க்கள் விரோத சுற்றுச்சூழலை நாசமாக்கும் பேரழிவு அபாயம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களை அங்கீகரிப்பதிலும், அவர்களுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்வதிலும் தேசிய கட்சிகளான காங்கிரசு, பி.ஜே.பி. இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடலோர கிராமமான காலாப்பட்டில் இயங்கும் சாசன் ஸ்ரைட்ஸ் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே இதற்கு சாட்சி.

1990-களில் சாசன் பார்மசிடிக்கல் என்ற நிறுவனமும் ஸ்ரைட்ஸ் ஆர்கோ லேப் என்ற நிறுவனமும் கூட்டுச் சேர்ந்து வலி நிவாரண மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் தயாரிக்கும் உற்பத்தியில் இறங்கியது.  இந்தியா உட்பட அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் உற்பத்திக்கான தொழிற்சாலைகளும், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கும் சந்தையைக் கைப்பற்றியுள்ள இப்பன்னாட்டு நிறுவனம், இந்தியாவில் பெங்களூருவைத் தலைமையகமாக் கொண்டு செயல்படுகிறது.

அருண்குமார் என்ற பி.ஜே.பி.-யினை ஆதரிக்கும் முதலாளியால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 566 மில்லியன் டாலர். இந்த பன்னாட்டு நிறுவனத்தின் ஐந்து ஆலைகள் இந்தியாவில் உள்ளது.  ஏழு ஆலைகள் ஆப்பிரிக்காவிலும்  இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் தலா ஒரு ஆலைகள் இயங்கி வருகின்றன.  தமிழகத்தில் கடலூரிலும் புதுச்சேரியில் காலாப்பட்டு பகுதியிலும் இதன் ஆலைகள் செயல்படுகிறது.

முதலாளித்துவம் உருவாக்கியுள்ள சுற்றுச்சூழல் கேடுகளினால் ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள், விபத்துக்களினால் ஏற்படும் உடல் ஊனங்கள், அடிபடுவதினால் ஏற்படும் காயங்கள் இவற்றிலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு, தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்கள், இரசாயனங்களைப் பயன்படுத்தி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் இந்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியினைச் சுற்றிலும் நிலத்தடி நீரும், காற்றும் பல மடங்கு மாசுபட்டுள்ளது. இந்த ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் போன்ற நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த ஆலைப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தே 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ளது நிர்வாகம். ஒப்பீட்டு ரீதியாக பிற ஆலைகளை விட ரூ.25,000/- முதல் 30,000/- வரை என கூடுதலாக சம்பளம் கொடுத்து வருகிறது.

இதன்மூலம், தனக்கு விசுவாசமான கருங்காலிகளை, அடியாட்களை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிலிருந்தே  உருவாக்குவதில் இந்த நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லலாம். அதனால், தங்களுக்கோ, பகுதி மக்களுக்கோ ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அக்கறையற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போதைய உற்பத்தி நிலையிலேயே சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வரும் சூழலில், ஆண்டுக்கு 4,000 டன் உற்பத்தி என்ற இலக்கிலிருந்து ஆண்டொன்றுக்கு 9,500 டன்னாக உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது. இவ்விரிவாக்கத்திற்கான சடங்குகளில் ஒன்றான கருத்துக் கேட்புக் கூட்டத்தினை கடந்த மே-8 அன்று ஏற்பாடு செய்தது புதுவை அரசு.

1987-இல் புதுவை அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில் கடற்கரையிலிருந்து ஆறு கி.மீ.-க்குள் நாளொன்றுக்கு 10 இலட்சம் லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை அனுமதிப்பது என்று வெளியிட்டது. அதன் பிறகு, 1988-இல் கடலோர கிராமங்களான கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், காலாப்பட்டு, மணப்பட்டு, பன்னித்திட்டு பகுதிகளில் இரசாயன ஆலை அமைக்கக் கூடாது என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டது.

மீண்டும் 1990-இல் மேற்படி இரண்டு அரசாணைகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்குக் கூட விரிவாக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் அரசாணை வெளியிட்டது. ஏற்கனவே, அரசு விதிகளின் படி விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இந்த ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு புதுச்சேரி சுற்றுச்சுழல் துறை அனுமதி அளித்துள்ளது.

இவர்கள் போட்ட அரசாணையை இவர்களே மீறி விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்து விட்டு, மக்களை ஏமாற்ற கண் துடைப்பிற்காக கருத்துக்கணிப்புக் கூட்டம் நடத்தினர்.

ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்று சுற்றுவட்டார கிராம மக்கள் தொடக்கம் முதலே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த எதிர்ப்பை மீறி, கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தமது எதிர்ப்பை பதிவு செய்வது என்ற முடிவுடன், அமைதியான முறையில் மக்கள் கருப்புக் கொடியுடன் சென்றனர்.

இதனால் பீதியடைந்த சுற்றுச்சூழல் துறை கருத்துக் கணிப்புக் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. ஆக, கருத்துக் கணிப்பின் நோக்கம், மக்களின் கருத்தைக் கேட்பதற்காக அல்ல, அரசின் கருத்தைத் திணிப்பதற்கான முயற்சிதான் என்பது இதன்மூலம் அம்பலமானது.

கூட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, கூடியிருந்த மக்கள் கருப்புக்கொடிகளுடன் ஆலையை நோக்கி முன்னேறிச் சென்றனர். அவர்களின் கருத்தைக்கூடக் கேட்கத் தயாரில்லாத அரசு, ஆலையை நோக்கி முற்றுகையிடச் செல்வதை அனுமதிக்குமா என்ன? அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது புதுவை அரசு.

பா.ஜ.க. ஆதரவாளரான இந்த ஆலை முதலாளிக்கு புதுவையின் ஆளும் கட்சியான காங்கிரசு அடியாள் வேலை பார்க்கிறது. ஆலை விரிவாக்கத்தை எதிர்க்கும் மக்களுக்கு எதிராக அரசு எந்திரத்தை ஏவிவிடுகிறது. முதலாளிகளைப் பாதுகாப்பதில் காங்கிரசு – பி.ஜே.பி.-க்கு எந்த வேறுபாடும் இல்லை என்பதற்கு துலக்கமான சான்று இந்த சம்பவம்.

இந்த உண்மைகளையும், ஆலை விரிவாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கியும், போலிசு – காங்கிரசு – பா.ஜ.க. ரவுடிக் கும்பலின் கூட்டுத் தாக்குதலை கண்டித்தும், தொழிலாளர்கள் மத்தியிலும், புதுவை உழைக்கும் மக்களின் மத்தியிலும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வரும் பு.ஜ.தொ.மு., அடுத்தக்கட்டப் போராட்டத்திற்கு அவர்களை ஆயத்தமாக்கி வருகிறது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடரபுக்கு: 95977 89801.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க