தொழிலாளிகள்
து
லங்கும் ஆயிரம் சொல்லெடுத்தாலும்
தொழிலாளி என்பதைப் போல்
விளங்கும் பொருள் தருவன வேறில்லை!
நெடிதுயர்ந்த மலைகளின் புதுவழி
உன் கண்களில் அடங்கின!
விரிந்த கானகத்தின் விளை பயன்
உனது கைகளில் தொடங்கின.
உலகின் ஒவ்வொரு அழகும்
உழைப்பாளியே உன்னிடம் மயங்கின!
– இது தொழிலாளர்களைப் பற்றி தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதையின் சில வரிகள்.

சென்னை தாம்பரம் இரயில் நிலையத்திற்கு வரும் சரக்கு ரயிலில் வேலை செய்யும் தொழிலாளிகள் இவர்கள். இரயிலில் வரும் சரக்கை இறக்க வேண்டிய பணி வெளியாட்கள் மூலமாக ஒப்பந்த முறைப்படி நடக்கிறது. அந்த ஒப்பந்தக்காரர்களிடம் தினக் கூலியாக வேலை செய்கின்றனர் இந்தத் தொழிலாளர்கள்.

இவர்களில் தமிழர்கள் குறைவாகவும் பீகார், மேற்கு வங்கம், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாகவும் இருந்தனர். தமிழர்கள் யார் என்று முகத்தைக் கூட பார்த்து தெரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் அன்று வந்த சரக்கு இரயில் சிமெண்ட் மூட்டைகளை சுமந்து வந்திருந்தது. அதனால் அங்கு பார்க்கும் முகமெல்லாம் சிமெண்டினால் அரிதாரம் பூசப்பட்டிருந்தது. ஒரு வேளை அந்த சிமெண்ட் பூச்சு இல்லையென்றாலும் தமிழர், பீகாரிகளுக்கு என்ன வேறுபாடு இருக்கப் போகிறது?

காலை பத்துமணிக்குக் கூட பசியறியாமல் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும் உணவுக்காக முகம் கழுவியிருந்தனர். அவர்கள் தூக்கும் சிமெண்டு மூட்டைகளால் அந்த இடமே புகை மண்டலமாக இருந்தது. அவர்களிடம் பேசும் போது பத்து நிமிடத்துக்கு ஒருமுறை அத்தனை அடுக்குத் தும்மல் எனக்கு. எனில் அவர்களின் நிலை…..?

இப்படித்தான் தொழிலாளிகள் ஒவ்வொரு வேலைகளிலும் உயிரைப் பணயம் வைத்து உலகை உருவாக்குகின்றனர்.

முத்துகிருஷ்ணன்.
ஒரு பெட்டிக்கு 2 ஆயிரம் மூட்ட வரும். ஒரு பெட்டி இறக்குனா 1200 ரூபா கூலி. அஞ்சு தொழிலாளிங்க சேந்து ரெண்டு பெட்டி எறக்குவோம். பணத்த பிரிச்சு எடுத்துக்குவோம். வர்ர சரக்குக்கு தகுந்தாப்போல கூலியும் மாறுபடும். தோராயமா ஒரு நாளைக்கி 800 இல்ல 1000 ரூபா கெடைக்கும்.

அன்பு
எங்களப்போல தொழிலாளிங்க கூட்டு சேந்து வேல செஞ்சாத்தான் இதுபோல வேலைங்க முழுசா செஞ்சு முடிக்க முடியும். ஒத்தாலா நின்னு ஏத்தவோ ஏறக்கவோ நாங்க என்ன சக்திமானா. உங்களப்போல சாதாரன மனுசந்தானங்க.

மூர்த்தி
ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 20000 ஆயிரத்துக்கு மேல சம்பாரிக்கிறோம். ஆனா நீங்க 10,000 ஆயிரம் குடுத்தா போதும் எந்த வேல குடுத்தாலும் செய்றேன். என்னால மூட்டைங்கள மூச்சுப் புடிச்சு தூக்க முடியல. சத்தியமா சொல்றேங்க உங்க கூட கூட்டிட்டு போயிடுங்க.
அன்பு
மூர்த்தியன்னே உங்களுக்கெல்லாம் அவங்க வேல குடுக்க மாட்டாங்க. படிச்சவங்களுக்கு தான் அங்க வேல.
மூர்த்தி
அது எப்புடி.. நாமமட்டும் படிச்சவங்களுக்கு மூட்ட தூக்குற வேல குடுத்துருக்கமில்ல. நீ குடுத்தான் பத்தாவுது படிச்சிருக்க. எனக்கு இல்லாட்டி ஒனக்கு குடுக்கட்டும்.

பாவாடசாமி.
நாங்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்றோன்னு டி.வி.யில போடுறதோட விட்டுறாதிங்க. நாங்களும் ஒரு நல்ல நெலமைக்கி வர்ரதுக்கு ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க.

எங்கள படம் புடிக்கிறது இருக்கட்டும் மொதல்ல மூக்குல துணிய கட்டிக்கங்க. ரெண்டு நாளா ஒடம்புக்கு முடியாமெ வேலைக்கி வரல இன்னைக்காவது 1000 ரூவாய்க்கி மூட்ட தூக்கிய ஆகனும். மத்தவங்ககிட்ட பேசுங்க என்ன விட்டுருங்க.

வெங்கடேஷ். சத்தியா.
காலையில ஒரு ஆஃப்பு, மத்தியானம் ஒரு ஆஃப்பு, ராத்திரிக்கி ஒரு குவாட்டரு சாப்பாடோட சேத்து சாராயத்தையும் சாப்பிட்டாதான் இந்த வேலையே செய்ய முடியுது. மீதி நானூறு ஐனூறு ரூவா வீட்டுக்கு. குடிக்கனுன்னு ஆசையில்ல, தேவையிருக்கு. இதுபோல வேலையெ ஈசியா செய்ய ஏதாவது மிசினு இருந்தா குடிக்க தோணாது.

கண்ணையன்
மூட்டைய தலையில தூக்கி அடுக்குற வேலை செய்ய முடியாது. மூனு பேரோட ஒருத்தனா நின்னு மூட்டைய தலையில தூக்கி விடுவேன். மத்தவங்களப்போல எனக்கும் சமமா சம்பளத்த பிரிச்சு குடுப்பாங்க. வித்தியாசம் பாக்க மாட்டாங்க.

“எங்களையும் போட்டா புடிங்க” என்று ஒரு தொழிலாளி சொன்னதும். அருகில் இருந்த மற்றவர்களும் கூடினர். நாம் எதிர் பார்க்காத நேரத்தில் கையில் இருந்த மூட்டை தூக்கும் கொக்கியை அருவா போல் தூக்கிப் பிடித்து தொழிலாளர்களின் சின்னமாக்கினர்.

ஆறு மாசத்துக்கு ஒருக்க ஊருக்கு போவோம். ஒரு மாசம் இருந்துட்டு வருவோம். தமிழ் நாட்டுக்கு வந்த பிறகுதான் எங்க குடும்பம் பசி இல்லாமெ கொஞ்சம் சாப்பிடுது. எங்களுக்கு அங்க வேலையில்ல.

கூட்சு வண்டியில படுப்போம் இல்லன்னா கூடாரத்துல படுத்துப்போம். படுக்க, குளிக்க, காலைகடன முடிக்க எல்லாத்துக்கும் இந்த ஊரு எங்களுக்கு வசதியா இருக்கு. இதவிட என்ன வேணும்.

ஆனா ஒரு வருத்தம். வாழ்றதுக்காகதான்  இங்க வந்தோம் பொண்டாட்டி பிள்ளைகள தூரத்துல விட்டுட்டு என்ன வாழ்க்கையின்னு தோனுது. பிள்ளைய பாக்கனுன்னு ஆச வரும் நேரத்துல போன்ல பேசிக்கிறோம். குடும்பத்தோட சேந்துருக்க முடியல.
தமிழ் நண்பர்கள் ரேசன் அரிசி வாங்கி குடுத்துருவாங்க. ராத்திரி சோறு சப்பாத்தி சிக்கனு எல்லாம் செஞ்சு அசத்திப் புடுவோம். பகல் பொழுது கெடைக்கிறத சாப்டுப்போம்.

ஆரம்பத்துல வந்த நான் இப்ப தமிழ் கொஞ்சம் பேசுவேன். பிறகு வந்தவங்க பேசுனா புரிஞ்சுப்பாங்க. மொழி பிரச்சனை இல்ல. நாங்க இப்ப நண்பேன்டா ஆயிட்டோம். (தமிழர் தோள் மீது கைப்போட்டு அனைத்தார்.)

நேர்காணல்-படங்கள்: வினவு புகைப்படச் செய்தியாளர்.

2 மறுமொழிகள்

  1. உண்மையில் உழைக்கும் மக்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்.மக்கள் தலைவனாக இருக்கத் தேவையான பண்புகள் அவர்களின் உரையாடலில் வெளிப்படுகிறது.மாலை நேரத் தென்றல் போல,மனதை வருடிச் செல்கிறது அவர்களின் பண்பு.தங்கள் குறைகளை வெளிப்படுத்திய பாங்கு மனித நாகரிகத்தின் சிகரம்.
    பா.ஜ.க.வினரின் வன்முறை பேச்சுகளாலும் செயலாலும்,வெந்து புண்ணாகி இருந்த மனதுக்கு,இதமாக இருந்தது இப்பதிவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க