”தாயின் உலகத்தில் ஊக்கத்துடன் பயணம் செய்யுங்கள். புதிய மனிதனாகவும் வாழ்க்கையின் பொருளை உணர்ந்தவராகவும் திரும்புவீர்கள்”

-வினவு தளத்தில் ஏப்ரல் 21,2011 ஆம் ஆண்டு வெளியான மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலின் நூல் அறிமுக வாசகத்தின் காட்சி உணர்வை நேரில் அனுபவித்தோம்.

சென்னையில் 22.4.2018 ஞாயிறு அன்று கொல்கத்தாவைச் சேர்ந்த செளவிக் சன்ஸ்கிருதிக் சக்ரா மேடை நாடகக் குழு நடத்திய “தாய்” மேடை நாடகம் பார்வையாளர்களை கட்டிப் போட்டது. நாடகக் காட்சிகள் ஜாரிச ரசியாவை நம் கண் முன்னே நிறுத்தியது.1917 நவம்பர் புரட்சிக்கு முன் நடந்த போராட்ட காலத்தின் வலியை ரத்தமும் சதையுமாகக் காட்டியது. நாடகம் வங்க மொழியில் நடத்தப்பட்டாலும் மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. இரு முறை திரைக்கதை சுருக்கத்தை தமிழில் கூறினார்கள்.

கெளதம் முகர்ஜி வயது 73. செளவிக்சன்ஸ்கிருதிக் சக்ரா மேடை நாடகக் குழுவின் அமைப்பாளர். 1978-ம் ஆண்டிலிருந்து 2500 முறை இந்நாடகத்தை இந்தியா முழுக்க மேடையேற்றியிருக்கிறார். இவரே தாய் நாவலின் நீலோவ்னா தாயாக பெண் பாத்திரம் ஏற்று நடிக்கிறார். பாத்திரத்தைப் போலவே இன்றும் பாட்டாளி வர்க்க உணர்வோடு நம்மிடையே வாழ்கிறார்.

அவருடன் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள். பாவெல், சக தோழி சாஷா, சக தோழர்களான அந்திரேய, பியோதர்மாசின், கூ செவ் சகோதர்கள், சமோய்லவ், புகின், சோமவ் எல்லாரும் தாய் நீலோவ்னவை மட்டுமல்ல நம்மையும் போராட்டத்தில் இழுக்கிறார்கள்.

அப்போராட்டத்தில் குறுக்கே மறிக்கும் கசடுகளை கண்டு வெறுப்பும் போராட்ட வெற்றியின் களிப்பும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. மேடை அமைப்பும் பின்னணி இசையும் ஒளிக் கலவையும் உயிருள்ள தொழிலாளர்கள ஓராயிரம்பேர் போராட்டத்துடன் இணைந்துக் கொள்வதற்காக தூரத்தில் வருவது போன்ற உணர்வை ஊட்டியது.

நடிகர்களே தொழில் நுட்ப கலைஞர்களாக ஒலி,ஒளி,மேடையை நிர்மாணித்து நடித்து முடிந்ததும் மேடையை பிரிக்கும் தொழிலாளர்களாக பணியாற்றினார்கள்.

பார்வையாளர்களிடம் குழந்தைகள்போல் நெருங்கி தங்கள் நடிப்பு பற்றி குறை நிறைகளைக் கேட்கிறார்கள். அற்புதங்களை நிகழ்த்தும் சாகச கலைஞர்கள் இவர்கள்.
இருள் சூழ்ந்த இன்றைய நிலையில் ஜனநாயக வெளியை உருவாக்க கலை இலக்கிய தளத்தில் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி கடுமையாக உழைக்கிறார்கள். வெல்க அவர்கள் பணி!

இந்நாடகம் தமிழ்நாடு மக்கள் கலை இலைக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில்  நிகழ்த்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு செய்தியாளர்.

மேலும் : அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க