அரசாங்க லவுட் ஸ்பீக்கர்

அமைதியை நிலைநாட்ட உதவுங்கள்
உங்கள் அமைதிக்காகவே
உங்களைச் சுடுகிறோம்

உங்கள் வளர்ச்சிக்காக
உங்கள் நிலங்களை பிடுங்கியதுபோல
உங்கள் நல்வாழ்விற்காகவே
உங்கள் காற்றை நஞ்சாக்கியதுபோல

உங்கள் முன்னேற்றத்திற்காகவே
உங்கள் நீர் நிலைகளை அழித்ததுபோலவே
உங்கள் வேலைவாய்ப்பிற்காகவே
உங்கள் காடுகளையும் மலைகளயும் அபகரித்ததுபோல

உங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம்
எதிர்ப்பின்றி செத்துபோங்கள்
அமைதியை நிலைநாட்ட உதவுங்கள்

23.5.2018
பிற்பகல் 3.47
மனுஷ்ய புத்திரன்

அரசு வேகமாக செயல்படுகிறது

யார் சொன்னது
இந்த அரசாங்கம் கருணையற்றது என்று
மக்களின் சிரமங்களைக் குறைக்க
அது எவ்வளவோ திட்டமிடுகிறது

தெருவில் ஒருவனைச் சுட்டால்
தெருவில் தடியால் அடித்தால்
அவன் தெருவிலேயே
நீண்ட நேரம் கிடக்க வேண்டியிருக்கிறது

அவனது மனைவி மக்கள் வந்து
தொட்டு தூக்கி
அவசரமாக ஒரு வாடகைக்காரை
பிடிக்க ஓடும்வரை
அவனது ரத்தம் பெருமளவு வீணாகிவிடுகிறது

ஒரு நல்லரசு அதை கருணையுடன்
புரிந்துகொள்கிறது
மனிதர்களை தெருவில் சுடுவதற்குப் பதில்
தெருவில் அடிப்பதற்குப் பதில்
மருத்துவமனை வளாகத்திலேயே
அடிக்கவும் சுடவும்
இன்று உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது

உடனுக்குடன் சுட்டு
உடனுக்குடன் சிகிட்சை
அல்லது
உடனுக்குடன் பிணகூறாய்வு

அரசு வேகமாக செயல்படுகிறது

23.5.2018
மாலை 4.02
மனுஷ்ய புத்திரன்

சீருடை பயங்கரவாதிகள்

யாரும் காணவில்லையா
அதை?

காக்கி சீருடையில்
அரச பயங்கரவாதிகள் புகுந்துவிட்டார்கள்
பொறுக்கிகள் புகுந்துவிட்டார்கள்
ஆதாயக் கொலையாளிகள் புகுந்துவிட்டார்கள்
கார்பரேட் குண்டர்கள் புகுந்துவிட்டார்கள்
காவி பயங்கரவாதிகள் புகுந்துவிட்டார்கள்
சைக்கோ கொலையாளிகள் புகுந்துவிட்டார்கள்
அரசாங்கத்தின் நிழல் ஏஜெண்டுகள் புகுந்துவிட்டார்கள்

உற்றுப்பாருங்கள்
வேட்டையாடும் கண்களின்
ரத்த தாகத்தை
காக்கி சீருடையில்
இனக்கொலையாளிகள் புகுந்திருப்பதை

23.5.2018
மாலை 4.26
மனுஷ்ய புத்திரன்

முற்றுகை

தடை
நடமாடத் தடை
கூட்டம் கூட தடை
ஊர்வலம் போகத்தடை
தொலைகாட்சி அலைவரிசைகளுக்குத் தடை
இணைய சேவைகளுக்கு தடை
உயிரோடிருப்பதற்கு தடை
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை

அந்த நகரம் முற்றுகையிடப்பட்டிருக்கிறது
அந்த நகரம் இப்போது துண்டிக்கப்பட்டிருக்கிறது
அவர்கள் ஒரு பெரிய நாடகத்திற்கான ஒத்திகையை அரங்கேற்றுகிறார்கள்
அது ஒரு பத்ம வியூகம்
மக்கள் அபிமன்யூவைபோல
சூழப்பட்டிருக்கிறார்கள்
அந்த நகரம் இப்போது
ஒரு பலிபீடம் போலிருக்கிறது
பலிகளின் திருவிழாவை நோக்கி
ஆயுதம் தாங்கிய ராணுவம் விரைகிறது
குரூரமான சவ அமைதி
எங்கோ ஒரு தீனமான அழுகுரல்
யாரோ முதல் கல்லை எறிகிறார்கள்
துப்பாக்கிகள் மீண்டும் வெடிக்கின்றன
எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது
சில சடலங்கள் ஒளித்துவைக்கப்படுகின்றன
கொலைகளை கட்டுப்படுத்த முடியாது
எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது அவசியம்

வெறும் கைகளுடன் நிற்கும் மக்களைக்
கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள்?
அந்த வெறும் கைகளை
ஏன் இவ்வளவு பதட்டமாய் முறிக்கிறார்கள்?
வெறும் கைகள்தான் வரலாற்றை எழுதுகின்றன
வெறும் கைகளால்தான் சாம்ராஜ்ஜியங்கள் சரிகின்றன

குண்டடிபட்ட ஒரு இளைஞன்
ரத்தவெள்ளத்தில் மல்லாந்து கிடக்கிறான்
ஒரு செத்த மாட்டை இழுத்து வருவதுபோல
அவனை தரதரவென இழுத்துவருகிறார்கள்
தார்ச்சாலையில் படுக்கவைத்த
அந்த இறந்த உடலை லத்தியால் அடிக்கிறார்கள்
” நடிக்காதடா எழுந்திரு” என்று
திரும்பத் திரும்பத் திரும்ப அடிக்கிறார்கள்
இறந்துவிட்ட அந்த மனிதன்
அதைக்கண்டுகொள்ளவே இல்லை
அவர்களின் முட்டாள்தனத்தைக்கண்டு சிரித்தபடி சாவகாசமாக விறைத்த நிலையில்
தார்ச்சாலையில் படுத்திருக்கிறான்

ஒரு சிறுவனை
பத்து சீருடைக்கொலையாளிகள்
ஆவேசமாக தாக்குகிறார்கள்
அந்தச் சிறுவனுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை
அவன் வாழ்நாளெல்லாம் காணப்போகும்
துர்க்கனவொன்று அரங்கேறிக்கொண்டிருக்கிறது
அந்தக் காட்சியை படம் பிடித்துக்கொண்டிருந்த ஒருவன்
” ஒரு சிறுவனை தாக்க
உனக்கு அவமானமாக இல்லையா?”
என்று கேட்கிறான்
கொலையாளிகளுக்கு எந்த அவமானமும் இல்லை
அவர்களுக்குத் தேவை வேட்டையாட உடல்கள்
இதயமற்று
கண்களற்று
வேட்டையாடும்போது
அவர்கள் முகங்களில்
காணச் சகிக்காத
ஒரு ஆபாசம் படர்கிறது

ஆளில்லாத தெருக்களில்
கொலையாளிகள் ஆவேசமாக ஓடுகிறார்கள்
அந்தக் காட்சி அவ்வளவு அபத்தமாக இருக்கிறது
தெருவில் யாரும் இல்லை என்றதும்
ஒரு வீட்டிற்குள் புகுந்து சுடுகிறார்கள்

துப்பாக்கி சுடுகிறவன்
இந்த இரவின் மங்கலான நீலவெளிச்சத்தில்
தன் மனைவியை அணைத்தபடி
அவள் காதில் கிசுகிசுப்பாக கூறுகிறான்
” நேற்று எவ்வளவு அற்புதமான நாளாக இருந்தது
நான் ஒருவன் மட்டும்
எட்டுபேரை சுட்டுக்கொன்றேன்
ஒரு புல்லட்கூட வீணாகவில்லை
என் மேலதிகாரிகள் என்னை இறுக அணைத்துக்கொண்டார்கள்
எத்தனை பேரைக் கொல்கிறேனோ
அத்தனையும் பதக்கங்கள் போன்றவை”
ஒரு தோட்டாவில் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு
சுருண்டுவிழுந்த ஒரு மனிதனை நினைத்தான்
அவனது விறைப்பு நிலை சட்டெனெ உச்சத்திற்கு சென்றது

இந்த நாள் முடிந்துவிட்டதா இல்லையா?
குரூரங்களுக்கு இடைவேளை ஏதும் உண்டா?
இவ்வளவு நீண்ட
நாள்
சமீப நாட்களில் வந்ததே இல்லை

23.5.2018
இரவு 10.34
மனுஷ்ய புத்திரன்