ஓசூர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி  தனது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து ஓசூரில் 01.05.2018 அன்று மேதின பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தாலுகா அலுவலகம் எதிரிலிருந்து மாலை 4.00 மணியளவில் பேரணி தொடங்கியது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசன் மேதினத்தின் பிறப்பை சிறு குறிப்பாக உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்துக்கொண்டு விண்ணதிர உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டு சென்றதை ஏராளமான பொதுமக்கள் நின்று கவனித்தனர்.

பேரணியின் முடிவில் ரயில் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு கலந்து கொண்டு காவி மயமாக்கப்படும் கல்வித்துறை மற்றும் நீதித்துறை என்ற தலைப்பிலும் மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார், கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு என்ற தலைப்பிலும் தோழர் சிவா, காவிரியில் வஞ்சிக்கப்படும் தமிழகம் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். இறுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சங்கர் நன்றியுரையாற்றினார்.

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்
தொடர்புக்கு – 97880 11784.

திருவள்ளூர் கிழக்கு

மே தினத்தையொட்டி பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக,பேருந்து, இரயில் மற்றும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மே நாளன்று கிளை, இணைப்புச் சங்கங்களில் ஆலை வாயில்களில் கொடியேற்றி ஆலை வாயிற் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையிலிருந்து தொடங்கிய பேரணியை பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர் சுப. தங்கராசு, மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாநில துணைத்தலைவர் தோழர் இரா.சதீஷ் துவக்கி வைத்தார். பறையிசை, சிறுவர் சிலம்பாட்டத்துடனும் விண்ணதிரும் முழக்கத்துடன் பேரணி துவக்கி நடத்தப்பட்டது.

மாலை 6 மணிக்கு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம் விகேந்தர் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தோழர் ம.சி. சுதேஷ்குமார் மேநாள் குறித்து உரையாற்றினார். கிளை இணைப்பு சங்க நிர்வாகிகள், தொழிலாளார்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆளும் வர்க்கத்துக்கு அதிர்வை ஏற்படுத்துவதாகவும், தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் உற்ற தோழன் பு.ஜ.தொ.மு.தான் என்பதை பறைசாற்றுவதாகவும் அமைந்தது.

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க