தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் !

ஸ்டெர்லைட்டை மூடுமாறு தூத்துக்குடி மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் ஜெயராமன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை நினைவு கூறும் பதிவு.

துரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், ஆரியபட்டியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஜெயராமன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

துப்பாக்கி குண்டு தோழரின் வலது பக்க தலையில் நுழைந்து, மூளையை சிதறடித்து உள்ளது. இரு சக்கர வாகனம் ஒன்றில் ஜவுளித் துணிகளை வைத்துக் கொண்டு கிராமம் கிராமமாக சென்று விற்பனை செய்யும் கடின உழைப்பாளி தான் தோழர் ஜெயராமன்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதில் செயல்பட்டு வந்த விவசாயிகள் விடுதலை முன்னணியின் அரசியலால் ஈர்க்கப்பட்டு அமைப்பில் இணைந்தார்.  அப்போது முதல், அமைப்பின் அனைத்து வேலைகளிலும் உற்சாகமாக பங்கெடுத்து வந்துள்ளார்.  பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்று பல முறை சிறை சென்றுள்ளார்.

நேரம் தவறாமை என்பது தோழர் ஜெயராமனின் சிறப்புப் பண்பு.  அமைப்பு வேலைகளுக்கு தாமதமாக வரும் தோழர்களை கடுமையாக விமர்சிப்பார்.

தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் அமைப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்து தமது அரசியலை அவர்களும் ஏற்கும் வண்ணம் வளர்த்து வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தோழரின் இளைய மகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.  மகள் இறந்த சோகத்தை சில நாட்களில் கடந்து மீண்டும் அமைப்பு வேலைகளுக்கு வந்துவிட்டார் தோழர் ஜெயராமன்.

மிகவும் அமைதியானவர்.  யாருடனும் அதிர்ந்து பேசமாட்டார். அப்படிப் பட்டவர், முல்லைப் பெரியாறு உரிமைக்கான போராட்டங்களின் போது போலீசு அதிகாரிகளுடன் கடுமையாக வாதிட்டு உள்ளார்.

மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், அமைப்பு வேலைகளுக்கும் மக்களுக்கான போராட்டங்களுக்கும் தவறாமல் வந்துவிடுவார்.

மே 22-ஆம் தேதி காலையில் கூட தன் அருகில் இருந்த தோழரிடம், “சீட்டுப் பணம் கட்டணும் தோழர், சிரமமா இருக்குது.  ஆனா இங்க இவ்ளோ பெரிய போராட்டம் நடக்குது.  அந்த சனத்த பாக்காம இருக்க முடியுமா?” என கூறி உள்ளார். அவர் அப்படி கூறிய சிறிது நேரத்திலேயே போலீசு அவரை சுட்டு விட்டது.

தோழனே!
உந்தன் வழியில் பயணிப்போம்!
உந்தன் கனவை முடித்து வைப்போம்!

– வினவு செய்தியாளர்.

5 மறுமொழிகள்

 1. இதயம் கனக்கின்றது
  இறந்த இதயங்களை எண்ணி ;
  அவர்கள் விட்டுச்செல்லும்
  பணிகளை எண்ணி,
  நம் உறக்கம் கலைகின்றது.
  எளிய மனிதர்களின் சுவடுகள் அருஞ்செயல்களின் வழிகாட்டிகளாய் நம் கண் முன்னே.

 2. தோழா உங்கள் தியாகம் வீணாகாமல் காப்போம்… தமிழகத்தை கொடுர வேதாந்தா போன்ற வல்லுறுகளின் பிடியில் இருந்து காக்கும் வரைக்கும் போராட்டங்களை கட்டமைத்துக்கொண்டு மக்களை உண்மையான ஜனநாயகத்தின் வெற்றி பாதையில் அழைத்து செல்வோம்….

Leave a Reply to நாதன் அடிகள் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க