்டுமின்றி 144 தடையுத்திரவே போட்டது.

பாஜக மோடி அரசின் துரோகத்தால் கொதித்துப்போயுள்ள தமிழக மக்களின் போராட்டத்தை ஒடுக்கவும், காவிரிக்கான உரிமைப்போராட்டத்தை நசுக்கவும் அடிமை எடப்பாடி அரசு மேற்கொள்ளும் அடக்குமுறை ஒரு போதும் வெற்றிபெறாது. தற்போது தோழர் கோவன் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அவரது விடுதலைக்குத் துணை நின்ற வழக்குரைஞர்கள். ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றியையைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கோவன் மீதான தாக்குதல் என்பது கருத்துரிமை மீதான பாசிஸ்டுகளின் தாக்குதல் எனவே மக்களை நேசிக்கின்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள்
தோழர். காளியப்பன்
மாநிலப் பொருளாளர்
மக்கள் அதிகாரம்

*****

தோழர் கோவன் கைதை கண்டித்து குடந்தையில் ஆர்ப்பாட்டம் !

மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, 13.04.2018 மதியம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் குடந்தை மீன் மார்க்கெட் பகுதியில் வழக்கறிஞர் தோழர் ஜெயபாண்டியன் (மக்கள் அதிகாரம்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை. தொடர்புக்கு : 97892 61624

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க