மோடியும் அம்பேத்கரும் பிராமணர்கள் ! குஜராத் சபாநாயகர் பேச்சு !

”பிராமணர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள். சூத்திரர்களையும் கடவுள்களாக்கியவர்கள். அம்பேத்கர் என்ற பிராமணப் பெயர் ஒரு பிராமணரால் சூட்டப்பெற்றதால், அம்பேத்கரும் பிராமணரே ”

மாடு மேய்த்தவனை (கிருஷ்ணன்) பிராமணர்கள் கடவுளாக்கினர் என்றும் மோடியும், அம்பேத்கரும் பிராமணர்கள் என்றும் குஜராத் சட்டமன்ற சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

ராஜேந்திர திரிவேதி

சமஸ்த் குஜராத் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பு நடத்திய ”பிராமண வர்த்தக உச்சி மாநாட்டில்” குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை அரசு நிறுவனமான குஜராத் தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தியது.

இதில் பேசிய ராஜேந்திர திரிவேதி, ” பிராமணர்கள்தான் கடவுள்களை உருவாக்கியவர்கள். சத்திரிய குலத்தைச் சேர்ந்த ராமனை கடவுளாக்கியது ரிஷிகளும் முனிவர்களும்தான். ‘இதர பிற்படுத்தப்பட்ட சாதியினராக’ (OBC) நாம் இன்றும் கருதும், கோகுலத்தின் மாடு மேய்ப்பவனைக் (கிருஸ்ணனை) கடவுளாக்கியது சண்டிப்பாணி ரிஷி எனும் பிராமணர்தான். மத்ஸகன்யாவின் மகனான வியாஸ்-ஐ கடவுளாக்கியதும் பிராமணர்களே. சந்திர குப்தரை பதவியில் அமர்த்தியது சாணக்கியர் எனும் பிராமணரே. கற்றவர்களாக இருந்ததைத் தாண்டி, பிராமணர்கள் கடவுள்களையும், அரசர்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். பிராமணர்களுக்கு என்றுமே பதவி ஆசை இருந்ததில்லை. நான் ஒரு பிராமணன் என்பதில் பெருமை கொள்கிறேன் ” என்று கூறினார். திரிவேதியின் இக்கருத்தை தனது உரையில் ஆமோதித்தார் குஜராத் முதல்வர் விஜய்ரூபானி.

பிராமணர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள் என்று கூறிய மறுநிமிடமே பிராமணர்கள் வகித்து வந்த பதவிகளைப் பட்டியலிட்டார் திரிவேதி.  ”பிராமண சமூகம் இந்திய நாட்டில் மிகப்பெரும் சாதனைகளைப் புரிந்துள்ளது. 5 ஜனாதிபதிகள், 7 பிரதம மந்திரிகள், 50 முதலமைச்சர்கள், 50க்கும் மேற்பட்ட ஆளுநர்கள், 27 பாரத ரத்னா பெற்றவர்கள் மற்றும் 7 நோபல் பரிசு பெற்றவர்களையும் நமக்குத் தந்திருக்கிறது. குஜராத் முதல்வர் விஜய்ரூபானிக்கு உந்துதலாக இருக்கும் அவரது மனைவி அஞ்சலிபென்-ம் பிராமணரே.” என்று கூறினார்.

சூத்திராளை மன்னராக்கிய பிராமணாள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

தான் ஒரு பிராமணர் என்று பெருமை பொங்கியவர் எங்கே மோடியை  போற்றாமல் இருந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்பது திரிவேதிக்கு தெரியாதா என்ன? கூடவே அம்பேத்கரையும் அவாளது உள்ளிழுக்கும் முயற்சிக்காக சேர்த்துக் கொள்கிறார்.

“அம்பேத்கர் என்ற பிராமணப் பெயர் ஒரு பிராமண ஆசிரியரால் சூட்டப்பெற்ற காரணத்தினால் பி.ஆர்.அம்பேத்கரும் பிராமணரே. கற்றோரை பிராமணர்கள் என்று அழைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அந்த வகையில் நமது மரியாதைக்குரிய மோடிஜியும் பிராமணரே” என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

தனது வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்தின் மானுட விரோதத்தை எதிர்த்து பணியாற்றிய அம்பேத்கரை ஒரு பிராமணர் என்று சொல்வதற்கு எவ்வளவு திமிர் வேண்டும்? மேலும் ஒரு பிராமண ஆசிரியரால் பெயர் சூட்டப்பட்டவர் என்பதால் அம்பேத்கர் பிராமணராம். ஒருவேளை அவருக்கு நந்தன், சம்புகன் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தால் என்ன செய்வார்கள்? உயிரோடு கொளுத்தி விடுவார்களோ?

சுமார் 1,000-கும் மேற்பட்ட பிராமண தொழிலதிபர்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட வேலையில்லா இளைஞர்கள் முன்னிலையில் இந்த ’வரலாற்று உரையை’ ஆற்றியிருக்கிறார் இந்த திரிவேதி. சட்டசபையில் ஜெயாவும், குஜராத்தில் திரிவேதியும் தங்களையும் பிராமணர்கள் என்று அப்பட்டமாக பேசுகிறார்கள். பார்ப்பனியம் இன்றும் செல்வாக்கோடு வாழ்வதும் அதை நம் நாட்டின் பெருமைக்குரிய மகுடமாக அங்கீகரிப்பதும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்துகிறது. நம் நாட்டில் சுயசாதி பெருமை – ஆணவத்திற்காகவே அன்றாடம் பல கொலைகள் நடக்கின்றன. அந்த சுய சாதி பீற்றலின் ஏ 1 அக்கியூஸ்டாக பார்ப்பனர்களே இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

– வினவு செய்திப் பிரிவு