உலகம் : நிகரகுவாவில் பத்திரிகையாளர் கொலை – டென்னசியில் நால்வர் கொலை !

நிகரகுவா மற்றும் அமெரிக்காவின் டென்னஸி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றுள்ள துப்பாக்கிச்சூடுகளும் வேறு வேறு சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் இரண்டுக்குமான அடித்தளம் ஒன்றுதான்.

நிகரகுவா: பத்திரிகையாளர்களை கொன்று ஒடுக்கும் மற்றுமொரு மோடி அரசு.

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் நடைபெற்று வரும் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது அந்நாட்டின் அரசு. இப்போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகையாளரை சுட்டுக் கொன்றிருக்கிறது போலீசு.

நிகரகுவா நாட்டின் அதிபர் டேனியல் ஒர்டெகா

நிகரகுவா நாட்டின் அதிபர் டேனியல் ஒர்டெகா கடந்த ஏப்ரல் 16, 2018 அன்று நிதிப் பற்றாக்குறை காரணமாக, நாட்டில் நடைமுறையில் இருந்த பென்சன் உள்ளிட்ட பல்வேறு சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் அணிதிரண்டு கடந்த ஏப்ரல் 18, 2018 முதல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிகரகுவா அதிபராக டேனியல் ஓர்டெகா ஆட்சியில் அமர்ந்த கடந்த 11 வருடங்களில் சந்தித்திராத மிகப்பெரிய போராட்டங்கள் தற்போது எழுந்திருக்கின்றது. இப்போராட்டங்களை கடுமையாக ஒடுக்கி வருகிறது அவ்வரசு.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு, தாக்குதல் நடத்தியிருக்கிறது அந்நாட்டு போலீசு. கடந்த 22.04.2018 அன்று இப்போராட்டங்களை படமெடுத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளரான ’மிகுவெல் ஏஞ்செல் கஹோனா’ என்பவரை ஸ்னைபர் எனப்படும் தொலைதூரத்தில் குறிபார்தது சுடும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறது போலீசு. போராட்டக்காரர்களின் தாக்குதலில் தான் பத்திரிகையாளர் இறந்தார் எனக் கூசாமல் பொய் சொல்லி தப்பிக்கப் பாரத்தார்கள்.

போலீசாரால் சுட்டுக்கொள்ளப்பட்ட பத்திரிக்கையாளர்மிகுவெல் ஏஞ்செல் கஹோனா

ஆனால் அப்பத்திரிகையாளருடன் களத்தில் பணிபுரிந்த மற்றொரு பத்திரிகையாளரான இலியான லகயோ அதனை மறுத்துள்ளார். “போலீசும் கலவரத் தடுப்புப் போலீசும் மட்டுமே ஆயுதங்கள் வைத்திருந்தனர். போராடிய இளைஞர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை” என்று கூறியிருக்கிறார். மேலும் போராட்டங்கள் நடந்த காலகட்டங்களில் பத்திரிகையாளர்களைத் தாக்கியதும், சில சமயங்களில் கைது செய்ததும் போலீசுதான் என்கின்றனர் பத்திரிக்கையாளர்கள்.

மக்கள் விரோத அரசுகள் என்றும் ஜனநாயகத்தின் கழுத்தை இருக்கிக் கொல்லும் ஒடுக்குமுறை இயந்திரங்களே என்பதற்கு இப்படுகொலை மற்றுமொரு உதாரணம்.

பின்குறிப்பு:  ஒடுக்குமுறைக்கு அஞ்சாத போராட்டக்காரர்களின் எழுச்சிக்கு அடிபணிந்து, தனது மக்கள் விரோத ஆணைகளை திரும்பப் பெற்றது நிகரகுவா அரசு.

****

டென்னஸி துப்பாக்கிச் சூடு : வல்லரசின் பேரவலம்!

அமெரிக்கவின் டென்னெஸி மாநிலத்தின் தலைநகரான நாஷ்வில்லி அருகே உணவகம் ஒன்றில் நிர்வாண மனிதன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நாஷ்வில்லி நகரின் தென்கிழக்கில் அமைந்துள்ள புறநகர் பகுதியான ஆண்டியோச்சில், ’வாஃபில் ஹவுஸ்’ உணவு விடுதி உள்ளது. கடந்த ஞாயிறு (22-04-2018) அன்று விடிகாலை 3.25 மணியளவில் 29 வயதான ட்ராவிஸ் ரெய்ன்கிங் என்பவர் தனது வாகனத்தில் வந்து இறங்கினார்.

நாஷ்வில்லி நகரின் ’வாஃபில் ஹவுஸ்’ உணவு விடுதி பகுதியில் தடயங்களைத் தேடும் போலீசார்

வாகன நிறுத்தப் பகுதியில் நிர்வாணமாக நடந்து வந்த ட்ராவிஸ் ரெயின்கிங், தனது கையில் இருந்த ஏ.ஆர்-15 ரக துப்பாக்கியை எடுத்து எதிரில் வருபவர்களை நோக்கியும், உணவு விடுதியை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார். இத்துப்பாக்கிச் சூட்டில், 4 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இத்துப்பாக்கிச் சூட்டின் போது அங்கு இருந்த ஜேம்ஸ் ஷா என்ற கருப்பினத்தவர், ட்ராவிஸ் ரெய்ன்கிங்கை வளைத்துப் பிடித்து அவன் கையில் இருந்த துப்பாக்கியைப் பறித்தார். அதன் பின்னர், ரெய்ன்கிங் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். பிறகு கடந்த திங்கள மதியம் போலிசார் அவரைக் கைது செய்தனர்.

தற்போது ரெயின்கிங் குறித்து அவரது மனச்சிதைவுகள், நெருக்கடிகள், வரலாறு என செய்திகள் வருகின்றன. அமெரிக்க வாழ்க்கையில் இத்தகைய மனச்சிதைவுகள் ஏற்படுவது சகஜமாகி வருவதும், அது வன்மறையின் வடிவில் மக்களைக் கொல்வதும் அடிக்கடி நடக்கிறது.

சமீபகாலமாக,. அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகள் பெருகி வருகின்றன. இதுவரை நடந்த இத்தகைய துப்பாக்கிச்சூடுகளில் பெரும்பாலானவற்றில், குற்றவாளிகள், ஒன்று, வெளிநாட்டவர்களை தங்களது வேலைவாய்ப்பைப் பறிக்கும் எதிரிகளாகக் கருதுகின்றனர்.  அல்லது முசுலீம்களைத் தங்கள் எதிரிகளாக்க் கருதுகின்றனர். மூன்றாவதுதான் முக்கியமானது.

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி மற்றும் பெருகிவரும் வேலையிழப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதும் அது வேறு வழியின்றி துப்பாக்கியை எடுப்பதும் இப்படி கொலைகள் நடப்பதுமாக மாறுகிறது. சக மனிதனை போட்டியாளனாக கருதச் சொல்லும் முதலாளித்துவ அமைப்பில் துப்பாக்கிகளும் போட்டி போட்டுத்தானே ஆக வேண்டும்?

– வினவு செய்திப் பிரிவு.

1 மறுமொழி

 1. நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள், ஆனால் கலையகம் கலையரசன் இதைப்பற்றி கூறும் விஷயமும், அரசியல் பார்வையும் நிறைய முரண்பாடுகிறதே, தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
  அவரின் பதிவிற்கான Link:
  http://kalaiy.blogspot.in/2018/04/blog-post_21.html
  அதிலிருந்து மேற்கோள்கள்:
  புதிய பொருளாதாரக் கொள்கை புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வந்தது. இந்த நடைமுறை ஏற்கனவே இருந்து வருவது தான். ஆனால், முதலாளிகளின் பங்களிப்பை ஐந்து சதவீதத்தால் (தற்போது 22.5%) அதிகரித்தது தான் அவர்களது சீற்றத்திற்கு காரணம். இதன் விளைவு தான் தற்போது நடக்கும் கலவரங்களுக்கு மூலகாரணம். இதே நேரம், தொழிலாளரின் பங்களிப்பும் சிறிதளவு (6.25% இலிருந்து 7%)கூடியுள்ளது.

  வரி அதிகரிப்பின் மூலம், சமூகப் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் தலையிடுவதை தடுப்பதும் அரசின் குறிக்கோளாக இருந்தது. ஏனெனில், அரசு சேவைகளை தனியாரிடமும் கொடுத்ததால் தான், முந்திய அரசாங்கங்கள் ஊழல் செய்ய வசதியாக இருந்துள்ளது. மேலும், சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கான கொடுப்பனவு அதிகரித்தால், எல்லோருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்க முடியும் என்பதும் அரசின் திட்டம். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பாவில் நடப்பதைப் போன்று, மக்களின் வரிப் பணத்தை மக்களுக்கு பிரயோசனமான வழிகளில் செலவிட்டால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

  இதெல்லாம் நல்ல திட்டம் தானே என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால், முதலாளிகள் அப்படி நினைப்பதில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க