நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் ! பாடல்

படைத்தலும் காத்தலும் தீமையை அழித்தலும் கடவுளின் செயல் என்றால் நாமே அந்தக் கடவுள் ! நாமே அந்த உலகம் ! உழைப்பாளியே அந்தக் கடவுள், உழைப்பாளியே அந்த உலகம் ! ம.க.இ.க பாடல்

1

ந்த உலகம் தானே சுழலவில்லை! தொழிலாளியின் வியர்வையே அதன் எரிசக்தியாய் இயக்குகிறது !

நீரைத் தேக்கும் அணைகள், பூமியை அளக்கும் சாலைகள், மனித குல முன்னேற்றத்தையே வார்த்தெடுக்கும் ஆலைகள், விரிந்து பரந்த உலகத்தையே கால்பந்தாய் கைக்குள் அடக்கிய கணிணிகள், விண்ணில் மிதக்கும் நட்சத்திரங்களையும் கரம் பிடித்து பூமிக்கு அழைத்து வரும் செயற்கைக் கோள்கள், இப்படி அனைத்திலும் கலந்திருக்கிறது உழைப்பு.

ஆனால் இந்த உலகத்தை உருவாக்கியதும், உலகமக்களை இரட்சிப்பதும் தாங்கள்தான் என்று ஊளையிடுகின்றன முதலாளித்துவ ஓநாய்கள். ஒவ்வொரு முதலாளியின் வளர்ச்சிக்கும் பின்னால், கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை புதைக்கப்படுகிறது.

உலகப் பணக்காரனான அம்பானி உயர்வதற்கு அழிக்கப்பட்ட சிறுதொழில்கள் எத்தனை ஆயிரம்! டாடா, பிர்லாக்களின் இலாப வேட்டைக்காகவே ஈழத்தில் மட்டுமல்ல… இந்தியாவிலும் புதையுண்ட உயிர்கள்தான் எத்தனை ஆயிரம். தினந்தோறும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், நெசவாளிகளின் பிணங்களை பரிசோதனை செய்து பாருங்கள்.

அங்கே தெரியும் முதலாளித்துவ தனியுடைமையின் கோரமுகம் !

எண்ணெய் வளங்களைக் கொள்ளையிட ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வரும் மனிதப் படுகொலைகள், உலகத்தை இரட்சிக்கவா அல்லது உலக வளங்களைக் கொள்ளையிடவா ?

இந்த உலகத்தை அழிப்பவன் முதலாளி..  காப்பவன் தொழிலாளி.. படைத்தலும் காத்தலும் அழித்தலும் கடவுளின் செயல் என்றான் ஆன்மிகவாதி !

அது இல்லாத கடவுளைப் பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் மாயை. இதோ இருக்கும் கடவுளாய் தொழிலாளி வர்க்கம். படைத்தலும் காத்தலும் தீமையை அழித்தலும் கடவுளின் செயல் என்றால் நாமே அந்தக் கடவுள் ! நாமே அந்த உலகம் !

உழைப்பாளியே அந்தக் கடவுள், உழைப்பாளியே அந்த உலகம் !

பாடல் வரிகள் :

நான் உலகம் !
நானே உலகம் !

( நான் உலகம்! நானே உலகம்! )

வானில் மண்ணில் வழியில் ஒளியில் …
வாழ்வில் எங்கெங்கும் என் உதிரம் !          (2)

நான் உலகம் !
தொழிலாளி நானே உலகம் !          (5)

காணும் காட்சி யாவும்
உருவாக்கும் ஆற்றல் நானே !

உருவாக்கும் ஆற்றல் நானே !

அதை காலம், தேசமெங்கும்
நீண்டு காக்கும் கைகள் நானே !

நீண்டு காக்கும் கைகள் நானே !

மாறாத …
மாறாதே இது என்றால் அதை
மாற்றும் கடவுள் நானே

( நான் உலகம் ! தொழிலாளி நானே உலகம் ! )

சீனத்தின் பெருஞ்சுவர் நான் ..
சிலிகுரியின் தேயிலை நான் ..

(சீனத்தின் பெருஞ்சுவர் நான் ..
சிலிகுரியின் தேயிலை நான் .. )

வானத்தின் வலைகள் நான் ..
பாலத்தின் தூண்கள் நான் ..

(வானத்தின் வலைகள் நான் ..
பாலத்தின் தூண்கள் நான் .. )

அழியாத வரலாற்றுச் சின்னம் நான் ..
நவநாகரிகத்தின் சிற்பியும் நான் ..

(அழியாத வரலாற்றுச் சின்னம் நான் ..
நவநாகரிகத்தின் சிற்பியும் நான் .. )

அணுவிலும் உயிராய் வாழ்பவன் நான்..
நான் தான்..

(நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் !)

வானில் மண்ணில் வழியில் ஒளியில் …
வாழ்வில் எங்கெங்கும் என் உதிரம் !

(வானில் மண்ணில் வழியில் ஒளியில் …
வாழ்வில் எங்கெங்கும் என் உதிரம் ! )

(நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் !)

(2009-ம் ஆண்டில் வெளியான, ம.க.இ.க-வின் 11-வது பாடல் குறுந்தகடான “நான் உலகம்” தொகுப்பில் இடம் பெற்ற பாடல்.)

பாடல் : மக்கள் கலை இலக்கியக் கழகம்
வீடியோ ஆக்கம் : வினவு