தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொலை வெறியாட்டத்துக்குப் பின்னர் சகஜநிலை திரும்பி விட்டதாக பிரச்சாரம் செய்து வருகிறது எடப்பாடி அரசு. மே 22 ஆம் தேதி பணியில் இருந்த மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மாற்றப்பட்டு விட்டனர். அந்த இடத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியையும், முரளி ரம்பா என்ற கண்காணிப்பாளரையும் நியமித்தது எடப்பாடி அரசு.

இவர்கள்தான் இப்போது “சகஜநிலையை”க் கொண்டு வருகிறார்கள். ஒரு படுகொலை நடத்தப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினர் மீதே மருத்துவமனையில் தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்ட பின்னர், சகஜநிலை உடனே எப்படித் திரும்பும்?

இயல்பு நிலை திரும்ப வேண்டுமானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். மக்களுக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும். எந்தக் குற்றவாளியும் தண்டிக்கப்படாமலேயே சகஜ நிலையைக் கொண்டு வரவேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி, அடக்குமுறையும் அச்சுறுத்தலும்தான்.

துப்பாக்கித் தோட்டாவுக்குப் பதிலாக இப்போது பொய்வழக்கு. தூத்துக்குடி நகரின் பி அண்டு டி காலனி, திரேஸ்புரம், மீளவட்டான் ஆகிய பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் போராட்டத்தின் முன்னணியாளர்கள் பொய்வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்கள். போலீசுக்கு எதிராக மக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் சொல்கிறார் ஆட்சியர் நந்தூரி. ஆனால் கைது நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

மே 22-ஆம் தேதியன்று கலவரம் செய்தவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் என்று ஒரு பொய்யை ஊடகங்களின் வாயிலாக திட்டமிட்டே உளவுத்துறை பரப்பி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நள்ளிரவில் பல தோழர்களின் குடும்பத்தினரை வீடு புகுந்து போலீஸ் மிரட்டுகிறது. குடும்ப உறுப்பினர்களை பிணையக்கைதிகளாகப் பிடித்துச் செல்கிறது.

போலீஸ் நடத்தி வரும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளையும் அத்துமீறல்களையும் நிறுத்த வேண்டும் என்று, மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்கபாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு போலீசு தனது அத்துமீறல்களை நிறுத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக தோழர் தங்கபாண்டியனுடனான தொலைபேசி பேட்டி.

5 மறுமொழிகள்

  1. தோழர் தங்கபாண்டியன் மேலே குறிப்பிட்டது போல் நேற்று இரவு எனது வீட்டிற்கும் 10 க்கும் மேற்பட்ட போலீசார் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து பெண்களை மிரட்டிருக்கிறார்கள் . எந்த லிமிட் போலீஸ் என்பதை கூட சொல்லலை . ஒருவர் கூட சீருடை அணிந்திருக்க வில்லை. இவர்கள் தான் சட்டத்தின் காவலர்களாம்.

  2. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டமும் போரையும் நடத்தி வெற்றி பெறுவது சுலபம் அல்ல. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அவர்கள் பின்னே போன தமிழர்களுக்கும் ஏற்பட்ட கதி நினைவுக்கு வருகிறது. யாழ்ப்பான தமிழர்களுக்கும் சிங்கள மேட்டுக்குடியினருக்கும் இடையே இருந்த பிணக்கை கூர்மைப்படுத்தி போருக்கு தள்ளியது கிறிஸ்தவ சர்ச் தான். பாதிரிகளையும் என்ஜிஓக்களையும் நம்பி நடந்த போராட்டம் முள்ளிவாய்க்காலில் கழுத்தறுப்புக்கு உள்ளாகி முடிந்து போனது. தூத்துக்குடியிலும் கூடங்குளத்திலும் நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் இதே சக்திகள் தான் இருக்கிறார்கள். கூடவே விடலைத்தனமான சில கம்யூனிஸ்ட்கள். ஈழ மக்களைப் போல் தமிழக மக்களையும் ஒருவேளை கஞ்சிக்கு தட்டு எந்த வைக்க இவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஒரு அரசாங்கத்துக்கு இருக்கும் செல்வாக்கும் வளங்களும் அளப்பரியவை. எத்தனை அடிபட்டாலும் ஒரு அரசாங்கத்தால் எழுந்து ஊன்றி நிற்க முடியும். காஷ்மீர், மணிப்பூர், மத்திய இந்தியா ஆகியவற்றில் நடக்காத போராட்டமா? அவற்றையே மத்திய ஆட்சியாளர்கள் ஈவிரக்கமில்லாமல் இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறார்கள். திசை திருப்புகிறார்கள்.

  3. பிற மாநிலங்களில் விரட்டியடிக்கப்பட்ட இந்த வேதாந்தா நிறுவனத்தை தமிழ்நாட்டில் வரவேற்றவர் ஜெயலலிதா. திறந்து வைத்தவர் கருணாநிதி. நிறுவன விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கி கையெழுத்திட்டவர் ஸ்டாலின். நம் மாநில அரசியல்வாதிகளின் அனுசரணை இல்லாமல் எந்த நிறுவனமும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க