தாரைக் கட்டாயமாக்க முயற்சிக்கும் மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி நடந்த வழக்கு விவாதங்களின் போது மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் உயிரியளவு விவரங்கள் மின்தரவுகளாக சேமிக்கப்படுவதால் அவற்றை ஹேக்கர்கள் களவாடும் வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால், ஆதார் விவரங்கள் சேமிக்கப்பட்டுள்ள கணினிகள் நிலவறைக்குள் இருப்பதாகவும் அந்த அறையின் சுவர்கள் 13 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்டவையாக இருப்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை யாராலும் களவாட முடியாது என பதிலளித்துள்ளார்.

காவிரி வழக்கில் ஸ்கீம் என்கிற வார்த்தைக்கு பொருள் கூறும் அகராதியாகச் செயல்பட்ட உச்ச நீதிமன்றம், ஆதார் வழக்கில் கனமான சுவர்களைக் கொண்டு மின்தரவுகள் களவு போவதைத் தடுத்து விடுவோம் என்கிற மத்திய அரசின் வாதத்தை கேட்டுக் கொண்டது. கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பது போன்ற இந்த விளக்கத்தைச் சொன்னவர் செல்லூர் ராஜூத்தனமாக நடந்து கொண்டார் என்றால் அதையும் கேட்டுப் பதிவு செய்து கொண்ட மேன்மை தங்கிய நீதிபதிகளை எப்படி அழைப்பது?

போகட்டும். மேற்படி “ஐந்தடிச் சுவரைத் தாண்டி” நடக்கும் ஆதார் விவரத் திருட்டுக்கள் குறித்த செய்திகள் அன்றாடம் பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் ஆதார் திருட்டு தொடர்பாக இரண்டு சம்பவங்கள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன. ஆந்திராவில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் சுமார் 89,38,138 பயனாளிகளின் ஆதார் விவரங்கள் அரசின் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டிருந்தன. ஆதார் எண்களுடன் சேர்த்து வங்கிக் கணக்கு விவரங்களும் வெளியாகின. தனிநபர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள் போன்றவை பாதுகாப்பற்ற முறையில் வெளியாகும் போது அவற்றைக் கொண்டு எந்த வகையான சைபர் குற்றங்களையும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விவரங்கள் பாதுகாப்பற்ற முறையில் இணையதளத்தில் வெளியாகியிருப்பதை, அரசு அதிகாரிகளோ, ஆதார் விவரங்களைச் சேமித்து வைக்கும் கணினிக் கட்டுப்பாட்டகத்தை பராமரிக்கும் டி.சி.எஸ் நிறுவனமோ கண்டுபிடிக்கவில்லை. மாறாக சிரீனிவாஸ் கோடாலி என்கிற இணைய ஆராய்ச்சியாளரே முதன்முதலாக கண்டுபிடித்து ட்விட்டரில் அம்பலப்படுத்தியிருந்தார் (https://twitter.com/digitaldutta/status/989332234976088064?ref_src=twsrc%5Etfw) இதற்கிடையே அதே ஆந்திர மாநிலத்தில் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அரசின் இணைய தளத்தில் சுமார் 1.39 லட்சம் பேருடைய சாதி, மொழி, மதம், குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் ஆதார் எண்களுடன் வெளியாகின.

மக்களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதுமே ஆதார் திட்டத்தின் நோக்கம். மக்களுடைய நிதிச் செயல்பாடுகள் உள்ளிட்ட இன்னபிற நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகவே வங்கிக் கணக்கு, வருமானவரித்துறை, செல்பேசி என சகலத்துடனும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகின்றது. ஆதாரைக் கட்டாயம் ஆக்கலாமா கூடாதா என்கிற வழக்கு நிலுவையில் இருக்கும் போதே ஏறத்தாழ அனைத்து விசயங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்கிற நிலையை அரசு நிலைநாட்டி விட்டது. ஆதார் என்பது தனிநபர் உரிமையில் தலையீடு செய்வதா இல்லையா என்கிற கேள்வியில் இருந்து, ஆதார் என்பது பாதுகாப்பானதா இல்லையா என்கிற கேள்விக்கு விவாதத்தை நகர்த்திச் சென்று விட்டனர்.

மோடி அரசின் இரட்டை நாக்குத்தனத்திற்கு எடுப்பான உதாரணமாக ஆதார் உள்ளது. ஒருபக்கம் ஆதாருடன் செல்பேசி எண்ணை இணைக்கைக் கோரி தினசரி குறுஞ்செய்திகளாக அனுப்பி பீதியூட்டிய அரசு, கடந்த 25-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆதாரை இணைப்பது கட்டாயமில்லை என்று ஏற்கனவே நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவைத் தாம் ஏற்றுக் கடைபிடிப்பதாக பச்சையாக புளுகியுள்ளது.

இந்தப் பின்புலத்தில் ஆதார் தொடர்பான கருத்துக்கணிப்பில் பங்கேற்று உங்களது கருத்தைப் பதிவு செய்யுமாறு கோருகிறோம்.

ஆதார் எண் குறித்து உங்களது கருத்து ?

 • அ. நிச்சயம் தேவை. தேசப்பாதுகாப்புக்காக எனது விவரங்களை அரசு சேகரிக்கலாம்.
 • ஆ. ஆதார் அவசியமில்லை. ஆனால், எனது விவரங்களை மறைப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா?
 • இ. ஆதார் தேவையில்லை – அது அரசு மற்றும் முதலாளிகளின் ஒரு உளவுக் கருவி.
 • ஈ. ஆதாரின் பின்னணி குறித்து தெரியாது. கருத்து இல்லை.

வினவு செய்திப் பிரிவு

3 மறுமொழிகள்

 1. ஆதார் அட்டை இருப்பதால்தானே போலி ரேசன் கார்டுகள் பல ஒழிக்கப்பட்டுள்ளன

 2. ஆதார் அட்டையில் உயிரியல் தரவுகள் இருப்பதால்தான் அதில் போலிகள் தயாரிக்க முடிவதில்லை.

  ஏமாற்றுபேர்வழிகளை உடனடியாக கண்டறியலாம்.

  நாட்டின் பாதுகாப்பிற்காக மக்களை அரசு கண்காணிப்பது தவறா?

 3. ஆதர் முறையாக செயல்படுத்தபட்டால்
  நன்மைகள் உண்டு…..
  1)போலியான வாக்காளர் அட்டை, ரேசன் அட்டை, கேஸ் இணைப்பு,சமுகநல திட்டங்கள்

  தீமைகளும் உண்டு…..
  1)வயதானவர்கள் (முதியவர்கள்) ரேகை பதிவுகள் இல்லாமலும், கண் உபாதைகலால்லும் அவதிப்பட்டுகொண்டு இருக்கிறார்கள்
  2)ஆபத்து காலத்தில் ஆதார் எண் கட்டாயபடுத்தும் மருத்துவமனைகளும் உள்ளன…
  3)pay tm, போன்ற online நிறுவனங்கள் பொதுமக்களின் ஆதர் தகவல்களை திரட்டி வருகிறது,
  3)தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆதர் திருட்டில் ஈடுபட ஆரம்பித்து உள்ளது
  4) ஆதாரல் பயனடந்தவர்களைவிட இனிமேல் பதிக்கபோகும் நபர்களே அதிகம்…….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க