மோடியின் டவுசரை ரெட்டி பிரதர்ஸ் உருவிய கதை !

“பெல்லாரி ஜனார்த்தன ரெட்டிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சத்தியம் செய்தார் அமித் ஷா. ஆனால் “ரெட்டி பரிவார்” போடும் ரொட்டியைத்தான் வாயில் கவ்வியிருக்கிறது சங்க பரிவார்.

டைபெறவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பல முக்கியத் தொகுதிகளில் பா.ஜ.க., காங்கிரசு மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் சார்பில் சுரங்க மாஃபியாக்கள் களமிறங்கியிருக்கின்றனர்.

கடந்த தேர்தலில், சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக கம்பு சுழற்றிய காங்கிரசு, இந்தமுறை தங்களது கட்சியில் இரண்டு சுரங்க மாஃபியா பேர்வழிகளுக்கு சீட்டு வழங்கியுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் பெல்லாரி (நகர்) தொகுதியில் சுரங்கத் தொழில் சக்கரவர்த்தியான ஹோதூர் முகமது இக்பாலை நிறுத்தியுள்ளது.

பா.ஜ.க.வைப் பொருத்தவரை, கர்நாடகத்தில் அது ரெட்டி பரிவார். நடப்பு சட்டமன்றத் தேர்தலுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டவுடன், ஜனார்த்தன ரெட்டியும் அவரது அணியும் மீண்டும் தேர்தலில்  களமிறங்கலாம் என வதந்திகள் பரவத் தொடங்கின. ஆனால் பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா அதனை மறுத்தார். ”கட்சிக்கும் ஜனார்த்தன ரெட்டிஜி-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் விவகாரம் அப்படி நடக்கவில்லை.

பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியலில் ஜனார்த்தன ரெட்டியின் முத்திரை வெளிப்படையாகவே தெரிந்தது. ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர்களான கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி மற்றும் அவரது அரை டஜன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்கள் அதில் முக்கியமாக இடம்பெற்றிருந்தன. ஜனார்த்தன ரெட்டி பெல்லாரிக்குள் நுழைய உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதனால், அருகில் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து கொண்டு சுற்றுவட்டாரப் பகுதி பா.ஜ.க. வேட்பாளர்களின் பிரச்சாரங்களை நிர்வாகம் செய்து வருகிறார்.

ரெட்டியின் விசுவாசியான ஸ்ரீராமுலுவைப் பொறுத்தவரையில் எடியூரப்பாவைத் தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற தனது விதியையே அவருக்காக மாற்றியிருக்கிறது பா.ஜ.க. துணை முதல்வர் வேட்பாளராக தற்போது பா.ஜ.க.வால் முன்னிறுத்தப்படும் ஸ்ரீராமுலு சித்ரதுர்கா மாவட்டத்தின் மொல்கல்மூரு தொகுதியிலும், சித்தராமையாவிற்கு எதிராக பதாமி தொகுதியிலும் என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தான் முன்னர் முதல்வராக இருந்த போது தமக்கு ரெட்டி சகோதரர்கள் ஏற்படுத்திய இன்னல்களையெல்லாம் தாம் மன்னித்துவிட்டதாக வெளிப்படையாகக் கூறவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார் எடியூரப்பா. எடியூரப்பா அனுபவித்த அந்த “இன்னல்” எத்தகையது? ஒரு பிளாஷ்பேக்.

***

பெல்லாரியில் ரெட்டி சகோதரர்களால் நடத்தப்பட்ட சட்டவிரோத இரும்புத்தாது கொள்ளை, கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காங்கிரசு ஆட்சி அமைக்க அது முக்கியக் காரணமாக இருந்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற பின்னர், சுரங்க மாஃபியா காலி ஜனார்த்தன ரெட்டியின் சுரங்கக் கொள்ளை அதன் உச்சத்தை அடைந்தது. ரெட்டி குடும்பத்தின் ஆதிக்கம் சுரங்கத் தொழிலில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த பா.ஜ.க. அரசாங்கத்திலும் விரிவடைந்தது.

எடியூரப்பாவின் ஆட்சியில், ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியும், அவரது சகோதரர் கருணாகர ரெட்டிக்கு வருவாய்த்துறை அமைச்சர் பதவியும், மற்றொரு சகோதரரான சோமசேகர ரெட்டிக்கு கர்நாடக பால் கூட்டமைப்பின் தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டது. கூடுதலாக ரெட்டி சகோதரர்களின் நெருங்கிய கூட்டாளியும் அவர்களது உடன்பிறவா நான்காவது சகோதரர் என்று அழைக்கப்படுபவருமான ஸ்ரீராமுலு-வுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது.

ரெட்டி சகோதரர்கள் அசைக்கப்பட முடியாதவர்களாயினர். எடியூரப்பாவுக்கு நெருக்கமானவரான சோபா கராந்த்லஜே என்ற பெண்மணியின் அதிகாரம் பா.ஜ.க.வில் அதிகரிக்கவே, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு ரெட்டி சகோதரர்கள் வலியுறுத்தினர். அதற்கு எடியூரப்பா மறுக்கவே, உடனடியாக 40 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களை, சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துவிட்டு ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக எடியூரப்பாவை மிரட்டினர். பின்னர் வேறு வழியின்றி எடியூரப்பா ரெட்டி சகோதரர்களுக்குப் பணிந்து சோபா கராந்த்லஜேவை பதவிநீக்கம் செய்ய நேர்ந்தது.

அன்று கண்களில் கண்ணீருடன் கைகூப்பி அழுது தொழுது முதல்வர் எடியூரப்பா தொலைக்காட்சிகள் மூலம் ரெட்டி பிரதர்ஸுக்கு வேண்டுகோள் விடுத்த காட்சி, இந்திய நாடாளுமன்ற அரசியலில் ஒரு 11 மணிக்காட்சி.

அதிகாரம், பணபலம் மற்றும் ஆணவத்தின் உச்சகட்டமாக, ”எங்களது பெல்லாரி சாம்ராஜ்ஜியத்திற்குள் காங்கிரசால் நுழைய முடியுமா?” என சட்டமன்றத்திலேயே காங்கிரசுக்கு சவால்விட்டார்கள் ரெட்டி சகோதரர்கள். பெங்களூருவிலிருந்து பெல்லாரிக்கு 320 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு, பெல்லாரியில்  இலட்சக் கணக்கானவர்களைத் திரட்டி பொதுக்கூட்டமும் நடத்தினார் சித்தராமையா.

ஜூலை 2011-ல், ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் குறித்தும், அவர்கள் சட்டவிரோதமாக இரும்புத்தாதுவைக் கொள்ளையடித்துக் கடத்துவது குறித்தும் அறிக்கை ஒன்றை கவர்னரிடம் அளித்தார் அப்போதைய லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே. மாநில அரசு இந்தக் கொள்ளையை கண்டுகொள்ளவில்லை என்றும், ரெட்டி சகோதரர்கள் பெல்லாரி மாவட்டத்தை, தங்களது சட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகக் கூடிய ”பெல்லாரிக் குடியரசாக” மாற்றி விட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார் ஹெக்டே.

இந்த அறிக்கை ரெட்டி சகோதரர்களின் பதவியைப் பறித்ததோடு அல்லாமல் எடியூரப்பாவின் பதவியையும் சேர்த்தே பறித்தது. அதனைத் தொடர்ந்து எடியூரப்பா மூன்று வாரங்கள் பெங்களூரு மத்திய சிறையில் கழிக்க நேர்ந்தது. செப்டம்பர் 2011-இல் சி.பி.ஐ.-யால் கைது செய்யப்பட்ட ஜனார்த்தன ரெட்டி மூன்றாண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் ஜனவரி,  2015-இல்தான் நிபந்தனைப் பிணையில் வெளியே வந்தார்.

நியாயப்படுத்தவே முடியாத அளவுக்கு அம்பலமாகிவிட்டதால், ரெட்டி மற்றும் எட்டிக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது பா.ஜ.க. எடியூரப்பாவும் ஸ்ரீராமுலுவும், 2013-ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னர் கட்சியிலிருந்து வெளியேறி தங்களது சொந்த அமைப்புகளை உருவாக்கினர். அத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

பிறகு, 2014-ஆம் ஆண்டில் உத்தமர் மோடியை பிரதமராக்கும் பொருட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னர், எட்டி-யும் ரெட்டி-களும் தாய்க்கட்சிக்குத் திரும்பினர். 2018 சட்டமன்றத் தேர்தல் வருகிறது என்றவுடனே, அதற்கு முன் ரெட்டி சகோதரர்களின் மீதான வழக்குகளை கைவிடுவதாக சி.பி.ஐ. தெரிவித்தது. எனவே இவ்வழக்குகளை சி.பி.ஐ. இடமிருந்து திரும்பப் பெற்று கர்நாடக போலீசே விசாரிக்கும் என்று சித்தராமய்யா அரசு அறிவித்திருக்கிறது.

35,000 கோடி ரூபாய்க்கு இரும்புக் கனிமத்தை சட்டவிரோதமாக வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தனர் என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை கைவிட்டதற்கு சி.பி.ஐ. கூறியிருக்கும் காரணங்களில் ஒன்று என்ன தெரியுமா?

பெல்லாரியிலிருந்து ரெட்டி சகோதரர்களால் திருடி ஏற்றுமதி செய்யப்பட்ட இரும்புத்தாதுவும் கோவாவிலிருந்து திருடி ஏற்றுமதி செய்யப்பட்ட இரும்புத்தாதுவும் மிக்ஸ் ஆகிவிட்டதால், டேட்டாவை கரெக்டாகப் பிரித்து துல்லியமாக வழக்கு போட முடியவில்லையாம்.

தவறான ஒரு வழக்கை சி.பி.ஐ. போட்டது என்று நாளைக்கு வரலாறு பழி சொல்லுமல்லவா? அதான் வழக்கை வாபஸ் வாங்க சொல்லிவிட்டார் மோடிஜி.

இது ரெட்டி பிரதர்ஸ் சங்க பரிவாரத்தின் டவுசரைக் கழற்றிய கதை. அடுத்து வரவிருப்பது ரெட்டி பிரதர்ஸ் சுப்புரீ…ம் கோர்ட்டின் டவுசரைக் கழற்றிய கதை.

வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க