நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளை வேட்டையாடும் ” வேட்டை அரசி”

யிஷா பகாரி கோம்பி ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் வாழ்கிறார். இல்லையில்லை சண்டை போடுகிறார். போகோ ஹராமுக்கு எதிரான சண்டையில் போர்க்களத் தீரத்திற்காக நிஜ உலகின் அதிநாயகி (super Hero)  என்ற நிலையை அடைந்துள்ளார்.

மனிதகுலம் துவங்கிய ஆதி காலத்திலிருந்தே ஆப்பிரிக்க காடுகளிலும் புல்வெளிகளிலும் வேட்டைக்கார இனக்குழுக்கள் சுற்றி வந்துள்ளனர். பாய்ச்சல் வேகத்தில் 21-ம் நூற்றாண்டிற்கு வந்தோமானால், இன்று வடகிழக்கு நைஜீரியாவில் வேட்டைக்காரர்களின் வேட்டைக்கு எதுவுமில்லை. போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் நைஜீரிய இராணுவத்திற்கும் இடையிலான துப்பாக்கி சண்டை காட்டு விலங்குகளை அச்சுறுத்தித் துரத்தியுள்ளது.

தற்போது வேட்டைக்காரர்கள் தீவிரவாதிகளை துரத்திப் பிடிக்கின்றனர். அவர்களது அதீத சக்தியும் மேம்பட்ட பின்தொடரும் திறனும் வடகிழக்கு நைஜீரியாவில் அச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இவர்கள் போகோ ஹராம் தீவிரவாதிகளை இராணுவம் வேட்டையாடுவதற்கு உதவுகின்றனர்.

அதிகாரிகள் மிகக் குறைவான நிதியையே ஒதுக்குவதால் வேட்டைக்காரர்கள் கனரக நவீன ஆயுதங்களைக் கொண்டுள்ள எதிரிகளிடம் போரிடுவதற்கு உள்ளூர் தயாரிப்பு ஆயுதங்களையே சார்ந்திருக்கின்றனர்.

“மேற்கத்திய கல்வி தீங்கானது” என்பதே போகோ ஹராம் என்கிற திருநாமத்தின் பொருள். இது வடகிழக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாதக் குழு பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்றும் 23 இலட்சம் மக்களை தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியும் உலகின் மிகக் கொடூரமான ஆயுதமேந்திய குழுக்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

இத்தீவிரவாதிகளை துரத்திப் பிடிக்கும் வேட்டைக்காரர்களுக்கு தலைமை வகிக்கிறார் ஆயிஷா பகாரி கோம்பி. அவருடைய போர்க்கள வீரத்திற்காக “ராணி வேட்டைக்காரர்” என்று அழைக்கப்படுகிறார். ஆயிஷாவும் அவரது வேட்டைக்குழுவினரும் அவர்களது சமூகத்தைப் பாதுகாக்கின்றனர்.

ஆயிஷா தனது குழந்தைப் பருவத்தில் அவரது தந்தையுடன் வேட்டைக்குச் சென்ற காடுகள், மலைகளில் இன்று போகோ ஹராம் தீவிரவாதிகள் தங்களது முகாம்களை அமைத்துள்ளனர். சம்பிஸா காடு வேட்டைக்காரர்களுக்கான புனிதமான இடம். எனவே அதை போகோ ஹராம் போராளிகளிடமிருந்து விடுவிப்பது சிறப்பு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது.

இந்த வேட்டைக்காரர்கள் போகோ ஹராம் பிடியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்களை விடுவித்துள்ளனர். குழந்தைகளை மீட்பது ஆயிஷாவிற்கு உந்து சக்தியாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் 39 வயதில் முதல் முறையாக ஆயிஷா கருவுற்றார். அதுநாள் வரை தாம் கருத்தரிக்க முடியாதென்றே நினைத்திருந்தார். குழந்தைகளை விடுவித்தபோது அவர்கள் தமக்கு மறுபிறப்பாக பிறப்பதைப் போல் உணர்ந்து கொண்டார்.

ஆயிஷா போகோ ஹராமிற்கு எதிராக போராடாதபோது, அவரது கணவருடன் கிராமத்து விதிமுறைகளுக்கு இணங்கி வாழ்கிறார். வட- நைஜீரியாவில் பெண்களுக்கான களம் வீட்டிலும், குழந்தைகள் வளர்ப்புடனும் வரம்பிடப்பட்டுள்ளது.

ஆயிஷாவின் அசாதாரண வாழ்க்கை சமீப ஆண்டுகளில் மிகதீரமுள்ள ஆண், பெண்கள் மட்டுமே செல்லக்கூடிய இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளது. அவரது கதை வடக்கு நைஜீரியாவில் நாட்டுப்புற கதையாகியுள்ளது. ”வேட்டை அரசி (Queen Hunter)” தான் அந்த உண்மைக்கதைகளின் அதிநாயகி. ஆயிஷாவைப் பற்றிய ஆவணப்படத்தை இங்கு காணலாம்.

வேட்டைக்காரரும் பல்கலைக்கழக மாணவருமான பாமங்கா,ஆயிஷாவிற்கு புதிய கைபேசியை பயன்படுத்த கற்றுத் தருகிறார்.

சம்பிஸா காட்டின் நடுவில் ஆயிஷாவும் அவரது தலைமையிலான வேட்டைகாரர்களும் போகோ ஹராமை துரத்துவதற்கு நடுவில் ஓய்வெடுக்கிறார்கள்.

ஆயிஷா போகோ ஹராமிற்கு எதிராகப் போராடும் வரை பல ஆண்டுகளாக திருமணமாகாமல் இருந்தார். அவரது போராட்டம் கணவர் முகமதுவின் இயத்தை கொள்ளை கொண்டு விட்டது.

ஆயிஷா தனது தந்தையுடன் மான் மற்றும் நீர் எருமைகளை வேட்டையாடும் சூழலில் வளர்ந்தார்.இப்போது போகோ ஹராம் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார்.

வேட்டைக்காரர்கள் சாம்பிஸா காட்டைமற்ற யாரையும் விட  நன்கு அறிந்திருக்கிறார்கள. எனவே அங்கு மறைந்திருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாட இராணுவம்  அவர்களைப் பயன்படுத்துகிறது.

பின்னால் நின்றுகொண்டிருக்கும் காலித் என்ற வேட்டைக்காரர் ஆயிஷாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். வேட்டையின் போது எப்போதும் ஆயிஷாவின் அருகாமையில் இருக்கிறார்.

ஆயிஷா வேட்டைக்கு போகாத போதும் கூட, தீவிரவாதிகளால்கடத்தப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் பற்றியே அவர் கவலைப்படுகிறார்.

வேட்டைக்காரர்கள் நாட்டுத் துப்பாகிகளையே போகோ ஹராமிற்கு எதிரான போரில் பயன்படுத்துகின்றனர்.

ஆயிஷா தனது தந்தையிடமிருந்து மூலிகைகளைப் பற்றியும் அறிந்திருக்கிறார்.  ஒரு மருத்துவச்சியாக அவரது நிபுணத்துவம், சக வேட்டைக்காரர்களிடம் அவருக்கு மரியாதையை பெற்றுத்தந்துள்ளது.

தீவிரவாதிகள் பதுங்கியுள்ள சம்பிஸா காடுகளில் பயணிக்க  மோட்டர் சைக்கிள்கள் உகந்தவை.

புகார் ஜிமேதா முன்னர் ஆயிஷாவின் படைத் தலைவராக இருந்தார்.  மிக மரியாதைக்குரிய வேட்டைக்காரரான அவர் 2017-ம் ஆண்டு போகோ ஹராம் தீவிரவாதிகளால் கொல்லப்படும் வரை கடந்த முப்பதாண்டுகளாக சம்பிஸா காட்டில் குற்றவாளிகள் மற்றும் போராளிகளை பிடிக்க உதவி வந்தார்.

புகார் ஜிமேதா ஒரு இறைபற்று மிக்க முஸ்லீம். அவர் ஆப்பிரிக்க வேட்டையினக் குழுக்களின் இயற்கை மற்றும் போர் கடவுள்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆயிஷா கருவுற்றிருந்த போதும் கூட வேட்டையாடினார். அவரது கதை வடக்கு நைஜீரியாவில் நாட்டுப்புறக் கதையாகியுள்ளது. இந்த ”வேட்டை அரசி” நைஜீரியர்களுக்குநிஜ உலகின் அதிநாயகியாகி (super Hero) உள்ளார்.

– வினவு செய்திப் பிரிவு

நன்றி : அல்ஜசீரா