ர் கண்டிசனர் போன்றவையெல்லாம் சமீப காலத்திய கண்டுபிடிப்புகள். வெயிலின் வெம்மையை சமாளிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய முறைகள் பல. அவற்றில் முக்கியமானவை வெட்டிவேர், மூங்கில் தட்டிகள். இந்திய வெயிலில் இருந்து அந்தக் காலத்து மன்னர்களையும் பின்னர் பிரிட்டிஷ் அதிகாரிகளையும் காப்பாற்றியவையும் இந்த வெட்டி வேர் தட்டிகள்தான். இன்றைக்கும் வெள்ளைக்காரன் காலத்து கட்டிடங்கள் சிலவற்றில் வெட்டிவேர் தட்டிகளையும், பங்காக்களையும் பார்க்கலாம்.

மின் விசிறியும் ஏர் கண்டிசனரும் வந்த பின்னர், எல்லா கைவினைப் பொருட்களையும் போலவே வெட்டிவேர்த் தட்டியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இருப்பினும் தீங்குகள் ஏதும் இல்லாத, ஆரோக்கியத்துக்கு உகந்த பாரம்பரிய முறைகள், கைவினைப்பொருட்கள் போன்ற அனைத்தும் இன்று வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரியவையாக மாறியிருப்பதைப் போலவே, வெட்டிவேர் – மூங்கில் தட்டிகளும் புது மவுசு பெற்றுவிட்டன. இன்று வெட்டி வேர் வாசத்துடன் குளுமை வேண்டுமென்றால், பல ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.

ஆயிரங்கள் எதுவும் இவற்றை உருவாக்கும் தொழிலாளிகளுக்குப் போவதில்லை. சென்னையில் இதயப்பகுதியான வால்டாக்ஸ் சாலையில், நடைபாதைகளில் வாழும் இந்த வீடற்ற உழைப்பாளிகள், கத்திரி வெயிலில் இரும்புத் தகட்டு கூரைக்கு கீழே வெந்து வாடும் தம் கைகளிலிருந்து தென்றல் காற்றைத் தருவிக்கிறார்கள்.

சாந்தி, காவியா, சகுந்தலா, வால்டாக்ஸ் ரோடு பகுதியில் வெட்டி வேர் மற்றும் மூங்கில் பத்தைகளை கொண்டு ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளிகள்.

“ எங்களுக்கு வேலை கொடுக்கிறவங்க ஆர்டர் வந்தா கூப்பிடுவாங்க. காலைல 6 மணிக்கு வந்தோம். ஒரு பாய் பின்னிருக்கோம் பொழுது சாயரதுக்குள்ள இரண்டு பாய் பின்னினா 350 ரூபா கெடைக்கும்.”

சுந்தர், ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளி.

“பெரிய பங்களா, பணக்கார வீடுங்களுக்கு செஞ்சு கொடுப்போம். இப்பக்கூட இரயில்வே அதிகாரி வாங்குனார். இந்த பாய் பெங்களுருக்கு போகுது. இதோட சைசு 6க்கு 7 அடி. இதற்கு நாலு கிலோ மூங்கில் பத்தை, பத்து கிலோ வெட்டி வேர் வேணும்.

இத கந்தசாமி கோவில்ல வாங்குவோம். அம்பது கிலோ மூட்டை 20,000 ரூபா. அத அலசினா மண்ணு, தும்புன்னு ஐஞ்சு கிலோ போயிடும். மிச்சம் இருக்க வேரை வெச்சி ஸ்க்ரீன் செய்வோம். நாடாபீடிங் கட்டி பார்டிக்கிட்ட கொடுப்போம்.”

மகேஷ், ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளி.

“ஒன்னும் கையில நிக்காது சார். முதல்ல, பாய் பின்னுற பொம்பள ஆளுங்களுக்கு சம்பளம், வெயில்ல வேலமேல எங்களுக்கு ரெண்டு கட்டிங், ஒரு கோட்டருக்கே சரியாகிடும். சாவு பத்தை, பேனர் பத்தை, சாலை பெருக்கும் மலாரம் செய்வோம். கொஞ்சம் கைசெலவு நிக்கும்.

இந்த பாயில வெட்டி வேருக்கு பதிலா, தேங்கா நார் வச்சி பின்னலாம். ஆனா நம்பிக்கை போயிடும். தொழிலும் கெட்டுடும்.”

மாடி வீட்டு பால்கனியையும், பங்களாவையும் குளிர வைக்கும் வெட்டிவேர் மூங்கில் ஸ்க்ரீன்.

மகாதேவன், ஸ்க்ரீன் பின்னும் தொழிலாளி.

“1972-ல வால்டாக்ஸ் ரோட்டுக்கு வந்தோம். அதுக்கு முன்னாடி பிராட்வே பஸ் ஸ்டாண்டு இடத்துல இருந்தோம். தாத்தா காலத்துல இருந்து பாய் பின்னும் வேலைதான்.
18 வயசுல வேலைய செய்ய ஆரம்பிச்சேன். இப்ப வயசு அம்பத்தி அஞ்சி ஆகுது. புள்ளங்க படிச்சி வேற வேலைக்கு போயிட்டாங்க. ரயில்வே அதிகாரிகள், பள்ளிகூடம், கோஸ்டல் கார்டுக்கு எல்லாம் ஸ்க்ரீன் பண்ணி கொடுத்திருக்கோம்.”

மகாதேவன் மனைவி ரத்தினாம்பாள்.

“இந்த தொழிலுக்கு இப்ப ஆளு இல்ல. என் பசங்களே இந்த வேலைய செய்ய மாட்டேங்குதுங்க. இந்த வேலைய செஞ்சி வாய, வயித்த கட்டி ரெண்டு பசங்களையும் பாரா மெடிக்கல் படிக்க வச்சேன்.

இப்ப ஒருத்தன், பிசியோதெரபி. இன்னொருத்தன் BASLB (Bachelor of Audiology & Speech Language Therapy) படிச்சிருக்கான். ஒரு பொண்ணு அதையும் கட்டிக் குடுத்துட்டோம்.”

முனியம்மாள், பார்வையற்றவர்.

“சின்ன வயசுலருந்தே இந்த வேலைதான். கண்ணுல பூ விழுந்ததால ஆறு வருசமா தடவி தடவி வேலையை செய்யுறேன்.

சாலை பெருக்கும் மலாரம் மட்டும் கட்டுறேன். ஒரு மலாரத்துக்கு 5 ரூபா தருவாங்க. ஒரு நாளைக்கு பதினைந்து கட்டுவேன்.”

அங்காளம்மாள்

“12 வயசுல இருந்து பாய் பின்னுறேன். அந்த காலத்துல எங்களுக்கு சம்பாதிக்கணும், சொத்து சேர்த்து வைக்கனும்னு தெரியல. சம்பாதிக்கிறது சாப்புடுறதுன்னு இருந்துட்டோம். இப்ப எதுவும் இல்ல. இந்த குடிசைய காப்பாத்திக்கனாலே போதும்…”

கார்த்திக், தர்ஷினி, சபிதா, ஜனனி. டாக்டர், ஆசிரியராக வேண்டும் என்ற கனவுகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள்.

பாலகிருஷ்ணன் – லலிதா, தம்பதியினர்.

“43 வருஷமா வேலை செய்யுறோம். எங்களுக்குன்னு எதையும் பண்ணிக்கல இந்த பிளட்பாரத்துலையே இருந்துட்டோம். இதுவும் நிரந்தரம் கெடையாது.
இத காலி பண்ண சொல்லி கார்ப்பரேசன்ல இருந்து நோட்டிசு வந்துடுச்சி. இங்க வாழுற இருபத்தி நாலு குடும்பத்துக்கும் என்ன பண்றதுன்னு தெரியல!”

வினவு புகைப்படச் செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க