தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொலை வெறியாட்டத்துக்குப் பின்னர் சகஜநிலை திரும்பி விட்டதாக பிரச்சாரம் செய்து வருகிறது எடப்பாடி அரசு. மே 22 ஆம் தேதி பணியில் இருந்த மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மாற்றப்பட்டு விட்டனர். அந்த இடத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியையும், முரளி ரம்பா என்ற கண்காணிப்பாளரையும் நியமித்தது எடப்பாடி அரசு.

இவர்கள்தான் இப்போது “சகஜநிலையை”க் கொண்டு வருகிறார்கள். ஒரு படுகொலை நடத்தப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினர் மீதே மருத்துவமனையில் தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்ட பின்னர், சகஜநிலை உடனே எப்படித் திரும்பும்?

இயல்பு நிலை திரும்ப வேண்டுமானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். மக்களுக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும். எந்தக் குற்றவாளியும் தண்டிக்கப்படாமலேயே சகஜ நிலையைக் கொண்டு வரவேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி, அடக்குமுறையும் அச்சுறுத்தலும்தான்.

துப்பாக்கித் தோட்டாவுக்குப் பதிலாக இப்போது பொய்வழக்கு. தூத்துக்குடி நகரின் பி அண்டு டி காலனி, திரேஸ்புரம், மீளவட்டான் ஆகிய பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் போராட்டத்தின் முன்னணியாளர்கள் பொய்வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்கள். போலீசுக்கு எதிராக மக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் சொல்கிறார் ஆட்சியர் நந்தூரி. ஆனால் கைது நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

மே 22-ஆம் தேதியன்று கலவரம் செய்தவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் என்று ஒரு பொய்யை ஊடகங்களின் வாயிலாக திட்டமிட்டே உளவுத்துறை பரப்பி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நள்ளிரவில் பல தோழர்களின் குடும்பத்தினரை வீடு புகுந்து போலீஸ் மிரட்டுகிறது. குடும்ப உறுப்பினர்களை பிணையக்கைதிகளாகப் பிடித்துச் செல்கிறது.

போலீஸ் நடத்தி வரும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளையும் அத்துமீறல்களையும் நிறுத்த வேண்டும் என்று, மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்கபாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு போலீசு தனது அத்துமீறல்களை நிறுத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக தோழர் தங்கபாண்டியனுடனான தொலைபேசி பேட்டி.