ஆசிஃபா கொலை : அம்பலப்படுத்திய கேரள பெண் ஓவியர் மீது தாக்குதல் !

சிறுமி ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து இந்துத்துவக் கும்பலின் குற்றங்களை அம்பலப்படுத்திய பாலக்காட்டைச் சேர்ந்த பெண் ஓவியர் துர்கா மாலதியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இந்துத்துவக் கும்பல் !

சிறுமி ஆசிஃபா-வை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்த கிரிமினலைப் பாதுகாக்கும் இந்துத்துவக் கும்பலை அம்பலப்படுத்தி படம் வரைந்த கேரள ஓவியர் துர்கா மாலதியின் வீட்டை நேற்று (22.04.2018) இரவு கல்வீசித் தாக்கியிருக்கிறது இந்துத்துவக் கும்பல்.

ஓவியர் துர்கா மாலதி

கேரளாவைச் சேர்ந்த துர்கா மாலதி, பாலக்காட்டில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். துர்கா ஓவியம் வரையும் திறன் கொண்டவர். காஷ்மீர் மாநிலம் கத்துவா அருகே ஆசிஃபா என்ற சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் தமது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வந்தார் துர்கா மாலதி.

எதிர்ப்பின் ஒரு வழிமுறையாக ஆசிஃபா படுகொலைக் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் ஹிந்துத்துவக் கும்பலை அம்பலப்படுத்தும் விதமாக இரண்டு படங்களை வரைந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார் துர்கா மாலதி.

இந்துத்துவத்தின் ஆணாதிக்க முகம்

முதல் படத்தில், திரிசூலத்தின் நடு சூலத்திற்குப் பதிலாக இரத்தம் சொட்டும் ஆண்குறியை வரைந்து, ஆசிஃபா மரணத்தில் குற்றவாளிக்கு  ஆதரவாக இருக்கும் இந்துத்துவக் கும்பலின் ஆணாதிக்க மனோநிலையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இரண்டாவது படத்தில், ஆண்குறியில் சிறுமி ஆசிஃபா, வெண் நிற (பூணூல்) கயிறால் கட்டப்பட்டிருப்பது போலவும், ஆண்குறியின் முனையில் பாஜகவின் கொடி பறப்பது போலவும், ஆண்குறியின் மத்தியில் பட்டையும், நாமமும்  இருப்பது போலவும் வரைந்து, ஆசிஃபாவைக் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திக் கொன்றவனைப் பாதுகாத்த பாஜகவையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக கும்பல், சமூக வலைத்தளங்களில் துர்கா மாலதியை ஆபாசமாகப் பேசுவதும், மிரட்டுவதுமாக தாக்குதல் தொடுத்தது. மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூப்பாடு போட்டது. இந்த புண்புடுதலின் வரலாறு நமக்கு புதியதல்ல.

தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்துச் சாமியாடிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல், ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கலாம் என வைரமுத்து கூறியதற்கு எதிராக ஆண்டாளை அவர் ’வேசி’ எனக் கூறியதாகக் கூறி ‘கொதித்தெழுந்த’ கதையையும் நாம் பார்த்திருக்கிறோமல்லவா ?

இந்நிலையில் நேற்று இரவு துர்கா மாலதியின் வீட்டின் மீதும் அவரது வீட்டில் இருந்த வாகனத்தின் மீதும் ஒரு கும்பல் கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து துர்கா மாலதி போலீசில் புகாரளித்ததை அடுத்து அவர் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கல் வீச்சில் உடைக்கப்பட்ட கார்!

இந்துத்துவக் கும்பலின் இழிமுகத்தை அம்பலப்படுத்துவோருக்கு எதிராக, ஆபாசமாகப் பேசுவது, அவதூறு பேசுவது, மிரட்டுவது, தாக்குதல் தொடுப்பது, கொலை செய்வது என அனைத்து வழிமுறைகள் மூலமும் எதிர்ப்புக் குரல்களை முடக்கப் பார்க்கிறது இந்துத்துவக் கும்பல்.

கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் எனத் தொடரும் இந்த இந்துத்துவப் ‘பாரம்பரியத்தை’  என்ன செய்யப் போகிறோம்?

– வினவு செய்திப் பிரிவு.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க